உள்ளடக்கத்துக்குச் செல்

வெளிவயல் முத்துமாரியம்மன் கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

=== அறிமுகம் ===

வெளிவயல் ஶ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம் அளவெட்டி தென்பகுதியில் மாகியம்பதி கந்தரோடை பிரதானவீதி துலங்க இயற்கை சுவாத்தியமும் சூழக்குடிமக்கள் போக்குவரத்து வசதிகள் எல்லாம் நிறைந்தனவாக காணப்படும் இடத்தில் அமைந்த கோயில் ஆகும்.

வரலாறு

[தொகு]

புண்ணிய பூமியாகிய யாழ்ப்பாணத்தில் இயற்கை எழிலும் கலைப்பண்பாடும் பாரம்பரியமும் கொண்ட கிராமம் அளவெட்டியாகும். இக்கிராமத்தின் தென்பால் வயல்வெளியின் மத்தியில் இயற்கை எழிலால் கண்களை கவரும் அழகுடன் இற்றைக்கு 250 ஆண்டுகளுக்கு முன்பு குடிகொண்ட தெய்வம் வெளிவயல் ஶ்ரீ முத்துமாரியம்மன். இவ்வாலயத்தின் புராதன வரலாறு மிகவும் அற்புதமானது. வரலாற்றை நோக்கினால்..., சென்நெல் கொழிக்கும் வயல்வெளியின் மத்தியில் ஓர் அதிசயம் நிகழ்ந்தது. வயலை ஒரு உழவன் உழுதுகொண்டிருந்தான். சூரியனின் பிரகாசமும் வெம்மையும் கடுமையாக இருந்தது. அந்தநேரத்தில் மூன்று வெள்ளாடை உடுத்த பெண்கள் தலையில் முக்காடுடன் உழவன் முன் தோற்றினார். அவர்கள் தாகத்தினால் வருந்துவதுபோல உழவன் கண்களுக்கு தெரிந்தது. நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்? என்றுவினாவிய போது எங்களுக்கு தாகமாய் இருக்கிறது குடிப்பதற்கு ஏதாவது தாருங்கள் எனக்கேட்டுள்ளார்கள்.

வெளிவயல் ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் முகப்பில் அமைந்துள்ள வளைவு.

அப்பொழுது உழவன் இளநீர் கொண்டுவந்து தருகிறேன் எனக்கூறியபோது அம்மூவரும் நீண்ட நாட்களாக கண்று ஈன்று பால் சுரக்காத உழவனின் பசு மாட்டை சுட்டிக்காட்டி நின்றனர். உடனே உழவன் பத்துவருடமாக மழை இல்லை குளங்களில் நீர் இல்லை, பயிரினம் விழையவில்லை இதனால் ஈன்ற கன்றுக்கு பால் கொடுக்க முடியாமல் கன்றைப் பார்த்து தாய்ப்பசு அழுகிறது என்ன செய்வேன் என்று மனவேதனையோடு சொன்னார். உடனே வந்த பெண்கள் பசுவை பார்த்ததும் பசுவின் மடியில் இருந்து பால் சுரந்து வழிந்தோடியது. ஆகாயத்தில் ஆதவனின் வெம்மையும் குறைந்தது. அங்கு வந்த பெண்கள் உழவனிடம் மூன்று எலுமிச்சைப் பழங்களை கொண்டு வரும்படி கூறினார். உழவன் உள்ளே சென்று எடுத்துக் கொண்டு வந்து பார்த்த போது , வந்த பெண்கள் மறைந்து விட்டார்கள். உழவன் திகைத்து நின்றபோது விண்ணை நோக்கி பழங்களை எறியும் வண்ணம் “அசரீரி” வாக்கு கிட்டியது. அந்த பழங்களில் இரண்டு மாகியம் பதியிலுள்ள அங்கணாக் கடவையுள் விழுந்தது. மற்றொன்று வெளிவயல் குடிதனைகள் சூழ்ந்துள்ள பகுதியில் வழுந்தது. இரண்டு கனிகள் விழுந்த இடத்தில் மதுரை மீனாட்சியும் மதுரைக் கண்ணகியையும் பிரதிஷ்ட்டை செய்தார்கள். ஒருகனி விழுந்த இடத்தில் ஆயிரம் கண்ணுள்ள அகிலாண்டேஸ்வரியான முத்துமாரி அம்மனை பிரதிஷ்ட்டை செய்தார்கள். அன்று தொட்டு இன்று வரை அன்னையின் அருட்கடாட்சம் சொல்லில் அடங்காது .


