உள்ளடக்கத்துக்குச் செல்

வெள்ளிக் கோளின் சூரியக்கடப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வடக்கு அரைக்கோளத்தில் இருந்து அவதானிக்கப்பட்ட 2012 வெள்ளி இடைநகர்வு.

வெள்ளிக் கோளின் சூரியக்கடப்பு அல்லது வெள்ளியின் இடைநகர்வு (Transit of Venus) என்பது சூரியக் குடும்பத்தில் உள்ள வெள்ளி கோளானது சுற்றுப்பாதையில் வரும்போது சூரிய வட்டத்தைக் கடப்பதைக் குறிப்பதாகும். அதாவது வெள்ளிக் கோள் சூரியனுக்கும், பூமிக்கும் இடையில் செல்வதைக் இது குறிக்கும். இந்த இடைநகர்வின் போது வெள்ளி சூரிய வட்டத்தில் ஒரு சிறு கரும் புள்ளியாகக் கண்ணுக்குத் தெரியும். இந்த இடைநகர்வு இடம்பெறும் காலம் பொதுவாக மணித்தியாலங்களில் கூறப்படுகிறது. இந்த இடைநகர்வு நிலவினால் ஏற்படும் சூரிய கிரகணத்தை ஒத்தது. வெள்ளி பூமியில் இருந்து அதிக தூரத்தில் இருப்பதனால் (நிலவுக்கும் பூமிக்கும் இடையிலுள்ள தூரத்தை விடவும், வெள்ளிக்கும் பூமிக்குமிடையிலுள்ள தூரம் கிட்டத்தட்ட 100 மடங்கு அதிகம்), வெள்ளியின் விட்டம் நிலவை விட 3 மடங்கு அதிகமானதாக இருந்தாலும்கூட, வெள்ளி இடைநகர்வின்போது, வெள்ளி மிகச் சிறியதாகத் தெரிவதுடன், மிக மெதுவாக நகர்வதையும் காணலாம்.

வெள்ளி இடைநகர்வானது முன்னதாகவே அறிந்து கொள்ளக்கூடிய வானியல் சார் நிகழ்வுகளில் நடைபெறும் மிக அரிதான ஒரு தோற்றப்பாடாகும்.[1] இது கிட்டத்தட்ட 243 ஆண்டுகளுக்கு ஒரு தடவை மீண்டும் மீண்டும் வரும்படியாக அமையும், 8 வருட இடைவெளியில் வரும் சோடியான இரு வெள்ளி இடைநகர்வுகள் முதலில் 121.5 ஆண்டுகளும், பின்னர் 105.5 ஆண்டுகளுமான நீண்ட இடைவெளிகளைக் கொண்ட ஒழுங்கில் இருக்கும். இறுதியாக வந்த சோடி இடைநகர்வுகள் 1874/1882 இலும், அதனைத் தொடர்ந்து 121.5 ஆண்டுகளின் பின்னர் 2004/2012 இலும், இனி 105.5 ஆண்டுகளின் பின்னர் 2117/2125 இலும் அமையும்படி இந்த நிகழ்வு இருக்கும்..[2][3] இதேபோன்ற இடைவெளியில் மீண்டும் இந்தத் தோற்றப்பாடு நிகழும் என முன்னறிந்து கூறலாம். பூமியினதும், வெள்ளியினதும் சுற்றுக்காலங்கள் பற்றிய அறிவே இப்படியான ஒழுங்கு முறையை முன்னரே அறிந்து சொல்ல உதவுகின்றது.]].[4][5]

வெள்ளியினதும், பூமியினதும் சுற்றுப்பாதைகளின் தளங்களையும், அவற்றுக்கிடையே காணப்படும் சாய்வையும், வெள்ளி இடைநகர்வையும் காட்டும் வரிப்படம்

பூமியும், வெள்ளியும் சூரியனைச் சுற்றித் தமது சுற்றுப்பாதைகளில் சுற்றி வரும்போது, ஒவ்வொரு 1.6 ஆண்டுகளிலும் வெள்ளி பூமியைக் கடந்து செல்லும். அப்போது வெள்ளி பூமிக்கும், சூரியனுக்கும் இடையில் வர நேரிடினும், ஒவ்வொரு தடவையும் வெள்ளி சூரியனுக்கு நேராக அதற்கு முன் வருவதில்லை. இதற்குக் காரணம் வெள்ளியின் சுற்றுப்பாதை ஒரு சாய்வாக இருப்பதனால், அது பூமியைக் கடக்கும்போது, சூரியனுக்கு நேர் முன் வராமல் சூரியனுக்கு மேலாகவோ, அல்லது கீழாகவோ போய்விடும்.[6]

வரலாறு

[தொகு]

