உள்ளடக்கத்துக்குச் செல்

ஸ்காட் கார்னி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஸ்காட் கார்னி (Scott Carney சூலை 9, 1978) என்பவர் ஒரு அமெரிக்க புலனாய்வு பத்திரிகையாளர் ஆவார். இவர் அமெரிக்காவில் மானுடவியல் படித்துவிட்டு பேராசிரியராக பணிபுரிய 2006 இல் இந்தியாவந்து, சென்னையில் 2009 வரை இருந்தார். அப்போது அவருடைய மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். அவரின் இறப்பு ஸ்காட் கார்னிக்கு வேறு ஒரு உலகத்தைத் திறந்து காட்டியது. அதன் பிறகுதான் உலகில் நடைபெறும் உடல் உறுப்பு தானங்களுக்குப் பின் உள்ள கறுப்புப் பக்கங்கள் அவருக்குத் தெரியவந்தன.[1] தற்போது கொலராடோவில் வாழ்கிறார். இவர், மருத்துவ தொழில்நுட்பம் மற்றும் ஒழுக்க சிக்கல்களையும் அதன் கருப்புப் பக்கங்களை பற்றிய பல்வேறு கட்டுரைகளை பல்வேறு இதழ்களில் எழுதிவருகிறார். குறிப்பாக வ்ரைட் இதழ், மதர் ஜோன்ஸ் இதழ், பிளேபாய் , பாரின் பாலிசி, மென்ஸ் ஜர்னல் போன்ற இதழ்களிலும், அமெரிக்காவின் தேசிய பொது வானொலி போன்ற ஊடகங்களிலும் தன் இதழியல் பணிகளை ஆற்றிவருகிறார். இவருடைய முதல் புத்தகம் சிவப்புச் சந்தை என்னும் நூலில் The Red Market: On the trail of the world's organ brokers, bone thieves, blood farmers and child traffickers உலகின் உறுப்பு வணிக தரகர்கள், எலும்பு திருடர்கள், இரத்த அறுவடையாளர்கள், குழந்தை கடத்தல் போன்றவர்களைபற்றி ஆழமாக ஆய்வுசெய்ய தனது கள ஆய்வுகளுக்காக இந்தியாவின் பல பகுதிகளில் அபாயகரமான வகையில் அலைந்து திரிந்து பல உண்மைகளை வெளிக்கொண்டு எழுதினார். இந்த புத்தகம் வில்லியம் மாரோ / ஹார்ப்பர் காலின்ஸ் வெளியீட்டாக சூன் 2011 இல் வெளிவந்தது. இந்த நூல் தமிழில் சிவப்புச் சந்தை என்ற பெயரில் செ.பாபு ராஜேந்திரன் மொழிபெயற்பில் அடையாளம் வெளியிட்டுள்ளது. இவரின் இரண்டாவது நூல் ஒரு வைர மலையின் இறப்பு என்ற நூல் 2015 இல் வெளி வந்தது. A Death on Diamond Mountain: A True Story of Obsession, Madness and the Path to Enlightenment

சிவப்புச் சந்தை நூல்[தொகு]

மனித உயிரைக் காக்க இரத்ததானம், உடல் உறுப்பு தானம், கண் தானம் போன்றவை செய்து குறித்து தற்போது பெரிய அளவில் பரப்புரை செய்யப்படுகின்றது. ஆனால், சட்டத்துக்குப் புறம்பான உடல் சார்ந்த தசை வணிகம் உலகம் முழுவதும் நடந்து கொண்டு இருக்கிறது. குறிப்பாக, மேற்கத்திய வளர்ந்த நாடுகளில் இந்த உறுப்புமாற்று சிகிச்சைக்கு மிகுதியான செலவு ஆவதால் மருத்துவ சுற்றுலாவாக இந்தியா, சீனா, ஆப்பிரிக்க நாடுகளுக்கு வருகின்றனர். இதை பயன்படுத்தி பெருமளவிலான கள்ள வர்த்தகர்கள் செயல்படுகிறார்கள். இந்த உடலுறுப்பு தொடர்பான கருப்பு வர்த்தகத்தை ஸ்காட் கார்னி சிவப்புச் சந்தை என்று குறிப்பிடுகிறார். எலும்பு கூடுகளை ஏற்றுமதி செய்ய கல்லறைகளை நோண்டும் எலும்புத் திருடர்கள், சிறுநீரகங்களைத் திருடுபவர்கள், கார்னியாவைக் திருடும் மருத்துவர்கள், மனித உடலில் சுரண்டப்படும் தோல்கள், பணத்துக்காக ஆபத்தான மருந்துகளைத் தங்கள் உடலில் பரிசோதனை செய்து கொள்ளும் அப்பாவிகள், சர்வதேச அளவிலான தத்தெடுக்கும் தேவைகளுக்காகக் கடத்தப்படும் குழந்தைகள் உள்ளிட்ட பல அதிர்ச்சிதரும் உண்மைகளை வெளிக்கொண்டு வந்திருக்கிறார். குருதி, உடலுறுப்புகள் போன்றவற்றை தானம் அளிப்பவரின் பெயரும் பெறுபவர் பெயரும் ரகசியமாக வைக்கப்படக் கூடாது; வெளிப்படையான தானமே சட்ட விரோத வர்த்தகத்தைத் தடுக்கும் என்று உறுதியாக கூறுகிறார்.[2] எல்லா வற்றையும்விட இந்தப் புத்தகம் தரும் முதன்மையான செய்தி, உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையே தேவையில்லை என்பதுதான். ஒருவர் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை செய்துகொண்டால், கூடுதலாகச் சில காலம் மட்டுமே வாழ முடியும். ஆனால் அறுவைசிகிச்சைக்குப் பிறகும் அவருக்கு வேறு பக்கவிளைவுகள் வரலாம். இதற்கு மாறாக, அறுவைசிகிச்சை செய்துகொள்ளாமல் மருந்து, மாத்திரைகளையே தொடரலாம். உடல் உறுப்பு தானத்தால் இன்னொரு உயிரைக் காப்பாற்றலாம். ஆனால், உறுப்பு எப்படிக் கிடைத்தது என்று தெரியாத நிலையில் அப்படித் தானம் பெறாமல் இருப்பதன் மூலமும், இன்னொரு உயிரைக் காப்பாற்றலாம்' என்பதே இந்தப் புத்தகம் உணர்த்துவதாக உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "உங்கள் உடலின் விலை என்ன?". தி இந்து (தமிழ்). 23 ஏப்ரல் 2016. பார்க்கப்பட்ட நாள் 23 ஏப்ரல் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  2. "நூல் அரங்கம்". தினமணி. 8 பெப்ரவரி 2016. பார்க்கப்பட்ட நாள் 23 ஏப்ரல் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்காட்_கார்னி&oldid=3659039" இலிருந்து மீள்விக்கப்பட்டது