வெள்ளையனே வெளியேறு இயக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வெள்ளையனே வெளியேறு போராட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வெள்ளையனே வெளியேறு இயக்கம் (Quit India Movement) 1942 இல் இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட ஒத்துழையாமை இயக்கம் ஆகும்.[1] இவ்வியக்கம் மகாத்மா காந்தியின் இந்திய விடுதலைக்கான அழைப்பினைத் தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டது. இது ஆகத்து புரட்சி என்றும் அழைக்கப்படுகிறது. பிரித்தானிய அரசை அடிபணிய வைத்து பேச்சுவார்த்தை மேசைக்கு அழைப்பதே இதன் முக்கிய நோக்காக இருந்தது. இந்திய தேசிய காங்கிரஸ் பம்பாயில் ஆகத்து 8, 1942 இல் கூட்டிய மாநாட்டில் இந்த இயக்கத்தை முன்னெடுத்துச் செல்லத் தீர்மானம் நிறைவேற்றியது.

வரலாறு[தொகு]

ஜூலை 1942இல் வார்தாவில் கூடிய காங்கிரஸின் செயற்குழு வெள்ளையனே வெளியேறு இயக்கத்துக்கான ஆயத்தத்தைத் தொடக்கியது. அதையடுத்து ஆகத்து 8 ஆம் நாள் மாநாட்டில் பேசிய மகாத்மா காந்தி செய் அல்லது செத்து மடி என்று முழங்கி வெள்ளையனே வெளியேறு இயக்கத்தைத் தொடங்கி வைத்தார். இதற்கடுத்த நாள் ஆகத்து 9 1942 இல் பெரும்பாலான காங்கிரஸ் தலைவர்களை பிரித்தானிய அரசு சிறைப்பிடித்தது.[2] இதற்குப் பின்னரே விடுதலைப் போராட்டம் பொதுமக்களின் போராட்டமாக உருவெடுத்தது. ஆனால் ஓராண்டுக்குள் காலனிய அரசு இவ்வியக்கத்தை ஒடுக்கிவிட்டது.[3]

சான்றுகள்[தொகு]