வைகாசி விசாகப்பொங்கல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் கோயில் வற்றாப்பளை, முல்லைத்தீவு ஆரம்பகாலம் முதல் திராவிட மக்கள் மத்தியில், பெண்தெய்வ வழிபாடு வேரூன்றியிருந்தது. மரபுவழியாகப் பெண்ணைத் தெய்வமாகவும், தெய்வத்தைப் பெண்ணாகவும் போற்றியுள்ளனர். சிந்துவெளி நாகரிகம் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ள மொஹஞ்சதாரோ, ஹரப்பா ஆகிய இடங்களிலே கண்டெடுக்கப்பட்ட முத்திரைகளில், பெண் வடிவங்கள் பதித்த முத்திரைகள் கண்டெடுக்கப்பட்டன. பண்டைய மக்கள் தமக்கு வளங்களை அள்ளிக்கொடுக்கும் பூமியைப் போற்றித் தரைப் பெண்ணாக வழிபட்டுள்ளனர். திராவிடப் பண்பாடும், ஆரியப் பண்பாடும் கலந்து உருவாகிய இந்துசமயத்திலும், பெண் தெய்வ வழிபாடு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. ஈழத்தில், பெண் தெய்வ வழிபாட்டிலும் இருவேறு விதமான வழிபாட்டு முறைகள் காணப்படுகின்றன. ஆகம வழிபாட்டு முறை தழுவிய சாக்தம், சக்தியை முழுமுதற் கடவுளாகக் கொண்டு காணப்படுகின்றது. ஆனால், சிவாகம முறை தழுவாது, தமது விருப்பப்படி பூசை செய்து வழிபடும் ஆன்மார்த்த பூசை முறையும் பெண் தெய்வ வழிபாட்டில் பிரபலம் பெற்ற வழிபாட்டு முறையாகக் காணப்படுகின்றது. இதனைக் கிராமிய வழிபாட்டு முறையெனவும் கூறுவர். ஆரியரின் பண்பாடும் ஆதிக்கமும், திராவிட வழிபாட்டு முறையில் ஊடுருவு முன்னர், ஈழத்தில், ஆன்மார்த்த வழிபாடு மிகவும் பிரபல்யம் பெற்றுக் காணப்பட்டுள்ளது.

வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் கோயில் வற்றாப்பளை, முல்லைத்தீவு தொடர்ச்சி வைகாசி மாதத்து இரண்டாவது திங்கட்கிழமை, தீர்த்தம் எடுத்தல் என்னும் புனிதமான நிகழ்வு இடம்பெறும். பாக்குத்தெண்டு செய்பவர்களே தீர்த்தம் எடுக்கும் கடமையையும் செய்வர். கண்ணகி அம்மன் சிறுவர்களுக்குக் காட்சி கொடுத்த பொழுது, நந்திக்கடல் நீரேரியில் தீர்த்தம் எடுத்து விளக்கேற்றிய சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இச்செயல் நடைபெறுகின்றது. பாக்குத் தெண்டியத்திலிருந்து விரதமிருந்து, தீர்த்தமெடுக்குந் தினத்தன்று முழுநாளும் உபவாசமிருந்தே தீர்த்தமெடுப்பர். தீர்த்தமெடுத்தலைக் காட்டா விநாயகர் ஆலயத்தினரே செய்து வருகின்றனர். சிலம்புகூறல் பாட்டிலே வற்றாப்பளைக் கண்ணகிக்கும், காட்டாவிநாயகர் ஆலயத்திற்குமுள்ள தொடர்பு கூறப்பட்டுள்ளது. சிலம்புகூறல் பாட்டிலே கூறப்பட்டவாறு, ‘‘வைகாசித் திங்களில் வருவேன் ஒரு கிழமை காட்டா விநாயகர் கோவிலுக்கே’’ என்ற வாக்கிற்கமைய காட்டாவிநாயகர் ஆலயத்தினரே தீர்த்தமெடுக்கும் புனிதப் பணியைச் செய்து வருகின்றனர்.

