உள்ளடக்கத்துக்குச் செல்

வ. பொன்னம்பலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வி. பொன்னம்பலம்
பிறப்பு(1930-12-18)18 திசம்பர் 1930
அளவெட்டி, யாழ்ப்பாணம்
இறப்புமார்ச்சு 5, 1994(1994-03-05) (அகவை 63)
ரொறன்ரோ, கனடா
தேசியம்இலங்கைத் தமிழர்
பணிஆசிரியர், அரசியல்வாதி
அறியப்படுவதுபொதுவுடமைவாதி
பெற்றோர்வல்லிபுரம்,
பொன்னம்மா
வாழ்க்கைத்
துணை
பூரணம் கணபதிப்பிள்ளை (இ. 1974), புவனேசுவரி நாகரெத்தினம்

வி. பி. என்று அழைக்கப்படும் வ. பொன்னம்பலம் (டிசம்பர் 18, 1930 - மார்ச் 5, 1994) இலங்கை அரசியல்வாதியும், பொதுவுடமைவாதியும்,[1] ஆசிரியரும் ஆவார். இவர் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் யாழ்ப்பாண மாவட்டத்துக்கான செயலராகப் பணியாற்றியவர்.[2]

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

யாழ்ப்பாணம் மாவட்டம், அளவெட்டி என்ற ஊரில் வல்லிபுரம், பொன்னம்மா ஆகியோருக்குப் பிறந்தவர் பொன்னம்பலம்.[3] ஆரம்பக் கல்வியை குருநாகலில் உள்ள திருக்குடும்பக் கன்னியர் மடப் பாடசாலையிலும், பின்னர் அளவெட்டி அருணோதயக் கல்லூரியில் 8 ஆம் வகுப்பு வரையும் கற்றார். பின்னர் சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரியில் சேர்ந்து உயர்தரத்தைப் படித்தார். இவருக்கு வயதில் மூத்தவரும் நண்பருமான அளவெட்டியைச் சேர்ந்த விஜயரெத்தினம், மற்றும் ஆசிரியர் என். எஸ். கந்தையா போன்றோரின் இடதுசாரிச் சிந்தனைகளால் கவரப்பட்டார்.[4]

1947 இல் பட்டப்படிப்பை மேற்கொள்ள சென்னை கிறித்தவக் கல்லூரியில் சேர்ந்தார். சென்னையில் படித்துக் கொண்டிருந்த போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் தன்னை இணைத்துக் கொண்டார். 1949 இல் சென்னை கிறிஸ்தவக் கல்லூரித் தமிழ்ப் பேரவைத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.[4]

ஆசிரியப் பணி

[தொகு]

பட்டப்படிப்பை முடித்துக் கொண்டு இலங்கை திரும்பிய பொன்னம்பலம் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். 1951 ஆம் ஆண்டில் சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரியிலும் பின்னர் 1963 இல் இராமநாதன் மகளிர் கல்லூரியிலும் ஆசிரியராகப் பணியாற்றினார். 1966 இல் முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரி அதிபராகப் பணியேற்றார்.[5] பின்னர் 1968 இல் ஸ்கந்தவரோதயக் கல்லூரியில் மீண்டும் ஆசிரியராக இணைந்தார். ஒரு சில மாதங்களில் ஆசிரிய சேவையிலிருந்து ஓய்வு பெற்று முழுநேர அரசியல்வாதியானார். பின்னர் 1973 இல் கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியின் பகுதி நேர விரிவுரையாளராக நியமனம் பெற்றார்.[4]

1956 ஆம் ஆண்டில் காரைநகரைச் சேர்ந்த பூரணம் (கணபதிப்பிள்ளை) என்பாரைத் திருமணம் செய்தார். இவர்களுக்கு மாவலிராஜன், நமுனகுலன் என்ற இரு புதல்வர்கள். மனைவி 1974 இல் இறந்ததை அடுத்து 1975 இல் முள்ளானையைச் சேர்ந்த புவனேஸ்வரி நாகரெத்தினம் என்பவரை மறுமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு செஞ்சுடர் என்ற புதல்வி உள்ளார்.[3]

தேர்தலில் போட்டி

[தொகு]

1952 இல் மல்லாகம் கிராம சபை உறுப்பினராகப் போட்டியின்றித் தெரிவு செய்யப்பட்டார். 1958 இல் சோவியத் ஒன்றியத்தில் இடம்பெற்ற பன்னாட்டு வாலிபர் மாநாட்டில் இலங்கைப் பிரதிநிதியாகக் கலந்து கொண்டார். 1956 தேர்தலில் காங்கேசன்துறைத் தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முதல் தடவையாக தந்தை செல்வநாயகம், சு. நடேசபிள்ளை ஆகியோரை எதிர்த்துப் போட்டியிட்டு 4313 வாக்குகளைப் பெற்றுத் தோல்வியடைந்தார்.[6]

1959 ஆம் ஆண்டில் காங்கேசன்துறைத் தொகுதியில் தோழர் கே. ஏ. சுப்பிரமணியத்துடன் இணைந்து கம்யூனிஸ்ட் கட்சிக் கிளைகளை கிராமம் தோறும் நிறுவினார். இப்பணியைத் தொடர்ந்து கட்சிக் காரியாலயமும் படிப்பகமும் சுன்னாகத்தில் திறக்கப்பட்டன.

