உள்ளடக்கத்துக்குச் செல்

வ. சுப. மாணிக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வ. சுப. மாணிக்கம்
பிறப்புஅண்ணாமலை
(1917-04-17)ஏப்ரல் 17, 1917
மேலைச்சிவபுரி, தமிழ்நாடு, இந்தியா
இறப்புஏப்ரல் 25, 1989(1989-04-25) (அகவை 72)
புதுச்சேரி, புதுச்சேரி, இந்தியா
தொழில்உரையாசிரியர்,
கவிஞர்,
நாடக ஆசிரியர்,
ஆய்வாளர்,
உரைநடை ஆசிரியர்
தேசியம்இந்தியா
குடியுரிமைஇந்தியர்
காலம்1941-1989
குறிப்பிடத்தக்க விருதுகள்சன்மார்க்க சபை,மேலைசிவபுரி வழங்கிய செம்மல் என்ற பட்டம்
குன்றக்குடி ஆதீனம் அவர்கள் வழங்கிய முதுபெரும் புலவர் பட்டம்
அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தம் பொன்விழாவின் போது வழங்கிய டி.லிட் பட்டம்
தமிழ் நாடு அரசு வழங்கிய திருவள்ளுவர் விருது.
துணைவர்ஏகம்மை ஆச்சி
பிள்ளைகள்ஆண்:தொல்காப்பியன்,
பூங்குன்றன்,
பாரி
பெண்: தென்றல்,
மாதரி,
பொற்கொடி
இணையதளம்
http://sites.google.com/site/vspmanickanar/

டாக்டர் வ. சுப. மாணிக்கம் (ஏப்ரல் 17.1917ஏப்ரல் 25.1989) (வ.சுப. மா) தன் வாழ்நாள் முழுவதும் தமிழுக்காகவே வாழ்ந்து, தமிழ் வளர்ச்சியைப் பற்றியே சிந்தித்து பல நிலையினும் சிறந்தோங்கித் தமிழ்ப் பணிக்காகவே வாழ்ந்த மூதறிஞர். தமிழின் சிறப்புக்களைப் பற்றி ஆய்வுகள் பல செய்தமையால் தமிழ் இமயம் என்று தமிழ் அறிஞர்களால் போற்றப்பட்ட வ.சுப.மாணிக்கம். பன்முக ஆற்றல் உடையவர். மிகச் சிறந்த சிந்தனையாளரான இவர் எழுதிய நூல்கள் இவரைச் சிறந்த கவிஞராகவும், உரைநடை ஆசிரியராகவும், உரையாசிரியராகவும், நாடக ஆசிரியராகவும், ஆய்வாளராகவும் நமக்குச் சுட்டிக் காட்டும் தன்மை உடையன.

பிறப்பும் கல்வியும்

[தொகு]

வ.சுப.மாணிக்கம் புதுக்கோட்டை மாவட்டம், மேலைச்சிவபுரியில் நாட்டுக்கோட்டை நகரத்தார் இனத்தில், வ.சுப்பிரமணியன் செட்டியார்தெய்வானை ஆச்சி அவர்களுக்கு ஐந்தாவது மகனாக 1917ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதியன்று பிறந்தார். இவருடைய இயற்பெயர் அண்ணாமலை. மாணிக்கம் என்றும் அழைக்கப்பட்டதால் அந்தப் பெயரே பிற்காலத்தில் இவருக்கு நிலைத்துவிட்டது. தன்னுடைய ஆறாம் வயதில் தாயை இழந்தார். தொடர்ந்து பத்து மாதம் கழித்து தந்தையும் இறந்தார். இவருடைய தாய்வழிப் பாட்டனார் அண்ணாமலை செட்டியார் பாட்டி மீனாட்சி ஆச்சி ஆகிய இருவரும் இவரை வளர்த்து வரலாயினர். தன் தொடக்கக் கல்வியினைத் தம் ஏழாம் வயது வரை புதுக்கோட்டையில் உள்ள பள்ளி ஒன்றில் பயின்றார்.

வ.சுப. மாணிக்கம் நகரத்தார் குல மரபுப்படி தனது பதினொன்றாம் வயதில் வட்டித் தொழில் கற்றுக்கொள்வதற்காகப் பர்மா சென்றார். பர்மாவில் ரங்கூன் நகரத்தில் உள்ள வட்டிக்கடையில் பெட்டி அடிப் பையனாக (உதவி செய்யும் சிறுவனாக) வேலைக்குச் சேர்ந்தார். இவர் வேலை செய்த வட்டிக்கடை முதலாளி ஒரு சமயம் இவரிடம் ஒருவர் பெயரைக் குறிப்பிட்டு அந்த நபர் வந்து தன்னை எங்கே என்று கேட்டால், 'முதலாளி இல்லை' என்று சொல்லிவிடுமாறு வற்புறுத்தினார். ஆனால் பொய் சொல்ல விரும்பாத அந்தச் சிறுவன், 'முதலாளி நீங்கள் வெளியில் சென்றிருந்தால் இல்லை என்று கூறலாம்; ஆனால் நீங்கள் இருக்கும்போது எவ்வாறு இல்லை என்று கூறுவது? அப்படியெல்லாம் நான் பொய் சொல்ல மாட்டேன்' என்று பிடிவாதமாகக் கூறியதால் அந்த நாளிலேயே வட்டிக்கடையை வீட்டு நீக்கப்பட்டார். இதனாலேயே இவருக்குப் "பொய் சொல்லா மாணிக்கம்" என்று பெயர் வழங்கியதாகத் தெரிகிறது.

