திருவில்லிபுத்தூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஸ்ரீவில்லிப்புத்தூர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
திருவில்லிபுத்தூர்
—  முதல் நிலை நகராட்சி  —
ஆண்டாள் கோவில்
திருவில்லிபுத்தூர்
இருப்பிடம்: திருவில்லிபுத்தூர்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 9°30′58″N 77°37′48″E / 9.5161°N 77.63°E / 9.5161; 77.63ஆள்கூறுகள்: 9°30′58″N 77°37′48″E / 9.5161°N 77.63°E / 9.5161; 77.63
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் விருதுநகர்
வட்டம் திருவில்லிபுத்தூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ஜெ. மேகநாத ரெட்டி, இ. ஆ. ப [3]
நகராட்சி தலைவர் செந்தில்குமாரி
சட்டமன்றத் தொகுதி திருவில்லிபுத்தூர்
சட்டமன்ற உறுப்பினர்

இ. எம். மன்ராஜ் (அதிமுக)

மக்கள் தொகை 75,396 (2011)
பாலின விகிதம் 1:1 /
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


146 மீட்டர்கள் (479 ft)

திருவில்லிபுத்தூர் (Thiruvilliputhur, ஶ்ரீவி), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருவில்லிப்புத்தூர் வட்டம் மற்றும் திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும். விருதுநகர் மாவட்டத்தின் முதன்மை நீதிமன்றம் இந்நகரில் அமைந்துள்ளது. இது மதுரை - செங்கோட்டை செல்லும் மாநில நெடுஞ்சாலையில் உள்ளது.

சிறப்புகள்[தொகு]

திருவில்லிபுத்தூர் தமிழகத்தில் மிகவும் பழமைவாய்ந்த ஊர்களில் ஒன்றாகும். 1000 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட கோவில், 200 வருட சிறப்புப் பெற்ற இந்து மேல்நிலைப்பள்ளி, 137 வருட சிறப்புப் பெற்ற பென்னிங்டன் நூலகம் ஆகியவை இதற்குச் சான்று பகர்பவை. திருப்பாவை என்னும் தெய்வீகத் தமிழ் இலக்கியத்தைத் தமிழ் மக்களுக்கு அளித்தது இந்த கோவில் நகரமே ஆகும்.

திருவில்லிபுத்தூர் இங்கு அமைந்துள்ள ஆண்டாள் கோவிலுக்காக அதிகம் அறியப்படுகிறது. ஊரின் உள்ளாட்சி நிர்வாகம் திருவில்லிபுத்தூர் நகராட்சி மூலம் மேற்கொள்ளப்படுகிறது.

திருவில்லிபுத்தூரின் பெருமைக்குக் குறிப்பிடத்தக்க ஒரு மைல்கல்லாக விளங்குவது ஸ்ரீ வடபத்ரசாயி பெருமாளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட 11 அடுக்குகளைக் கொண்ட கோபுரம் கொண்ட கோவில் ஆகும். இந்த கோவில் கோபுரம் 192 அடி உயரமானது. இந்த சீர்மிகு கோவில் பெரியாழ்வார் என்னும் பெருமாளின் அடியாரால் கட்டப்பட்டது. ஆண்டாளை எடுத்து வளர்த்த தந்தையாகிய இவர், தனது மருமகனாகிய பெருமாளுக்கு இக்கோபுரத்தைக் கட்டினார் என்று கூறுவர். அவர் பாண்டிய மன்னன் வல்லபதேவனின் அரண்மனையில் நடைபெற்ற விவாதங்களில் வெற்றிகொண்டு, தாம் பெற்ற பொன்முடிப்பைக் கொண்டு இதைக் கட்டி முடித்தார் என்றும் நம்பப்படுகிறது. திருவில்லிப்புத்தூரின் மற்றொரு அதிசயம் ஆடிப்பூரம் அன்று இழுக்கப்படும் அழகியதேர் ஆகும். திருவில்லிபுத்தூர் இன்றும் அதன் பண்டைய மரபு மற்றும் பக்தி பங்களிப்புகளால் அறியப்படுகிறது.