ஆலய அமைப்பு

[தொகு]

ஆரம்பத்தில் வேப்ப மரத்தின்கீழ் ஒரு ஓலைக் கொட்டிலினுள் கல் விக்கிரகமாக அமையப்பெற்றது. காஞ்சிபுரத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட அம்மன் சிலை இவ்வாலயத்தில் பிரதிஷ்ட்டை செய்யப்பட்டு உள்ளது. ஆலயத்திற்குச் செல்லும் முகவாயில் ஆனது இருதூண்களால் வடிவமைக்கப்பட்டு , கோபுரவாசல் போல் காட்சியளிக்கிறது. இங்கு தலவிருட்சமாக ஆலமரமும் ஊற்றெடுக்கும் ஓர் தீர்த்தகிணறும் காணப்படுகிறது.

ஆலய உட்புற வீதியும் கர்ப்பக்கிரகத்தின் வெளிப்புறமும்

1967ல் மணிக்கோபுரமும் மணியும் அமையப் பெற்றது. 1977ல் ஆலயக்கிணறு அமையப்பெற்றது. 1985ல் புதிய சித்திரத்தேர் அமைக்கப்பட்டது. அத்துடன் தேர்முட்டி கட்டிடமும் அமையப் பெற்றது. மற்றும் மூலஸ்தான அர்த்தமண்டபம், மகாமண்டபம், ஸ்நபந மண்டபம், கொடித்தம்பம், பரிவாரத் தெய்வங்களாக பிள்ளையார், முருகன், வைரவர், ஆகிய தெய்வங்களும் அமைக்கப்பட்டு 1984ம் ஆண்டு குருமணி சிவஶ்ரீ தி.கு. நகுலேஸ்வரக்குருக்களால் மஹா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இந்த ஆலயம் இன்று வரலாறு பொறிக்கப்பட்ட சிற்பங்களுடனும் உயர்ந்த தூபியுடனும் அம்பாள் அமையப்பெற்றுள்ளது.

திருவிழா

[தொகு]

அடியார்களுடைய வழிபாடு அம்பாளின் மீது கொண்டுள்ள பயம், பக்தி எல்லாமே நிறைய பெற்ற ஆலயமாகவும் 1984ம் ஆண்டிற்கு முன்பு ஆகமவிதிப்டபடியாகவும் திருவிழாக்கள் நடைபெற்றன. மஹோற்சவ காலத்தில் திருவிழாக்கள் மிகவும் சிறப்பாக நடைபெற்றன. அம்பாளுக்கு குளுத்தி போடுதல். மடைகள் வைத்தல், கரகம் ஆடுதல் போன்ற பூசை வழிபாடுகள் செய்யப்பட்டன. சங்ககாலத்தில் உயிர்பலி கொடுத்தல் போன்ற நிகழ்ச்சிகளும் கிராம மக்களால் அனுஷ்டிக்கப்பட்டு வந்தது. கூத்தாடுதல், கரகம் ஆடுதல், உடுக்கடித்தல் போன்றன இடம் பெற்றன. அத்துடன் திருவெம்பாவை, நவராத்திரி என்பனவும் சிறப்பாக இடம்பெற்றன. 1967ம் ஆண்டுவரை மஹோற்சவ கால முடிவில் பொங்கல் விழாவுடன் ஆலய வாசலில் சி.முருகர் அவர்களின் சிறப்புக்கடா முதலாவது ஆக பலியிடப்பட்டு தொடர்ந்து ஆலமரத்தின் அருகே 1000 கிடாக்களிற்கு மேல் பலியிடப்படுவது வழக்கமாக இருந்தது. 1967ம் ஆண்டு மிருகப்பலியிடல் பல இந்து சமயப் பெரியோர்களின் அறிவுறுத்தலினால் நிறுத்தப்பட்டது. 1970 இற்கு பிறகு ஆலயம் பொது நிர்வாகத்தினுள் கொண்டு வரப்பட்டது. 1984ல் குருமணி சிவஶ்ரீ தி.கு. நகுலேஸ்வரக் குருக்களினால் மஹா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. 1985ல் தேர் உருவாக்கப்ட்டு அம்பாள் வீதிவலம் வருவாள் தேரில். இங்கு பதினொரு நாட்கள் திருவிழா இடம் பெறும்.