ஆரம்ப காலங்களில், கண்ணகி அம்மன் சிறுவர்களிடம் கூறியதற்கிணங்க, நந்திக்கடல் நீரேரியிலேயே தீர்த்தமெடுத்துள்ளனர். பிற்காலத்தில் இக்கடலேரித் தண்ணீர் குறைந்து காணப்பட்டமையினால், தற்காலத்தில் சிலாவத்தைக் கடலிலே தீர்த்தமெடுக்கும் வழக்கம் காணப்படுகின்றது. தீர்த்தமெடுப்பவர் கடல் நீருள் அமிழ்ந்து தீர்த்தம் எடுக்க வேண்டும். இவ்வாறு மூழ்கி எடுப்பதற்குரிய ஆழம் நந்திக்கடல் நீரேரியில் இல்லாமையாலேயே, சிலாவத்தைக் கடலில் தீர்த்தம் எடுக்கப்படுகின்றது. பரம்பரையாகத் தீர்த்தமெடுப்பவர், தீர்த்தமெடுக்கச் செல்லுமுன், பல கிரியைகளைச் செய்ய வேண்டும். முதலில் தீர்த்தமெடுப்பவருடைய வாய் வெள்ளைத் துணியால் கட்டப்படும். இவர் மெளனமாகத் தீர்த்தக்குடத்தினைத் தோளில் வைத்தவாறு, சிலாவத்தைக் கடலை நோக்கிப் பவனியாக அழைத்துச் செல்லப்படுவார். இப்பவனி காட்டாவிநாயகர் கோவிலிலிருந்து புறப்பட்டு, முள்ளியவளை வற்றாப்பளை வீதி வழியாக, பள்ளவெளி, பொதறிகுடா என்ற இடங்களைத் தாண்டி, ஊற்றங்கரைக் கோயிலை வந்தடையும். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு, நீராவிப்பிட்டிப் பாதையூடாக, ஆலடிச் சந்திக்குச் சென்று, முல்லைத்தீவு பிரதானவீதி வழியாக, சிலாவத்தைக் கிராமத்தை அடையும். பின்னர் அங்கிருந்து புறப்பட்டுத் தீர்த்தம் எடுப்போர், சிலாவத்தைப் பெருங்கடலை நோக்கிப் புறப்படுவர். ஏறக்குறையக் கால்நடையாகச் செல்லும் இப்பவனி, பத்து மைல் தூரத்தைக் கடந்தே சிலாவத்தைக் கடலை அடையும்.

சிலாவத்தையில் தீர்த்தப் பவனி வந்தடைந்ததும், இங்கு அமைக்கப்பட்டுள்ள கோயிலில் பூசைகள் ஆரம்பமாகும். முதலில் தீர்த்தக் குடத்திற்கான பூசை நடைபெறும். தொடர்ந்து கடலிலே தீர்த்தமெடுக்கும் நிகழ்ச்சி ஆரம்பமாகும். தீர்த்தக் குடத்தைத் தோளில் தாங்கியவரை, மேளதாளத்துடன் தீர்த்தக்கரைக்கு அழைத்துச் செல்வர். அங்கு தீர்த்தக் குடத்திற்கும், கடல் தீர்த்தத்திற்கும் தீபாராதனை செய்யப்படும். இவை முடிவுற்றதும் தீர்த்தம் எடுப்பவரை, இருவர் இருபக்கக் கைகளிலும் பிடித்துக் கொண்டு, இடுப்பளவு ஆழமுள்ள பகுதிக்கு அழைத்துச் செல்வர்.

இவ்வேளையில் கடல் கொந்தளித்துப் பேரலைகள் எழும்புவது வழக்கமாகும். இவ்வாறு அலை உயர்ந்து பேரலையாக வரும்பொழுது, தீர்த்தக்குடம் வைத்திருப்பவரை, அருகிலுள்ள இருவரும் ஒரு சில கணம் நீருள் அமிழ்த்திப் பிடிப்பர். அவ்வேளையில் தீர்த்தக் குடம் நிரம்பியதும், மீண்டும் அவரைக் கரையிலுள்ள கோவிலுக்கு அழைத்து வருவர். இங்கு தீர்த்தக்குடத்திற்குப் பூசை வழிபாடுகள் இடம்பெறும். இவ்வேளையில் தீர்த்தக்குடம் எடுத்தவரும், ஏனையோரும் ஈர உடையை மாற்றிப் பூசை வழிபாடுகளில் கலந்துகொள்வர்.

