வைரசுகளைப் பற்றிய அறிமுகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வைரசு அல்லது தீநுண்மி, Virus, வைரஸ் என்பது தான் ஒட்டியுள்ள உயிரியின் செல்களுக்குள் பல்கிப் பெருகும் ஒரு தொற்றும் தன்மையுள்ள நோய்க்காரணியாகும். தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் இந்த வைரசு, தான் ஒட்டியுள்ள உயிரின் செல்களின் தன்மையை மாற்றி தன்னைப் போன்ற ஆயிரக்கணக்கான படிகளை உருவாக்கச் செய்கிறது. வைரசுகளுக்கும் மற்ற பெரும்பாலான உயிர்களுக்கும் உள்ள பெரும் வேறுபாடு என்னவெனில் வைரசுகளில் பிரிந்து பெருகும் செல்கள் இல்லை. மாறாக இவை தான் ஒட்டியுள்ள உயிரின் செல்களுக்குள் சென்று இணைகின்றன. மேலும் மற்ற எளிய உடலமைப்புக் கொண்ட தொற்று நோய்க்காரணிகளான புரதப்பீழைகளைப் (Prion) போல் அல்லாமல் இவை மரபணுக்களைக் கொண்டுள்ளன. இது வைரசுகள் சடுதி மாற்றம் (mutation) அடையவும் படிவளர்ச்சி அல்லது (பரிணாம) கூர்ப்பில் தன்னைத் தகவமைத்துக்குக் கொள்ளவும் வழிவகுக்கின்றது. இதுவரை 4,800-க்கும் மேலான வைரசுகள் கண்டறியப்பட்டுள்ளன.[1]

வைரசுகளின் தோற்றம் பற்றிய தெளிவான தகவல்கள் இல்லை. சில வைரசுகள் கணிமி (Plasmid) எனப்படும் செல்களுக்கிடையே நகரவல்ல டி.என்.ஏ துண்டுகளில் இருந்து படிவளர்ச்சியில் தோன்றியிருக்கலாம். மீத வைரசுகள் பாக்டீரியாக்களில் இருந்து படிவளர்ச்சியில் தோன்றியிருக்கலாம். ஒரு வைரசு என்பது இரண்டு அல்லது மூன்று கூறுகளால் ஆனது. முதலாவது: மரபணுக்கள் (டி.என்.ஏ அல்லது ஆர். என். ஏ வினால் ஆன மரபுத் தகவல்களைத் தாங்கியுள்ள நீண்ட மூலக்கூறுகள்) .இரண்டாவது: இந்த மரபணுக்களைக் காக்கும் புரத உறை. மூன்றாவது: சில வைரசுகளில் காணப்படும் கொழுப்பு உறை. இது புரத உறையைச் சுற்றியிருக்கும். இது சில முள் போன்ற ஏற்பிகளுடன் சேர்ந்து தான் ஒட்டும் உயிரியின் செல்லுக்குள் செல்ல வழிசெய்கிறது. வைரசுகள் எளிய திருகுசுருள் வடிவம் முதல் இருபது முகமுள்ள வடிவம் உள்ளிட்ட பற்பல சிக்கலான வடிவங்களில் உள்ளன. வைரசுகளின் அளவு 20 முதல் 300 நானோமீட்டர் வரை இருக்கிறது. அதாவது ஒரு சென்ட்டிமீட்டர் நீளத்திற்கு இவற்றை நீட்டி வைக்க வேண்டுமானால் 33,000 முதல் 500,000 வைரசுகள் தேவை.

வைரசுகள் பல வகையாகப் பரவுகின்றன. ஒவ்வொரு வைரசு இனமும் தனக்கென ஒரு குறிப்பிட்ட விதத்தில் பெருகுகிறது. எடுத்துக்காட்டாக தாவர வைரசுகள் செடிகளில் அமரும் பூச்சி முதலான உயிரினங்கள் வழியே பரவுகின்றன. சில மனித, விலங்கு வைரசுகள் பாதிக்கப்பட்ட உயிரியின் உடல் நீர்மங்கள் (எ.கா. சளி, தும்மலின் போது தெறிக்கும் மூச்சுத் திவலை) வழியாகப் பரவுகின்றன. நோரோவைரசு போன்ற வைரசுகள் மலத்தில் இருந்து கைகளிலோ, உணவிலோ, நீரிலோ ஒட்டுவதன் மூலம் பரவுகின்றன. உரோட்டாவைரசு பாதிக்கப்பட்ட சிறுவர்களுடன் ஏற்படும் நேரடித் தொடர்பால் பரவுகிறது. எச்.ஐ.வி என்னும் வைரசு மனிதர்களின் உடலுறவின் போது ஏற்படும் உடல் நீர்மப் பரிமாற்றத்தால் பரவுகிறது. தெங்கு (Dengue) முதலான வைரசுகள் குருதி உறிஞ்சும் கொசு முதலான பூச்சிகளால் பரவுகின்றன.

வைரசுகள், இவற்றிலும் குறிப்பாக ஆர்.என்.ஏ எனப்படும் இரைபோக் கருக்காடியால் ஆன வைரசுகள், சட்டென தன்னியல்பில் இருந்து மாறி புதிய வகை வைரசாக மாற வல்லன. ஓம்புயிரிகள் (வைரசுகள் பாதிக்கும் உயிரிகள், Host) இத்தகைய புதிய வகை வைரசிற்கு எதிராகக் குறைந்த எதிர்ப்புத் திறனையே கொண்டிருக்கக் கூடும். எடுத்துக்காட்டாக இன்புளுவென்சா வைரசு இவ்வாறு அடிக்கடி மாற்றம் அடைவதால் ஒவ்வோர் ஆண்டும் புதிய தடுப்பூசி தேவைப்படுகிறது. வைரசுகளில் ஏற்படும் இத்தகைய பெரும் மாற்றங்கள் உலகம் பரவு நோய்களை ஏற்படுத்தக்கூடும். இதற்கு எடுத்துக்காட்டாக 2009-ஆம் ஆண்டு பல நாடுகளில் பரவிய பன்றிக் காய்ச்சலைக் கூறலாம். பொதுவாக இத்தகைய பெரும் மாற்றங்கள், வைரசுகள் மற்ற விலங்கினங்களில் முதலில் தொற்றும் போதுதான் ஏற்படுகிறன. வௌவால்களில் கொரோனாவைரசு, பன்றிகளிலும் பறவைகளிலும் இன்புளுவென்சா வைரசு போன்றவை மனிதர்களைத் தாக்கும் முன் அத்தகைய மாற்றத்தை அடைகின்றன.

