வையப்பமலை பாலசுப்பிரமணியசுவாமி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி கோவில்
பெயர்
வேறு பெயர்(கள்):வைகை பொன்மலை, சிறுபழநி.
பெயர்:வையப்பமலை
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:நாமக்கல்
அமைவிடம்:வையப்பமலை, திருச்செங்கோடு வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:திருச்செங்கோடு
மக்களவைத் தொகுதி:நாமக்கல்
கோயில் தகவல்
மூலவர்:பாலசுப்பிரமணியசுவாமி
சிறப்புத் திருவிழாக்கள்:பங்குனி உத்திரம் தேர் திருவிழா
உற்சவர்:வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி
கட்டிடக்கலையும் பண்பாடும்
கல்வெட்டுகள்:சிதைந்து போனது. மூன்று கல்வெட்டுகள்
வரலாறு
கட்டிய நாள்:பதினாறாம் நூற்றாண்டு[சான்று தேவை]
அமைத்தவர்:ராமச்சந்திர நாயக்கர்

வையப்பமலை பாலசுப்பிரமணியசுவாமி கோயில் தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டம், வையப்பமலை என்னும் ஊரில் மலை மீது அமைந்துள்ள முருகன் குன்றுதோறாடல் கோயிலாகும்.[1]

தலவரலாறு[தொகு]

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகாவில் வையப்பமலை எனப்படும் வைகைபொன்மலை அமைந்துள்ளது.

இதற்கு மூன்று கல் தொலைவில் "அலவாய்மலை"என்று அழைக்கப்படும் உலைவாய்மலை அமைந்துள்ளது.இந்த உலைவாய் மலையின் ஒரு பகுதியான சித்தர்மலையிலே சித்தர்கள் பலர் தங்கியிருந்து மூலிகைகள் பல கொண்டு ரச வாதத்தின் மூலம் பொன் செய்தார்கள். இவ்வாறு பல காலம் செய்த பொன்னை எல்லாம் அவர்கள் ஒன்று திரட்ட அது ஒரு பொற் குன்றாக விளங்கியது.

பழனி ஸ்ரீ பால தண்டாயுதபாணி சுவாமி சித்தர்களின் மதி எல்லாம் பொன்னின் பால் சென்றதால் அவர்களை தடுத்தாட்கொண்டு திருவிளையாடல் புரிய விரும்பினார்.

முருகப்பெருமான் அந்த சித்தர்களிடம், ஆடு மேய்க்கும் இடையனை போன்றவடிவத்தில் அவர்களிடம் சீடனாகசேர்ந்து, அவர்கள் அயர்ந்த சமயத்தில் அந்த பொன் மலையை தூக்கிக் கொண்டு ஓட்டம் பிடிக்கலானார்.

அதைக் கண்ட சித்தர்கள் அவன் யார் என்று தெரியாமலேயே, "வை பொன்னை" "வை பொன்னை" என கூவிக்கொண்டே துரத்தினர். "நீ தூக்கிச் செல்லும் பொன்மலை உனக்கு உதவாமல் கல் மலையாக போகக்கடவது" என்று சித்தர்கள் சாபம் தந்தனர். அதனால் இந்தபொன்மலை, கலியுகத்தில் கல் மலையாக மாறியதாக செவிவழி தகவல் கூறுகிறது.

சித்தர் மலையில் இருந்து முருகப்பெருமான் பொன்மலையை தூக்கிச் சென்ற போது ஒரு சிறு பகுதி உடைந்து விழுந்தது. அந்த இடம் தற்போது அளவாய் மலை தெற்கு பகுதியில் உள்ள ஜம்பு பாழி என்று குறிப்பிடப்படும் ஒரத்தியண்ணன் கோவில் அமைந்துள்ள இடமாகும்.இன்றும் அந்த பொன்மலை என்று குறிப்பிடப்படும் அந்த இடத்தை தரிசிக்கலாம்.

தற்போது உள்ள இவ்விடத்திற்கு வந்ததும் அங்கே தவம் செய்து கொண்டிருந்த ஔவையார் முருகனைக் கண்டு அடையாளம் கண்டுகொண்டு,"வைக,கைப்பொன் மலையை" என்று வேண்டினார். அதற்குச் இசைந்த வடிவேலன், இவ்விடத்தே பொற்குன்றை வைத்து விட்டு ஔவைக்கும் துரத்தி வந்த சித்தர்களுக்கும் மலைமீது காட்சி அளித்து உபதேசம் செய்து அருளினார். அதுமுதல் வைகைப்பொன்மலை என்றும் பேச்சுவழக்கில் வையப்பமலை என்றும் அழைக்கப்பட்டுவருகிறது.

