ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேகவப் பெருமாள் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆதிகேசவப் பெருமாள் கோவில் (Adikesava Perumal temple, Sriperumpudur) (இராமனுஜர் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது) என்பது தமிழ்நாட்டில், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள ஒரு வைணவ கோயிலாகும். இக்கோயில் விஷ்ணுவுக்காக அமைக்கப்பட்டது. இக்கோயில் திராவிடக் கட்டிடக்கலையில் கட்டப்பட்டுள்ளது. கோயில் தெய்வமாக ஆதிகேசவா் மற்றும் அவரது துணைவியான லக்ஷ்மியை அமிர்தகவள்ளி என்ற பெயரில் வணங்குகிறனர். இக்கோயிலானது வைணவத் தத்துவஞானியான, இராமானுசரின் பிறப்பிடமாக கருதப்படுகிறது. இராமனுச மண்டபத்தின் முன் உள்ள தங்கத்தகடுகளால் வேயப்பட்ட சன்னதியானது மைசூர் மகாராஜாவால் கட்டப்பட்டது.

இந்தக் கோவில் காலை 6 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும். இக் கோயிலில் ஆறு கால பூசை நடக்கிறது. இக்கோயிலில் பல திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றது. சித்திரை மாதத்தில் பெருந்தேரோட்டுமும், பெப்ரவரி - மார்ச்சில் மாசி பூரம் விழாவும், மார்ச் _ ஏப்ரலில் பங்குனி உத்திர திருவிழா போன்ற பல்வேறு முக்கிய திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. இந்தக் கோயில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையால் பராமரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது. [1]

புராணங்கள்[தொகு]

இராமானுஜரின் மடியில் செல்லப்பிள்ளையாக பெருமாள் இருக்கும் புகைப்படம்

இராமானுசர் (பொ.ச. 1017–1137) ஸ்ரீபெரும்புதூரில் ஒரு தமிழ் குடும்பத்தில் பிறந்த ஒரு இந்து இறையியலாளர், தத்துவஞானி மற்றும் வேதவசன நிபுணர் ஆவார். [2] வைணவர்கள் அவரை தங்கள் பாரம்பரியத்தின் மிக முக்கியமான ஆச்சாரியார்களில் ஒருவராகவும் (வேத தத்துவத்தின் பாரம்பரிய விளக்கங்களில் ஒன்றான விசிஷ்டாத்வைதத்தின் முன்னணி ஆய்வாளராகவும் பார்க்கிறார்கள். [3][4][5] திருமலை வெங்கடேசுவரர் கோவிலில் பணிபுரிந்து வந்த திருமலை நம்பியின் கீழ் இராமானுசர் வளர்ந்தார். ஒருமுறை, ஒரு மன்னன், இராமானுசரை தண்டிக்க விரும்பினான். இராமானுஜரின் சீடரான கூரத்தாழ்வான், இராமானுஜர் தப்பிக்க உதவினார், அவருக்கு அணிய ஒரு வெள்ளை துணியைக் கொடுத்தார். அதனால், இராமானுஜர் மன்னனிடமிருந்து தப்பினார், ஆனால் மன்னர் கூரத்தாழ்வானின் கண்களை குருடாக்கினார். இந்த நிகழ்வைத் தொடர்ந்து, கூரத்தாழ்வானுக்கு ராமானுஜர் வெள்ளைத் துணியில் தோன்றும் காட்சி, ஒரு திருவிழாவாக, இக் கோயிலில் கொண்டாடப்படுகிறது.

ஒருமுறை, ஒரு மன்னன் தன் மகளை மகிழ்விக்க நாராயணபுரத்தின் சிலையை எடுத்தான். சிலையை மீட்க இராமானுசர் தில்லிக்குச் சென்றார், சிலை தெய்வீக சக்திகளால், ஒரு குழந்தையாக இராமானுசரின் மடியில் விழுந்ததாக நம்பப்படுகிறது. இந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் செல்லப்பிள்ளை உற்சவம் நடத்தப்படுகிறது. [1]

மற்றொரு புராணத்தின் படி, ஒரு மன்னர் ஒரு பசுவைத் தாக்க முயன்ற புலியைக் கொல்ல முயன்றான். மன்னரின் முயற்சிகள் இருந்தபோதிலும், பசு, புலியால் கொல்லப்பட்டது. அதனால், மன்னர் பசுவின் சாபத்திற்கு ஆளானார். பாவத்திலிருந்து தன்னை விலக்கிக் கொள்ள, அவர் தம்முடைய இடத்தில் தவம் செய்தார். ஆதி கேசவப் பெருமாள், மன்னருக்கு முன் தோன்றி அவரை சாபத்திலிருந்து விடுவித்ததாக நம்பப்படுகிறது. [1]

கோயிலின் அமைப்பு[தொகு]

சித்திரை குளம்

திராவிட கட்டிடக்கலையில் கட்டப்பட்ட இந்த கோயில் சுமார் 1.5 ஏக்கர் (0.61 ஹெக்டேர்) பரப்பளவை ஆக்கிரமித்து இரண்டு நிலப்பரப்புகளைக் கொண்டுள்ளது. இது தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் உள்ள புறநகர்ப் பகுதியான ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ளது. இதில் சோழர் மற்றும் விஜயநகர கட்டிடக்கலை அம்சங்கள் உள்ளன. விஜயநகர சாம்ராஜ்யத்திலிருந்து வந்த, முதலாம் ஸ்ரீரங்க மன்னரின் (1572–1586), 1572 ஆம் ஆண்டில் செதுக்கப்பட்ட கல்வெட்டுகள் காணப்படுகிறது. மேலும், 1556 ஆம் ஆண்டில் அலியா ராம ராயாவின் (1542-1565) காலத்திலிருந்த மற்றொரு கல்வெட்டும் உள்ளது. இக்கல்வெட்டில், கோயிலுக்கு மானியமாக, 36 கிராமங்கள் வழங்கியதை குறிக்கிறது.

