வ. விஜயபாஸ்கரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வ. விஜயபாஸ்கரன் (26 செப்டம்பர் 1926 - 9 பெப்ரவரி 2011[1]) தமிழகத்தைச் சேர்ந்த இதழாசிரியரும் எழுத்தாளரும் ஆவார். இவர் 1955 மே மாதத்தில் சரஸ்வதி எனும் சிற்றிதழைத் தொடங்கினார். சரஸ்வதி சிற்றிதழ் வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஓர் இதழ் ஆகும். சரஸ்வதியின் கடைசி இதழ் 1962 இல் வெளியானது. 2001 இல் சரஸ்வதி களஞ்சியம் எனும் தொகுப்பு நூலினை விஜயபாஸ்கரன் வெளியிட்டார்.

வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]

விஜயபாஸ்கரன் திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் பிறந்தவர். விடுதலைப் போராட்டத் தியாகி வடிவேல் பிள்ளையின் மகன். ஆரம்பக் கல்வியை தாராபுரத்திலும், உயர் கல்வியை சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் பயின்றார். பல்கலைக்கழகத்தில் அகில இந்திய மாணவர் பெருமன்றச் செயலராக பொறுப்பேற்று மாணவர் இயக்கத்தை முன்னின்று நடத்தியமைக்காக அவர் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்[2].

இதழியலில்[தொகு]

பின்னர் தினத்தந்தி, நவ இந்தியா, ஹனுமான், அணில், சக்தி ஆகிய பத்திரிகைகளில் பணியாற்றினார். சமரன், விடிவெள்ளி ஆகிய அரசியல் இதழ்களிலும் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். அதன் பின்னர் மே 1955 ஆம் ஆண்டில் சரஸ்வதி என்ற முற்போக்கு இலக்கிய இதழைத் தொடங்கி அதன் முதன்மை ஆசிரியராகவும் இருந்தார். அவரோடு, மூத்த எழுத்தாளர்கள் தொ. மு. சி. ரகுநாதன், எஸ். ராமகிருஷ்ணன் சுந்தர ராமசாமி, ஆர். கே. கண்ணன் ஆகியோரும் ஆசிரியர் குழுவில் இடம் பெற்றிருந்தனர். ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, ஜி. நாகராஜன், கு. சின்னப்ப பாரதி, மற்றும் இலங்கை எழுத்தாளர்கள் எஸ். பொன்னுத்துரை, செ. கணேசலிங்கன், அ. முத்துலிங்கம் போன்ற எழுத்தாளர்கள் சரஸ்வதி மூலம் அறிமுகமாயினர். பிரேம்சந்த், கிஷன் சந்தர் உள்ளிட்ட பலரது எழுத்துக்களை மொழிபெயர்த்து சரஸ்வதியில் வெளியிட்டார்[2].

சோவியத் நாடு பத்திரிகையின் வெளியீடுகளில் 25 ஆண்டுகள் இணை ஆசிரியராக விஜயபாஸ்கரன் பணியாற்றினார்.

இவர் மார்க்சியத்தில் நம்பிக்கை கொண்டவராக அறியப்படுகிறார். கம்யூனிஸ்டுக் கட்சியின் உறுப்பினராக இருந்தவர்.

மறைவு[தொகு]

கோவையில் வசித்துவந்த விஜயபாஸ்கரன் 2011 பெப்ரவரி 9 இரவு 12 மணியளவில் தனது 85வது அகவையில் காலமானார். இவருக்கு மனைவி சரஸ்வதி, மகன்கள் ரவீந்திரன், கார்த்திகேயன் ஆகியோர் உள்ளனர்.

எழுதிய நூல்கள்[தொகு]

  • உலகமகாகவி பாரதி உயர் நோக்கு
  • புதுமைப்பித்தன் - பன்னோக்குப் பார்வை
  • சரஸ்வதி களஞ்சியம் (தொகுப்பு நூல், 2001)
  • தமிழ்நாட்டுக் கதைகள்
  • திரும்பிப் பார்க்கிறேன்
  • சக்தி களஞ்சியம் (2 பாகங்கள்)

மேற்கோள்கள்[தொகு]

  1. சரஸ்வதி விஜயபாஸ்கரன்
  2. 2.0 2.1 "சரஸ்வதி' விஜயபாஸ்கரன் காலமானார் பரணிடப்பட்டது 2012-01-19 at the வந்தவழி இயந்திரம், தினமணி, பெப்ரவரி 11, 2011

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வ._விஜயபாஸ்கரன்&oldid=3602708" இருந்து மீள்விக்கப்பட்டது