வேதாத்திரி மகரிசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வேதாத்திரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வேதாத்திரி மகரிசி
பிறப்பு ஆகத்து 14, 1911(1911-08-14)
கூடுவாஞ்சேரி, தமிழ்நாடு
இறப்பு மார்ச்சு 28, 2006(2006-03-28) (அகவை 94)

வேதாத்திரி மகரிஷி (ஆகஸ்ட் 14, 1911 - மார்ச் 28 2006) ஆன்மிகத்தை அடிப்படையாகக் கொண்ட சமுதாயப் பணி ஆற்றி வந்தவர்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி கூடுவாஞ்சேரி என்னும் கிராமத்தில் நெசவுத் தொழில் செய்யும் வரதப்பமுதலி , முருகம்மாள் (சின்னம்மாள்) தம்பதியர்களுக்கு எட்டாவது குழந்தையாகப் பிறந்தார். சிறுவயது முதலே வேதாத்திரி மகரிஷி அவரது தாயார் சின்னம்மாளிடம் நிறைய பக்திக் கதைகளையும், புராணக்கதைகளையும் அறிந்து கொண்டார்.

இவரது குடும்பச்சூழலில் இவருக்கு அதிகம் படிக்க வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. தன்னுடைய சொந்த ஊரில் மூன்றாவது வகுப்பு வரை படித்த இவர், பின்னர் தங்கள் குடும்பத் தொழிலான தறி நெய்தலைச் செய்யத் தொடங்கினார்.

18வது வயதில் சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் வாய்ப்பு இவருக்கு ஏற்பட்டது. சென்னையில் இவருக்கு ஆயுர்வேத மருத்துவர் எஸ். கிருஷ்ணாராவின் நட்பு கிடைக்க, அவர் மூலமாக தியானம், யோகா போன்றவைகளைக் கற்றார் மகரிஷி.

தனது வாழ்க்கையின் குறிக்கோளாகிய முழுமையை உணரும் நோக்கத்தால் உந்தப்பட்டு; சித்த, ஆயுர்வேத மற்றும் ஹோமியோபதி போன்ற மருத்துவ துறைகளைக் கற்றுத் தேர்ச்சி பெற்றார். மேலும் இரண்டாவது உலகப் போரின் போது முதலுதவிப் பயிற்சியாளராகவும் பணிபுரிந்தார். பின்பு பொருளாதாரத் தன்னிறைவு பெற வேண்டும் என்று, தனது சுய முயற்சியினால் பல்லாயிரம் நபர்களுக்கு வேலை அளிக்கக்கூடிய அளவிற்கு ஒரு பெரிய நெசவுத் தொழிற்சாலையை உருவாக்கினார்.

அச்சமயத்தில் அரசாங்கத் தொழிற்கொள்கை மாற்றம் காரணமாக வியாபாரம் திடீர் சரிவு நிலையை அடைந்தது; இருப்பினும் தன்னிடம் பணிபுரிந்த 2000 குடும்பங்களையும் காப்பாற்றுவதற்காக ஈட்டிய பொருள் அனைத்தையும் அவர்களுக்கே செலவழித்து அனைத்துப் பொருள் வளத்தையும் இழந்தார். அப்படியிருந்தும் மனத்தைத் தளரவிடாது மீண்டும் கடுமையாக உழைத்து படிப்படியாக பொருளாதாரத்தில் தன்னை மேம்படுத்திக் கொள்ள அரிசி வியாபாரம் போன்ற பல்வேறுபட்ட தொழில்களைச் செய்து தனக்கும், தன்னைச் சுற்றியுள்ளவர்களின் துன்பத்தைப் போக்கவும் பாடுபட்டார். தன் இரண்டு மனைவியருடைய மனத்தையும் நன்கு புரிந்தவராய் இருவரிடமும் பிணக்கின்றி அன்புடன் வாழ்ந்து காட்டினார்.

வறுமையிலேயே வாழ அடியெடுத்து வைத்த அவரது உள்ளத்தில் வறுமை என்றால் என்ன? கடவுள் என்பது எது? அதை ஏன் காண முடியவில்லை? மனித வாழ்க்கையிலேயே ஏன் துன்பங்கள் தோன்றுகின்றன போன்ற கேள்விகள் அவ்வப்போது ஒலித்துக் கொண்டே இருந்தன. இவற்றிற்கு காரணங்கள் கண்டு தெளிவு பெறுவதற்காக ஆராய்ச்சியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். விளைவாக தனது 35வது வயதில் தன்னிலை விளக்கமாக இறைநிலையை உணர்ந்தார். அதன் அடிப்படையில் உலக மக்களுக்காக அவர் அளித்த வாழ்க்கை நெறியே மனவளக்கலை ஆகும்.

ஆன்மிகத் தேடல்[தொகு]

தனது சகோதரியின் மகளை (லோகாம்பாள்) மணந்து இல்லற வாழ்க்கையைத் தொடங்கினார். இல்லறத்திலும், நெசவுத் தொழிலிலும் ஈடுபாடு அதிகமிருந்த போதிலும் தனது ஆன்மீகத்தேடலில் மிகுந்த ஆர்வத்துடன் நாட்டம் கொண்டிருந்தார். சித்தர்களின் நூல்களைக் கற்று, தியானத்தில் வெகுவாக ஈடுபட்டு தன்னை அறிதல் என்ற அகத்தாய்வு முறையில் விடாமுயற்சியுடன் ஈடுபட்டார்.