வைரசுத் தொற்று மனிதர்களிலும் விலங்குகளிலும் தாவர வகைகளிலும் நோயை உண்டாக்க வல்லது. மனிதர்களிலும் விலங்குகளிலும் பொதுவாக இவை நோயெதிர்ப்பு அமைப்பால் அழிக்கப்படுகின்றன. மேலும் தொற்று ஏற்பட்ட உயிரியானது வாழ்நாள் முழுதும் அந்தக் குறிப்பட்ட வைரசுக்கு எதிரான நோயெதிர்ப்புத் திறன் பெறுகிறது. ஆண்ட்டி பயாட்டிக்குகள் எனப்படும் நுண்ணியிர் எதிர்ப்பிகள் வைரசுகளுக்கு எதிராகச் செயலாற்றுவது இல்லை. எனினும் ஆண்டி வைரல் எனப்படும் வைரசு எதிர்ப்பு மருந்தினை உயிரைக் கொல்லும் தன்மையுள்ள நோய்த் தொற்றுகளுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தலாம். தடுப்பூசிகள் சில வகைத் தொற்றுகளுக்கு எதிரான எதிர்ப்புத் திறனை வாழ்நாள் முழுதும் அளிக்கின்றன.

கண்டுபிடிப்பு[தொகு]

அலகிடு எலக்ட்ரான் நுண்ணோக்கி யில் எச்.ஐ.வி-1 வைரசு பச்சை நிறத்தில். நிணநீர்ச் செல்லில் இருந்து வெளிப்படுறது.

1884-ஆம் ஆண்டு பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த சார்லசு சேம்பர்லேண்டு எனும் ஆய்வாளர் சேம்பர்லேண்டு வடிகட்டி என்று அறியப்படும் ஒரு வடிகட்டியை உருவாக்கினார். இதன் துளைகள் பாக்டீரியாவினை விடச் சிறியன. இதன் மூலம் இவர் பாக்டீரியம் உள்ள ஒரு நீர்மத்தை இந்த வடிகட்டியில் வடிகட்டும் போது பாக்டீரியங்கள் நீர்மக் கரைசலில் இருந்து முழுமையாக நீக்கப்பட்டன. 1890-களில் திமித்ரி இவானோவ்சுக்கி என்னும் இரசிய உயிரியியலார் இந்த முறையைப் பயன்படுத்தி புகையிலை மொசாயிக்கு வைரசு என்பதைப் பற்றி ஆராய்ந்தார். அதாவது, பாதிக்கப்பட்ட புகையிலைகளை அரைத்து அதை வடிகட்டிய பின் கிடைத்த நீர்மம் மீண்டும் புகையிலையில் நோயை உண்டுபண்ணக்கூடியதாக இருந்தது.

அதே காலகட்டத்தில் வேறுபல ஆய்வாளர்கள் பாக்டீரியத்தை விட கிட்டத்தட்ட 100 மடங்கு சிறிதான (பின்னாளில் வைரசு என்று அழைக்கப்பட்ட) அந்தப் பொருட்கள் கூட நோயை உண்டாக்க வல்லன என்று கண்டறிந்தனர். 1899-இல் மார்ட்டினசு பைசரிங்கு என்னும் இடச்சு ஆய்வாளர் இந்தப் பொருட்கள் பிரியும் செல்களில் மட்டுமே பெருகுவதை உணர்ந்தார். இவர் அதனை பரவக்கூடிய உயிருள்ள திரவம் என்று அழைத்தார். ஏனெனில் அவரால் கிருமி போன்ற துகள்களைக் கண்டறிய முடியவில்லை. 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரடெரிக்கு துவோர்த்து என்னும் ஆங்கில பாக்டீரிய ஆய்வாளர் பாக்டீரியத்தைத் தொற்றும் வைரசுகளைக் கண்டுபிடித்தார். பின்னர் பெலிக்சு தி-எரெல்லி என்னும் பிரெஞ்சு-கனேடிய ஆய்வாளர் அகார் என்னும் உணவுப் பொருளில் வளரும் பாக்டீரியாக்களுடன் வைரசுகளைச் சேர்க்கையில் அப்பகுதிகளில் பாக்டீரியாக்கள் இறந்துவிட்டதைக் கண்டறிந்தார். இந்த இறந்த பகுதிகளைக் கொண்டு அவரால் வைரசுகளின் எண்ணிக்கையைக் கணக்கிட முடிந்தது.[2]

1931-இல் எலக்ட்ரான் நுண்ணோக்கி எனப்படும் எதிர்மின்னி நுண்ணோக்கி புதிதாக உருவாக்கப்பட்ட பின் வைரசுகளின் படங்கள் கிடைக்கத்தொடங்கின.[3] 1935-இல் வெண்டெல் மெரெடித்து ஸ்டான்லி என்பார் புகையிலை மொசாயிக்கு வைரசினை ஆராய்ந்து அது பெரும்பாலும் புரதத்தால் ஆனது என்று கண்டறிந்தார். சிறிது காலம் கழித்து அந்த வைரசு புரதத்தாலும் ஆர்.என்.ஏ வினாலும் ஆனது என்று கண்டறியப்பட்டது. தொடக்ககாலத்தில் உயிருள்ள விலங்குகளைப் பயன்படுத்தாமல் வைரசுகளை எவ்வாறு வளர்ப்பது என்று தெரியவில்லை. இது வைரசுகளைப் பற்றிய ஆய்வில் ஒரு தடையாக இருந்தது. 1931-ஆம் ஆண்டு ஆய்வாளர்கள் எர்ணஸ்ட்டு வில்லியம் குட்பாச்சர்-உம் அலைசு மைல்சு வுட்ரபு-உம் இன்புளுவென்சா உள்ள பல வைரசுகளை கருவுற்ற கோழியின் முட்டையில் வெற்றிகரமாக வளர்த்தனர். 1949-இல் சான் பிராங்கிளின் என்டர்சு முதலானோர் போலியோ வைரசினை உயிருள்ள விலங்குகளின் செல் திசுக்களில் வளர்த்துக் காட்டினர்.[4] இதன் மூலம் வைரசு ஆய்வில் இருந்த இச்சிக்கல் தீர்ந்தது. 4800-க்கும் மேலான வைரசு இனங்கள் இது வரை கண்டறியப்பட்டு விளக்கப்பட்டுள்ளன.

