வேம்பனூர் ஈரநில வளாகம்
வேம்பனூர் ஈரநில வளாகம் (Vembannur Wetland Complex), தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டம், அகத்தீஸ்வரம் வட்டம், இராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மேலசங்கரன்குழி ஊராட்சியில் உள்ள வேம்பனூர் சிற்றூரில் 19.7 எக்டேர் பரப்பளவில் அமைந்த சதுப்புநிலம் ஆகும். ராம்சர் சாசனம் இந்த ஈரநில வளாகத்திற்கு 08 ஏப்ரல் 2022 அன்று அங்கீகாரம் வழங்கியது.[1]
அமைவிடம்
[தொகு]வேம்பனூர் சதுப்பு நிலம், நாகர்கோவிலுக்கு மேற்கே 8 கிலோ மீட்டர் தொலைவில், வங்காள விரிகுடாவை ஒட்டி அமைந்துள்ளது.
விளக்கம்
[தொகு]வேம்பன்னூர் நன்னீர் சதுப்புநிலம் என்பது ஒரு நீர்ப்பாசன குளம் ஆகும். இதில் பறவைகள் மற்றும் பல்லுயிர்கள் வாழும் பகுதியாகும். குளிர்காலங்களில் ஆற்று ஆலாக்கள், நீலச்சிறகிகள், பச்சைக்காலிகள், சாம்பல் கூழைக்கடாக்கள் உள்ளிட்ட 16 வகையான வெளிநாட்டு மற்ற்ம் உள்நாட்டுப் பறவைகள் இந்த வேம்பனூர் ஈரநிலத்தில் வலசையாக வந்து தங்கி முட்டையிட்டு, குஞ்சு பொறித்து, பின் குஞ்சுகள் வளர்ந்து பறக்கத் தொடங்கிய பின்னர், மீண்டும் தம்வாழிடத்திற்கு திரும்பச் செல்கிறது. மேலும் இந்த ஈரநிலத்தில் 65 வகையான மரங்கள், 75 வகையான கணுக்காலிகள், 16 வகையான மீன்கள், 29 வகையான ஊர்வன மற்றும் நீர்நில வாழ்வனவைகள் மற்றும் 10 வகையான பாலூட்டிகள் உள்ளது.
இந்த ஈரநிலம் 1,000 க்கும் மேற்பட்ட குடும்பங்களின் 2,000 எக்டேர் விவசாய நிலத்திற்கு நீர் ஆதாரமாக உள்ளது. மேலும் இந்த ஈரநிலம் உள்ளூர் மக்களுக்கு மீன் மற்றும் குடிநீரையும் வழங்குகிறது.[2]