வேங்கையின் மைந்தன் (புதினம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வேங்கையின் மைந்தன்
வேங்கையின் மைந்தன்.jpg
வேங்கையின் மைந்தன்
நூலாசிரியர்அகிலன்
பட வரைஞர்வேதா (அட்டைப் படம்)
நாடுஇந்தியா
மொழிதமிழ் மொழி
வகைவரலாற்றுப் புதினம்
வெளியீட்டாளர்தாகம்
வெளியிடப்பட்ட நாள்
1961 (முதல் பதிப்பு)

வேங்கையின் மைந்தன், என்பது அகிலன் எழுதிய புகழ்பெற்ற தமிழ் வரலாற்றுப் புதினமாகும். 1960 இல் கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. தனி நூலாகவும் வெளியிடப்பட்டு 2007 வரை 18 பதிப்புக்களைக் கண்டுள்ளது. முதலாம் இராஜேந்திர சோழனின் ஆட்சிகாலத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த வரலாற்றுப் புதினம் எழுதப்பட்டிருக்கிறது. சிவாஜி கணேசனால் நாடகமாக நடத்தப்பட்டுள்ளது. அகிலன் கண்ணன் அவர்களால் நாடக வடிவமாக்கப்பட்டுச் சென்னை வானொலி நிலையத்தாரால் (AIR) தொடர் நாடகமாக ஒலிபரப்பப்பட்டுள்ளது.

இப்புதினம் முடிகொண்ட முடிவேந்தன், சோழபுரம் கண்டோன், கொடும்பாளூர்க் கோமான் என 3 பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை ஒவ்வொன்றும் முறையே 36, 41, 43 அத்தியாயங்களைக் கொண்டுள்ளன.

1963 ஆம் ஆண்டு தமிழுக்கான சாகித்திய அகாதமி விருதை இந்நூல் பெற்றுள்ளது.

கதையின் வரலாற்றுப் பின்னணி[தொகு]

வேங்கையின் மைந்தன் புதினம் கற்பனையோடு கலந்து எழுதப்பட்ட வரலாற்றுப் புதினம் என்றாலும் அது நிகழும் காலகட்டத்தில் வாழ்ந்த வரலாற்றுக் கதாப்பாத்திரங்களைச் சுற்றிச் சுழல்வதாக அமைகிறது.

விஜயாலய சோழன்(கி.பி 847 - 871) பல்லவர்களும் பாண்டியர்களும் பலமாக இருந்த காலத்தில் அவர்களை வென்று சோழர்களின் பொற்கால ஆட்சியை தோற்றுவித்த பெருமைக்குரியவர். அவருடைய மகன் ஆதித்த சோழனும் பல்லவர்களையும் கொங்கு நாட்டையும் வென்று விஜயாலய சோழன் தோற்றுவித்த சோழர் பேரரசை விரிவாக்கினார். அவருக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த ஆதித்த சோழனின் மகன் முதலாம் பராந்தக சோழன்(கி.பி 907 - 955) ஈழத்திலும் பாண்டிய நாட்டிலும் பெற்ற வெற்றிகளே, பிற்காலச் சோழ மன்னர்களில் புகழ்பெற்றவர்களான இராஜராஜ சோழன், இராஜேந்திர சோழன் மற்றும் முதலாம் குலோத்துங்க சோழன் ஆகிய மூவரும் சோழ சாம்ராஜ்ஜியத்தை தென்னிந்தியாவின் முதல் பேரரசாக விரிவுபடுத்தப் பெரிதும் உதவின.

முதலாம் பராந்தக சோழன் தன்னுடைய இறப்பிற்கு முன்னால் பெற்ற வெற்றிகளையும் அதனால் விரிவடைந்த சோழ சாம்ராஜ்ஜியத்தைப் பற்றிய விவரங்களும் தெளிவாகக் கல்வெட்டுக்கள் மூலம் கிடைக்கின்றன. முதலாம் பராந்தக சோழனின் ஆட்சிக்காலத்தின் இறுதியில் மூன்றாம் கிருஷ்ணன் தலைமையிலான இராஷ்டிரகூடர்களுடனான போரில் சோழ இளவரசன் இராஜாதித்தன் தக்காலத்தில் இறந்ததோடு மட்டுமல்லாது தொண்டை நாடும் இராஷ்டிரகூடர்கள் ஆதிக்கத்துக்குள்ளானது இதன் காரணமாக சோழர்களின் அரசின் வட எல்லை தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி அளவிலேயே நின்றது. இந்தக் காலகட்டத்திற்குப் பிறகான சோழ மன்னர்கள் கண்டராதித்தர், அரிஞ்சய சோழர், இரண்டாம் பராந்தக சோழர், ஆதித்த கரிகாலன், மதுராந்தக சோழர் முதலாம் இராஜராஜ சோழர், முதலாம் இராஜேந்திர சோழர் மற்றும் அவரைத் தொடர்ந்தவர்கள் ஆவர்.