தோற்றம்[தொகு]

வைரசுகள் தாங்கள் தொற்றியுள்ள உயிருடன் சேர்ந்து வாழ்கின்றன. உயிருள்ள செல்கள் தோன்றியதில் இருந்தே வைரசுகளும் இருந்திருக்கக் கூடும். தொல்லுயிர் எச்சங்களில் இவை கிடைப்பதில்லை. எனவே இவற்றின் தோற்றம் குறித்த தெளிவான கருத்துகள் இல்லை. மூலக்கூற்று உயிரியியலே இவற்றின் தோற்றம் பற்றி ஆராய்வதற்கு ஏற்ற நுட்பமாக விளங்குகிறது. இதற்கு வைரசுகளின் பழைமையான டி.என்.ஏ அல்லது ஆர்.என்.ஏ தேவை. ஆனால் இது வரை பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளவை 90 ஆண்டுகளுக்குப் பின் உள்ளவையே. வைரசின் தோற்றம் குறித்து மூன்று முதன்மையான கோட்பாடுகள் உள்ளன:

பின்னடைவுக் கோட்பாடு (Regressive theory) வைரசுகள் முன் ஒரு காலத்தில் பெரிய செல்களை ஒட்டி/சார்ந்து வாழ்ந்த சிறிய செல்களே. காலப்போக்கில் அவற்றுக்குத் தேவையில்லாத மரபணுக்களை அவை இழந்துவிட்டன. இரிக்கெட்சியா, கிளாமிடியா போன்ற பாக்டீரியங்கள் வாழும் செல்களே எனினும் அவை வைரசுகளைப் போலவே ஓம்புயிரியின் செல்களுக்கு உள்ளே தான் பெருகுகின்றன. இது இந்த பின்னடைவுக் கோட்பாட்டின் நம்பகத் தன்மையைக் கூட்டுகிறது.[5]

உயிரணுவழித் தோற்றக் கோட்பாடு (Cellular origin theory) சில வைரசுகள் பெரிய உயிரினங்களின் மரபணுக்களில் இருந்து தவறி வெளியேறிய டி.என்.ஏ அல்லது ஆர்.என்.ஏ வில் இருந்து தோன்றியிருக்கலாம். இந்த டி.என்.ஏ க்கள் ஓர் உயிரணுவில் இருந்து இன்னொன்றுக்கு நகரும் கணிமி எனப்படும் டி.என்.ஏ துண்டுகளில் இருந்து வந்திருக்கலாம். வேறு சில பாக்டீரியங்களில் இருந்து படிவளர்ச்சி அடைந்து தோன்றி இருக்கலாம்.[6]

இணை படிவளர்ச்சி (கூர்ப்பு)க் கோட்பாடு (Coevolution theory) செல்கள் உருவான அதே காலகட்டத்திலேயே வைரசுகளும் சிக்கலான புரத மூலக்கூறுகளில் இருந்தோ டி.என்.ஏ வில் இருந்தோ தோன்றியிருக்கலாம். அப்போதிருந்தே அவை செல்களைச் சார்ந்து வாழ்ந்து வந்திருக்கலாம்.[7]

மேலுள்ள அனைத்துக் கோட்பாடுகளிலும் ஏதோ ஒருவிதத்தில் குறையுள்ளதாகவே இருக்கிறது. எடுத்துக்காட்டுக்கு செல்களைச் சார்ந்து வாழும் பிற உயிரிகளுக்கும் வைரசுகளுக்கும் ஏன் ஒரு ஒற்றும் கூட இல்லை என்பதை பின்னடைவுக் கோட்பாடு விளக்குவதில்லை. வைரசு ஆய்வாளர்கள் இந்த மூன்று கோட்பாடுகளையும் மறு மதிப்பீடு செய்து வருகின்றனர்.[8][9]

வடிவ அமைப்பு[தொகு]

வைரசின் கட்டமைப்பு - எளிமைப் படுத்தப்பட்ட படம்

ஒரு வைரசுத் துணுக்கு கேப்சிடு எனப்படும் புரத உறையால் சூழப்பட்ட டி.என்.ஏ அல்லது ஆர்.என்.ஏ வினால் ஆன மரபணுவினைக் கொண்டுள்ளது. இந்த கேப்சிடு பல சிறிய ஒத்த அமைப்புடைய கேப்சோமர் எனப்படும் புரத மூலக்கூறுகளால் ஆனது. இந்தக் கேப்சோமர்கள் இருபது முகமுடையதாகவோ, சுருள் வடிவத்திலோ அல்லது இன்னும் சிக்கலான வடிவங்களிலோ அமைந்திருக்கலாம். டி.என்.ஏ அல்லது ஆர்.என்.ஏ வினைச் சுற்றி இன்னொரு புரத உறை கேப்சிடுக்கு உட்பக்கம் இருக்கலாம். இது அணுக்கேப்சிடு (nucleocapsid) என்றழைக்கப் படுகிறது. சில வைரசுகள் கொழுப்புக் குமிழால் ஆன மேலுறையைக் கொண்டுள்ளன. இந்த மேலுறை வைரசினை சோப்பினாலும் ஆல்ககாலினாலும் பாதிக்கப்படக் கூடியதாக ஆக்குகிறது.