இக்கோயிலின் விமானம் (கருவறையின் கூரை) 1912 ஆம் ஆண்டில் தங்கமுலாம் பூசப்பட்டிருந்தது, மேலும் பழங்காலத்தில், இந்த அம்சத்தைக் கொண்ட ஒரே தென்னிந்திய கோயிலாக இருந்தது. விமானத்தில், ஸ்ரீ இராமானுசரின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. கோயிலில் தங்கத் தகட்டின் வரலாற்றைப் பதிவு செய்யும் செப்புத் தகடு உள்ளது. [6] இந்த கோவிலில் 10 அடி (3.0 மீ) உயரமான சுவர்களால் சூழப்பட்ட ஒரு செவ்வக திட்டம் உள்ளது. இது ஏழு அடுக்குகள் உள்ள நுழைவாயில் கோபுரத்தால் இணைக்கப்பட்டுள்ளது.

தலைமை தெய்வமான ஆதி கேசவ பெருமாள் சிலை, கருவறையில் நின்ற திருக்கோலத்தில் காணப்படுகிறது. இது, கருங்கல்லினால் ஆன ஒரு உருவமாகும். ஆதி கேசவப் பெருமாளை எதிர்கொள்ளும் விஷ்ணுவின் வாகனமான, கருடாழ்வாரின் சன்னதி, மத்திய சன்னதிக்கு மையமாக அமைந்துள்ளது. இக்கோயிலின், மத்திய சன்னதி, ஒரு வழிபாட்டு மண்டபம் மற்றும் குறுகிய அர்த்த மண்டபம் வழியாக அணுகப்படுகிறது. கொடிமரம், கருடாழ்வாரின் சன்னதிக்கு பின்னால் அமைந்துள்ளது, இது, மத்திய சன்னதி மற்றும் நுழைவாயில் கோபுரத்திற்கு மையமாக அமைந்துள்ளது. இருபுறமும் உள்ள வழிபாட்டு மண்டபத்தில் ஆழ்வார்களின் திருவுருவப்படங்கள் உள்ளன.

தாயார் யதிராஜ நாத வள்ளி சன்னதி, இரண்டாவது இடத்தில் அமைந்துள்ளது. இலட்சுமி, ஒரு பக்தரின் பெயரை எடுக்கும் கோயில்களில் இதுவும் ஒன்றாகும். [6] இராமானுசர் சன்னதிக்கு முன்னால் தங்கமுலாம் பூசப்பட்ட மண்டபம் மைசூர் மகாராஜாவால் வழங்கப்பட்டது. இக்கோயிலில் தனியான சொர்க்கவாசல் அமைப்பு இல்லை. வைகுந்த ஏகாதசி திருவிழாவின் போது, இங்குள்ள தெய்வம், புனித நுழைவு வாயில் வழியாக எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இங்குள்ள பூதக்கல் மண்டபத்தில் கோயிலின் புராணங்களைச் சித்தரிக்கும் வர்ணப்படங்கள் உள்ளன. மேலும், யதிராஜ நாத வள்ளி தாயாரின் உற்சவ விழாக்கள் இங்கு நடைபெறுகிறது. [1]

திருவிழாக்கள்[தொகு]

இக் கோயிலில் பல்வேறு திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. சித்திரை பிரம்மோற்சவத்தின் போது, ஆதிகேசவா மற்றும் யதிராஜ நாத வள்ளி ஆகியவற்றின் திருவிழா தெய்வங்களைக் கொண்ட கோயில் தேர், ஸ்ரீபெரும்புதூரின் தெருக்களைச் சுற்றி வலம் வருகிறது. திருவிழாத் தேர், 2003 ஆம் ஆண்டிற்கு முந்தைய 25 ஆண்டுகளாக இயங்கவில்லை, 2003 முதல் மீண்டும் தொடங்கப்பட்டது. திருவிழாவைத் தொடர்ந்து, பிறந்தநாள் விழாவான இராமானுசரின் திருஅவதார உற்சவம் தொடர்கிறது. [7]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 "Sri Adhi Kesavaperumal temple". Dinamalar. பார்த்த நாள் 5 November 2015.
  2. "Sri Ramanuja's gift to the Lord". The Hindu (India). 24 December 2012. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-editorialfeatures/sri-ramanujas-gift-to-the-lord/article4233363.ece. 
  3. Bartley, C. J. (2002). The Theology of Rāmānuja: Realism and religion. Routledge Curzon. பக். 1. 
  4. Carman, John Braisted (1974). The Theology of Rāmānuja: An essay in interreligious understanding. New Haven and London: Yale University Press. பக். 24. 
  5. Carman, John B. (1994). Majesty and Meekness: A Comparative Study of Contrast and Harmony in the Concept of God. Wm. B. Eerdmans Publishing. பக். 80. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780802806932. https://books.google.com/books?id=DyVfKEmEK2QC. 
  6. 6.0 6.1 Anantharaman, Ambujam (2006). Temples of South India. East West Books (Madras). பக். 1-7. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-88661-42-8. 
  7. T.A., Srinivasan (25 April 2003). "New temple car for Ramanuja". The Hindu. http://www.thehindu.com/thehindu/fr/2003/04/25/stories/2003042501120500.htm. பார்த்த நாள்: 9 November 2015.