புவியியல்[தொகு]

இவ்வூரின் அமைவிடம்9°19′N 77°22′E / 9.31°N 77.37°E / 9.31; 77.37 ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 146 மீட்டர்(482 அடி) உயரத்தில் இருக்கின்றது.

வரலாறு[தொகு]

ஆண்டாள் கோவில் கோபுரம்

தென்னிந்திய வரலாற்றில் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு குறிப்பிடத்தக்க முக்கிய இடம் உண்டு. பல நூற்றாண்டுகளுக்கு முன், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள நிலப்பகுதிகள் ராணி மல்லி என்பவரின் ஆட்சியின் கீழ் இருந்தது. இந்த ராணிக்கு வில்லி மற்றும் கண்டன் என்ற இரு மகன்கள் இருந்தனர். ஒரு நாள், அவர்கள் காட்டில் வேட்டையாடிய போது, கண்டன் ஒரு புலியால் கொல்லப்பட்டார். இந்த உண்மை தெரியாமல், வில்லி, அவரது சகோதரர் என்ன ஆனார் என்று காட்டில் தேடிக் கொண்டு இருந்தார். வெகுநேரம் காட்டில் தேடிய பின்னர் களைத்துப்போய் சிறிது நேரம் தூங்கினார். அவரது கனவில், கடவுள் அவரது சகோதரருக்கு என்ன ஆயிற்று என்பதை அவருக்கு விளக்கினார். உண்மை புரிந்ததும், தெய்வீக உத்தரவின் பேரில் வில்லி அந்த காடுகளைத் திருத்தி அமைக்க, ஒரு அழகான நகரம் உருவாக்கப்பட்டது. இந்த காரணத்திற்காக, இந்த நகரம், வில்லிப்புத்தூர் என்ற பெயர் பெற்றது. மேலும் இந்த நகரம் திருமகளே தெய்வீக குழந்தையாக ஆண்டாள் என்று பிறந்ததின் காரணமாக ஸ்ரீவில்லிப்புத்தூர் என்று பெயரிடப்பட்டது, அது திருமகளைக் குறிக்கும் வண்ணம் தமிழ் வார்த்தையான "திரு" என்ற என்ற அடைமொழி கொண்டு திருவில்லிப்புத்தூர் என்று வழங்கப்பெற்றது.[5]

ஸ்ரீவில்லிபுத்தூர் என்னும் ஊர்ப்பெயர்[தொகு]

இந்த ஊருக்கு இப்பெயர் வரக்காரணம் இதனை உருவாக்கிய வில்லி என்பவார். வில்லிபுத்தூர் என்று பெயரிடப்பட்ட இவ்வூர், திருமகளாகிய ஆண்டாளின் அவதாரத் தலமாக இருப்பதால் "ஸ்ரீ" என்னும் பெயர் பெற்றது. "ஸ்ரீ" என்னும் சொல் வடமொழிச் சொல்லாக இருப்பதால் "திரு" என்று வழங்கப்படுகிறது.

இலக்கியங்களில் ஸ்ரீவில்லிபுத்தூர்[தொகு]

பெரியாழ்வார் இயற்றிய "திருப்பல்லாண்டு", ஆண்டாள் இயற்றிய "திருப்பாவை", "நாச்சியார் திருமொழி" ஆகியவை தமிழுக்கு ஸ்ரீவில்லிப்புத்தூர் தந்த இலக்கியங்கள். அன்றைய நாளில் இவ்வூர் எப்படி இருந்தது என்பதற்கான குறிப்புகள் ஆண்டாளின் பாசுரங்களில் காணப்படுகின்றன.