அளவு[தொகு]

வைரசுகள் உள்ளவற்றிலேயே சிறிய தொற்றுவான்களில் ஒன்று. ஒளி நுண்ணோக்கியால் காண இயலாத அளவுக்குச் சிறியன. பெரும்பான்மையான வைரசுகளை எலக்ட்ரான் நுண்ணோக்கி மூலமே பார்க்க முடியும். இவற்றின் அளவு 20 முதல் 300 நானோமீட்டர்கள் ஆகும். ஒப்பிட்டுப் பார்க்கையில் பாக்டீரியாவின் அளவு ஏறத்தாழ 1000 நானோமீட்டர்கள் (1 மைக்ரோ மீட்டர்) விட்டமும் ஓம்புயிரியின் செல்கள் பொதுவான சில பத்து மைக்ரோமீட்டர் அளவும் கொண்டன. 2003-இலும் 2013-இலும் மெகா வைரசு, பண்டோராவைரசு என்று அறியப்படும் 1000 நானோமீட்டர் அளவுள்ள அமீபாக்களைத் தொற்றும் பெரிய வைரசுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இந்தப் பெரிய வைரசுகள் இன்புளுவென்சா வைரசினை விட 10 மடங்கு அகலமும் 1000 மடங்கு பருமனளவும் கொண்டுள்ளது ஆய்வாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

மரபணுக்கள்[தொகு]

வைரசின் மரபணுக்கள் டி.என்.ஏ வினாலோ அல்லது ஆர்.என்.ஏ வினாலோ ஆக்கப்பட்டிருக்கலாம். ஒரு உயிரியின் உயிரியல் தகவல்கள் அதன் டி.என்.ஏ அல்லது ஆர்.என்.ஏ விலேயே பொதிந்துள்ளது. பெரும்பாலான உயிரினங்கள் மரபுணுப் பொருளாக டி.என்.ஏ வினையும் பெரும்பாலான வைரசுகள் டி.என்.ஏ வினையும் கொண்டுள்ளன.

வைரசுகளில் சில மரபணுக்களே இருப்பதால் இவற்றால் சட்டெனப் பல்கிப்பெருக முடிகிறது. எடுத்துக்காட்டாக இன்புளுவென்சா வைரசு வெறும் எட்டு மரபணுக்களையும் உரோட்டாவைரசு பதினொரு மரபணுக்களையும் கொண்டுள்ளன. மாறாக, மனிதர்கள் 20,000 முதல் 25,000 மரபணுக்களைக் கொண்டுள்ளனர்.

அனைத்து செல்களும் பெரும்பாலான வைரசுகளும் டி.என்.ஏ பாலிமரேசு, ஆர்.என்.ஏ பாலிமரேசு என்றழைக்கப்படும் என்சைம்களை உற்பத்தி செய்கின்றன. இந்தப் பாலிமரேசுகளே டி.என்.ஏ, ஆர்.என்.ஏ க்களின் படிகளை உருவாக்க வழிசெய்கின்றன. டி.என்.ஏ அல்லது ஆர்.என்.ஏ வை உருவாக்குவதில் வைரசின் பாலிமரேசுகள் செல்லின் பாலிமரேசுகளை விட செயல்திறன் மிக்கவையாக உள்ளன. ஆனால் வைரசின் ஆர்.என்.ஏ பாலிமரேசுகள் பிறழ்ந்து வைரசுகளை சடுதி மாற்றம் அடைய வைத்து வைரசின் புதிய மரபணு வகைகள் உருவாக்கக் காரணமாகின்றன.

புரதச்சேர்க்கை[தொகு]

புரதங்கள் வாழ்க்கைக்கு இன்றியமையாதன. செல்கள் டி.என்.ஏ வில் உள்ள தகவல்களுக்கு ஏற்ப அமினோ அமிலங்களில் இருந்து புதிய புரதங்களை உருவாக்குகின்றன. ஒவ்வொரு வகையான புரதமும் ஒரு குறிப்பிட்ட வகைப் பணியைச் செய்கிறது. எனவே ஒரு செல் புதிய வகைப் பணியைச் செய்ய வேண்டுமானால் அது ஒரு புதிய வகை புரதத்தை உருவாக்க வேண்டும். வைரசுகள் தாங்கள் பெருகுவதற்கு வேண்டிய புரதத்தை செல்களைக் கொண்டு உற்பத்தி செய்ய வைக்கின்றன.

வாழ்க்கைச் சுழற்சி[தொகு]

வைரசின் பொதுவான வாழ்க்கைச் சுழற்சி (இடமிருந்து வலம்); ஒரு செல்லினைத் தொற்றும் வைரசும், வெளிவரும் பல வைரசுப் படிகளும்.

வைரசானது ஒரு செல்லினைத் தொற்றும் போது அது அச்செல்லினை பல வைரசுப் படிகளை உருவாக்கச் செய்கிறது. செல்களில் வாழும் வைரசுகள் கீழ் வரும் ஆறு வாழ்க்கை நிலைகளைக் கொண்டுள்ளன.

