எம். வேதசகாயகுமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வேதசகாய குமார் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மு. வேதசகாயகுமார்
பிறப்புமு. வேதசகாயகுமார்
1949
ஆரல்வாய்மொழி, நாகர்கோயில், தமிழ்நாடு, இந்தியா
இறப்பு17 திசம்பர் 2020 [1]
பணிஎழுத்தாளர்

எம். வேதசகாயகுமார் நவீனத்தமிழின் குறிப்பிடத்தக்க திறனாய்வாளர், இலக்கிய ஆராய்ச்சியாளர். 1949 ல் நாகர்கோயில் அருகே ஆரல்வாய்மொழி ஊரில் பிறந்தவர். இவரது அப்பா முத்தையா ஒரு புகழ்பெற்ற சித்த மருத்துவர். நாகர்கோயில் தெ.தி.இந்துக்கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்துவிட்டு வேதசகாயகுமார் கேரளத்தில் சிற்றூர் கலைக்கல்லூரியில் முதுகலை தமிழ் படித்தார். நாகர்கோயில் இந்துக்கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தபின் சித்தூர் கலைக்கல்லூரியில் தமிழிலக்கியத்தில் பட்டமேற்படிப்பை முடித்தார். புகழ்பெற்ற பேராசிரியரான ஏசுதாசன் இவரது ஆசிரியராக இருந்தார்.

ஏசுசுதாசனின் வழிகாட்டுதலில் திருவனந்தபுரம் பல்கலைக்கழகக் கலைக்கல்லூரியில் முனவைர் பட்ட ஆய்வை முடித்தார்(1985). இவரது ஆய்வேடு 'புதுமைப்பித்தனும் ஜெயகாந்தனும் ஓர் ஒப்பாய்வு' தமிழில் முக்கியமான ஒரு திருப்புமுனையாகக் கருதபப்டுகிறது. முதன்முதலாகப் புதுமைப்பித்தனின் படைப்புகள் அனைத்தையும் கண்டெடுத்து காலவரையறை செய்து பட்டியலிட்டார். ஆவணப்பதிவுகள் முறையாகச் செய்யபப்டாத தமிழ்ச் சூழலில் அன்று இதற்குப் பத்து வருடகால ஆய்வு தேவைப்பட்டது. இவ்வாய்வு நூலாகத் தமிழினி வெளியீடாக வெளிவந்துள்ளது.

திருவனந்தபுரம் பல்கலைக்கழகக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற வேதசகாய குமார் இப்போது பல்கலைக்கழக நிதி நல்கைக்குழுவின் நிதியுதவி பெற்று ஆராய்ச்சி மேற்கொண்டிருக்கிறார். எழுபதுகளில் கொல்லிப்பாவை சிற்றிதழை ராஜமார்த்தாண்டனுடன் சேர்ந்து நடத்தினார்.

1979 ல் வேதசகாயகுமார் எழுதிய 'தமிழ்ச் சிறுகதை வரலாறு' தமிழ் சிறுகதைகளைப் பற்றிய திறனாய்வு அடிப்படையிலான வரலாற்று நூல். க.நா.சுப்ரமனியம் மற்றும் சுந்தர ராமசாமி வளர்த்தெடுத்த இலக்கிய மதிப்பீடுகளை இந்நூலில் வேதசகாய குமார் வரலாற்று ஆயுதமாகக் கொள்கிறார். இது திறனாய்வில் ஒரு முன்னோடி நூலாகக் கருதப்படுகிறது. அதன் பின்னர் ' தற்கால இலக்கியம் ஓர் வாசகப்பார்வை' 'புனைவும் வாசிப்பும்' ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.

நேரியப் பார்வையும் தாக்கும் தன்மை கொண்ட நடையும் உடையவர் வேதசகாய குமார். ஆகவே இவரது இலக்கியக் கருத்துக்கள் எப்போதும் விவாதத்தன்மை கொண்டவையாகவே உள்ளன. கால்டுவெல், அ.மாதவையா ஆகியோரைப் பற்றியும் விரிவான ஆய்வுகள்செய்து கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.

வேதசகாயகுமார் இலக்கியப்படைப்பை கூர்ந்து ஆராய்ந்து வரலாற்றுப்பார்வையுடன் திறனாய்வு செய்பவர்.

இவரது நூல்கள்[தொகு]

  • தமிழ்ச்சிறுகதை வரலாறு
  • புனைவும் வாசிப்பும்
  • தற்கால தமிழிலக்கியம் ஒரு விமரிசனப்பார்வை
  • புதுமைப்பித்தனும் ஜெயகாந்தனும்

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._வேதசகாயகுமார்&oldid=3580057" இலிருந்து மீள்விக்கப்பட்டது