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 33 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 21,411 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 75,396 ஆகும். அதில் 37,423 ஆண்களும், 37,973 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் எழுத்தறிவு 85.7% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 1,015 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 6884 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 986 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடி மக்களும் முறையே 4,681 மற்றும் 10 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 90.7%, இசுலாமியர்கள் 2.27%, கிறித்தவர்கள்6.62% மற்றும் பிறர் 0.42% ஆகவுள்ளனர்.[6]

முக்கியத் தொழில்கள்[தொகு]

 • நெசவுத் தொழில்
 • பால்கோவா தயாரிப்பு

இவ்வூர் நெசவுத் தொழிலுக்குப் புகழ் பெற்றது. மிகப் பிரபலமான துணி விற்பனை செய்யும் நிறுவம் போத்தீஸ் முதலில் ஸ்ரீவில்லிப்புத்தூரில் தான் துவங்கப்பட்டது. அதே போல், பால்கோவா என்ற இனிப்புத் தயாரிப்புக்கும் புகழ் பெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா வெளிநாட்டில் வாழும் தமிழர்களாலும் விரும்பி உண்ணப்படும் இனிப்பு ஆகும்.

பிற தொழில்கள்[தொகு]

சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயம் செய்பவர்கள் இருக்கிறார்கள். சிவகாசியில் உள்ள தீப்பெட்டி, பட்டாசுத் தொழிற்சாலைகளிலும், இராஜபாளையம் பகுதியில் உள்ள பஞ்சாலைகளிலும் வேலைக்கு மக்கள் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து செல்வதுண்டு. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள திருவண்ணாமலை பகுதிகளில் கல்குவாரி, செங்கல் சூளை முதலியவை உண்டு.

முக்கிய ஆலயங்கள்[தொகு]

பிற வழிபாட்டுத் தலங்கள்[தொகு]

 • சி. எஸ். ஐ தேவாலயம்
 • ரோமன் கத்தோலிக்கர் தேவாலயம்
 • தரகுமலை மாதா கோவில்
 • மசூதி

நகரமைப்பு[தொகு]

ஆண்டாள் கோவிலை சுற்றி தேர் செல்லும் வீதிகள் ரத வீதி என்று வழங்கப்படுகின்றன. அதைத் தொடர்ந்து கடைகள், பள்ளிகள் அமைந்து உள்ளன. பேருந்து நிலையம் ஊருக்கு மத்தியில் உள்ளது. காடுகளைத் திருத்தி உருவாக்கப்பட்ட ஊர் என்பதால், ஊரின் உட்புறம் தாண்டி முறையான கட்டமைப்பு இல்லை, மக்கள் குடியேற்றம் நிகழ்வதைப் பொறுத்து ஊரின் அமைப்பு மாறுதல் ஏற்படுகிறது.

நிர்வாகம்[தொகு]

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி நிர்வாகத்தின் கீழ் தெருக்களுக்கு கவுன்சிலர்களும், அவர்களுக்குத் தலைமையாக நகராட்சித் தலைவரும் ஊரின் நிர்வாகத்தைக் கவனிக்கின்றனர்.

பண்பாடு[தொகு]

இங்கு வசிப்பவர்கள் பெரும்பாலானோர் தமிழ் பேசும் மக்களே. சிறுபான்மையில் தெலுங்கு பேசும் தமிழ் மக்களும் உள்ளனர். அனைவரும் உடை, உணவு, பழக்க வழக்கங்கள், திருமணம், சடங்கு, சம்பிரதாயங்களில் பின்பற்றுவது தம் இனத்தைச் சார்ந்த தமிழ் பண்பாடு.

உணவு[தொகு]

தமிழகத்தின் முக்கிய உணவான அரிசி சோறு இவ்வூரின் முக்கிய உணவாக உள்ளது. இவை தவிர பிற தமிழக உணவுகளும் ஸ்ரீவில்லிபுத்தூரில் கிடைக்கும். புரோட்டா என்று அழைக்கப்படும் மைதா மாவினால் செய்யப்படும் ரொட்டியும் இங்கு பிரசித்தம். பேருந்து நிலையத்தில் இருந்து வெளி வந்ததும், புரோட்டா கிடைக்கும் உணவகங்கள் இங்கு உண்டு. பதநீர் இங்கு கிடைக்கும் இனிமையான இயற்கை குளிர்பானம். பதநீர் அரசின் கூட்டுறவுக் கழகம் மூலம் விற்பனை செய்யப் படுகிறது.