சிலாவத்தைக் கடற்கரையிலுள்ள கோயிலில் பூசை வழிபாடுகள் நடைபெற்ற பின், மீண்டும் தீர்த்தக்குடத்தைத் தோளில் வைத்துத் தீர்த்தப்பவனி ஆரம்பமாகும். இப்பவனி சிலாவத்தைக் கிராமத்திற்குள் வரும் வழியெங்கும், மகர தோரணமிட்டு, அலங்கரித்து, பந்தல்கள் அமைத்து, நிறைகுடம் வைத்துத் தேங்காய் உடைத்துத் தீர்த்தக் குடத்தை வரவேற்பர். இங்கிருந்து சிலாவத்தைக் கண்ணகி கோயிலுக்குச் சென்று, இங்கும் பூசை வழிபாடுகள் நடைபெறும். மீண்டும் பவனி ஆரம்பித்துக் காட்டாவிநாயகர் கோயிலை இறுதியில் சென்றடையும். வழியெங்கும் வரவேற்புகள் வழங்கப்படுவதோடு, செல்லும் வழியிலுள்ள ஊற்றங்கரை ஆலயத்தில் மிகப் பெரிய வரவேற்பு அளிக்கப்படும்.

இவ்வாறு பவனியாகக் கொண்டுவரப்பட்ட தீர்த்தத்தில் விளக்கேற்றும் வைபவம் இடம்பெறும். தீர்த்தக்குடத்திலிருக்கும் தீர்த்தம், சிறிய புதிய மண்பானையில் வார்க்கப்பட்டு, அதன் வாய்ப்பகுதி வெள்ளைத் துணியால் கட்டப்பட்டு, மத்தியில் துவாரம் இடப்படும். அத்துவாரத்தினூடாகத் திரியிட்டுத் தீபம் ஏற்றப்படும். தீர்த்தத்தில் விளக்கேற்றப்படும் வைபவம் அடுத்த ஞாயிறுவரை ஒருவார காலத்திற்கு இடம்பெறும். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, காட்டா விநாயகர் ஆலயத்திலிருந்து மீதித் தீர்த்தத்தை நடைபவனியாக, வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆலயத்திற்குக் கொண்டு வருவர். வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் கோயிலில், மீதித் தீர்த்தத்தில் விளக்கேற்றும் வைபவம் நடைபெறும்.

கடல் நீரில் தீபம் ஏற்ற முடியுமா? எனக் கேள்வி எழுப்பியோர், இச்செயலை நம்ப மறுத்தனர். எனவே இச்செயலை விஞ்ஞானரீதியாகப் பரீட்சித்துப் பார்க்க முயன்றனர். இவ்வாறான ஆய்வுகள் பல தடவைகள் நடைபெற்றது. 1964 ஆம் ஆண்டு கொழும்பிலிருந்து வந்த ஆய்வாளர்கள், தீர்த்தத்தில் தீபம் எரிவதைப் பற்றி ஆய்வு செய்தனர். எனினும் எவ்வித முடிவும் கண்டறியப்படாது திரும்பினர். மீண்டும், 1970ஆம் ஆண்டிலும் இவ்வாறான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவர்கள், கடல்நீரிலே காணப்படும் உப்புக் கரைசல், தீபத்தை ஏற்றும்போது நெருப்பு எரியக்கூடிய ஒரு பொருளாக மாறுகின்றது எனப் பொருந்தாத, ஆதாரமற்ற கருத்தை முன்வைத்தனர். இக்கருத்தை ஆய்வுபூர்வமான முடிவாக எவரும் ஏற்கவில்லை. இன்றுவரை தீர்த்தநீரிலே தீபமேற்றுவது பற்றிய விளக்கத்தை, எந்த விஞ்ஞானிகளாலும் கொடுக்க முடியவில்லை. அறிவுக்கும், மனித ஆற்றலுக்கும் மேற்பட்ட அற்புதமென்றே இதனைக் கொள்ளமுடியும்.

வைகாசி மாதத்தின் மூன்றாவது திங்கட்கிழமை வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயப் பொங்கலாகும். இத்திங்கள் இரவு ‘வளந்து நேருதல்’ என்னும் நிகழ்வு நடைபெறும். பூசாரியார் வளந்து (பானை) ஏந்தி ஆடுவார். ஆட்டத்தின் உச்சக்கட்டத்தில் வளந்தினை அறிந்து ஏந்துவார். இறுதியில் நிலத்தில் பள்ளமாக வெட்டி அமைக்கப்பட்ட அடுப்பில் வளத்தினை வைப்பார். பின் பொங்கலிடும் அரிசியை ஏந்தி ஆடுவார். ஏந்தியாடும் அரிசியையும் அள்ளி மேலே எறிவார். இவ்வரிசிகள் நிலத்தில் விழுவதில்லை. அத்தோடு வளந்துப் பானையில் சூத்திரதாரணம் செய்யப்பட்டு, பானையின் கழுத்தில் வெற்றிலை கட்டப்பட்டிருக்கும். இவை பெருநெருப்பிலும் எரிந்து சாம்பராகாது, கட்டியபடியே காணப்படுவது மிக அதிசயமானது.