முதலாம் இராஜராஜ சோழனின் ஆட்சிக் காலத்திலேயே (கி.பி. 1012), அவரது மகன் இராஜேந்திர சோழன் இணை அரசனாகப் பொறுப்பேற்றுப் பின் இரண்டு ஆண்டுகளில் பட்டத்து அரசனாக முடிசூட்டப்பட்டான். அவன் தனது ஆட்சிக் காலத்தின் தொடக்கத்திலேயே தன்னுடைய மகனான இராஜாதிராஜ சோழனை இளவரசனாகப் பட்டம் சூட்டி ஆட்சிப் பொறுப்புக்களை அவனுடன் பங்கிட்டுக் கொண்டான். இராஜாதிராஜ சோழன் கி.பி. 1018ல் இருந்தே தந்தையுடன் ஆட்சிப்பொறுப்பில் இருந்து வந்தான். ஏறக்குறைய 26 ஆண்டுகள் இருவரும் இணைந்து சோழப் பேரரசை நிர்வகித்து வந்தனர்.

முதலாம் இராஜராஜ சோழன் தொடங்கி வைத்த ஈழத்தின் மீதான படையெடுப்பை நிறைவு செய்யும் விதமாகவும், பராந்தக சோழன் காலத்திலேயே தேடப்பட்டுக் கண்டறியமுடியாமல் போன, பாண்டிய அரசர்களால் சிங்கள அரசர்களிடம் கொடுத்து வைக்கப்பட்டதாகச் சொல்லப்படும் இந்திரன் பாண்டியர்களுக்கு அளித்ததாக கருதப்படும் இரத்தினக் கற்கள் பொறித்த வாளையும் முத்து மாலையையும் கண்டறியும் நோக்கோடும் ஈழ மண்டலத்தின் தென் கிழக்கிலுள்ள ரோகண நாட்டின் மீது கி.பி. 1018ல் மீண்டும் படையெடுப்பு நடத்தப்பட்டது. படையெடுப்பில் பெரும் வெற்றி பெற்று இராஜேந்திரன் ஈழத்தின் முக்கிய இடங்களை கைப்பற்றி[1] சிங்கள பட்டத்து அரசன், அரசி, இளவரசி ஆகியோரைச் சிறைப்படுத்திச் சோழநாட்டிற்குக் கொண்டு வந்தான். சிங்கள அரசன் ஐந்தாம் மஹிந்தா பன்னிரெண்டு ஆண்டுக்காலச் சிறைவாசத்துக்குப் பிறகு சிறையிலேயே இறந்து போனான். இதைப்பற்றி சிங்கள சுயசரிதைக்கு ஒப்பான "மஹா வம்சமும்" கூறுகிறது.

இந்தக் காலகட்டத்தைத்தான் அகிலன் தன்னுடைய வேங்கையின் மைந்தன் வரலாற்றுப் புதினத்திற்கான கதைக்களமாகத் தேர்ந்தெடுத்துள்ளார். சங்க காலம் முதல் பிற்கால வரலாற்றிலும் அழியா இடத்தைப் பெற்றது கொடும்பை மாநகரம். சோழ நாட்டிலிருந்து பாண்டிய நாட்டுக்குச் செல்லும் சாலையில் இரு நாடுகளுக்கும் எல்லை வகுத்து விட்டு இடையில் வளர்ந்த சிற்றசர் நகரம் அது. காலங்காலமாக அதை ஆண்டுவந்த வேளிர்கள் தம் வீரத்துக்குப் பேர் போனவர்கள். பிற்காலச் சோழர்களுடன் நெருக்கமான மண உறவு கொண்டிருந்த குலம் அது. முதலாம் இராஜராஜனின் மனைவியும் இராஜேந்திர சோழனின் தாயுமான வானதி கொடும்பாளூர்க் குலப்பெண். இக்கதையின் நாயகன் இளங்கோ கொடும்பாளூர் குலத்தோன்றல். இராஜேந்திரன் பாண்டிய நாட்டு முடியை ஈழத்திலிருந்து மீட்டு வந்த நிகழ்ச்சியை மையமாகக் கொண்டு அதற்கு முன்னும் பின்னுமாக இப்புதினத்தின் கதை பின்னப்பட்டுள்ளது.