தமிழ்க் கல்வி

[தொகு]

வட்டிக்கடையில் வேலை செய்ய முடியாத நிலையில் பர்மாவிலிருந்து நாடு திரும்பிய வ.சுப.மாணிக்ககம், தமிழ் நூல்களை ஊன்றிக் கற்ற பண்டிதமணி மு.கதிரேசச் செட்டியார் அவர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. கூடவே தமிழ் மொழியின் மீது மிகுந்த நாட்டமும் ஏற்பட்டது. பண்டிதமணி அவர்கள் வழி நடத்துதலை ஏற்று அடியொற்றி அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வித்துவான் வகுப்பில் சேர்ந்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். தொடர்ந்து விடா முயற்சியுடன் பயின்று 1945 ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தில் பி.ஒ.எல் பட்டத்தையும் 1951 ஆம் ஆண்டு எம்.ஏ முதுகலைப் பட்டத்தையும் பெற்றார்.

இவருடைய தமிழ் ஆய்வுக்கான எம்.ஒ.எல் பட்டம் "தமிழில் வினைச்சொற்கள்" என்ற பொருளில் இவர் மேற்கொண்ட ஆய்வுக்காகவும், முனைவர் (பிஎச்.டி) பட்டம் "தமிழில் அகத்திணைக் கொள்கை" என்னும் பொருளில் இவர் நடத்திய சங்க இலக்கிய ஆய்வுக்காகவும் அளிக்கப்பட்டன.

கல்விப்பணி

[தொகு]
  • 1941–1948 வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் அன்பழகன் போன்றோர் இங்கு இவரிடம் கல்வி பயின்றது குறிப்பிடத் தக்கது.
  • 1948–1964 வரை பதினாறு ஆண்டுகள் காரைக்குடி அழகப்பா கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராகப் பதவி வகித்தார்.
  • 1964–1970 வரை ஆறாண்டுகள் காரைக்குடி அழகப்பா கல்லூரி முதல்வராகப் பணியாற்றினார்.
  • 1970–1977 வரை ஏழாண்டுகள் மீண்டும் அண்ணாமலை பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவராகவும் இந்திய மொழிப்புல முதன்மையராகவும் பணிபுரிந்தார்.
  • 1979–1982 வரை மூன்றாண்டுகள் மதுரை காமராசர் பல்கலைக்கழக துணை வேந்தராக சிறப்புடன் பணிபுரிந்தார். இங்கு ஆற்றிய தமிழியல் வளர்ச்சி மற்றும் பிற அறிவியல் துறைகளின் வளர்ச்சிக்கான சிறப்பான தொண்டுகள் அரசால் மிகவும் பாராட்டப்பட்டன.
  • சிறிது காலம் திருவனந்தபுரத்தின் மொழி இயற் கழக ஆய்வு முதியராக வேலை பார்த்தபோது தமிழ் யாப்பு வரலாற்றை ஆங்கிலத்தில் எழுதினார்.

குடும்பம்

[தொகு]

இவருடைய திருமணம் 1945 ஆம் ஆண்டு நெற்குப்பை என்னும் ஊரைச் சேர்ந்த ஏகம்மை ஆச்சி உடன் நடந்தது. இவர்களுக்குத் தொல்காப்பியன், பூங்குன்றன், பாரி என்று மூன்று ஆண் குழந்தைகளும், தென்றல், மாதரி, பொற்கொடி என்று மூன்று பெண் குழந்தைகளும் பிறந்தனர். இவர்களுடைய திருமணத்திற்குப் பிறகுதான் இவருடைய ஆய்வுகளும், எழுத்துப்பணிகளும் மிக அதிகமாக இவரால் மேற்கொள்ளப்பட்டன. மிகவும் கண்டிப்பான தந்தை இவர். ஒரு முறை இவரின் மகன் அழகப்பா கல்லூரியில் தேர்வு எழுதுகையில் தவறு செய்து மாட்டிக் கொண்டார். அப்போது கல்லூரி முதல்வர் வ.சுப.மா அவர்கள். தவறு செய்த ஐந்து மாணவர்களையும் மேற்பார்வையாளர் முதல்வர் முன் நிறுத்துகிறார். முதல்வர் முகத்தில் எந்தச் சலனமும் இல்லை. மற்றவரைப் போல இவர் மகனுக்கும் உரிய தண்டனை வழங்கப்பட்டது.