கல்வி[தொகு]

பள்ளிகள்[தொகு]

(ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி எல்லைக்குள்)

 1. சி. எம். எஸ். மேல்நிலைப் பள்ளி
 2. குருஞான சம்பந்தர் இந்து மேல்நிலைப்பள்ளி
 3. நகர்மன்ற திரு. வி. கலியாணசுந்தரனார் மேல்நிலைப்பள்ளி
 4. மகாராஜபுரம் நாகம்மாள் ராஜையா பெண்கள் மேல்நிலைப்பள்ளி
 5. புனித இருதய பெண்கள் மேல்நிலைப்பள்ளி (கான்வென்ட்)
 6. புனித இருதய நடுநிலைப் பள்ளி
 7. மங்காபுரம் இந்து நாடார் மேல்நிலைப்பள்ளி
 8. தியாகராஜா மேல்நிலைப்பள்ளி
 9. புனித அந்தோணியார் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி
 10. ஸ்ரீவி லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
 • சூளை விநாயகர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

அருகில் உள்ள கல்லூரிகள்[தொகு]

 1. அய்ய நாடார் ஜானகி அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிவகாசி
 2. கலசலிங்கம் பல்கலைக்கழகம், கிருஷ்ணன்கோவில்
 3. வி. பி. எம் குழுமம் கல்வி நிறுவனங்கள், கிருஷ்ணன்கோவில்

போக்குவரத்து[தொகு]

திருவில்லிபுத்தூர் பேருந்து நிலையம்

மதுரை மற்றும் கொல்லத்தை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 208, இந்நகரம் வழியாக சென்று, சுற்றியுள்ள நகர்ப்புற பகுதியான இராஜபாளையம் மற்றும் தென்காசி ஆகியவற்றை இணைக்கிறது.

ஸ்ரீவில்லிபுத்தூர் நகரப் பேருந்தால் சேவை செய்யப்படுகிறது, இது நகரம் மற்றும் புறநகர்ப் பகுதிகளுக்குள் இணைப்பை வழங்குகிறது. இந்நகரத்தின் உள்ளூர் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்ய தனியாரால் சிற்றுண்டி இயக்கப்படுகிறது. இங்குள்ள பேருந்து நிலையம் நகரின் மையத்தில் அமைந்துள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகமானது, ஸ்ரீவில்லிபுத்தூருடன் பல்வேறு நகரங்களை இணைக்கும் தினசரி பேருந்து சேவைகளை இயக்குகிறது. அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் ஆனது சென்னை மற்றும் மதுரை போன்ற முக்கியமான நகரங்களுடன் நகரத்தை இணைக்கும் நீண்ட தூர பேருந்துகளை இயக்குகிறது. இந்நகரத்தை சுற்றியுள்ள மாம்சாபுரம், கிருஷ்ணன்கோயில், வத்திராயிருப்பு, கூமப்பட்டி, மகாராஜபுரம், கூனம்பட்டி, வன்னியம்பட்டி சந்திப்பு, தலவைபுரம், நாச்சியார்பட்டி மற்றும் சத்திரப்பட்டி ஆகிய கிராமங்களுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

திருவில்லிபுத்தூர் தொடருந்து நிலையம்

ஸ்ரீவில்லிபுத்தூர் தொடருந்து நிலையம் ஆனது தென்னக இரயில்வேயின், விருதுநகர் - செங்கோட்டை பாதையில் உள்ளது. இது ராஜபாளையம் மற்றும் செங்கோட்டை வழியாக தமிழகத்தை கேரளாவுடன் இணைக்கிறது. பொதிகை விரைவுத் தொடருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் வழியாக செங்கோட்டை முதல் சென்னை எழும்பூர் வரை தினமும் இயக்கப்படுகிறது. மற்ற அனைத்து விரைவு வண்டிகளும், விருதுநகர் நிலையத்திலிருந்து இயக்கப்படுகின்றன. மதுரையிலிருந்து - தென்காசி வரை இருபுறமும் பயணிகள் தொடருந்துகள் இயக்கப்படுகிறது.