பழனி மூலவர் பீடத்தில் மூலவர் இல்லாததைக் கண்ட போகர் தனது ஞான திருஷ்டியின் மூலமாக நடந்ததை அறிந்து நவ பாசனத்தால் மூலவர் சிலையை உருவாக்கி பீடத்தில் வைத்து விட்டார்.

அதுமுதல் பழனியில் நவபாஷான முருகனும் வைகைபொன்மலையில் மூலவரான பாலதண்டாயுதபாணி யானமுருகனும் மேற்கு நோக்கி அருள்புரிந்து வருகிறார்கள்.

ஒருமுறை நாரதர் செய்த ஒரு யாகத்தில் தவறான மந்திர உச்சாடனம் செய்ததின் பயனாக ஒரு மிகப்பெரியசெம்மறி ஆட்டுக்கடா தோன்றியது.அது ஈரேழு உலகங்களிலும் சுற்றிவந்து மிகப் பெரும் துன்பத்தை விளைவித்து வந்தது. அதை அடக்கி தங்களை காக்குமாறு தேவர்கள் முருகப் பெருமானிடம் முறையிட இறைவனும் அதை அடக்க முயலுகையில், அது சிக்காமல் சுற்றித்திரிந்து இந்த தலத்திற்கு வருகையிலே, இறைவன் அதை தன் கால்களால் நெறிக்க, அது களைத்து அடங்கி நின்றது. அது இறைவனிடம், "இறைவா, தாங்கள் எப்போதும் இந்தப் பொன்குன்றிலே வைகி,அடியார் குறை தீர்க்க வேண்டும்" என்று வேண்டிக் கொண்டது.

செவ்வாய் பகவானின் வாகனமான ஆட்டுக்கடாவை அடக்கியதால் இந்த திருத்தலம் செவ்வாய் தோஷ பரிகார தலமாகவும் விளங்குகிறது. செவ்வாய் தோஷத்தால் திருமணம் தடைப்படுபவர்கள் மற்றும் வீடு, வண்டி வாகனம், தொழில், நிலம், இரத்தம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உள்ளவர்கள் தொடர்ந்து மூன்று அல்லது ஒன்பது கிருத்திகைக்கு இறைவனுக்கு பாலபிஷேகம் செய்து கிரிவலம் செய்து வர நன்மை அடைந்து வருகிறார்கள் இது அனுபவப் பூர்வமான உண்மையாகும்.

இந்த வரலாறு "கொங்குவேளாளர் புராணவரலாறு" என்ற நூலிலும், கந்தபுராணத்திலும், கல்லாடம் என்ற பழைய நூலிலும்,

"நாரதன் ஓம்பிய செந்தீக்கொடுத்த திருகுபுரி கோட்டுத் தகர்வரு மதியோய்" எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

"அங்கட் புவனம் அனைத்தும் அழித்துலவும் செங்கட்கிடாயதனை சென்றுகொணர்ந்து எங்கோன்" (கந்தர் கலிவெண்பாவில் 89-ஆவது கண்ணி) குறிப்பிடுகிறது.

மேலும் அலைவாய் மலைக்கும் பழனி மலைக்கும் வைகைபொன்மலை க்கும் உள்ள தொடர்பை,

"கொல்லியும் வைகை அலைவாய் பழனி பொற்கொங்கணவர் வில்லியும் ஓதி வராகம் தலைமலை வெண்ணைமலை அல்லியை சென்னிகிரி கஞ்சம் வெள்ளி அரவகிரி வல்லியும் வாளை மலை சூழ்வது கொங்கு மண்டலமே"

என்று கார்மேக கவிஞரின் "கொங்கு மண்டல சதகம்" கூறுகிறது.

இந்த மலைப்பகுதியில் வளர்ந்திருக்கும் காட்டுப் பூக்களில் இருந்து கிடைக்கும் தேனைப் பருகி அதை திருச்செங்கோடு மலை இடுக்குகளில் தேனீக்கள் அடை சமைத்தன என்று "திருச்செங்கோடு திருப்பணி மாலை" என்னும் நூல் கூறுகிறது.

பழனி திருத்தலத்திற்கு சண்முகநதி தீர்த்தமாக விளங்குவது போல வைகை பொன்மலைக்கு திருமணிமுத்தாறு விளங்குகிறது.