இங்கு பொங்கல் காலத்திலே, பூசாரியாருக்கு உதவிசெய்வோரை, நோற்புக்காரர்கள் எனவும் கோயிற்பிள்ளைகள் எனவும் அழைப்பர். இவர்கள் கோயிலோடு நெருங்கிய தொடர்புடையவர்களாகவும், கண்ணகி அம்மன் பக்தர்களாகவும் காணப்படுவர். இவர்கள் கோயில் மூலத்தானத்திற்குள் செல்லாது மண்டபத்தில் இருந்து சகல உதவிகளையும் செய்வர்.

சிலாவத்தைக் கடற்கரையிலிருந்து தீர்த்தம் கொண்டுவரப்பட்டு, காட்டாவிநாயகர் ஆலயத்தில் தீபம் ஏற்றப்பட்டதும், கண்ணகியின் சிலம்புகூறல் ஏட்டினை, இங்கேயே வாசிக்க ஆரம்பிப்பர். இக்கோயிலில் பொங்கல் நடைபெறுங்காலத்தில் சிலம்பு கூறல் படலம் ஏட்டிலிருந்து வாசிக்கப்படும். இக்காவியத்திலே கண்ணகி- கோவலன் கதை, பாண்டிய மன்னன் சபையில் வழக்குரைத்தல், கண்ணகி மதுரையை எரித்தல், மதுரையை விட்டு வெளியேறி இலங்கைக்கு வருதல், இலங்கையின் பல இடங்களிலும் தங்கியிருந்து பின் பத்தாம்பளையை அடைதல், பத்தாம்பளையில் சிறுவர்களுக்குக் காட்சி கொடுத்தல் போன்ற சம்பவங்கள் இடம்பெறும். இங்கு திங்கட்கிழமை அதிகாலைவரை வாசிக்கப்பட்டு, மீதியை வற்றாப்பளைப் பொங்கல் தினத்தன்று வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் கோயிலிலேயே வாசித்து முடிப்பர். சிலம்பு கூறல் ஏடு வாசிப்பதைக் கேட்கச் சுற்றுப்புறக் கிராமங்களில் இருந்தும், பெருந்திரளான மக்கள் கூடுவர். வைகாசிப் பொங்கலோடு, பங்குனியிலே வருகின்ற திங்கட்கிழமைகள் யாவும், கண்ணகி அம்மனுக்குரிய சிறப்பு நாட்களாகும். எனினும் இவற்றுள் பங்குனிக் கடைசித்திங்கள் மிக விமரிசையாகக் கொண்டாடப்படும்.