இவரது ஆழ்ந்த ஆன்மீகத் தேடலின் விளைவாக தனது 35வது வயதில் ஞானம் பெற்றார். அதிலிருந்து அடுத்த 15 ஆண்டுகளில் பல உன்னதமான ஆன்மீகக் கருத்துக்களைத் தனது எழுத்துக்களின் மூலமாகவும், உரைகளின் மூலமாகவும் மக்களுக்கு எடுத்துரைத்தார். பின்னர் தனது நெசவு தொழிலை முற்றிலும் விட்டு விட்டு தன்னை முழுமையாக ஆன்மீகத் துறையில் ஈடுபடுத்திக் கொண்டார்.

நூல்கள் இயற்றல்[தொகு]

இந்தப்பிரபஞ்சத்தைப் பற்றியும் மனித வாழ்க்கையைப் பற்றியும் தவநிலையில் தான்பெற்ற கருத்துக்களைப் பல கவிதைகளாகவும் கட்டுரைகளாகவும் புத்தக வடிவங்களில் இந்த உலகுக்கு மகரிஷி அவர்கள் அளித்துள்ளார்கள். இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும் கலந்த தமிழ்ப்பாடல்களை இயற்றியிருக்கிறார். பாமர மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் எளிய தமிழில் தனது தத்துவங்களை எடுத்துரைத்தார். எல்லா மதங்களின் சாரம் ஒன்றே என்பதை மகரிஷி அவர்கள் வலியுறுத்துகிறார்.

1957ல் மகரிஷி 'உலக சமாதானம்' என்னும் நூல் ஒன்றை வெளியிட்டார். தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு இவருக்குக் கிட்ட அங்கெல்லாம் ஆன்மீகச் சொற்பொழிவு நிகழ்த்தினார். மனிதகுலம் அமைதியாக வாழ ஏற்ற கருத்துகளையும் சாதனை முறைகளையும் உலகமெங்கும் பரப்பிட 1958-ஆம் ஆண்டில் வேதாத்திரி மகரிஷி அவர்கள் நிறுவிய உலக சமுதாய சேவா சங்கம் இன்று இந்தியாவிலும், சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான், தென்கொரியா, அமெரிக்கா போன்ற நாடுகளிலும் பல கிளைகளைக் கொண்டு இயங்கி வருகிறது.

வேதாத்திரி மகரிஷி ஏறக்குறைய தமிழிலும் ஆங்கிலத்திலும் சேர்த்து எண்பது நூல்களை எழுதியுள்ளார். அவற்றில் சில:

 1. வேதாத்திரியத்தின் இறைநிலை விளக்கம்
 2. வாழ்வியல் விழுமியங்கள்
 3. பிரம்மஞான சாரம்
 4. நான் யார் ?
 5. ஞானக்களஞ்சியம்

அருட்பெருஞ்சோதி நகர்[தொகு]

கொங்கு நாட்டில் பொள்ளாச்சி நகருக்கு அருகே வால்பாறை மலையோரத்தில் ஆழியாறு நீர்த்தேக்கம் அமைந்துள்ள இடத்தில் அருட்பெருஞ்ஜோதி நகர் எனும் நகரம் வேதாத்திரி மகரிஷியால் 1984 கால கட்டத்தில் அமைக்கப்பட்டது. அன்பொளி என்னும் ஆன்மீக இதழ் ஒன்றையும் வெளியிட்டார்.

மறைவு[தொகு]

அருட்தந்தை வேதாத்திரி அவர்கள் தனது 95வது வயதில் மார்ச் 28, 2006 செவ்வாய்க்கிழமையன்று மறைந்தார்.

மகரிஷியின் வைர வரிகள்[தொகு]

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

மகரிஷியின் பாடல்[தொகு]

மகரிஷி அவர்களின் எல்லாம் வல்ல தெய்வமது பாடல்

மகரிஷி அவர்கள் பல பாடல்களை எழுதியுள்ளார். அவற்றுள் ஒன்று

""எல்லாம் வல்ல தெய்வமது
எங்கும் உள்ளது நீக்கமற
சொல்லால் மட்டும் நம்பாதே
சுயமாய்ச் சிந்தித்தே தெளிவாய்
வல்லாய் உடலில் இயக்கமவன்
வாழ்வில் உயிரில் அறிவுமவன்.
கல்லார் கற்றார் செயல் விளைவாய்க்
காணும் இன்ப துன்பமவன்.
அவனின் இயக்கம் அணுவாற்றல்
அணுவின் கூட்டுப் பக்குவம் நீ
அவனில் தான் நீ உன்னில் அவன்
அவன் யார்? நீயார்? பிரிவேது?
அவனை மறந்தால் நீ சிறியோன்
அவனை அறிந்தால் நீ பெரியோன்
அவன் நீ ஒன்றாய் அறிந்த இடம்
அறிவு முழுமை அது முக்தி. ""
                             - அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி

மேலும் காண[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வேதாத்திரி_மகரிசி&oldid=2389936" இருந்து மீள்விக்கப்பட்டது