உருவஅமைப்பில் பழநியை ஒத்திருப்பதாலும், பழனங்கள்(வயல்கள்)சூழ்ந்து இருப்பதாலும் இத்தலம் "சிறுபழநி" என்றும் அழைக்கப்படுகிறது.

பழனி ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமியின் இந்த திருவிளையாடலை தனது ஞான திருஷ்டியின் மூலமாக அறிந்த போகர் தனது சீடரான கொங்கண சித்தரை நேரில் சென்று அறிந்து வரபணித்தார். குருவின் கட்டளையை ஏற்ற கொங்கணவர் அலவாய் மலைக்கு சென்று சிறிது நாள் தங்கியிருந்து தவம் புரிந்துவந்தார். அங்கிருந்து வையப்பமலைக்கு வந்து மூலவரை ஒரு சிலா ரூபத்தில் இருத்தி பூஜை செய்து வந்துள்ளார். அவர் பூஜித்த சிலாரூபம் இன்றும் உள்ளது. சுமார் நூறு வருடங்களுக்கு முன்பாக குகையில் அவர் பூஜித்து வந்த முருகனின் திரு உருவம் அங்கிருந்து எடுத்துக்கொண்டு வந்து மலைப்பாதை வழியில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அந்த திருவுருவம் தற்போது குழந்தை வேலாயுதசாமி என வணங்கப்பட்டு வருகிறது.

அவர் சுமார் 300 வருடங்கள் தவமிருந்து முருகன் தரிசனம் பெற்ற குகையும் மலை அடிவாரத்தில்உள்ளது.மலைமீது பிற்கால சித்தர் ஒருவருடைய ஜீவசமாதி இருந்ததாகவும் தெரிகிறது.

1926-இல் இந்த கோயிலுக்கு வேங்கை மரத்தால் செய்யப்பட்ட தேர் உருவாக்கப்பட்டு இன்றும் பங்குனி உத்திர தேர்த்திருவிழா நடந்து வருகிறது.

இம்மலை மீதிருந்து திருக்கொடிமாடச் செங்குன்றூர் என்ற திருச்செங்கோடு, சங்ககிரிமலை, நைனாமலை, அலவாய்மலை,கொல்லிமலை ஆகியவற்றை தரிசிக்கலாம்.

முருகப்பெருமான் பழனியை விட்டு இந்த இடத்திற்கு இடம் பெயர்ந்து வந்தது நக்கீர முனிவரின் திருமுருகாற்றுப்படையில் 176-ஆம் செய்யுளில், "தாவில் கொள்கை மடந்தையொடு சின்னாள் ஆவினன்குடி அசைதலும் உரியன்" என்ற கூற்றின் மூலம் உறுதிப்படுத்துகிறார்.

புராணகாலத்தில் ஒரு முறை அனுமன் சாலகிராம கல்லை எடுத்துக் கொண்டு நாமக்கல் செல்லும் வழியில் இத்தலத்திற்கு வரும்போது அந்தி மயங்கும் நேரம் ஆகவே, மலைமீதுள்ள பிரம்ம தீர்த்த குளத்தில் நீராடி சந்தியாவந்தனம் செய்ய விரும்பினார். அப்போது முருகப்பெருமான் சாளக்கிராமம் வைக்கப்பட வேண்டிய இடம் இது அல்ல என்று உணர்ந்ததால், சுமார் 15 கல் தொலைவில் உள்ள கமலாலயக் குளக்கரையை அனுமனுக்கு காட்டி அருள் புரிந்தார். எனவே அங்கு நீராடும் எண்ணத்தை விட்டு முருகனிடம் விடை பெற்றுக் கொண்டு அவசரமாக நாமக்கல் நோக்கி சென்றடைந்தார்.

அனுமனை முருகன் சந்தித்த கோவை அனுவாவியை அடுத்து இரண்டாவது தலமாக இது குறிப்பிடப்படுகிறது.

தற்போது இந்த பிரம்மதீர்த்தம் தெப்பக்குளம்என்று அழைக்கப்படுகிறது. அடிவாரத்திலுள்ள சரவண தீர்த்தம் பூலாம்பாழி என்றும் அழைக்கப்படுகிறது. மலைமீது வள்ளி சுனையும்,தெற்கு பகுதியில் மனிதர்கள் ஏறிச் சென்று பார்க்கமுடியாத இடத்தில் ஒரு குகையும் உள்ளது. இந்த குகையை கிரிவலப் பாதையில் நின்று நன்றாக பார்க்க முடிகிறது. தலவிருட்சமாக விராலி செடி உள்ளது.