பொங்கல் காலத்திலே பக்தர்களை நோய், பிணி அணுகாமல் இருக்கப் பரிலயம் கட்டுதல் என்னும் நிகழ்வு நடைபெறும். பரிகலம் என்பது பரிவாரப் பேய் அல்லது பேய் பிசாசைக் குறிக்கும் சொல். இன்றும் கிராமப்பகுதிகளில் ஒருவருடைய பிடிக்காதச் செயலைக் குறிக்க ‘பரிகலப்பேய் மாதிரி’ என்ற சொற்பதம் பயன்படுத்தப்படுகின்றது. இச்சொல்லே நாளடைவில் பரிலயம் என மருவியிருக்க வேண்டும். திருவிழாக் காலங்களில் பக்தர்களுக்குத் தீயவற்றால் துன்பம் நேராதிருக்க, கொடியேற்றத்திற்கு முன் இவற்றைக் கட்டிப்போடுவதான சம்பிரதாயம் நிகழ்வதுண்டு. அவ்வாறே திருவிழா நடைபெற்ற பின்னர் இவற்றிற்குரிய காப்பை நீக்கிவிடுவர். இவ்வாறான ஒரு சம்பிரதாயமே, பரிலயம் என வற்றாப்பளைக் கண்ணகி கோவிலிலும் நடைபெறுகின்றது. பரிலயம் கட்டப்பட்ட காலப்பகுதியில், கோவிலைச் சுற்றியுள்ள கிராமங்களில், உரல் நிறுத்தி நெல் குற்றமாட்டார்கள். மரணச் சடங்குகள் நிகழ்ந்தால், பறைமேளம் அடிப்பதில்லை. களியாட்ட நிகழ்ச்சிகளையும் நடத்தமாட்டார்கள். சூடுமிதித்தல் போன்றவையும் நடைபெறுவதில்லை. இவ்வாறான பாரம்பரியங்களை மிக அவதானத்துடன் கடைப்பிடிப்பது வற்றாப்பளையைச் சூழவுள்ள கிராமங்களில் காணப்படுகின்றது. வற்றாப்பளைக் கண்ணகியின் பொங்கல், திங்கள் இரவு முடிவடைந்த பின்னர், மறுநாள் செவ்வாய்க்கிழமை அதிகாலையில், பரிலயம் வழிவிடுதல் என்னும் நிகழ்ச்சி நடைபெறும். பூசாரியார் வேப்பங் குழையால், தீர்த்தத்தினை எடுத்து எல்லா இடங்களிலும் தெளிப்பார். பின் மீதித் தீர்த்தத்தினையும், வேப்பங் குழையையும் நந்திக்கடலில் சேர்த்துவிடுவார். இந்நிகழ்ச்சியின்போது குளிர்த்திப் பாடல்கள் பாடப்படும். பரிலயம் வழிவிடுதல் நிறைவேறியபின் கிராமங்களில், ஐதீகமாக நிறுத்தி வைத்த வேலைகள் யாவும் நடைபெறும். அத்தோடு கால்நடையாகக் கதிர்காமம் செல்வதற்காகத் தங்கியிருக்கும் அடியார்கள், தமது பயணத்தினையும் மேற்கொள்ளுவார்கள்.

இவற்றோடு தொடர்புடைய பொங்கல் ஒன்று நாவற்காட்டு வைரவர் கோயிலில் நடைபெறும். இதனை எட்டாஞ்சடங்கு என்றுங் கூறுவர். இச்சடங்கு பரிலயம் வழிவிடுதல் நடைபெற்ற பின்வரும் திங்களன்று இடம்பெறும். இப்பொங்கல் பரியலங்கட்கு உணவளிப்பதற்காகப் பொங்கப்படுவதாகக் கூறுவர். பொங்கல் பொங்கிப்படைத்த பின்னர், கொள்ளி எறும்புகள் எனப்படும் ஒருவகை எறும்புகள் மொய்து அப்பொங்கலை உண்ணும். இவற்றைப் பரியலங்கள் எனக் கருதுவர்.

இலங்கையின் பலவிடங்களிலே கண்ணகி அம்மன் வழிபாடு காணப்படுகின்றது. கண்ணகி அம்மனைச் சிங்கள மக்கள் பத்தினித் தெய்யோ என்று அழைப்பதோடு, ஆடிமாத பூரணையில், கண்ணகி அம்மனுக்கு விழாவெடுப்பர். சில கண்ணகி அம்மன் கோயில்களில், கண்ணகி அம்மன் விழாக் காலத்தினைக் கண்ணகி அம்மன் சடங்கு எனக் கொண்டாடும் வழக்கமும் காணப்படுகின்றது. இச்சடங்கு மூன்று அல்லது ஐந்து அல்லது ஏழு நாட்கள் வரை நடைபெறும். இக்காலங்களில் கண்ணகி வழக்குரை பாடப்பட்டு இறுதி நாளில் குளுத்திக் கதைப்பாடல் பாடப்படும்.

வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் கோயிலை அண்டிய கிராமப்பகுதியில், கண்ணகி அம்மனின் அருட்செயல்களைக் கருவாகக் கொண்டு, வடமோடிப்பாங்கிலான கோவலன் கூத்து ஆடப்படுகின்றது. வற்றாப்பளைக் கண்ணகி பொங்கலுக்கான தீர்த்தம் எடுப்பதற்கு முன், கோயிலுக்கு அண்மையிலுள்ள கிராமங்களில் கோவலன் கூத்து மேடையேற்றப்படும். வற்றாப்பளை, முள்ளியவளை, தண்ணீரூற்று, நெடுங்கேணி, புதுக்குடியிருப்பு போன்ற கிராமங்களைச் சேர்ந்த அண்ணாவிமார், கூத்தினைப் பழக்கி, இரவிரவாக மேடையேற்றுவார்கள். வற்றாப்பளைக் கண்ணகியம்மனின் பெருமைகளைக் கூறுவனவாக வசந்தன் பாடல், மழைக்காவியம், அம்மானை ஆகியன காணப்படுகின்றன.