இந்நகரிலிருந்து 74 கி.மீ (46 மைல்) தொலைவில் அமைந்துள்ள மதுரை பன்னாட்டு வானூர்தி நிலையம் அருகிலுள்ள சர்வதேச வானூர்தி நிலையமாகும்.

அருகமைந்த ஊர்கள்[தொகு]

சுற்றுலா[தொகு]

சிறப்புமிக்க இடங்கள்
 • ஆண்டாள் கோவில்
 • பென்னிங்டன் நூலகம்
 • திருமுக்குளம்
 • செண்பகத் தோப்பு சாம்பல் நிற அணில் வனவிலங்கு சரணாலயம்
 • திருமலை நாயக்கர் அரண்மனை
அருகிலுள்ள பிற சுற்றுலாத் தலங்கள்
 • சதுரகிரி மலை
 • தாணிப்பாறை
 • பிளவக்கல் ஆணை
செண்பகத்தோப்பின் எழில்மிகு காட்சி

செண்பகத்தோப்பு, ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து சுமார் 8 கி.மீ. மேற்கே அமைந்துள்ள ஒரு காட்டு பகுதியாகும். இரண்டு சக்கர அல்லது வாகனம் அல்லது மிதிவண்டி மூலம் இவ்விடத்திற்கு செல்லாம். காடுகள் மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்குச்சரிவுகளில் காணப்படுகின்றன. மலையின்மொத்த நிலப்பரப்பில் 6.3% (சதவீதம்) மட்டுமே காடுகள் உள்ளது. அரிய தாவரங்கள் மற்றும் விலங்கின வகைகள் மலைச்சரிவுகளில் இணைந்து காணப்படுகின்றன.

ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் செண்பகத்தோப்பில் 1989 ஆம் ஆண்டு, 480 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ஒரு வனவிலங்கு சரணாலயம் நிறுவப்பட்டது. இந்த சரணாலயத்தின் தென்மேற்குப் பகுதியில் 'பெரியார் புலிகள் காப்புக்காடுகள் சரணாலயம்' மற்றும் வடமேற்குப் பகுதியில் 'மேகமலை காப்புக்காடுகள்' அமைந்துள்ளன.

சாம்பல் நிற அணில்

இந்த இடத்தின் உயரம் கடல் மட்டத்திலிருந்து 100மீ (மீட்டர்) முதல் 2010மீ (மீட்டர்) வரை வேறுபடுகிறது. இந்த சரணாலயம் அழிந்து வரும் இனமாகிய சாம்பல் நிற அணில்களுக்கு (Grizzled Giant Squirrel, Ratufa macrora) புகழிடமாகத் திகழ்கிறது. இந்த சாம்பல்நிற அணில் 1 முதல் 1.8 கிலோ எடையுள்ளதாகவும் மற்றும் ஒரு சிறிய பூனை அளவில் இருக்கும். இதன் நீளம் 735 மி.மீ. (மில்லிமீட்டர்), மூக்கில் இருந்து 400 மி.மீ.(மில்லிமீட்டர்) முதல் 360 மி.மீ.(மில்லிமீட்டர்) வால் வரை நீளம் இருக்கும். இந்த வகை அணில்கள் அருகருகேயுள்ள மரங்களின் உச்சியிலுள்ள சந்திக்கும் கிளைகளில் தமது கூட்டை கட்டும். இம்மாதிரி உயர்ந்த கிளைகளில் கூடு கட்டுவது, தான் ஏதேனும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் போது மரம் விட்டு மரத்தில் தாவி அந்த இடத்தில் இருந்து நகர்ந்து சாம்பல் நிற அணில் தப்பிக்க வழிவகை செய்கிறது. ஒரு சாம்பல் நிற அணிலின் சராசரி வசிப்பிடப் பரப்பு 1.970 சதுர மீட்டர் முதல் 6.110 சதுர மீட்டர் ஆகும்.