 • இணைப்பு: செல்லின் மேற்பரப்பில் உள்ள சில வகை மூலக்கூறுகளுடன் வைரசுகள் ஒட்டிக் கொள்கின்றன.
 • உட்புகுதல்: இணைந்த பின் வைரசு செல்லுடன் பிணைகிறது அல்லது என்டோசைட்டோசிசு எனும் முறையில் செல்லுக்குள் செல்கிறது.
 • உறைநீக்கம்: செல்லுக்குள் வைரசின் கேப்சிடு உறையானது வைரசின் என்சைம்களாலோ அல்லது செல்லின் என்சைம்களாலோ நீக்கப்பட்டு, கரு அமிலம் வெளிப்படுகிறது.
 • படியாக்கம்: இந்நிலையில் செல்லானது வைரசின் ஆர்.என்.ஏ தகவல்களைப் பயன்படுத்தி வைரசு புரதங்களை உருவாக்குகிறது. செல்லின் கரு அமிலங்களை (ஆர்.என்.ஏ அல்லது டி.என்.ஏ) உருவாக்கும் தன்மையைக் கொண்டு வைரசின் டி.என்.ஏ வையோ ஆர்.என்.ஏ வையோ உருவாக்குகிறது.
 • தொகுத்தல்: செல்லில் உருவாக்கப்பட்ட வைரசின் புரதங்களும் கரு அமிலங்களும் தொகுக்கப்பட்டு பல நூறு புதிய வைரசுத் துகள்கள் உருவாகின்றன.
 • விடுபடல்: புதிய வைரசுகள் செல்லில் இருந்து தப்பிக்கும் போதோ அல்லது விடுவிக்கப்படும் போதோ இது நடைபெறுகிறது. பெரும்பாலான வைரசுகள் செல்களை வெடிக்கச் செய்கின்றன – அப்போது தான் இந்த விடுபடல் நடக்கிறது.

ஏற்கும் செல்லின் மீதான விளைவுகள்[தொகு]

வைரசுகள் ஏற்பி செல்களில் குறிப்படத்தக்க கட்டக உயிர்வேதி விளைவுகளை ஏற்படுத்துகின்றன. பெரும்பாலான வைரசு தொற்றுகளின் போது செல்லானது அழிந்து விடுகிறது. செல் வெடித்தல், செல்லின் மேலுறை மாற்றமடைதல், செல்லின் தற்கொலை ஆகியன செல் அழிவதற்குக் காரணமாக இருக்கின்றன.[10]

சில வகை வைரசுகளில் தொற்றிய செல்களில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை. செயல்படாத நிலையில் இவை செல்களில் பல மாதங்களுக்கோ அல்லது பல வருடங்களுக்கோ இருக்கும். சில வகை வைரசுகள் புற்றுநோய் தோன்றக் காரணமாக இருக்கின்றன. எச்.ஐ.வி போன்ற சில வைரசுகள் தாம் பெருகுவதற்காக செல்களின் தற்கொலையை மட்டுப்படுத்தும் திறன் கொண்டுள்ளன.

வைரசுகளும் நோய்களும்[தொகு]

வைரசுகள் ஒரு உயிரியிடம் இருந்து மற்றொரு உயிரிக்கு பல வகைகளில் பரவுகின்றன. எனினும் ஒரு வகை வைரசு ஒன்று அல்லது இரண்டு வழிகளில் தான் தொற்றுகிறது. செடிகளைத் தாக்கும் வைரசுகள் நோய்க்காவி எனப்படும் உயிரினங்கள் மூலம் பரவுகின்றன. விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் பரவும் வைரசுகளும் கூட இந்த உயிரினங்கள் (பொதுவாக குருதி உறிஞ்சும் பூச்சிகள்) மூலம் பரவுகின்றன. நோரோவைரசு, உரோட்டாவைரசு போன்ற சில வைரசுகள், நீர், உணவின் மூலமாகவும், கைகள், மனிதர்கள் தொடக்கூடிய பொருட்கள் மூலமாகவும், பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிப் பழகுவதன் மூலமும் பரவுகின்றன. சில வகை வைரசுகள் காற்றின் மூலம் பரவுகின்றன. எச்.ஐ.வி முதலான சில வைரசுகள் பாதுகாப்பற்ற உடலுறவு மூலமும் சுத்தப்படுத்தப்படாத ஊசிகள் மூலமும் பரவுகின்றன. நோய்த் தொற்றினையும் பரவலையும் தடுப்பதற்கு, ஒவ்வொரு வைரசும் எவ்வாறு பரவுகின்றது என்பதை அறிவது மிக முக்கியமானது.

மனிதர்களில்[தொகு]

சாதாரண சளி, இன்புளுவென்சா, சின்னம்மை போன்ற பொதுவான நோய்களும் எபோலா, எயிட்சு போன்ற கடுமையான நோய்களும் வைரசுகளால் வருகின்றன. நல்ல வைரசுகள் என்றழைக்கப்படுவை மனிதர்களுக்கு மிக இலேசான நோயைத் தருகின்றன அல்லது எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. வைரசுகள் தாம் தொற்றும் செல்லினைப் பொறுத்து பல விதமான நோய்களை ஏற்படுத்துகின்றன. சில வைரசுகள் வாழ்நாள் முழுதும் தொற்றினை ஏற்படுத்துகின்றன. தொற்றியுள்ள உயிரியின் எதிர்ப்புத் திறனையும் மீறி இவை பிழைத்துப் பெருகின்றன. இத்தகைய தன்மை ஹெப்பாட்டைட்டசு பி (B) யிலும் ஹெப்பாட்டைட்டசு சி (C) யிலும் காணப்படுகிறது. இவ்வாறு பாதிக்கப்பட்ட மனிதர்கள் வைரசினைத் தாங்கி வைத்திருப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.

உள்ளூர்த் தொற்று[தொகு]

மக்கட்தொகையில் ஒரு குறிப்பிட்ட வீதமானோர் நோய்தாங்கிகளாக மாறுகையில் அந்த நோயானது உள்ளூர்த் தொற்று (endemic) என்றழைக்கப்படுகிறது. தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு வரை வைரசு தொற்றுகள் பரவலாக இருந்தன. தொடர்ந்து நோய்த் தாக்குதல்கள் வெளிப்பட்டு வந்தன. மிதமான தட்பவெப்பநிலை உள்ள நாடுகளில் குறிப்பிட்ட பருவகாலங்களில் வைரசு தொற்றுகள் ஏற்படுகின்றன. போலியோ நோயானது கோடை காலத்திலும் சளி, இன்புளுவென்சா போன்றவை குளிர்காலத்திலும் தோன்றுகின்றன. தட்டம்மை வைரசு போன்ற சில வைரசுகள் ஒவ்வொரு மூன்றாவது ஆண்டும் பரவுகின்றன. வளரும் நாடுகளில் மூச்சு தொடர்பான தொற்றுக்கள் ஆண்டு முழுதும் உள்ளன. தெங்கு, சிக்கா போன்ற வைரசுத் தொற்றுகள் அவற்றைப் பரப்பும் கொசுக்களின் இனப்பெருக்க காலத்தில் ஏற்படுகின்றன.