இக்கோயில் 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. நாயக்க மன்னர்கள் ஆட்சி காலத்தில் சுண்ணாம்பு, கடுக்காய், முட்டை, வெல்லம் கொண்ட கலவையால் கட்டப்பட்டதாகும். மேலும் பிரம்ம தீர்த்த குளத்தின் அருகே பழமையான பத்தர் மண்டபமும் உள்ளது. இத்திருத்தலத்தை பாடிய கவிஞர்கள் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள், சுத்தானந்த பாரதி, குன்றக்குடி அடிகளார், சுப்பிரமணியக் கவிராயர், முருகொளி வைத்தியலிங்கம் ஆவர். அருணகிரிநாதர் இந்த தலத்து இறைவனை பற்றிப் பாடிய பாடல்கள் எதுவும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. கொங்கண சித்தர் தவம் புரிந்த குகைக்கு அருகிலேயே பழங்காலமாக என்றும் அழியாத தேன்கூடு உள்ளது.

வைகைபொன்மலை மகத்துவ பாசுரம், முருகொளி, வையப்பமலை குமாரர்மேல் தாய்-மகள் ஏசல், சுப்பிரமணியர் பாடல் ஆகிய நூல்கள் உள்ளன.

கோயில் அமைப்பு[தொகு]

மிகப் மிகப்பழமையான புராணகால கோயிலாக, சிறியதாக இருந்ததை 16-ஆம் நூற்றாண்டில் நாயக்க மன்னர்கள் ஆட்சி காலத்தில் செப்பனிடப்பட்டு கட்டப்பட்டது. பிற்காலத்தில் இத்திருக்கோவிலில் திருப்பணி செய்தவர்களைபற்றி "முரு கொளி" என்ற நூலில் காணலாம். பழங்கால மூலவர்சிலையான பால தண்டாயுதபாணி திருவுருவம் சிதைந்து விட்டபடியால் புதிய திருமேனி அமைத்து பெப்ரவரி 5 2014 அன்று கோவில் புனருத்தாரணம் செய்து கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் சிவாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது.

வழிபாட்டு முறை --பக்தர்கள் முதலில் அடிவாரத்தில் உள்ள அரசடி விநாயகப் பெருமானை வணங்கி படி நுழைவு வாயிலில் வழிபட்டு கிரிவலம் வர வேண்டும்.கிரிவலப் பாதையில் உள்ள கொங்கண சித்தர் குகையில் குரு வழிபாடு செய்து மலையைச் சுற்றி வந்து கிரிவலம் நிறைவு செய்ய வேண்டும். பிறகு பக்தியுடன் மலையேறி வழியில் உள்ள வழிவிடு விநாயகர், கொங்கண சித்தர் வழிபட்ட பாலமுருகன், இடும்பன் சன்னதியில் வழிபட்டு ராஜகோபுரத்தின் வழியாக நுழைந்து கோவில் விமானத்தை சுற்றி வந்து கொடி மரத்தையும் மயில்வாகனத்தையும் துவார பாலகர்களையும் வணங்கி முருக பெருமானை வழிபட வேண்டும் .பிறகு பரிவார தெய்வங்கள் அனைவரையும் வழிபட வேண்டும். இதுவே முறையான வழிபாடு ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  • புஷ்நாகி ராஜண்ணனின், "சேலம் என்சைக்ளோபீடியா",
  • முருகொளி,
  • வைகைப்பொன்மலை மகத்துவபாசுரம்,
  • வையப்பமலை குமாரர் மேல் தாய்-மகள் ஏசல்,
  • சுப்பிரமணியர் பாடல்,
  • கொங்கு வேளாளர்புராணவரலாறு,
  • குமாரசாமிப் புலவர் இயற்றிய வெள்ளோடு பெரியண்ணன் குறவஞ்சி (1850).
  • திருச்செங்கோடு முத்துசாமிக் கோனார் மற்றும் கார்மேக கவிஞரின்"கொங்கு மண்டல சதகம்",
  • கந்தபுராணம்,
  • அளவாய்மலை தலவரலாறு,
  • திருமுருகாற்றுப்படை.
  • ஆரத்தி (பிப்ரவரி 2014) மற்றும் சிவ ஒளி (மே 2018) மாத இதழ்