வ. உ. சி. உயிரியல் பூங்கா, கோயம்புத்தூர்
வ. உ. சி. உயிரியல் பூங்கா, கோயம்புத்தூரில் அமைந்துள்ளது. இது கோயம்புத்தூர் மாநகராட்சியால் நிர்வகிக்கப்பட்டும் பராமரிக்கப்பட்டும் வருகிறது. வ. உ. சி. பூங்காவினை ஒட்டி அமைந்துள்ள இப்பூங்கா சிறுவர் முதல் அனைத்து வயதினருக்கும் அறிவுசார் பொழுதுபோக்கு மையமாக விளங்குகிறது. கோயம்புத்தூர் மாநகராட்சியின் கால்நடை மருத்துவ அலுவலர் இதன் இயக்குனராகப் பொறுப்பு வகிக்கிறார். இங்கு நடப்பன, பறப்பன, ஊர்வன என பலவகையான வனவிலங்குகள் பாதுகாப்பாகக் கம்பிவேலியிட்டப் பகுதிகளுக்குள் வைத்து பராமரிக்கப்படுகின்றன. பார்வையாளர்கள் அவற்றுக்கு உணவுப்பொருட்கள் தருவதற்குத் தடையுத்தரவுள்ளது. ஒவ்வொரு பகுதியிலும் அந்தந்த விலங்குகள் பற்றிய விவரங்களைத் தரும்வகையில் வைக்கப்பட்டுள்ள தகவற்பலகைகள் பார்வையாளர்களுக்குப் பயனுள்ளவையாய் உள்ளன.
1965 ஆம் ஆண்டு 1.75 ஏக்கர் நிலப்பரப்பில் தொடங்கப்பட்ட இவ்வுயிரியல் பூங்கா, காட்டுயிர் பாதுகாப்புச் சட்டம், 1972-பிரிவு 38 (H) இன் கீழ், மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்தால் (புது தில்லி) அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தின் வரைமுறைகளின் படி அமைய, இப்பூங்காவைத் தற்போதுள்ள இடத்திலிருந்து எட்டிமடைக்கருகில் கிட்டத்தட்ட 68 ஏக்கர் நிலப்பரப்பில் இயற்கையான வனச்சூழலில் மாற்றியமைக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.