உலகத்தொற்று[தொகு]

வைரசுகளால் ஏற்படும் உலகத் தொற்றுகள் அரிதே. எனினும் 1980-களில் இருந்து குரங்குகள் மூலமும் சிம்பன்சிகள் மூலுமும் தொற்றிய எச்.ஐ.வி நோய் உலகத் தொற்று நோயாக மாறியது. இருபதாம் நூற்றாண்டில் இன்புளுவென்சா வைரசினால் நான்கு முறை நோய் உலகம் பரவியது. அதிலும் 1918, 1957, 1968-ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட தொற்றுகள் கடுமையாக இருந்தன. பெரியம்மை ஒழிக்கப்படுவதற்கு முன்னர் அந்த நோய் 3000 ஆண்டுகளுக்கும் மேலாக உலகம் பரவு நோயாக இருந்து வந்திருக்கின்றது. மனிதர்களின் இடப்பெயர்வே நோய்கள் உலகம் முழுதுவம் பரவக் காரணமாக இருந்துள்ளது. முற்காலத்தில் கடல் வழியாகவும் (கப்பல் பயணம்), தற்காலத்தில் வான்பயணத்தின் வழியாகவும் நோய் பரவுகிறது.

பெரியம்மையைத் தவிர மற்ற உலகத் தொற்றுகள் புதிதாகப் பரிணமித்த வைரசுகளால் ஏற்பட்டவையே. இந்த வைரசுகள் தீங்கு குறைந்த பழைய வைரசுகள் சட்டென மாறியதால் ஏற்பட்டவை. சார்சு (SARS), மெர்சு (MERS) போன்ற நோய்கள் கொரோனா வைரசின் புதிய வகைகளால் உருவானவையாகும்.

2019 நவம்பர் மாதம் சீனாவின் வூகான் நகரில் ஒரு புதிய வகை கொரானோ வைரசு தோன்றி உலகெங்கும் பரவி வருகிறது. இதன் தீவிளைவானது இலேசான நோய் முதல் இறப்பு வரை இருக்கிறது. இது 2020-இல் உலகத் தொற்றாக உருவெடுத்துள்ளது. இது தீவிரமாகப் பரவுவதால் உலகின் பல பகுதிகளிலும் மக்களின் நடமாட்டம் மட்டுப்படுத்தப் பட்டுள்ளது.

தாவரங்களில்[தொகு]

வைரசு தொற்றியுள்ள குடைமிளகாய்

உலகில் பல வகையான தாவர வைரசுகள் உள்ளன. பெரும்பாலும் இவை விளைச்சல் அளவினைக் குறைக்கின்றன. இந்த வைரசுகளைக் கட்டுப்படுத்துவது பொருளாதார அடிப்படையில் கட்டுபடியாகாததாக இருக்கிறது. தாவர வைரசுகள் ஒரு செடியில் இருந்து இன்னொன்றுக்கு நோய்க்காவிகள் என்றழைக்கப்படும் பூச்சிகள் போன்ற உயிரினங்கள் வழியாகப் பரவுகின்றன. பொருளாதார ரீதியில் வைரசுகளைக் கட்டுப்படுத்தக் கூடிய இடங்களில் பூச்சிகளையும் வைரசு வாழக்கூடிய மற்ற களைச்செடிகளையும் அழிப்பதன் மூலம் கட்டுப்படுத்தப் படுகின்றன. தாவர வைரசுகள் வாழும் தாவரங்களில் மட்டுமே பெருகும் என்பதால் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் தீங்கற்றவை.

பாக்டீரியா உண்ணிகள்[தொகு]

பாக்டீரியா உண்ணியின் ஒரு பொதுவான கட்டமைப்பு

பாக்டீரியாக்களையும் ஆர்க்கியாக்களையும் தொற்றும் வைரசுகள் பாக்டீரியா உண்ணிகள் எனப்படுகின்றன. பன்னாட்டு வைரசு பெயரிடல் அமைப்பின் படி 11 குடும்பங்களில் 28 வகையான பாக்டீரியா உண்ணி வைரசுகள் உள்ளன. இவை கடற்சூழலில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இவை பாக்டீரியாக்களைத் தொற்றி பாக்டீரியாக்கள் வெடிக்கும் போது வெளிப்படும் கரிமச் சேர்மங்கள் புதிய உயிர் வளர்ச்சிக்கு ஏதுவாக இருக்கின்றன. மேலும் இவை மனிதர்களைத் தொற்றாததால் அறிவியல் ஆய்வுகளும் எளிதாக மேற்கொள்ள முடிகிறது. இந்த வைரசுகள் நன்மை செய்யும் பாக்டீரியாக்களை (நொதித்தலுக்கு காரணமாக இருக்கும்) நம்பியிருக்கும் உணவு, மருந்துத் தொழில்களுக்கு இடையூறாக இருக்கலாம். நோயெதிர்ப்பு மருந்துகளைக் கொண்டு சில பாக்டீரியாத் தொற்றுகளைக் கட்டுப்படுத்துவது கடினமாகி வருவதால் இந்த பாக்டீரியா உண்ணிகளை மனிதர்களில் தொற்றினைக் குணப்படுத்தப் பயன்படுத்தலாம் என்பதால் இதைப் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஏற்பி எதிர்ப்பு[தொகு]

விலங்குகளின் இயல்பான எதிர்ப்புத் திறன்[தொகு]

விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இயல்பாகவே வைரசுகளை எதிர்க்கும் திறன் உள்ளது. இது பொதுவாக எல்லா வகை வைரசுகளில் இருந்தும் காத்துக் கொள்ள உதவுகிறது. ஆனால் தொடர்ந்து இந்த வைரசு தாக்குதல் நடக்கும் போது இந்த இயல்பு எதிர்ப்பு சக்தி மேம்படுவதில்லை. இறந்த செல்களால் ஆன விலங்குகளின் தோல் வைரசுகளிடம் இருந்து அவற்றைக் காக்கிறது. வயிற்றில் இருக்கும் அமிலங்கள் உண்ணும் உணவு வழியாக சேரும் வைரசுகளை அழிக்கின்றன. இவற்றையும் மீறி வைரசு தொற்று ஏற்படும் போது விலங்குகளின் இயல்பெதிர்ப்புத் திறன் வைரசு பெருகாத வாறு தடுக்கிறது. வைரசு தொற்று ஏற்பட்டுள்ள போது இன்டெர்பெரான் என்னும் சிறப்பான ஹார்மோன் சுரந்து வைரசு பெருகவதைத் தடுத்தும் வைரசு தொற்றிய செல்களை அழித்தும் காக்கிறது. செல்களுக்குள் வைரசின் ஆர்.என்.ஏ வினை அழிக்கும் என்சைம்கள் உள்ளன.

விலங்குகளின் தகவமைத்துக் கொண்ட எதிர்ப்புத் திறன்[தொகு]

இரண்டு உரோட்டாவைரசுத் துகள்கள்: வலதுபுறத்தில் உள்ள வைரசின் மீது படிந்துள்ளவை ஆண்டிபாடிகள். இவை வைரசுகள் செல்லுடன் தொற்றிக்கொள்வதைத் தடுக்கின்றன.

வைரசுகளுக்கு எதிரான குறிப்பிட்ட எதிர்ப்புத் திறன் உயிரனங்களுக்கு நாளடைவில் ஏற்படுகிறது. இதற்கு குருதி வெள்ளையணுக்கள் காரணமாக இருக்கின்றன. இந்த அணுக்கள் வைரசுத் தொற்றுகளை நினைவில் கொண்டு ஆண்டிபாடி எனும் பிறபொருளெதிரியை உருவாக்குகின்றன. இவை வைரசுகளுடன் ஒட்டிக்கொண்டு வைரசு பெருகுவதைத் தடுக்கின்றன. இவை ஒரு குறிப்பிட்ட வைரசு வகையை மட்டுமே தாக்கும் திறன் கொண்டன. தொற்றின் தொடக்கத்தில் உடல் பலவகையான ஆண்டிபாடி எனும் எதிர்ப்பொருட்களை உருவாக்குகிறது. தொற்று அடங்கியவுடன் சில எதிர்ப்பொருட்கள் மட்டும் தொடர்ந்து உற்பத்தி செய்யப்படுகின்றன. இது அந்த வைரசுக்கு எதிரான எதிர்ப்புச் சக்தியை வாழ்நாள் முழுதும் அளிக்கிறது.

தாவரங்களின் எதிர்ப்புத் திறன்[தொகு]

தாவரங்கள் வைரசுகளுக்கு எதிரான திறன் மிக்க எதிர்ப்பாற்றலைக் கொண்டுள்ளன. வைரசு எதிர்ப்பு எதிர்ப்பு ஆர் மரபணு ( resistance (R) gene) எனும் பொருள் மிகவும் திறம்பட வேலை செய்கிறது. வைரசு தொற்று ஏற்படும் போது இது தொற்று ஏற்பட்ட இடத்திலுள்ள செல்களை சாகச் செய்வதன் மூலம் தொற்று பரவுவதைத் தடுக்கிறது. இந்த பாதிக்கப்பட்ட இடங்களை வெறும் கண்களாலேயே செடியின் மேற்பரப்பில் பார்க்க இயலும். இதேபோல் தொற்று ஏற்படுகையில் தாவரங்கள் சாலிசிலிக் அமிலம் முதலான உயிர்க்கொல்லிகளைச் சுரந்து வைரசுகளை அழிக்கின்றன.

பாக்டீரியா உண்ணிகளுக்கான எதிர்ப்புத் திறன்[தொகு]

பாக்டீரியாக்கள் தம்மைக் காத்துக்கொள்ளும் முதன்மையான வழி அயல் டி.என்.ஏ க்களை அழிக்கும் என்சைம்களை உற்பத்தி செய்வதேயாகும். இந்த என்சைம்கள் பாக்டீரியா உண்ணிகளால் பாக்டீரியாவின் செல்லுக்குள் செலுத்தப்படும் வைரசின் டி.என்.ஏ வினைச் சிதைக்கின்றன.

வைரசு நோய்களின் தடுப்பும் மருத்துவமும்[தொகு]

தடுப்பு மருந்துகள்[தொகு]

இயற்கையான வைரசுத் தொற்றினையும் அதனால் உடலில் ஏற்படும் நோய் எதிர்ப்பு விளைவுகளையும் தடுப்பு மருந்துகள் அதே நேரம் நோய் ஏற்படா வண்ணம் தடுப்பு மருந்துகள் செயல்படுத்துகின்றன. இத்தகைய தடுப்பு மருந்துகள் பெரியம்மையை ஒழிக்கவும் போலியோ, உரூபெல்லா போன்ற தொற்றுகளினால் ஏற்படும் பாதிப்பையும் இறப்பையும் பெருமளவு குறைத்துள்ளன. மனிதர்கட்கு ஏற்படும் தொற்றுகளில் கிட்டத்தட்ட 14-க்கும் மேற்பட்ட வைரசு தொற்றுகளில் இருந்து காக்க தடுப்பு மருந்துகள் உள்ளன. விலங்குகளுக்கு இதை விட அதிகமான எண்ணிக்கையில் தடுப்பு மருந்துகள் உள்ளன. தடுப்பு மருந்துகளில் உள்ள வைரசுகள் உயிருள்ளவையாகவோ உயிரற்றவையாகவோ இருக்கலாம்.