கதை மாந்தர்கள்[தொகு]

இப்புதினம் வரலாறு தழுவிய கற்பனைக் கதை என்பதால் இதில் வரும் மாந்தர்களில் சிலர் வரலாற்று நூல்களில் வாழ்பவர்கள். சிலர் இக்கதையில் மட்டுமே வாழ்பவர்கள். இப்புதினத்தில் உலா வரும் மாந்தர்கள் கீழே தரப்படுகின்றனர். இவர்கள் மட்டுமல்லாது மேலும் பல சிறுசிறு கதாபாத்திரங்களைக் கொண்டும் இக்கதை புனையப்பட்டுள்ளது.

இப்புதினத்தின் பெயருக்குரியவர். முதலாம் இராஜராஜ சோழனை வேங்கை எனவும் அவரது மகன் முதலாம் இராஜேந்திர சோழனை வேங்கையின் மைந்தன் எனவும் இப்புதினத்தின் ஆசிரியர் அழைக்கிறார்.
 • வீரமாதேவி
இராஜேந்திர சோழரின் பட்டத்தரசி; கொடும்பாளூர் குலத்தைச் சேர்ந்தவள்.
இராஜேந்திர சோழரின் மூத்த மகன் மற்றும் பட்டத்து இளவரசன்; தொண்டைமண்டலத் தலைவன்
 • சுந்தரசோழன்
இராஜேந்திர சோழரின் இளையமகன். சுந்தரசோழ பாண்டியன் என்ற பெயருடன் மதுரையைத் தலைநகரமாகக் கொண்டு பாண்டிய நாட்டை ஆண்ட சோழர்களில் முதலாமவன்.
இராஜேந்திர சோழரின் மூத்த மகள். இக்கதையில் நாயகன் இளங்கோவின் இரு நாயகிகளில் ஒருத்தி. அமைதியானதும் ஆழமானதுமான காதலும், விவேகத்துடன் இணைந்த அறிவாற்றலும், உறுதியான நாட்டுப் பற்றும் இவளது சிறப்பாகக் காட்டப்பட்டுள்ளது.
 • அம்மங்கா தேவி
இராஜேந்திர சோழரின் இளைய மகள். துடுக்குத்தனம் நிறைந்த வெகுளிப் பெண்ணாகக் காட்டப்படும் இவள் வேங்கை நாட்டு அரசன் நரேந்திரனை மணந்து அந்நாட்டுக்கு அரசியாக விளங்கிய சோழநாட்டு இளவரசி ஆவாள்.
 • நரேந்திரன்

வேங்கி நாட்டு இளவரசன்; வேங்கி நாட்டு மன்னன் விமலாதித்தன் மற்றும் அரசி குந்தவை (இராஜராஜசோழனின் மகள்) - இணையரின் மகன்; சோழ இளவரசி அம்மங்கா தேவியை மணந்தவன்.