17-ஆம் நூற்றாண்டில் கெப்ளரது கோள்களின் விதிகள் மற்றும் நியூட்டனின் இயக்க விதிகளைப் பயன்படுத்தி சூரியக் குடும்பத்தின் அளவினை வானவியல் அலகின் (Astronomical Unit or A.U) வாயிலாகக் கணித்தனர். வானவியல் அலகு என்பது சூரியனுக்கும் பூமிக்கும் இடைப்பட்ட சராசரித் தொலைவாகும். கெப்ளர் மற்றும் நியூட்டனின் விதிகள் சூரியக் குடும்பத்தின் கோள்களின் தொலைவை வானவியல் அலகில் கணித்தன. ஆனால் வானவியல் அலகு என்பதன் அளவைக் கணிக்க இயலவில்லை. 18 ஆம் நூற்றாண்டில் இந்த அளவைத்துல்லியமாகக் கண்டறிய கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த அலகில் ஏதேனும் தவறு நேரிட்டால், பேரண்டத்தின் அளவைக் கணிக்கையில் அந்தத்தவறு பல்கிப் பெருகிவிடும் அச்சம் இருந்தது.

முதல் சூரியக் கடப்பு

[தொகு]

17 ஆம் நூற்றாண்டில் வெள்ளி மற்றும் புதன் கோள்கள் 1631 ஆம் ஆண்டில் சூரிய வட்டைக் கடப்பதைக் காண இயலும் என கெப்ளர் கணித்தறிந்தார். எனினும் 1631-ல் நிகழ்ந்த வெள்ளியின் சூரியக் கடப்பு ஐரோப்பிய நாடுகளில் புலப்படாத காரணத்தால் யாரும் அதனைக் காணவில்லை. பின்னர் ஜெரேமியா ஹாரக்ஸ் எனும் இளம் ஆங்கிலேயர் 1639-ல் மீண்டும் ஒரு முறை வெள்ளியின் சூரியக் கடப்பு நிகழும் எனக் கணித்தார். அதனை உடனடியாக உலகிற்குத் தெரிவிக்க இயலாததால் அவரும் அவரது நண்பரான வில்லியம் கிராப்ட்ரீ என்பவரும் மட்டுமே 1639-ல் வெள்ளியின் சூரியக்கடப்பினைக்கண்ண்டனர். இதன் மூலம் வெள்ளிக் கோளின் சூரியக் கடப்பினை முதன் முதலில் பார்த்தவர்கள் எனும் வரலாற்றுச் சிறப்பை இவர்கள் பெற்றனர்.

பின்னர் 1677-ல் புதன் கோளின் சூரியக் கடப்பை எட்மண்ட் ஹாலி கண்டார். இதன்மூலம், வெள்ளிக் கோளின் சூரியக் கடப்பின் உதவி கொண்டு பூமிக்கும் சூரியனுக்கு முள்ள தொலைவைக் கண்டறிய முடியும் என்று உணர்ந்தார். பூமியின் பல்வேறு பகுதிகளிலிருந்து வெள்ளியின் சூரியக் கடப்பை ஆய்வு செய்து வெள்ளியின் கோண மாற்றத்தை (Parallax) அளப்பதன் மூலம் வானவியல் அலகின் அளவைக் கண்டறியும் முறையையும் அவர் வகுத்தார். இதன் பின்னர் 1761, 1769, 1874 மற்றும் 1882ல் நிகழ்ந்த வெள்ளியின் சூரியக் கடப்பின் போது உலகெங்கும் வானவியல் அலகின் அளவைக்காணும் பெரு முயற்சி வானவியலாளர்களின் ஒன்றிணைந்த உழைப்பால் நிகழ்ந்தது.

கருந்துளி விளைவு

[தொகு]

வெள்ளியின் சூரியக்கடப்பைப் பயன்படுத்தி வானவியல் அலகைக் கண்டறியும் முயற்சியில் மிகவும் முக்கியமான பகுதி வெள்ளிக்கோள் சூரிய வட்டினுக்குள் முழுமையாகச் சென்றடையும் நேரத்தைக் கண்டறிவதாகும். இதனை இரண்டாம் தொடுநிலை என்பர் .

பூமியிலிருந்து தொலைநோக்கி மூலம் இந்த நிகழ்வை ஆராயும்போது இந்தக் கட்டத்தைக் கடந்து சற்று உட்புறமாக வெள்ளிக்கோள் நகர்ந்த பின்னரும் சூரிய வட்டின் விளிம்புடன் கரிய இணைப்பு ஒன்று தோன்றி ஒரு கருப்புத் திரவத்துளி போன்ற தோற்றத்தை உருவாக்கியது. இதனைக் கருந்துளி விளைவு (black drop effect) என்பர். பூமியிலிருந்து காணும் சூரிய வட்டின் ஓரத்திலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் சூரியனின் வளிமண்டலத்தில் அதிகத்தொலைவு பயணம் செய்வதால் ஏற்படும் சூரிய விளிம்புக் கருமையும்,(limb darkening) பூமியின் வளிமண்டல மாற்றங்களால் தோன்றும் ஒளிவிலகல் விளைவும் இணைந்து கருந்துளி விளைவைத் தோற்றுவிக்கின்றன. இதன் காரணமாக சூரிய வட்டினுள் மிகச் சரியாக எந்த நேரத்தில் வெள்ளிக்கோள் நுழைந்தது என்பதனைக் கண்டறிவதில் பிழை நேரிட்டது. இதன் காரணமாக வானவியல் அலகைத் துல்லியமாகக் கண்டறிய முடியவில்லை.