நூல்கள்

[தொகு]
  1. மனைவியின் உரிமை,1947
  2. கொடைவிளக்கு,1957
  3. இரட்டைக் காப்பியங்கள்,1958
  4. நகரத்தார் அறப்பட்டயங்கள்,1961
  5. தமிழ்க்காதல்,1962
  6. நெல்லிக்கனி,1962
  7. தலைவர்களுக்கு,1965
  8. உப்பங்கழி, 1972
  9. ஒருநொடியில்,1972
  10. மாமலர்கள்,1978
  11. வள்ளுவம்,1983
  12. ஒப்பியல்நோக்கு,1984
  13. தொல்காப்பியக்கடல்,1987
  14. சங்கநெறி,1987
  15. திருக்குறட்சுடர்,1987
  16. காப்பியப் பார்வை,1987
  17. இலக்கியச்சாறு,1987
  18. கம்பர்,1987
  19. தொல்காப்பியம் -எழுத்ததிகாரம் நூன்மரபும் மொழிமரபும் மாணிக்கவுரை,1989
  20. திருக்குறள் தெளிவுரை,1991
  21. நீதிநூல்கள்,1991
  22. The Tamil Concept of Love
  23. A Study of Tamil Verbs
  24. Collected Papers
  25. Tamilology
  26. எழுத்துச்சீர்திருத்தம், எங்கே போய்முடியும்?(1. ஏப்ரல் 1989)
  27. தமிழ்வழிக்கல்வியியக்கம்: மொழியறிக்கை(15. மே 1989)
  28. தமிழ்வழிக் கல்வியியக்கம்: மதுரை ஊர்வலம் நிகழ்ச்சி விளக்கம்(12. சூன் 1988)

தமிழ்நாடு அரசு இவர் எழுதிய நூல்கள் அனைத்தையும் 2006 ஆம் ஆண்டு நாட்டுடமையாக்கியது.

தமிழ்த்தொண்டு

[தொகு]

வ.சுப.மாணிக்கம் அவர்கள் ஒரு சிந்தனையாளர். பழைமையையும் புதுமையையும் ஒருமித்த மனதோடு ஏற்றுப் போற்றினார். தமிழ்ச் சொல்லாக்கங்களை நடைமுறைப் படுத்துவதில் மிகவும் முனைப்புக் காட்டியவர். தமிழ் வழிக் கல்வி இயக்கம் என்ற அமைப்பை நிறுவி இவ்வியக்கம் நன்கு பரவும் வழி காண தமிழ்ச் சுற்றுலா மேற்கொண்டார்.

இவர் வகித்த பிற பதவிகள்

[தொகு]
  • தமிழகப் புலவர் குழுத் தலைவர்
  • பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றத்தலைவர்
  • தமிழ்வழிக் கல்வி இயக்கம்
  • தமிழ்ப்பல்கலைக்கழக வடிவமைப்புக் குழுத்தலைவர்
  • தமிழ்ப்பல்கலைத் "தொல்காப்பியத் தகைஞர்

சிறப்புப் பட்டங்கள்

[தொகு]
  1. சன்மார்க்க சபை, மேலைச்சிவபுரி வழங்கிய செம்மல் என்ற பட்டம்
  2. குன்றக்குடி ஆதீனம் அவர்கள் வழங்கிய முதுபெரும் புலவர் பட்டம்
  3. அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தம் பொன்விழாவின் போது வழங்கிய டி.லிட் பட்டம்
  4. தமிழ் நாடு அரசு வழங்கிய திருவள்ளுவர் விருது. (இறந்த பின்பு)

விருப்ப முறி

[தொகு]

இவர் தம் விருப்ப முறியில் எழுதிய விருப்பங்கள்:

  • இவர் தம் சொத்தில் ஆறில் ஒரு பங்கை அறநிலையத்திற்கு வழங்க விரும்பினார்.
  • இவர் பிறந்த ஊரான மேலைச்சிவபுரியில் தம்முடைய சேமிப்பிலிருந்து செலவு செய்து மருத்துவம், குழந்தைநலம், நலவாழ்வு, கல்வி போன்ற தொண்டுகளைச் சாதி சமய வேறுபாடின்றி இலவசமாக வழங்க விரும்பினார்.
  • சொந்த நூலகத்தில் இவர் தொகுத்து வைத்த 4500 நூல்களைக் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக நூலகத்திற்கு இலவசமாக வழங்க வேண்டும் என்றும் விரும்பினார்.

மறைவு

[தொகு]

"எங்கும் தமிழ்; எதிலும் தமிழ்" என்று வாழ்ந்த வ.சுப.மாணிக்கம் அவர்கள், மாரடைப்பின் காரணமாக 1989ஆம் ஆண்டு ஏப்ரல் 25ஆம் தேதி இரவு 11 மணிக்குப் புதுச்சேரியில் காலமானார். உயிர் பிரிந்த போது கூட அவர் கையில் இருந்தது திருவாசகம் தான்.

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வ._சுப._மாணிக்கம்&oldid=4115452" இலிருந்து மீள்விக்கப்பட்டது