வெப்பவீங்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இங்கே பெரிதாகத் தெரிவது 500 பாகை பரனைட் வெப்பநிலையில் ஒரு மணி நேரம் சூடாக்கப்பட்ட ஒரு துண்டு வெப்பவீங்கியின் இறுதி அளவாகும். இதன் தொடக்க அளவு பக்கத்தில் காணப்படும் சிறிய துண்டின் அளவுக்குச் சமமாகும்.
வெப்பவீங்கிப் பூச்சுப் பூசப்பட்ட அமைப்புக் கூறு ஒன்று தீப்பிழம்பால் சூடாக்கப்படுகின்றது.
மேலுள்ள படத்தில் காட்டப்பட்ட சூடாக்கலின் பின்னர் விரிவடைந்த நிலையில் உள்ள வெப்பவீங்கிப் பூச்சு

வெப்பவீங்கி (intumescent) என்பது சூடாகும்போது பல மடங்கு விரிவடையும் பொருளொன்றைக் குறிக்கும். இவ்வாறு வீங்கும்போது அதன் கனவளவு அதிகரித்து, அடர்த்தி குறையும். வெப்பவீங்கிகள் உயிர்ப்பில் தீத்தடுப்புத் தேவைகளுக்குப் பயன்படுகின்றன. கட்டிடங்களில் இவை கட்டிடக் கூறுகளிடையே இருக்கும் இடைவெளிகளை நிரப்புவதற்கான பொருட்களாகவும், பூச்சுக்களாகவும், பயன்படுத்தப்படுகின்றன.

வெப்பவீங்கி வகைகள்[தொகு]

மென்கரி உண்டாக்குவன[தொகு]

இவ்வகை வெப்பவீங்கிகள் தீயில் எரியும்போது மென் கரியை உண்டாக்குகின்றன. இது மிகக் குறைவாகவே வெப்பத்தைக் கடத்தும் ஆதலால் இதனூடாக வெப்பம் கடத்தப்படுவது குறைகிறது. இவ்வகை வெப்பவீங்கிகள் குறிப்பிடத்தக்க அளவிலான ஐதரேட்டுக்களைக் கொண்டிருப்பதனால், சூடாகும்போது நீர் வெளிவிடப்படுகின்றது. இது ஒரு குளிர்வித்தல் விளைவையும் ஏற்படுத்துகிறது. நீர் வெளியேறிய பின்னர், உருவான கரியின் வெப்பக்காப்பு இயல்பு மட்டுமே நெருப்பு எரியும் பக்கத்திலிருந்து மறு பக்கத்துக்கு வெப்பம் கடத்தப்படுவதைக் குறைக்கின்றது. மென்கரி உண்டாக்கும் வெப்பவீங்கிகள் பெரும்பாலும் எஃகினால் ஆன அமைப்புக் கூறுகளைத் தீயிலிருந்து பாதுகாப்பதற்கான மெல்லிய பூச்சுக்களாகவும், தீத்தடுப்பு மெத்தைகளாகவும் பயன்படுகின்றன.

விரிவடையும் வன்கரி உண்டாக்குவன[தொகு]

சோடியம் சிலிக்கேட்டு, கிராபைட்டு போன்றவை எரியும்போது வன்கரி உண்டாகிறது. இவ்வாறான பொருட்கள், நெகிழிக் குழாய்கள் தீத்தடுப்புச் சுவர்களைத் துளைத்துச் செல்லும் இடங்களில் அவற்றைச் சுற்றியுள்ள இடைவெளிகளை நிரப்பும் தீத்தடுப்புப் பொருள்களாகப் பயன்படுத்த உகந்தவை. இவ்வாறான பயன்பாடுகளில் போதிய அளவு அழுத்தத்தை உருவாக்கக்கூடியதாகக் குறிப்பிடத்தக்க அளவிலான கரி உண்டாக வேண்டும். தீயில் போது நெகிழிக் குழாய்கள் உருகும்போது அவை துளைத்துச் செல்லும் தடுப்புச் சுவர்களில் துளைகள் ஏற்பட்டு அவற்றினூடாகத் தீ பிற பகுதிகளுக்குப் பரவக்கூடும். இதனால் குழாயைச் சுற்றிலும் நிரப்பப்படும் வெப்பவீங்கிகள் அழுத்ததுடன் விரிவடைந்து உருகும் குழாய்களை நெரித்துத் துளைகள் இல்லாமல் மூட வேண்டும்.

வெப்பவீங்கிப் பூச்சுக்கள்[தொகு]

தீத்தடுப்பில் பயன்படும் வெப்பவீங்கி வடிவங்களில் பூச்சுக்கள் முக்கியமானவை. கட்டிடங்களின் உள்ளேயும் வெளிப்புறத்திலும் இப்பூச்சுக்கள் பயன்படுகின்றன. இவை பொதுவாக வைனைல் அல்லது நீர் அடிப்படையிலானவை. எஃகினாலான அமைப்புக் கூறுகள், மரக் கதவுகள், சிப்சம் பலகைகள் போன்றவற்றின் மீது இப் பூச்சுக்களைப் பூச முடியும். உட்புறங்களில் பயன்படும் பூச்சுக்கள் பொதுவாக மெல்லிய படலங்களாகப் பூசப்படுகின்றன. பார்ப்பதற்குச் சாதாரணமான நிறப் பூச்சுக்கள் போலவே தோற்றமளிக்கும். தீ ஏற்படும்போது இம் மெல்லிய படலங்கள் பல மடங்கு விரிவடைந்து அது பூசப்பட்டுள்ள கட்டிடக்கூறுகள் தீக்குத் தாக்குப் பிடிப்பதற்கான கால அளவைக் கூட்டுகின்றன. இதன் மூலம் கட்டிடத்திற்குள் உள்ளவர்கள் தப்பிச் செல்வதற்குப் போதிய அளவு நேரம் கிடைப்பது உறுதிசெய்யப்படுகிறது.

வெளிப்புறங்களுக்கான வெப்பவீங்கிப் பூச்சுக்கள் பெட்ரோலிய வேதிப்பொருட் தொழிலில் பயன்படுகின்றன. குறிப்பாக, எண்ணெய் தூய்தாக்கல் நிலையங்களிலும், கரைக்கு அப்பால் எண்ணெய் உற்பத்தி மேடைகளிலும் இவை பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன. வெளிப்புற வெப்பவீங்கிப் பூச்சுக்கள் "இப்பொக்சி"யை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றின் பூச்சுக்கள் தடிப்பானவை. அத்துடன் இவை கூடிய மொத்தல் வலுவும் (impact strength), ஒட்டுந்தன்மையும், கூடிய ஈரப்பதனைத் தாக்குப் பிடிக்கும் வல்லமையும் கொண்டவை

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெப்பவீங்கி&oldid=1358164" இலிருந்து மீள்விக்கப்பட்டது