ஸ்ரீகிருஷ்ணா நாராயண் ரத்தன்சங்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்ரீகிருஷ்ணா நாராயண் ரத்தன்சங்கர்
பிறப்புசனவரி 1, 1900(1900-01-01)
பிறப்பிடம்மும்பை
இறப்பு14 பெப்ரவரி 1974(1974-02-14) (அகவை 74)
இசை வடிவங்கள்இந்துஸ்தானி இசை
தொழில்(கள்)இசைக்கலைஞர்

ஸ்ரீகிருஷ்ணா நாராயண் ரத்தன்சங்கர் (Shrikrishna Narayan Ratanjankar) (திசம்பர் 31, 1899 நள்ளிரவு- 14 பிப்ரவரி 1974) அல்லது எஸ்.என்.ரத்தன்சங்கர் ஆக்ரா கரானாவில் (இசைப்பள்ளி) இந்திய பாரம்பரிய இசையின் புகழ்பெற்ற நிபுணராகவும், ஆசிரியராகவும் இருந்தார். விஷ்ணு நாராயண் பட்கண்டே, பரோடா மாநிலத்தின் பயாசு கான் ஆகியோரின் முன்னணி சீடரான இவர், இலக்னோவின் பட்கண்டே இசைக் கழகத்தின் முதல்வராகவும் இருந்தார். அங்கு இவர் இசைத்துறையில் பல குறிப்பிடத்தக்கவர்களைப் பயிற்றுவித்தார். [1]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

இவரது தாத்தா கோவிந்தராவ் 19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் மும்பை வந்தவர். இவரது தந்தை நாராயண் கோவிந்த் ரத்தன்சங்கர் மும்பையில் பிறந்தார். இவருக்கு 7 வயதில் பயிற்சி அளிக்கப்பட்டது. அனந்த் மனோகர் ஜோஷியிடமும் ( குவாலியர் கரானா ) பின்னர் ஆக்ரா கரானாவின் பயாசு கானின் கீழும் இவர் பயிற்சிப் பெற்றார். 1911ஆம் ஆண்டில், இசைக்கலைஞர் விஷ்ணு நாராயண் பட்கண்டேவிடம் பயிற்சி பெறத் தொடங்கினார்.[2] 1926 இல் மும்பை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.

இலக்னோவில் உள்ள பட்கண்டே இசை பல்கலைக்கழகத்தின் (முன்னர் மாரிஸ் இசைக் கல்லூரி என்று அழைக்கப்பட்டது) பல ஆண்டுகளாக முதல்வராக இருந்தார். பின்னர் மத்திய பிரதேசத்தின் கைராகர் இந்திரா சங்க கால விஸ்வ வித்யாலயாவில் துணைவேந்தராக நியமிக்கப்பட்டார். பின்னர் இவர் மீண்டும் இரண்டு வருட ஒப்பந்தத்தில் பட்கண்டே இசை வித்யாபீடத்தின் தலைவராக அழைக்கப்பட்டார். இவரது மாணவர்களில் கே. ஜி. ஜின்டே, எஸ்சிஆர். பட்,[3] சிதானந்த் நகர்கர், வி. கோ. ஜாக், தினகர் கைக்கினி, சானோ குரானா,[4] சுமதி முத்தட்கர், பிரபாகர் சின்சோர், சி. ஆர். வியாசு, சின்மயி லஹிரி, யஷ்வந்த் மகாலே, எஸ். என். திரிபாதி, ரோஷன் லால் நகராத் (இசையமைப்பாளர்) ஆகியோர் அடங்குவர்.

1950களின் நடுப்பகுதியில் அனைத்திந்திய வானொலிக்கு கலைஞர்களைத் தேர்ந்தெடுக்கும் குழுவிற்குத் தலைவராக நியமிக்கப்பட்டார்.[5]

விருது[தொகு]

1957ஆம் ஆண்டில் இவருக்கு இந்திய அரசு பத்ம பூசண் விருதினை வழங்கியது.[6] 1963ஆம் ஆண்டில் இந்தியாவின் தேசிய இசை, நடனம் மற்றும் நாடக அகாதமியான சங்கீத நாடக அகாதமி, வாழ்நாள் சாதனையாளர்களுக்கான மிக உயர்ந்த கௌரவமான சங்கீத நாடக அகாதமி கூட்டாளர் என்ற கௌரவத்தை இவருக்கு வழங்கியது.[7]

மேற்கோள்கள்[தொகு]