உள்ளடக்கத்துக்குச் செல்

வேகசு நரம்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மூளை நேரடி நரம்புகள் எனப்படும் 12 இரட்டை நரம்புகள் காட்டப்பட்டுள்ளன. இவற்றுள் 10 ஆவது இரட்டை நரம்புகள் வேகசு நரம்புகள் எனப்படும். இவை குரல்வளை, இதயம், மூச்சுக் குழல், நுரையீரல், வயிறு ஆகிய பல உறுப்புகளுடன் தொடர்பு கொள்ளும் ஒரு முக்கியமான நரம்பு இணை ஆகும்
நுரையீரல்-வயிற்று நரம்பு என்றும் அழைக்கப்படும் வேகசு நரம்பு. இந் நரம்பு குரல்வளை, இதயம், மூச்சுக் குழல், நுரையீரல், வயிறு ஆகிய பல உறுப்புகளுடன் தொடர்பு கொள்ளும் ஒரு முக்கியமான நரம்பு.

அலையு நரம்பு அல்லது வேகசு நரம்பு என்பது மூளையில் இருந்து நேரடியாக புறப்பட்டு வரும் 12 இரட்டை நரம்புகளில், 10 ஆவது இரட்டை நரம்பு ஆகும். இவை குரல்வளை, இதயம், மூச்சுக் குழல், நுரையீரல், வயிறு ஆகிய பல உறுப்புகளுடன் தொடர்பு கொள்ளும் ஒரு முக்கியமான நரம்பு. மூளையில் இருந்து புறப்படும் 12 இரட்டை நரம்புகளில் இந்த வேகசு நரம்புகள் மட்டுமே மூளையின் அடிப்பகுதியாகிய முகுளம் என்னும் இடத்தில் இருந்து புறப்படுவதாகும். முகுளத்தில் இருந்து புறப்பட்டு மண்டையோட்டின் காதுக்கு மேலே உள்ள சென்னி எலும்பின் துளைவழியே கீழிறங்கி வந்து இரைப்பை வரை செல்லும் நரம்புகளாகும். வேகசு என்னும் இடைக்கால இலத்தீன் மொழிச் சொல் "இங்கும் அங்கும் அலைவது" என்னும் பொருள்படுவது. இந்த வேகசு நரம்புகளை நுரையீரல்-வயிற்று நரம்புகள் (neumogastric nerves) என்றும் அழைப்பர்.

வேகசு நரம்புகள் உடலில் உள்ள பல உறுப்புகளுக்கும் இயக்கங்களுக்கும் தேவைப்படும் தானியங்கிக் குறிப்புகளைத் தரும் முக்கிய நரம்புகள் ஆகும். நரம்புத் தானியக்கத்தில் உள்ள மூன்று முக்கியப் பணிகளில் ஒன்றாகிய ஓய்வும்-செரிப்பும் என்று கூறப்படும் துணை ஒத்துழைப்புப் பணிகளில் இதயத்துடிப்பை மெதுவாக்குவது போன்ற ஆற்றல் சேமிக்கும் பணிகளுக்கு உதவும் குறிப்பலைகளைத் தாங்கிச் செல்வது இந்த வேகசு நரம்புகளில் பணிகளில் முக்கியமானதாகும்.

வேகசு நரம்புகளின் பணிகளில் சில: இதயத்துடிப்பைக் கட்டுப்படுத்துவது, உணவு உடலில் பல் வேறு பகுதிகளில் நகர்வதற்குத் துணை செய்யும் சுற்றிழுப்பசைவுக்கு (peristalsis) துணை செய்வது, வாயில் உள்ள பல தசைகளை இயக்குவது, பேசுவதற்குத் துணை செய்யும் குரல்வளை தசைகளை இயக்குவது, மூச்சு விடுவதற்குத் துணை செய்வது, காதின் புற செவி மடல்களில் இருந்து உணர்வு பெறுவது, மண்டை ஓட்டின் தசைகள் சிலவற்றைக் கட்டுறுத்துவது, பெருங்குடலின் சில பகுதிகளை கட்டுப்படுத்துவது என்று பல பணிகளைக் கட்டுறுத்தும் நரம்புகள் ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வேகசு_நரம்பு&oldid=2682278" இலிருந்து மீள்விக்கப்பட்டது