 • வல்லவரையர் வந்தியத்தேவர்
வாணர் குலத்தைச் சேர்ந்த இவர் இராஜராஜ சோழருக்கும் இராஜேந்திர சோழருக்கும் வலக்கரமாக விளங்கியவர். இக்கதையில் இராஜேந்திர சோழரின் சாமந்த நாயகர்.
 • குந்தவைப் பிராட்டியார்
இராஜராஜ சோழரின் தமக்கை; வல்லவரையர் வந்தியத்தேவரின் வாழ்க்கைத் துணைவியார்.
 • மதுராந்தக வேளாளர்
இக்கதை நடக்கும் காலத்தில் கொடும்பாளூரை ஆண்டவர். இரும்பு போன்ற மனஉறுதியும் உடல் வலிமையும் கொண்டவர்; இராஜேந்திர சோழருக்கு உறுதுணையாய் நிற்பவர்; இக்கதையின் நாயகன் இளங்கோவின் தந்தை.
 • ஆதித்த பிராட்டியார்
மதுராந்தக வேளாளரின் துணைவியார்; இளங்கோவின் தாய்.
கொடும்பாளூர் குலத்தோன்றல். மதுராந்தக வேளார்-ஆதித்த பிராட்டியாரின் புதல்வன். இப்புதினத்தின் நாயகன்.
 • சுந்தரபாண்டியர்
சோழர்களிடம் தோற்ற பாண்டிய மன்னர்களில் ஒருவர். ஈழத்தின் அரசரின் துணையோடு இராஜேந்திர சோழரை வென்று பாண்டிய அரசுரிமையை மீண்டும் நிலைநிறுத்த பெரும்முயற்சி செய்கிறவர்.
 • பெரும்பிடுகு முத்தரையர்
முத்தரையர் குலத்தைச் சேர்ந்தவர்; சுந்தர பாண்டியனோடு கூட்டுச் சேர்ந்து கொண்டு சோழர்களை அழிக்க நினைப்பவர்.
இக்கதையின் காலகட்டத்தில் ஈழத்தை ஆண்ட அரசர்
மகிந்தரின் மகள்; ரோகணத்தின் இளவரசி; இக்கதையின் நாயகனின் உள்ளத்தைக் கொள்ளைகொண்ட ரோகணத்துப் பெண்.
 • காசிபன்
மகிந்தரின் மகன். வீரமும் நாட்டுப்பற்று மிக்கவனுமாகச் சித்தரிக்கப்படுகிறான்.
 • கீர்த்தி
மகிந்தரின் மதியமைச்சர். சோழர்களை எதிர்க்கவும் ஈழத்தை சோழர்களிடமிருந்து மீட்கவும் சுந்தர பாண்டியருடன் சேர்ந்து சதி செய்யும் மிகத்திறன் வாய்ந்த நபராகச் சித்தரிக்கப்படுகிறார்.
 • அரையர் இராஜராஜன்
வட சோழமண்டல மாதண்ட நாயகர். வட சோழ மண்டலத்தைக் காக்கும் பணியிலும் மேலைச் சாளுக்கியர்களின் கொட்டத்தை அடக்குவதிலும் இராஜாதிராஜனுக்குத் தோள்கொடுப்பவராச் சித்தரிக்கப்படுவர்.
 • சேனாதிபதி கிருஷ்ணன் ராமன்
தென் சோழமண்டல மாதண்ட நாயகர்; பாண்டியர்களின் சதியையும் அவ்வப்போது அவர்களால் எழும் பூசல்களையும் களைவதுடன் இளவரசன் சுந்திரசோழனோடு உடன் நின்றவராக இக்கதையில் உள்ளவர்.
 • க்ஷத்திரிய சிகாமணி தாழிகுமாரன்
ஈழத்து வடபகுதி மாதண்ட நாயகர்.
 • ஈராயிரம் பல்லவர்
தஞ்சையைச் சுற்றியமைந்த மத்திய சோழ மண்டல மாதண்ட நாயகர்
 • மாவலி வாணவராயர்
கடற்சேனை மாதண்ட நாயகர்
 • மாங்குடி மாறன், வீரமல்லன்
இருவரும் கதாநாயகன் இளங்கோவின் நண்பர்கள்.

கதைச் சுருக்கம்[தொகு]

முடிகொண்ட மாவேந்தன் - பாகம் 1[தொகு]

ஈழத்திலிருந்த பாண்டியர் முடியை, இராஜராஜ சோழன் காலத்தில் மீட்டுவர முடியவில்லை. அவர் இறக்கும் போது தனது வாழ்நாளில் தன்னால் செய்து முடிக்க முடியாத அக்காரியத்தைத நிறைவேற்ற வேண்டுமெனத் தன் மகன் இராஜேந்திர சோழனைக் கேட்டுக் கொண்டார். அந்த வாக்குறுதியை நிறைவேற்றினால் தான் தனது தந்தையின் ஆன்மா சாந்தி அடையும் என்றும், தமிழர் மானம் காக்கப்படும் எனவும் உறுதியாய் இருந்த இராஜேந்திரர், தான் ஆட்சிக்கு வந்த முதல் நாளிலிருந்தே அதே குறிக்கோளுடன் செயல்பட்டார். அவர் ஈழத்தின் மீது படையெடுப்பதற்காக செய்த ஏற்பாடுகளையும் ஈழத்துப் போரையும் அதில் அவர் அடைந்த வெற்றியையும் ஈழத்து அரசர் மகிந்தரை சோழநாட்டிற்கு சிறைபிடித்து வந்ததையும் இப்புதினத்தின் முதல் பாகமான முடிகொண்ட மாவேந்தன் சுவையுடனும் விறுவிறுப்புடனும் விவரிக்கிறது. இச்சாதனையில் கதைநாயகன் இளங்கோவின் பங்கும் வீரமும், ஈழத்து இளவரசி ரோகிணி பகைநாட்டைச் சேர்ந்தவளாய் இருந்தும் இளங்கோவிற்கு உதவியதும் அவர்கள் இருவருக்கும் இடையில் மலரும் காதலும் இப்பகுதியில் அழகுறப் புனையப்பட்டுள்ளது.