ஆலய உரிமை

[தொகு]

இந்த ஆலயமானது அமரர் சீ.இளைய தம்பி சட்டத்தரணி அவர்களின் மூதாதையர்களால் தோற்றுவிக்கப்பட்டதாக கர்ண பரம்பரைக் கதைகள் கூறுகின்றன. இவர்கள் இவ்வலாயத்தை பராமரித்து முகாமைத்துவம் செய்யும் உரிமையை இவ்வாலயத்திற்ககு அருகாமையில் உள்ள அளவெட்டி தெற்கினை வதிவடமாகவுள்ள கணபதிப்பிள்ளை சீனிக்குட்டி குடும்பத்தினரிடம் ஒப்புவித்து காலம்காலமாக முதலாம் கொடியேற்றத் திருவிழாவை செய்து வருகின்றனர். இவ்வாலயம் அமைவிடமாகவுள்ள காணி அளவெட்டி தெற்கினை சேர்ந்த சட்டத்தரணி சீ.இளையதம்பி குடும்பத்தினருடையது எனக் கருதப்படுகிறது. 1980 இற்குப் பின் வடக்குப் பக்க காணி கிழக்குப் பக்கம் தெற்கு பக்கம் சுமார் 15 பரப்பு வரை முத்துமாரியம்மன் தேவஸ்தானத்திற்கு எல்லைக் காணியில் உள்ளோர் வழங்கி உள்ளனர். சீனிக்குட்டி அவர்களின் மரணத்தின் பின் அவரது பேரன் சண்முகநாதன் முகாமைப் பொறுப்பினை ஏற்று அருடையகாலத்தில் வசந்த மண்டபம் கட்டப்பட்டது.

தேர்முட்டியின் வெளிப்புறத் தோற்றம்

திருப்பணி சபை உருவாக்கம்

[தொகு]

அமரர். ஆ.சிவகுமாரன், தலைவர் பொ.தெய்வேந்திரம் ஆகியோரின் விடமுயாற்சியால் 16.07.1982ல் ஒரு திருப்பணிச்சபை உருவாக்கப்பட்டது. இச்சபையின் போஷகராக வைத்திய கலாநிதி தி.இராசேந்திரா அவர்கள் தெரிவு வசய்யப்பட்டார் பின்பு அமரர். க.சண்முகம் அவர்கள் தலைவராகவும் மு.கந்தசாமி, ஞானி அவர்கள் செயலாளராகவும் அமரர். ஆ.சிவகுமாரன் அவர்கள் பொருளாளர் ஆகவும் மேலும் உபதலைவர், உபசெயலாளர் என எட்டு பேர் கொண்ட நிர்வாக சபை உறுப்பினர்களுடன் கடமை கண்ணியம் கட்டுப்பாட்டுடன் இச்சபை செயற்பட்டது. இத்தருணத்தில் ஆலயத்தின் பூசகர் பொறுப்பினை மதிப்பிற்குரிய செந்தில்நாத சர்மாவும் அவருடைய புதல்வன் ரவிச்சந்திர சர்மாவும் ஏற்றுக் கொண்டு காலை, மாலை நித்திய பூசை செய்தார்கள் அக்காலத்தில் முகாமையாளர் சி.சண்முகநாதன் இறைபதமெய்தினார் அவரை தொடர்ந்து சின்னத்துரை திருப்பணிச் சபைக்கு பெரிதும் ஊக்கமளித்தார். பின்பு உரிமையாளர் எனக் கூறப்படும் சட்டத்தரணி சீ.இளையதம்பி இச்சபையை தர்மகர்த்தா என மாற்றி திருப்பணிக்கு உதவிகள் செய்தார்


திருப்பணிச் சபையின் திருப்பணி (1985 வரை)

[தொகு]

மூலஸ்தானம், அர்த்த மண்டபம், மகாமண்டபம் ஸ்நபந மண்டபம் கொடித்தம்பம், பரிவாரத் தெய்வங்கள் (முருகன்,வைரவர், பிள்ளையார்) நவக்கிரகம், சண்டேஸ்வரி ஆலயம், நிர்மாண வேலைகள், சுற்றுமதில் உயரமாக கட்டப்பட்டமை, மின்பிறப்பாக்கிகள் கொள்வனவு செய்யப்பட்டமை. இப்படியான திருப்பணிகளை ஆலயம் சிறக்க அம்பாளின் அடியார்கள் மனமுவந்து செய்து உதவினார்கள். மற்றும் முன்மண்டபம், தேவஸ்தானத்திற்கு தேவையான மயில்வாகனம், சிங்கவாகனம், பாம்பு வாகனம், குதிரை என்பனவும் அடியவர்களால் வாங்கப்பட்டது. 04.05.2001ல் இவ்வாலயத்தின் இரண்டாவது மகாகும்பாபிஷேகம், மண்டலாபிஷேக கிரியைகள் என்பன நடைபெற்றன.

உசாத்துணை

[தொகு]

[1][2]

  1. "இலங்கை அம்மன் ஆலயங்கள்". Archived from the original on 2017-01-09. பார்க்கப்பட்ட நாள் 2017-01-05.
  2. "அளவெட்டி வெளிவயல் முத்துமாரி அம்மன் ஆலயம் | யாழ்ப்பாணம்". Archived from the original on 2016-03-09. பார்க்கப்பட்ட நாள் 2017-01-05.