வேதிச் சிதைவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வேதிச் சிதைவு (Chemical decomposition) என்பது ஓரு வேதிச்சேர்மத்தை தனிமங்களாக அல்லது சிறு சேர்மங்களாகப் பிரிக்கும் வினைவகையாகும். சில நேரங்களில் இவ்வினை வேதித் தொகுப்பு வினைக்கு நேரெதிரான வினை என்றும் கருதப்படுகிறது. பெரும்பாலும் இவ்வகைச் சிதைவு வினைகள் வேதியியலில் விரும்பப்படுவதில்லை. ஒரு வேதிச் சேர்மம் கொண்டுள்ள அதன் நிலைப்புத்தன்மை, அச்சேர்மம் சுற்றுச்சூழலில் இடம்பெற்றுள்ள வெப்பம், கதிரியக்கம், ஈரப்பதம், அல்லது ஒரு கரைப்பானின் அமிலத்தன்மை, ஆகிய காரணிகளால் முடிவாகக் கட்டுப்படுத்தப்படுகிறது. சிதைவுவினைகளின் செயல்முறை விவரங்கள் சரியான முறையில் வரையறுக்கப்படவில்லை. மாறாக, ஒரு மூலக்கூறு சிறு துண்டுகளாக உடையலாம் என்கின்ற போக்கிலேயே வரையறுக்கப்பட்டுள்ளது. அணுப் பொருண்மை அலைமாலையியல், மரபார்ந்த எடையறி பகுப்பாய்வு மற்றும் வெப்பஞ்சார்ந்த எடையறி பகுப்பாய்வு போன்ற பல்வகையான பகுப்பாய்வு முறைகளில் வேதிச்சிதைவு வினை அலசி ஆராயப்பட்டுள்ளது.

சற்று விரிவாக அலசப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் வேதிச் சிதைவு என்பது ஒரு சேர்மம் ஒருபருப்பொருள் நிலையில் இருந்து ஒன்று அல்லது இரண்டு நிலைகளுக்கு பிரிவதையும் உள்ளடக்கியது என்று வரையறை செய்யப்பட்டுள்ளது [1]

வேதியியலில் மூன்று வகையான சிதைவு வினைகள் உள்ளதாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. வெப்பச் சிதைவு, மின்பகுச் சிதைவு, வினையூக்கிச் சிதைவு என்பன அம்மூன்று வகைச் சிதைவு வினைகளாகும்.

சிதைவுவினையின் பொதுவாய்ப்பாடு[தொகு]

வேதிச் சிதைவின் பொதுவான அமைப்பு வாய்ப்பாடு இவ்வாறு அமையும்:

AB → A + B

இதற்கு தண்ணீரின் நீராற்பகுப்பு வினையைச் சரியான உதாரணமாகக் குறிப்பிடலாம். இங்கு நீர்ம நிலையிலுள்ள நீர் மூலக்கூறு வாயு நிலையில் உள்ள ஐதரசன் மற்றும் ஆக்சிசனாகச் சிதைவடைகிறது.

2 H2O(I) → 2 H2 + O2

கூடுதல் உதாரணங்கள்[தொகு]

ஐதரசன் பெராக்சைடு, மெல்ல தண்ணீர் மற்றும் ஆக்சிசனாகச் சிதைவதைத் தன்னிச்சையானச் சிதைவடைதலுக்கு ஒரு உதாரணமாகக் கூறலாம்.

2 H2O2 → 2 H2O + O2

கார்பனேட்டுகளைச் சூடாக்கும்போது அவை சிதைவடைகின்றன. கார்பானிக் அமிலம், H2CO3 இதற்கு விதிவிலக்காகும். கார்பானிக் அமிலம் மட்டும் தன்னிச்சையாகச் சிதைவடைந்து கார்பன் டை ஆக்சைடு மற்றும் தண்ணீரராக்ச் சிதைவடைகிறது. சோடா உடைக்கும்பொழுது வெளிப்படும் ஓசை மற்றும் மதுபானங்கள் திறக்கும்போது வெளிப்படும் ஓசைகள் சிதைவடைந்த வாயுவின் வெளிப்பாடு ஆகும்.

H2CO3 → H2O + CO2

மற்ற கார்பனேட்டுகளைச் சூடுபடுத்தினால் அவை அவற்றின் உலோகம் மற்றும் ஆக்சைடுகளாகச் சிதைவடையும். பின்வரும் வினையில் உள்ள M உலோகத்தைக் குறிக்கிறது.

MCO3 → MO + CO2

குறிப்பிட்டுச் சொலவேண்டுமென்றால், கால்சியம் கார்பனேட்டு சிதைவைச் சொல்லலாம்.:

CaCO3 → CaO + CO2

உலோக குளோரேட்டுகளும் சூடாக்கும் போது சிதைவடைகின்றன. ஒரு உலோக குளோரைடு மற்றும் ஆக்சிசன் ஆகியன விளைகின்றன.

2 MClO3 → 2 MCl + 3 O2

பொதுவாக குளோரேட்டுகள் ஆக்சிசனை வெளிவிட்டு சிதைகின்றன. உதாரணமாக பொட்டாசியம் குளோரேட்டு

2 KClO3 → 2 KCl + 3 O2

மேற்கோள்கள்[தொகு]

இவற்றையும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=வேதிச்_சிதைவு&oldid=2747126" இலிருந்து மீள்விக்கப்பட்டது