தொலைவைக் கணக்கிடல்

[தொகு]

1882-ஆம் ஆண்டு நிகழ்ந்த வெள்ளியின் சூரியக்கடப்பின்போது பெறப்பட்ட தகவல்களைக் கொண்டு சைமன் நியூகோம்ப் என்பவர், வானவியல் அலகு என்பது 149.59 ± 0.31 மில்லியன் கிலோ மீட்டர் எனக்கணித்தார். இக்கணிப்பில் சுமார் மூன்று லட்சம் கிலோமீட்டர் அளவுக்கு, இந்த அளவில் தவறிருக்க வாய்ப்பு உள்ளதாகக் கருதப்பட்டது. ரேடார் அலைகளை சூரியனுக்குச் செலுத்தி, அவை சென்று திரும்பும் நேரத்தைக் கணித்து தற்காலத்தில் சூரியனின் தொலைவு கணக்கிடப்படுகிறது. இதன்படி சூரியன் தொலைவு 149, 597, 870.691 ± 0.030 கிலோமீட்டர் என்று அறியப் பட்டது. இதில் 30 மீ. அளவே வேறுபாடு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ரேடார் தொழினுட்பம் இல்லாத அக்காலத்தில் வெள்ளியின் சூரியக்கடப்பின் மூலம் சூரியனின் தொலைவைக் கண்டறிய கடும்முயற்சி நடைபெற்றது.

பொதுமக்கள் காணுதல்

[தொகு]

சென்னை பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையம், பிர்லா கோளரங்கத்தில் 2004 ஆம் ஆண்டு சூன் மாதம் 8 ஆம் நாள் பொதுமக்கள் வெள்ளிக் கோளின் சூரியக் கடப்பினைப் பாதுகாப்பாகக் காண, தக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு 8 தொலைநோக்கிகள் வாயிலாக சூரியனின் பிம்பத்தைத் திரையில் விழச் செய்து பொதுமக்கள் காணும்படி ஏற்பாடு செய்யப்பட்டது. காலை 10.45 மணி முதல் மாலை 4.51 மணி வரை அதனை பொது மக்கள் சுமார் 11,000 பேர் கண்டுகளித்தனர்.

கடைசியாக நிகழ்ந்த வெள்ளி இடைநகர்வு 2012 ஆம் ஆண்டு சூன் 5 ஆம், 6 ஆம் நாட்களிலாகும். இந்த நிகழ்வு ஏறத்தாழ 6 மணி 40 நிமிடங்களுக்கு நீடித்தது[7]. கணக்கிட்டதன்படி, இதுவே 21 ஆம் நூற்றாண்டின் இறுதி வெள்ளி இடைநகர்வாகும்.

உசாத்துணை

[தொகு]

முனைவர் ப.ஐயம்பெருமாள், 'அறிவியல் ஒளி',ஜனவரி- 2012 இதழ்.

குறிப்புகள்

[தொகு]
  1. McClure, Bruce (29 May 2012). "Everything you need to know: Venus transit on June 5–6". EarthSky. Earthsky communications Inc. பார்க்கப்பட்ட நாள் 02 June 2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. Westfall, John E. (November 2003). "June 8, 2004: The Transit of Venus". Archived from the original on 8 ஆகஸ்ட் 2007. பார்க்கப்பட்ட நாள் 25 September 2006. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  3. Westfall, John E. "June 8, 2004: The Transit of Venus". alpo-astronomy.org. பார்க்கப்பட்ட நாள் 08 December 2009. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. Langford, Peter M. (September 1998). "Transits of Venus". La Société Guernesiaise Astronomy Section web site. Astronomical Society of the Channel Island of Guernsey. Archived from the original on 2012-01-11. பார்க்கப்பட்ட நாள் 2012-03-01.
  5. Shortt, David (2012-05-22). "Some Details About Transits of Venus". Planetary Society web site. The Planetary Society. பார்க்கப்பட்ட நாள் 2012-05-22.
  6. "Transit of Venus?". Archived from the original on 2012-06-03. பார்க்கப்பட்ட நாள் 2012-06-06.
  7. "நாளை தவறவிடதீர்கள் ... தவறினால் 105 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் + வீடியோ இணைப்பு". இன்றைய வானம். 05 சூன் 2012. பார்க்கப்பட்ட நாள் 06 சூன் 2012. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிசெய்தியில்

தொடர்பான செய்திகள் உள்ளது.


General
June 2012 transit