வ. வேம்பையன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வ. வேம்பையன் (பிறப்பு 12 ஏப்ரல் 1936 மறைவு 28 ஆகத்து 2020) இவர் ஒரு தமிழ்த் தொண்டராகவும், [1]திருக்குறள் பரப்புநராகவும், பகுத்தறிவாளராகவும் விளங்கி வந்தார். திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு பின்பற்ற வேண்டும் என்றும் அதையே தமிழ் ஆண்டாகக் கொள்ள வேண்டும் என்றும் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் "தை"த் திங்கள் முதல் நாள் என்று தமிழர்கள் அனைவரும் கொண்டாடவேண்டும் என்றும் நாற்பது ஆண்டுகளாகக் கருத்துகளைப் பரப்பி வருகிறார்.

பிறப்பு, படிப்பு, இல்லறம்[தொகு]

வேம்பையன் புதுக்கோட்டை மாவட்டம் வேம்பன்பட்டி என்னும் சிற்றூரில் பிறந்தார்.பள்ளி இறுதி வரை படித்தார். சுசிலா என்னும் நங்கையை மணந்தார். இவர்களுக்கு மூன்று ஆண் மக்கள்.தொல்காப்பியன், திருவள்ளுவன் இளங்கோ என்று அவர்களுக்கு நல்ல தமிழ்ப் பெயர்களைச் சூட்டினார்.

பணிகள்[தொகு]

இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் உதவி அலுவலராகப் பணி செய்து பணி நிறைவு பெற்றார். அவர் கல்பாக்கத்தில் பணி நிமித்தம் வாழ்ந்து வந்தார்.

தமிழ்ப் பணி[தொகு]

வேம்பையன் தம் வழிகாட்டிகள் என்று ஐந்து சான்றோர்களைக் கொண்டு வாழ்ந்து வருகிறார். அவர்கள் திருவள்ளுவர், தந்தைபெரியார், அறிஞர்.அண்ணா, பாவேந்தர் பாரதிதாசன், தேவநேயப்பாவாணர் ஆவர். திருக்குறளைத் தமது வாழ்க்கை நூல் என்று கொண்டு ஒழுகி வருகிறார். பல்வேறு இலக்கிய, குமுகாய அமைப்புகளுடன் தொடர்பு கொண்டு வருபவர். தமிழ் இலக்கிய இதழ்களுக்குத் திங்கள் தோறும் இடைவிடாது பொருள் உதவி செய்து வருகிறார். தமிழ் நாள் காட்டி அட்டைகள் ஐம்பதாயிரம் அச்சடித்து அதன் மூலமாக பொங்கல் திருநாள், தமிழ் ஆண்டு தொடக்கம் என்று நாற்பது ஆண்டுகளாகப் பரப்பி வருகிறார். தம் மக்கள் மூவருக்கும் தாலி இல்லாமல் பெட்டிப் பணம் பெறாமல் தன்மானத் திருமணம் செய்து வைத்தார்.

எழுதிய நூல்கள்[தொகு]

தமிழர் திருமணம்- செய்முறை விளக்கம் (முதல் பதிப்பு 2006)

பெயரில் என்ன இருக்கிறது? (முதல் பதிப்பு 2008)

வாழ்வியல் வழிகாட்டிகள் வள்ளுவர்-வள்ளலார் (2014)

சென்னைப் புறநகரான மறைமலை நகரில் வாழ்ந்து வரும் இவர், ஐவர் வழி வேம்பையன் என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். அங்கு வள்ளுவர் மன்றம் என்னும் ஓர் அமைப்பைத் தோற்றுவித்து அதன் செயலாளராக இருந்து வருகிறார்.

பெற்ற விருதுகளும் சிறப்புகளும்[தொகு]

  • பெரியார் விருது (1994 இல் திராவிடர் கழகம் வழங்கியது)
  • பாவேந்தர் விருது (1992 இல் சென்னைத் தலைநகர்த் தமிழ்ச்சங்கம் வழங்கியது)
  • இலக்கியச் சிற்பி (1996 இல் புதுச்சேரி அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் வழங்கியது)
  • மேலும் செந்தமிழ்ச்செம்மல், தமிழ் மாமணி, பொதுநலப் புனிதர், அண்ணா விருது,பகுத்தறிவுச் சுடர், தமிழ்நிதி, சான்றோர் விருது எனப்

பல்வேறு தன்னார்வ அமைப்புகள் இவரைச் சிறப்பித்துள்ளன.

  • திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.கருணாநிதி 15-09-1992 இல் முரசொலி நாளேட்டில் வேம்பையனின் கருத்துக்களையும் சிறப்புகளையும் பாராட்டித் தனியாக ஒரு மடல் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.
  • பொதிகைத் தொலைக்காட்சி, மக்கள் தொலைக்காட்சி,கலைஞர் தொலைக்காட்சி ஆகியவற்றில் நேர்காணல் நிகழ்ச்சிகளில் தோன்றிப்

பேசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சான்றுகள்[தொகு]

  1. Staff (2005-07-19). "இந்திய- இலங்கை தமிழ்ச் சங்கங்களை ஒருங்கிணைக்க பழ. நெடுமாறன் முயற்சி" (ta).
"https://ta.wikipedia.org/w/index.php?title=வ._வேம்பையன்&oldid=3313348" இருந்து மீள்விக்கப்பட்டது