1960 மார்ச் பொதுத் தேர்தலில் உடுவில் தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.[7]

1963 ஆம் ஆண்டில் யாழ்ப்பாண நகரசபை மண்டபத்தில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சியின் யாழ் மாவட்ட மகாநாட்டில் மாவட்ட செயலாளராக வி. பொன்னம்பலம் போட்டியின்றித் தெரிவு செய்யப்பட்டார். 1964 ஆம் ஆண்டில் கம்யூனிஸ்ட் கட்சி சோவியத் சார்பு, சீனச் சார்பு என இரண்டாகப் பிரிந்தது. பொன்னம்பலம் சோவியத் சார்பு அணியுடன் சேர்ந்தார்.

1970 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கேசன்துறைத் தொகுதியில் ஐக்கிய முன்னனி வேட்பாளராகப் போட்டியிட்டு 8.164 வாக்குகளைப் பெற்று தந்தை செல்வநாயகத்திற்கு அடுத்தபடியாக இரண்டாவதாக வந்து தோற்றார். தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வாக கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் பீட்டர் கெனமனின் ஒப்புதல் பெற்ற ஐந்து அம்சத்திட்டத்தை தனது தேர்தல் உறுதிமொழியாகக் கொண்டு அதனை கைநூலாக வெளியிட்டு 1975 இல் காங்கேசன்துறைத் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டார். ஆனாலும், 9,457 வாக்குகளைப் பெற்றுத் தோல்வியடைந்தார்.

செந்தமிழர் இயக்கம்

[தொகு]

1976 ஆம் ஆண்டில் பீற்றர் கெனமனால் அளிக்கப்பட்ட உறுதிமொழி கைவிடப்பட்டதையடுத்து கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்குக் கிளை தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் படி மத்திய குழுவுக்கு பரிந்துரை செய்தது. ஆனாலும், கட்சியின் மற்றுமொரு முக்கிய உறுப்பினரான தோழர் வைத்திலிங்கத்தின் பெயரில் திருத்தப்பட்ட தீர்மானம் ஒன்று பத்திரிகைகளுக்கு வெளியிடப்பட்டது. இதனையடுத்து பொன்னம்பலம் தனது செயலாளர் பதவியைத் துறந்தார். மத்திய குழு இவரைக் கட்சியில் இருந்து வெளியேற்றியது.[4][8][9]

இதனையடுத்து இடதுசாரிச் சிந்தனை கொண்ட தமிழர்கள் சிலருடன் இணைந்து “செந்தமிழர் இயக்கம்” என்ற அமைப்பினை உருவாக்கினார். 1977 ஆம் ஆண்டு மே நாள் விழாவில் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து முதன் முறையாக செந்தமிழர் இயக்கமும் பங்குபற்றியது.[4][8][10]

இறுதி நாட்கள்

[தொகு]

1979 ஆம் ஆண்டில் சாம்பியா நாட்டுக்குச் சென்று அங்கு கூட்டுறவுக் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். 1983 இல் இலங்கை திரும்பினார். மன்னாரில் நடைபெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணியின் மாநில மாநாட்டில் பொருளாதாரச் செயலாளராகத் தெரிவு செய்யப்பட்டார். 1983 இனப்படுகொலைகளை அடுத்து கூட்டணித் தலைவர்களோடு தமிழ் நாட்டுக்குச் சென்றார். 1985 ஆம் ஆண்டின் இறுதியில் கனடாவில் குடியேறினார். 1994 மார்ச் 5 இல் ஸ்கந்தவரோதயக் கல்லூரி முன்னாள் அதிபர் ஒறேற்றர் சுப்பிரமணியத்தின் அஞ்சலிக் கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த போது திடீரெனக் காலமானார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Communists find common ground in the North". சிலோன் டுடே. 9 யூலை 2013 இம் மூலத்தில் இருந்து 2015-09-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150923224346/http://www.ceylontoday.lk/69-37090-news-detail-communists-find-common-ground-in-the-north.html. 
  2. Sri Kantha, Sachi. "Part 13". The Pirabaharan Phenomenon.
  3. 3.0 3.1 Arumugam, S. (1997). Dictionary of Biography of the Tamils of Ceylon. p. 142.
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 வி. பொன்னம்பலம் பரணிடப்பட்டது 2014-01-02 at the வந்தவழி இயந்திரம், பொன்மலர் 1994
  5. "Obituaries". Tamil Times XIII (3): 30. 15 March 1994. பன்னாட்டுத் தர தொடர் எண்:0266-4488. http://www.noolaham.org/wiki/index.php?title=Tamil_Times_1994.03. பார்த்த நாள்: 2 ஜனவரி 2014. 
  6. "Result of Parliamentary General Election 1956" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2014-01-02.
  7. "Result of Parliamentary General Election 1960-03-19" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2009-12-09. பார்க்கப்பட்ட நாள் 2014-01-02.
  8. 8.0 8.1 Cheran, R.; Kanaganayakam, Chelva; Ambalavanar, Darshan (2007). History and Imagination: Tamil Culture in the Global Context. TSAR Publications. pp. 90-. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-894770-36-1.
  9. Hoole, Rajan; Thiranagama, Rajini (January 2001). "Chapter 3 - 1979 - 83: The Mounting Repression". Sri Lanka: the arrogance of power : myths, decadence & murder. யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு. pp. 11, 46. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-9447-04-7.
  10. Vaitheespara, Ravi (2007). "Towards a Tamil Left Perspective on the Ethnic Crisis in Sri Lanka". Theorizing the National Crisis: Sanmugathasan, the Left and the Ethnic Conflict in Sri Lanka (PDF). Colombo: Social Scientists Association.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வ._பொன்னம்பலம்&oldid=3942133" இலிருந்து மீள்விக்கப்பட்டது