வெப்பம் விடு வினை
ஒரு வேதியியல் தாக்கம் வெப்பத்தை வெளியிட்டபடி நடைபெறுமாயின் அது வெப்பம் விடு வினை அல்லது புறவெப்பத்தாக்கம் (Exothermic reaction ) எனப்படும். இத்தகைய வெப்ப வெளிப்பாடு பொருள்களைக் கரைக்கும் போது அல்லது கலக்கும் போது நிகழலாம். உதாரணமாக சோடியம் ஐட்ராக்சைடை (NaOH ) நீரில் கலக்கும் போது ஏராளமான வெப்பம் வெளிப்படுகிறது. இப்படிப்பட்ட வினைகள் வெப்பம் விடு வினைகள் எனப்படுகின்றன. மாறாக வெப்பம் கவர் வினையில் (Endothermic reaction ), பொருள்களைக் கொண்டு கரைசலை ஆக்கும் போது, வினையை நிகழ்த்த வெப்பம் ஊட்டப்பட வேண்டும். இப்படிப்பட்ட வினைகள் வெப்பம் கவர் வினைகள் எனப்படும்.
விளக்கம்
[தொகு]வெப்பம் விடுவினை என்பது வெப்பத்தை வெளியிட்டபடி நடைபெறும் வேதியியல் மற்றும் இயற்பியல் தாக்கமாகும். இது தாக்கச் சூழலுக்கு வெப்பத்தை வெளியிடுகின்றது. இத்தகைய தாக்கங்களின் போது உள்ளெடுக்கப்படும் வெப்பத்தைவிட வெளியிடப்படும் வெப்பத்தின் அளவு அதிகமாகும்.[1]
இத்தகைய தாக்கங்கள் புறச் சூழலுக்கு வெப்பத்தை வெளியிடுவதுடன் நடைபெறுவதால் இவை வெப்பம் விடு வினை எனப்படுகின்றன.
வேதியியல் தாக்கமொன்றின் திட்டமான வெப்பத்தைக் கணிப்பது மிகவும் கடினமானது. தாக்கமொன்றின் வெப்ப அடக்க மாற்றம் ΔH, இலகுவில் கணிக்கப்படலாம். எ.கா:
- ΔH = பிணைப்புகளை உடைப்பதற்குப் பயன்படும் சக்தி − பிணைப்புகளை ஆக்கும் போது வெளியிடப்படும் சக்தி
வரைவிலக்கணப்படி வெப்ப அடக்கம் மாற்றம் மறைப் பெறுமதியை எடுக்கும்:
- ΔH < 0
வெப்பம் விடு வினை ஒன்றில் வெளியிடப்படும் சக்தியின் அளவு உள்ளெடுக்கப்படும் சக்தியின் அளவை விட அதிகமாதலால் ΔH மறைப் பெறுமானத்தை எடுக்கும். எ.கா: ஐதரசன் எரியும் வினையில்:
- 2H2 (g) + O2 (g) → 2H2O (g)
- ΔH = −483.6 kJ/mol of O2 [2]
உதாரணங்கள்
[தொகு]- அமிலமும் காரமும் தாக்கமடையும் நடுநிலையாக்கல் தாக்கம்.
- எரிபொருட்கள் எரிதல்
- அமிலம் அல்லது காரத்தினை நீருடன் சேர்ப்பதன் மூலம் செறிவைக் குறைத்தல்
- சுவாசம்
- உலோகங்கள் அரிப்படைதல்
- சேதனப் பொருட்கள் பிரிகையடைதல்
ஆதாரம்
[தொகு]A dictionary of science- ELBS
- ↑ Article written by Anne Marie Helmenstine, Ph.D on exothermic and endothermic reactions http://chemistry.about.com/cs/generalchemistry/a/aa051903a.htm
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-07-08. பார்க்கப்பட்ட நாள் 2013-07-31.