இந்த சரணாலயம் பறவைகள், பாலூட்டிகள், ஊர்வன மற்றும் பட்டாம்பூச்சிகள் முதலிய உயிரினங்களுக்கு இருப்பிடம். யானைகளும் இங்கே இருப்பதுண்டு. சில சமயங்களில் இடம்பெயர்ந்து வரும் யானைகள் காணப்படுகின்றன. புலி, சிறுத்தை, வரையாடு, புள்ளி மான்கள், மான், கடமான், காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி, நீலகிரி குரங்குகள், சிங்கவால் குரங்கு, குரங்குகள், தேவாங்கு, வானரம், குரைக்கும் மான், கரடி மற்றும் பறக்கும் அணில் என மற்ற விலங்குகளும் காணப்படுகின்றன. பறவை இனங்கள் 100-க்கும் மேல் அடையாளம் காணப்பட்டுள்ளன. அரிய வகை பறவை இனமான 'இந்திய பெரிய கருப்பு வெள்ளை இருவாயன்' இங்கே காணப்படுகிறது.

சரணாலயம் உள்ள வனப்பகுதிகளில் வசிக்கும் வனவிலங்குளைப் பாதுகாப்பதற்காகச் சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. காட்டில் உள்ள பழங்கள் மற்றும் காட்டில் உள்ள பிற சிறிய இயற்கை உற்பத்திப் பொருட்களைச் சேகரித்து எடுத்துச் செல்வதற்குக் கொடுத்து வந்த ஆண்டு குத்தகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் பழமரங்கள் மற்றும் மற்ற வகை மரங்கள் நடப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கைகள் அவ்விலங்குகளின் உணவு மூலங்களை அதிகரிக்கும், அதே போல் காடுகளின் தொடர்ச்சியை உறுதி செய்யும். இவ்வுயிரினங்களின் வாழ்விடம் மேம்படுத்தப்படுவதற்காக மண் பாதுகாப்பு மற்றும் மழைநீர் அறுவடை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.[7]

அரிய மருத்துவகுணமுள்ள தாவரங்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் உள்ள அழகர்கோவில் பள்ளத்தாக்கு மற்றும் சதுரகிரியில் உள்ள காடுகளில் காணப்படுகின்றன. 275 மருத்துவ மூலிகைகள் கண்டறியப்பட்டுப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆர்கிட் மலர் வகைகள் மற்றும் பல்வேறு மலரற்ற தாவரங்கள் இந்த காடுகளில் காணப்படுகின்றன.

இங்குள்ள காட்டழகர் கோவிலும் பிரசித்தி பெற்றது. செண்பகத்தோப்பு மீன்வெட்டிப் பாறை நதி நீர்வீழ்ச்சி ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுபுறத்தில் பிரபலமானது. விடுமுறை தினங்களில், ஸ்ரீவில்லிபுத்தூர், இராஜபாளையம் மற்றும் சிவகாசியில் இருந்து பல மக்கள் இந்த இடத்திற்கு வருகை தருவர். செண்பகத்தோப்பு அடிவாரப்பகுதிகளிலும் மற்றும் சுற்றுப்புறத்திலும், பல பழங்குடி சமூகங்கள் வழிவழியாக வாழ்ந்து வருகின்றனர்.

தகவல் தொடர்பு[தொகு]

ஸ்ரீவில்லிபுத்தூரில் பி. எஸ். என். எல். தொலைத்தொடர்பு சேவைகளை வழங்குகிறது. மேலும் தனியார் சேவைகளும் உள்ளன. இங்கு அகலப் பட்டை இணைய இணைப்புச் சேவை உள்ளது. 3ஜி சேவைக்கான ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. மதுரைப் பதிப்பு செய்தித்தாள்கள் இங்கு வருகின்றன. உள்ளூர் நிகழ்ச்சிகள், செய்திகளை அறிந்து கொள்ள கேபிள் சேனல் மூலம் வசதி உள்ளது. மதுரை, திருநெல்வேலி வானொலி பண்பலை ஒலிபரப்புகள் இவ்வூரில் அதிகம் கேட்கப்படுபவை.

