சேக் முஜிபுர் ரகுமான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஷேக் முஜிபுர் ரகுமான் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சேக் முஜிபுர் ரகுமான்
শেখ মুজিবুর রহমান
வங்காளதேச குடியரசுத் தலைவர்
பதவியில்
11 ஏப்ரல் 1971 – 12 சனவரி 1972
பிரதமர்தாஜுதீன் அகமது
முன்னையவர்பதவி உருவாக்கப்பட்டது
பின்னவர்நஸ்ருல் இஸ்லாம் (தற்காலிகம்)
பதவியில்
25 சனவரி 1975 – 15 ஆகத்து 1975
பிரதமர்முகம்மது மன்சூர் அலி
முன்னையவர்முகம்மது முகம்மதுல்லா
பின்னவர்கொந்தகர் முஸ்தாக் அகமது
வங்காளதேசப் பிரதமர்
பதவியில்
12 சனவரி 1972 – 24 சனவரி 1975
குடியரசுத் தலைவர்அபூ சியீத் சவுத்ரி
முகம்மது முகம்மதுல்லா
முன்னையவர்தாஜுதீன் அகமது
பின்னவர்முகம்மது மன்சூர் அலி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1920-03-17)17 மார்ச்சு 1920
துங்கிபாரா, பரித்பூர் மாவட்டம், வங்காள மாகாணம், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு (தற்போது வங்காளதேசம்)
இறப்பு15 ஆகத்து 1975(1975-08-15) (அகவை 55)
டாக்கா, வங்காளதேசம்
அரசியல் கட்சிBangladesh Krishak Sramik Awami League (1975)
பிற அரசியல்
தொடர்புகள்
அனைத்திந்திய முஸ்லிம் லீக் (Before 1949)
அவாமி லீக் (1949–1975)
முன்னாள் கல்லூரிமெளலானா ஆசாத் கல்லூரி
டாக்கா பல்கலைக்கழகம்

சேக் முஜிபுர் ரகுமான் (வங்காள மொழி: শেখ মুজিবর রহমান Shekh Mujibur Rôhman) (மார்ச் 17, 1920ஆகஸ்ட் 15, 1975) கிழக்கு பாகிஸ்தானின் வங்காள மக்களின் தலைவராக இருந்தவர். வங்காள தேசத்தின் தந்தை எனப் போற்றப்படுகிறார். அவாமி லீக் கட்சியின் தலைவராகவும் வங்காள தேசத்தின் முதலாவது அதிபராகவும் பின்னர் இறக்கும் வரையில் அந்நாட்டின் முதலாவது தலைமை அமைச்சராகவும் இருந்தவர். இவரும் இவரது குடும்பத்தினரும் 1975 இல் படுகொலை செய்யப்பட்டனர். இவர் குடும்பத்தில் உயிர்தப்பிய சேக் ஹசீனா 1996–2001 காலப்பகுதியில் வங்கதேசத்தின் தலைமை அமைச்சராக இருந்தார்.

பிறப்பும்,கல்வியும்[தொகு]

ஷேக் முஜிப்புர் ரஹ்மான் – (Sheik Mujibur Rahman) – மார்ச் 17 பிரித்தானியாவின் இந்தியாவின் கிழக்கு வங்கப் பகுதியின் ஃபரீத்புர் மாவட்டத்தில் டோங்கிபுரா கிராமத்தில் பிறந்தவர் (1920). கோபால்கஞ்ச் அரசுப் பள்ளியிலும் மாத்ரிபூர் இஸ்லாமியா உயர்நிலைப் பள்ளியிலும் படித்தார். அனைவரிடமும் நன்கு பழகும், விளையாட்டில் விருப்பம் கொண்ட இளைஞராக இருந்தார். படிப்பில் கெட்டிக்கார மாணவன் என்று சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்றாலும் ஆசிரியர்களாலும் நண்பர்களாலும் மிகவும் விரும்பப்பட்டார்.

