வெம்படப்பு சத்யநாராயணா
வெம்படப்பு சத்யநாராயணா (Vempatapu Satyanarayana) என்பவர் ஒரு பள்ளி ஆசிரியராகவும், பல்வேறு இந்திய பொதுவுடைமை அமைப்புகளின் உறுப்பினராகவும் திகழ்ந்தார். பொதுவாக இவர் சத்யம் என்று அழைக்கப்பட்டார். விவசாயிகள் உரிமைக்காகப் போராடிய சமூகப் போராளியாக அறியப்படுகிறார். 1960 ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் நடைபெற்ற நக்சலைட்டு இயக்கத்தின் ஆரம்பகால முக்கிய தலைவர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். மேலும், ஆதிபட்லா கைலாசம் மற்றும் சுப்பாராவ் பானிகிராகி ஆகியோருடன் இணைந்து 1967-ஆம் ஆண்டு நடைபெற்ற சிறீகாகுளம் விவசாயி எழுச்சியின் தலைவராகவும் செயல்பட்டார். இவர்கள் ஆந்திரப் பிரதேசத்தில் உழுபவனுக்கே நிலம் என்ற இயக்கத்தைத் தொடங்கினர். இவ்வியக்கம் பின்னர் தெற்கு ஒடிசாவிற்கும் பரவியது.[1]
சத்யநாராயணா, அகில இந்திய பொதுவுடைமைப் புரட்சியாளர்கள் ஒருங்கிணைப்புக் குழு மூலம் இந்திய பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிசுட்டு–லெனினிசுட்டு) கட்சியில் சேர்ந்தார். 1969 ஆம் ஆண்டு, இவர் கட்சியின் மத்திய அமைப்புக் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.[2][3] பின்னர், சாரு மசூம்தார் பொதுச் செயலாளராக இருந்த முதல் கட்சிக் காங்கிரசில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய மத்தியக் குழுவிலும் உறுப்பினராக இருந்தார். இவரது தலைமையில், சிறீகாகுளம் பகுதியிலுள்ள பழங்குடியினர் மற்றும் ஏழை விவசாயிகள் தங்களது உரிமைகளுக்காக ஒன்றிணைந்து போராடினர்.
இறப்பு
[தொகு]1970-ஆம் ஆண்டு சூலை மாதம் 10 அல்லது 11-ஆம் தேதியளவில், சிறீகாகுளத்தில் மாநில அரசின் முந்தைய உத்தரவின் பேரில் ஆந்திரப் பிரதேச காவல்துறையினரால் நடத்தப்பட்ட ஒரு போலி மோதலில், ஆதிபட்லா கைலாசத்துடன் இவரும் கொல்லப்பட்டார் என்பது நக்சலைட்டு தரப்பினரிடையே நிலவும் ஒரு பொதுவான நம்பிக்கையாகும்.[4] விவசாயிகளின் நில உரிமை மற்றும் சமூக நீதிக்காக இவர் ஆற்றிய பங்களிப்பு இந்திய அரசியல் மற்றும் சமூக இயக்கங்களின் வரலாற்றில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றுள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Bhattacharjee, Sumit (2016-12-29). "Maoist movement suffered a body blow" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/andhra-pradesh/Maoist-movement-suffered-a-body-blow/article16956442.ece.
- ↑ "30 years of CPI (ML)". Archived from the original on 2009-02-18. Retrieved 2009-02-18.
- ↑ Johari, J.C. (1971). "Political Ideas of Marxist-Leninist Communists in India". The Indian Journal of Political Science 32 (2): 175–194. பன்னாட்டுத் தர தொடர் எண்:0019-5510. https://www.jstor.org/stable/41854436.
- ↑ Overview about the History of Naxalism by the Hindustan Times