சோழபுரம் கண்டோன் - பாகம் 2[தொகு]

ஈழத்திலிருந்து வெற்றியுடனும் பாண்டியர்களின் முடியுடனும் திரும்பிய இராஜேந்திர சோழன் ஈழப் படையெடுப்புக்கு வீரர்களைத் தந்த பழையாறை நகருக்குச் சென்று போரில் தமது உறவுகளை இழந்த மக்களிடம் தன்னையே அவர்களின் உறவாகக் கொள்ளும்படி ஆறுதல் கூறி, இனிமேல் தனது தலைநகரை தஞ்சையிலிருந்து அவர்கள் ஊருக்கே மாற்றப்போகும் ஆனந்தமான செய்தியையும் அவர்களுக்களிக்கிறார். சோழபுரம் என்றொரு பிரமாதமான ஊரும், அங்கு தஞ்சை பெரிய கோவிலை ஒத்த ஒரு பிரம்மாண்டமான சிவாலயமும் ஊருக்கு எல்லையில் கடலென ஓர் ஏரியும் அமைக்கப்படும் என உறுதியளிக்கிறார். பாண்டியர்களால் எழுந்த சலசலப்புகளையும் சதிகளையும் ஒடுக்கிய பின்னர் தன் இளைய மகனான சுந்தரசோழனுக்கு, சுந்தரசோழ பாண்டியன் என்ற பெயரால் மதுரையில் முடிசூட்டி, புதியதொரு பாண்டியப் பரம்பரையை ஆரம்பித்து வைக்கிறார். ஈழத்தில் மீண்டும் முளைவிட்ட அமைச்சர் கீர்த்தியின் சதிகளை நாயகன் இளங்கோவை அனுப்பி முறியடிக்கிறார். இத்தொல்லைகளுக்கு முடிவு கட்டி முடிக்க, வடக்கே மேலைச் சாளுக்கியர் வாலாட்டுகின்றனர். அவர்களை முறியடிக்கப் படையெடுத்துச் செல்கிறார். தனது வடநாட்டுப் படையெடுப்பின் வெற்றிக் கொண்டாட்டமாக சோழபுரம், கங்கை கொண்ட சோழபுரம் எனப் பெயர்சூட்டப்பட்டு பெரியதொரு சிறப்பு விழா அமைய வேண்டும் என்ற நோக்கோடு நகர், கோவில், ஏரி இவற்றின் அமைப்பிற்கான ஏற்பாடுகளைச் செய்துவிட்டே படையெடுப்பைத் தொடங்குகிறார். அரசரின் வெற்றிகளில் எல்லாம் தோள்கொடுத்து நிற்கும் இளங்கோவின் வீரம் சிறப்பாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.

இக்கட்டத்தில் இளங்கோவிற்கும் ரோகிணிக்கும் இடையே தோன்றிய காதல் தஞ்சையிலும் கொடும்பாளூரிலுமாக வளர்கிறது. ரோகிணி தன் பிறந்த நாட்டுப் பாசத்திற்கும் பகை நாட்டு இளவரசனிடம் மனதைப் பறிகொடுத்து விட்ட தனது காதலுக்கும் இடையிலான போராட்டத்தில் படும் அவதியும், அவளது மனப்போராட்டங்களால் அவளுக்கும் இளங்கோவிற்கும் இடையே நிகழும் கசப்பான அனுபவங்களும், இருவரது வேறுபட்ட குணாதிசியங்களால் எழும் முரண்பாடுகளையும் மீறி ஒருவரையொருவர் விட்டுவிட முடியாமல் அவர்கள் தவிக்கும் தவிப்பும் வாசிப்போரையும் தவிப்புக்குள்ளாக்குகிறது.