வைரசு எதிர்ப்பு மருந்துகள்[தொகு]

1980-களின் நடுவில் எயிட்சு நோயானது உலகம் பரவு நோயாக மாறிய போது வைரசு எதிர்ப்பு மருந்துகளைப் பற்றிய ஆய்வுகள் அதிகமாயின. பெரும்பாலான வைரசு எதிர்ப்பு மருந்துகள் குறிப்பிட்ட வகை வைரசுத் தொற்றினையே சரிசெய்கின்றன. பாக்டீரியா எதிர்ப்பு மருந்துகளைப் போல் இவை நோய்க்காரணியைக் கொல்வதில்லை. மாறாக வைரசுகள் பெருகுவதை இந்த மருந்துகள் தடுக்கின்றன.

சூழியலில் வைரசுகளின் பங்கு[தொகு]

நீர்ச்சூழலில் மிகுந்து காணப்படும் உயிரியற் பொருட்கள் வைரசுகளே ஆகும்.[11] ஒரு தேக்கரண்டி கடல் நீரில் ஏறத்தாழ ஒரு கோடி வைரசுகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.[12] பெரும்பாலான பாக்டீரியா உண்ணிகள் தாவரங்களுக்கோ விலங்குகளுக்கோ தீங்கு இழைப்பதில்லை. வைரசுகள் நீர்ச்சூழலில் உள்ள பாக்டீரியாக்களைத் தொற்றி அழிக்கின்றன. கடற் சூழலில் கார்பனை மறுசுழற்சி செய்ய இது மிகவும் துணைபுரிகிறது.

கடலில் உள்ள உயிர்த்திரளில் நுண்ணியிர்களே 90% அளவுக்கு உள்ளன. இவற்றில் 20% உயிர்த்திரளை வைரசுகள் ஒவ்வொரு நாளும் கொல்வதாகவும் பெருங்கடல்களில் உள்ள பாக்டீரியா, ஆர்க்கியா போன்ற உயிர்களைக் காட்டிலும் 15 மடங்கு அதிக எண்ணிக்கையில் இருப்பதாவும் கூறப்படுகிறது. மேலும் பல கடல்வாழ் உயிரினங்கள் அழிவதற்குக் காரணமாக இருக்கும் பாசித்திரளை அழிப்பதிலும் வைரசுகள் பங்கு வகிக்கின்றன. வைரசுகள் தொற்றும் உயிரினங்கள் குறைவாக உள்ள ஆழ்கடல் பகுதிகளிலும் கரையோரப் பகுதிகளிலும் குறைவாகவே உள்ளன.[13]

பெருங்கடல்களில் காற்றோட்டத்தை மேம்படுத்துவதன் மூலம் வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடின் அளவைக் குறைப்பதற்கும் வைரசுகள் காரணமாக உள்ளன. அதாவது ஆண்டுதோறும் மூன்று கிகா-டன் அளவு கார்பனைக் குறைக்கின்றன.[13]

கடற்பாலூட்டிகளும் வைரசுத் தொற்றினால் பாதிக்கப்படக் கூடியவையாக உள்ளன. 1998 க்கும் 2002 க்கும் இடையில் ஐரோப்பாவில் ஆயிரக்கணக்கான கடல் நாய்கள் போசைன் திசுத்தெம்பர் வைரசு ( phocine distemper virus) எனும் வைரசினால் கொல்லப்பட்டன.[14] இந்த வைரசு மட்டுமன்றி மேலும் பல வைரசுகள் கடற்பாலூட்டிகளில் கண்டறியப்பட்டுள்ளன.[13]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Changes to taxonomy and the International Code of Virus Classification and Nomenclature ratified by the International Committee Taxonomy of Viruses (2018)". Archives of Virology 163 (9): 2601–31. September 2018. doi:10.1007/s00705-018-3847-1. பப்மெட்:29754305. https://hal-pasteur.archives-ouvertes.fr/pasteur-01977332/file/King2018_Article_ChangesToTaxonomyAndTheInterna.pdf. 
 2. "On an invisible microbe antagonistic toward dysenteric bacilli: brief note by Mr. F. D'Herelle, presented by Mr. Roux. 1917". Research in Microbiology 158 (7): 553–54. 2007. doi:10.1016/j.resmic.2007.07.005. பப்மெட்:17855060. 
 3. From Nobel Lectures, Physics 1981–1990, (1993) Editor-in-Charge Tore Frängsmyr, Editor Gösta Ekspång, World Scientific Publishing Co., Singapore
 4. "Isolation of poliovirus – John Enders and the Nobel Prize". N. Engl. J. Med. 351 (15): 1481–83. October 2004. doi:10.1056/NEJMp048202. பப்மெட்:15470207. 
 5. Collier p. 11
 6. Collier pp. 11–12
 7. Wessner DR (2010). "The Origins of Viruses". Nature Education 3 (9): 37. 
 8. "Origin of viruses: primordial replicators recruiting capsids from hosts.". Nature Reviews Microbiology 17 (7): 449–58. 2019. doi:10.1038/s41579-019-0205-6. பப்மெட்:31142823. 
 9. Mahy WJ & Van Regenmortel MH. Desk Encyclopedia of General Virology. 2009:28.
 10. "Regulation of Apoptosis during Flavivirus Infection". Viruses 9 (9): 243. 2017. doi:10.3390/v9090243. பப்மெட்:28846635. 
 11. "The ancient Virus World and evolution of cells". Biol. Direct 1: 29. September 2006. doi:10.1186/1745-6150-1-29. பப்மெட்:16984643. 
 12. "A Review on Viral Metagenomics in Extreme Environments". Frontiers in Microbiology 10: 2403. 2019. doi:10.3389/fmicb.2019.02403. பப்மெட்:31749771. 
 13. 13.0 13.1 13.2 "Marine viruses – major players in the global ecosystem". Nat. Rev. Microbiol. 5 (10): 801–12. October 2007. doi:10.1038/nrmicro1750. பப்மெட்:17853907. 
 14. "Phocine distemper virus in the North and European Seas – Data and models, nature and nurture". Biological Conservation 131 (2): 221–29. 2006. doi:10.1016/j.biocon.2006.04.008. 

நூற்பட்டியல்[தொகு]