கொண்டாட்டங்கள்[தொகு]

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நடைபெறும் ஆடிப்பூரத் திருவிழாவில் 12-ஆம் நாள், தேரோட்டம் நடைபெறும். மாநிலம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் ஆண்டாள் கோயிலில் வருடாந்திர தேர்த் திருவிழா பார்க்க வருவர். இது விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறும் மிக பெரிய விழாக்களில் ஒன்றாகும். இது 108 திவ்ய தேசங்கள் எனப்படும் வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். காலையில் சிறப்பு பூஜைகள் முடிந்த பின்னர், உற்சவ தெய்வங்கள், ஸ்ரீ ரங்கமன்னார் மற்றும் ஆண்டாள் அலங்கரிக்கப்பட்ட பல்லக்குகள் மூலம் தேருக்குக் கொண்டு வரப்படுவர். பின்னர் தேர் நான்கு ரத வீதிகளில் பவனி வரும். பெரிய மாரியம்மன் கோவிலில் நடைபெறும் பூக்குழித் திருவிழாவும் சிறப்பானது. பல்வேறு ஊரில் இருந்து பக்தர்கள் காப்புக்கட்டி விரதம் இருந்து தீமீதித் திருவிழாவில் கலந்து கொள்வர்.

குறிப்பிடத்தக்க பிரபலங்கள்[தொகு]

 • ஆண்டாள்- வைணவத்தின் பன்னிரு ஆழ்வார்களில் ஒரே பெண். நாச்சியார் திருமொழி , திருப்பாவை இலக்கியங்களின் ஆசிரியர்.
 • பெரியாழ்வார்- வைணவத் தொண்டர்.
 • கே.எஸ்.கிருஷ்ணன் (கரியமாணிக்கம் ஸ்ரீனிவாச கிருஷ்ணன்), 1930- இல் நோபல் பரிசு பெற்ற அறிவியலாளர் சர். சி.வி.ராமன் அவர்களுடன் இணைந்து இராமன் விளைவு ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.
 • டி. ராமசாமி (திருமாலாச்சாரி ராமசாமி ) - இந்திய அரசாங்கத்தில் அறிவியல் தொழில்நுட்பத் துறையில் அரசாங்க செயலர் பதவி வகித்தவர்.
 • ரா. கிருஷ்ணசாமி நாயுடு - சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர். 1957 - இல் சட்டசபை உறுப்பினராகவும் இருந்தவர்.
 • ஜஸ்டிஸ். கே. வீராசாமி - 1969 முதல் 1976 சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதியாக இருந்தவர்.
 • டி . ஏ . எஸ். ராமசாமி - குருஞான சம்பந்தர் ஹிந்து மேல்நிலைப்பள்ளியின் தாளாளர். 40 வருடங்கள் இப்பள்ளியின் உயர்வுக்குப் பாடுபட்டவர்.
 • கே.வி. போத்தி மூப்பனார் - போத்தீஸ் துணி விற்பனை அங்காடிகளைத் தோற்றுவித்தவர்.

பொழுதுபோக்கு[தொகு]

ஸ்ரீவில்லிபுத்தூரின் பிரதான பொழுதுபோக்கு திரையரங்குகள். புதிய திரைப்படங்கள் ராஜபாளையம் நகரில் உள்ள திரை அரங்குகளில் வெளியிடப்படும்.

 • ஆண்டாள் திரையரங்கம்
 • சந்தோஷ் திரையரங்கம்
 • தெய்வம் திரையரங்கம்
 • ரேவதி திரையரங்கம்

மேற்கோள்கள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Srivilliputhur
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
 1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
 2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
 3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
 4. "Srivilliputtur". Falling Rain Genomics, Inc. பார்த்த நாள் டிசம்பர் 04, 2012.
 5. kmdilip. "Srivilliputtur History". www.srivilliputtur.co.in.
 6. ஸ்ரீவில்லிப்புத்தூர் நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்
 7. "Shenbagathopu Grizelled Squirrel Sanctuary". பார்த்த நாள் டிசம்பர்04, 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவில்லிபுத்தூர்&oldid=3319073" இருந்து மீள்விக்கப்பட்டது