கொடும்பாளூர்க் கோமான் -பாகம் 3[தொகு]

சாளுக்கியரை ஒடுக்குவதற்காக படையெடுத்துச் சென்ற இராசேந்திரர் சாளுக்கியரின் கொட்டத்தை அடக்கி வென்றபின், சாளுக்கிய நாட்டோடு நில்லாது மேலும் வடதிசை நோக்கிச் சென்ற சோழ படைகள் வடதிசை மாதண்ட நாயகர் அரையன் இராஜராஜன் தலைமையில் கங்கை வரை சென்று புலிக்கொடியை நாட்டுவதும், கங்கை நீரைக் குடங்களில் அடைத்து யானை மேல் ஏற்றிக் கொண்டு சோழ நாடு திரும்பிய வெற்றி ஊர்வலமும், புதிதாக அமைக்கப்பட்ட சோழபுர நகரம் கங்கைகொண்ட சோழபுரம் எனப் பெயர்சூட்டப்பட்டப் பெருவிழாவும் இம்மூன்றாம் பாகத்தின் முக்கிய நிகழ்வுகள்.

இந்நிகழ்வுகளின்போது நடைபெறும் வீரதீரச் செயல்களும், நேர்கொள்ளப்பட்ட இன்னல்களும், அவற்றைச் சமாளித்த திறமையும் கற்பனை நயம் கலந்து விறுவிறுப்புடனும் பரபரப்புடனும் வாசகர்களின் ஆவலைத் தூண்டும் வண்ணமும் அமைக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில் இளங்கோ ரோகிணி காதல் வளர்வும் ரோகிணியின் முடிவான மனப்பக்குவமும் தான் விரும்பும் நாயகன் வேறொரு பெண்ணை விரும்புகிறான் என்று தெரிந்தும் அப்பெண்ணைத் தங்கையாக நினைத்து அவர்கள் காதலுக்கு உறுதுணையாக நிற்கும் அருள்மொழி நங்கையின் தியாகமும் நாட்டுப்பற்றும் அவர்களுக்கிடையேயான உறவுக்கு பெரியோர்களால் தரப்படும் தீர்வும் சுவைபடச் சொல்லப்பட்டுள்ளது.

இராசேந்திரரின் கடாரத்தின் வெற்றியும் அதில் இளங்கோ ஆற்றலும் முடிவுரையில் தரப்பட்டுள்ளன.

சிறப்பு[தொகு]

இப்புதினம் 1963 ஆம் ஆண்டு தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளது. அகாதமியின் சின்னத்துடன் இந்தியப் பிரதமராக அப்போதிருந்த ஜவஹர்லால் நேருவின் கையொப்பம் பொறிக்கப்பட்டச் செப்பேட்டினை, மார்ச் மாதம் 1964 ஆம் ஆண்டு, 15 தேதியில் இந்திய உதவி குடியரசுத் தலைவர் ஜாகீர் உசேன் கையால் பெற்றதைத் தன் வாழ்நாளின் முக்கிய நிகழ்வாக அகிலன் குறிப்பிட்டுகிறார்.

இது சிவாஜி கணேசனால் நாடகமாக நடத்தப்பட்டுள்ளது. மேலும் அகிலன் கண்ணனால் நாடக வடிவமைக்கப்பட்டுச் சென்னை வானொலி நிலையத்தாரால் (AIR) தொடர்நாடகமாக ஒலிபரப்பப்பட்டுள்ளது.

பொன்னியின் செல்வன் புதினத்தின் தொடர்ச்சி போன்றமையும் சிறப்பினையும் உடையது இப்புதினம்.

மேற்கோள்கள்[தொகு]

அகிலனின் வேங்கையின் மைந்தன்
கதை மாந்தர்
இராஜேந்திர சோழர் | இளங்கோ | வல்லவரையர் வந்தியத்தேவர் | அருள்மொழி நங்கை | ரோகிணி | இராஜாதிராஜன் | சுந்தர சோழன் | அம்மங்கா தேவி | நரேந்திரன் | மதுராந்தக வேளாளர் | மாங்குடி மருதன் | வீரமல்லன் | மகிந்தர் | காசிபன் | கீர்த்தி | சுந்தர பாண்டியர் | பெரும்பிடுகு முத்தரையர் |