பொதுவாகக் கண்ணகியின் வரலாற்றினைச் சிலப்பதிகாரம், கண்ணகி வழக்குரை, உடுக்குச் சிந்து, வசந்தன் கவிகள், கண்ணகி குளுத்திப்பாடல், கண்ணகி அம்மன் காவியம், கண்ணகி அம்மன் அகவல் ஆகியவற்றின் மூலம் அறியலாம். கண்ணகி அம்மனை வழிபடுவதன் மூலம், கண்நோய், வயிற்றுநோய், மங்கமாரி, செங்கமாரி, வைசூரி, அம்மைநோய் போன்ற நோய்கள் நீங்குவது மட்டுமின்றி, கண்ணகி அம்மனின் அருளால் ஆகாததொன்றுமில்லை என்ற பக்தி வைராக்கியம் கொண்டவர்களாக இவ்வழிபாட்டை மேற்கொள்ளும் மக்கள் காணப்படுகின்றார்கள்.

கடந்தகாலங்களில் இலங்கையில் இடம்பெற்ற இனக்கலவரங்களில் பாதிப்படைந்த ஆலயங்களுள் வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் கோயிலும் முக்கியமானதாகும். இக்கோயிலில் வருடாந்தம் நடைபெறும் பொங்கலை நடத்தவோ, அன்றிப் பக்தர்கள் இங்கு செல்வதையோ இலங்கை இராணுவம் அனுமதிக்கவில்லை. இதனால் முள்ளியவளை வற்றாப்பளைச் சந்தியிலுள்ள அம்மன் கோயிலில் மக்கள் பொங்கலையும், தமது நேர்த்திகளையும் செய்து வந்தார்கள். இக்கோயில் பழமையானதல்ல. இக்கோயில் அமைந்துள்ள இடத்தில் காணப்பட்ட கல்லொன்றில் பக்தர்கள் கற்பூரம் ஏற்றி, வற்றாப்பளைக் கண்ணகி அம்மனின் பொங்கலை எண்ணி வழிபட்டனர்.

1983 ஆம் ஆண்டு உக்கிரமடைந்த தமிழின அழிப்புப் போராட்டம் வலுப்பெற்று, கண்ணகி அம்மன் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் பாதிக்கப்பட்டனர். இதனால் 1985 ஆம் ஆண்டளவில் கற்பூரம் கொளுத்தி வணங்கிய இடத்திலேயே, கண்ணகி அம்மன் சிலையொன்றை நிறுவி வழிபட ஆரம்பித்தனர். 1990 ஆம் ஆண்டு ஏவுகணைத் தாக்குதலால், வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் கோயில் பெருஞ்சேதத்துக்குள்ளானது. 1992ஆம் ஆண்டு மே மாதம் வற்றாப்பளைக் கண்ணகி அம்மனின் வருடாந்த உற்சவத்தைப் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொண்டாடிக் கொண்டிருந்தபோது, முல்லைத்தீவில் ஆக்கிரமித்து நின்ற இராணுவத்தினர் மேற்கொண்ட எறிகணைத் தாக்குதலால், பதினைந்து தமிழ்மக்கள் கொல்லப்பட்டனர். முப்பதுக்கும் மேற்பட்ட தமிழ்மக்கள் படுகாயமடைந்தனர். தற்போது (2003) ஏற்பட்டுள்ள சமாதானச் சூழ்நிலையால், வருடாவருடம் நடைபெறும் வருடாந்தப் பொங்கல் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுவதோடு, ஈழமெங்குமுள்ள மக்கள் இவ்விழாவிலே பங்குபற்றிக் கண்ணகி அம்மனின் அருளைப் பெறக்கூடிய சூழ்நிலை காணப்படுகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வைகாசி_விசாகப்பொங்கல்&oldid=3539720" இலிருந்து மீள்விக்கப்பட்டது