அரசியலில்[தொகு]

இவர்களுக்கு சொந்தமான கொஞ்சம் நிலம் இருந்தது. தனது பகுதியில் இருந்த பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரிசியை விநியோகம் செய்தார். இது எதிர்காலத் தலைவராக பொறுப்பேற்க இருந்த இவரது தலைமைப்பண்புக்கு அடையாளமான இருந்தது. 1940-ல் அகில இந்திய முஸ்லீம் மாணவர் அமைப்பில் சேர்ந்த பிறகு அரசியலில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கினார். இஸ்லாமியா கல்லூரியில் (தற்போதைய மவுலானா ஆஜாத் கல்லூரி) சட்டம் பயின்றார். 1943-ல் பெங்காலி முஸ்லீம் லீகில் சேர்ந்தார். இந்த சமயத்தில் பாகிஸ்தான் என்ற இஸ்லாமிய தனி நாட்டுக்காக உழைத்தார். 1946-ல் இஸ்லாமியா கல்லூரி மாணவ யூனியனின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1947-ல் பட்டம் பெற்றார். பிரிவினைக்குப் பிறகு இவர் புதிதாகப் பிறந்த பாகிஸ்தானில் இருக்கவே விரும்பினார். கிழக்கு பாகிஸ்தான் டாக்கா பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பில் சேர்ந்தார். அந்தப் பகுதியின் முக்கியமான மாணவர் அரசியல் தலைவராக உயர்ந்தார். இந்த சந்தர்ப்பத்தில் பரவலாக நிலவிய வறுமை, வேலையின்மை, மோசமான வாழ்க்கைத்தரம் இவற்றிற்கான தீர்வாக சோஷலிஸம் இருக்கும் என்று இவர் உறுதியாக நம்பினார். இவர் தான் ஒரு பெங்காலி என்பதில் ஆழ்ந்த பெருமை கொண்டிருந்தார்.

மொழிப்போர்[தொகு]

கிழக்கு பாகிஸ்தானில் பேசப்படும் பெரும்பான்மையானவர்களின் மொழி பெங்காலியாக இருந்தாலும் 1949-ல் பாகிஸ்தானில் உருது மட்டுமே ஒரே அதிகாரபூர்வ தேசிய மொழியாக அறிவிக்கப்பட்டது. முகம்மது அலி ஜின்னா கிழக்கு வங்கத்தில் இருக்கும் மக்களும் உருதுவையே தங்கள் தேசிய மொழியாக ஏற்க வேண்டும் என்று அறிவித்தார். அதைத் தொடர்ந்து, மக்கள் இதற்கு எதிராக கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. மாணவர் தலைவராக இருந்த இவர் வேலைநிறுத்தம், ஆர்ப்பாட்டங்களுக்குத் தலைமையேற்று நடத்தினர். கைது செய்யப்பட்டார். சிறையில் இருந்தவாறே 13 நாட்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டார். தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களும் கிளர்ச்சிகளும் நடத்தப்பட்டதால், இவர் உடனடியாக விடுதலை செய்யப்பட்டார். முஸ்லீம் லீக் கட்சியிலிருந்து விலகி அவாமி லீக் கட்சியில் இணைந்தார். இதன் கிழக்கு வங்கப் பிரிவின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டாவது பாகிஸ்தான் சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று 1955 முதல் 1958 வரை பணியாற்றினார். 1956-ல் கிழக்கு வங்கம், கிழக்கு பாகிஸ்தான் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஆனால், இவர் வங்க மக்களின் பாரம்பர்ய அடையாளம் மதிக்கப்பட வேண்டும் என்றும் வங்க மொழியை அதிகாரபூர்வ மொழியாக அறிவிக்க வேண்டும் என்றும் இவர் வலியுறுத்தினார். 1958-ல் ஜெனரல் அயுப் கான் அரசியல் அமைப்பை ரத்து செய்துவிட்டு ராணுவ ஆட்சியைக் கொண்டு வந்தார். இதை எதிர்த்த முஜிபுர் கைது செய்யப்பட்டு 1961வரை சிறையில் அடைக்கப்பட்டார்.

தனிநாட்டுக்கோரிக்கை[தொகு]

சிறையிலிருந்து வெளிவந்த இவர், மாணவத் தலைவர்களைக் கொண்ட ஸ்வாதீன் பெங்காலி பிபோபி பரிஷத் (சுதந்தர வங்க புரட்சி கவுன்சில்) என்ற தலைமறைவு இயக்கத்தைத் தொடங்கினார். வங்க மக்களின் அரசியல் அதிகாரத்துக்காகவும் கிழக்கு பாகிஸ்தானின் விடுதலைக்காகவும் இவர்கள் பாடுபட்டனர். தொடர்ந்து ஜனநாயகம் மறுக்கப்பட்டு வந்ததால், 1966-ல் அவர் கார்டர் ஆஃப் சர்வைவல் என்ற 6 கோரிக்கைகள் அடங்கிய ஒரு பிரகடனத்தை வெளியிட்டார். இதில் சுயாட்சி, குறிப்பிடத்தக்க அளவு அரசியல், பொருளாதார மற்றும் பாதுகாப்பு சுதந்தரம் ஆகியவை வலியுறுத்தப்பட்டன. இவருக்கு இந்துக்கள் உள்ளிட்ட அனைத்து வங்காளிகளின் ஏகோபித்த ஆதரவு கிடைத்தது. பல முறை கைது செய்யப்பட்டார். இவர் வங்காளிகளால் வங்கபந்து (வங்காளிகளின் நண்பர்) என்று குறிப்பிடப்பட்டார். 1970-ல் நடைபெற்ற பாகிஸ்தான் பொதுத் தேர்தல்களில் முஜிபுர் ரஹ்மானின் தலைமையிலான அவாமி லீக் கட்சி அறுதி பெரும்பான்மை பெற்று வென்றது. ஆனால் பெரும்பான்மை பாகிஸ்தான் ராணுவமும் இஸ்லாமிய அரசியல் கட்சிகளும் இவர் பாகிஸ்தான் பிரதமராக வருவதை எதிர்த்தனர். பூட்டோவுடன் இணைந்து கூட்டணி அரசு அமைக்கலாம் என்று ஆலோசனை செய்யப்பட்டது. பூட்டோ ஜனாதிபதியாகவும் முஜிபுர் பிரதமராகவும் பதவி ஏற்பட்டது என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால், அப்போதைய ஜனாதிபதி யாஹியா கான் அரசு அமைவதைத் தள்ளிப்போட்டார். அதோடு ராணுவச் சட்டத்தைக் கொண்டு வந்தார். அவாமி லீக் கட்சியை தடைசெய்தார். வங்காள தலைவர்களையும் முஜிபுரையும் கைது செய்ய உத்தவிட்டார்.

வங்கதேசம் உருவாக்கம்[தொகு]

மாபெரும் புரட்சி வெடித்தது. ஏராளமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இவர் கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் கொண்டு செல்லப்பட்டார். முக்தி வாஹினி படை உருவானது. ஏராளமானவர்கள் அகதிகளாக இந்தியா வந்தனர். இந்திய ராணுவம் இவர்களுக்கு உதவ முன்வந்தது. இந்திய ராணுவத்துடன் உதவியுடன் முக்தி வாஹினி படையினர் பாகிஸ்தான் ராணுவத்தினருடன் போரிட்டனர். இறுதியில் பாகிஸ்தான் ராணுவம் சரணடைந்தது. வங்க தேசம் உருவானது. அதன் முதல் பிரதமரானார். ஆனால், ராணுவத்தினர் சதியினால் 1975-ல் வெளியூரில் படித்துக்கொண்டிருந்த இரு மகள்கள் தவிர அவரும் இவரது குடும்ப உறுப்பினர்களும் படுகொலை செய்யப்பட்டனர். வங்கத்தின் தந்தை என்று போற்றப்பட்ட இவர், 1975-ல் 55-வது வயதில் கொல்லப்பட்டார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சேக்_முஜிபுர்_ரகுமான்&oldid=3845098" இலிருந்து மீள்விக்கப்பட்டது