வெப்பக்காப்புக் கண்ணாடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெப்பக்காப்புக் கண்ணாடி மரத்தில் பதியப்பட்டுள்ளது

வெப்பக்காப்புக் கண்ணாடி (Insulating glass) என்பது, வெளியில் இருந்து கட்டிடங்களுக்கு உள்ளோ அல்லது உள்ளிருந்து வெளியேயோ வெப்பம் கடத்தப்படுவதைக் குறைப்பதற்காக உருவாக்கப்படும் கண்ணாடிக் கூட்டுத் தகடு ஆகும். இது ஒன்றுக்கு மேற்பட்ட கண்ணாடிகளை அவை ஒன்றுக்கொன்று இணையாகவும், அவற்றுக்கிடையே சிறிது இடைவெளி இருக்குமாறும் வைத்துப் பொருத்திச் செய்யப்படுகிறது. பொதுவாக, இவற்றில் மூன்று அல்லது இரண்டு கண்ணாடித் தகடுகளைப் பயன்படுத்துவது வழக்கம். வெப்பக்காப்புக் கண்ணாடிகள் கட்டிடங்களில் சாளரக் கண்ணாடிகளாகவும், திரைச் சுவர்க் கண்ணாடிகளாகவும் பயன்படுகின்றன.

கண்டுபிடிப்பு[தொகு]

வெப்பக்காப்புக் கண்ணாடியை, 1865-ம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த தாமசு இசுடெட்சன் என்பவரால் காப்புரிமை செய்யப்பட்டது.[1] 1930களில் அன்றாட பயன்பாட்டிற்கு வந்தது, லிப்பி ஓவன்சு போர்டு கிளாசு நிறுவனத்தால் 1944களில் விற்பனை செய்யப்பட்டது.[2] 1941-ம் ஆண்டு தெர்மோப்ளேன் என்ற முத்திரையோடு தற்போதுள்ள கண்ணாடிகளைப் போல உருவாக்கப்பட்டது.[3]

பயன்பாடு[தொகு]

கண்ணாடித் தகடுகளிடையே இடைவெளியைப் பேணுவதற்காக கண்ணாடிகளுக்கு இடையே அவற்றின் விளிம்பை அண்டி நாற்புறமும் அலுமினியக் நீள்சதுரக் குளாய் வடிவச் சட்டங்களை வைத்துக் கண்ணாடிகளை ஒட்டுப்பொருள் கொண்டு ஒட்டிவிடுவர். இப்பொருத்து காற்று, ஆவி, நீர் என்பன புகாதவாறு இறுக்கமாக இருக்கும். சில தேவைகளுக்காக கண்ணாடிகளுக்கு இடையேயுள்ள இடைவெளிகளிலிருந்து காற்று வெளியேற்றப்பட்டு வேறு சடத்துவ வளிமங்களால் நிரப்பட்டுவதும் உண்டு.

ஒற்றைக் கண்ணாடித் தகடு வெப்பத்தைப் பெருமளவு கடத்தவல்லது. இரட்டைக் கண்ணாடிகளில் இடையே காற்று இருப்பதனாலேயே வெப்பம் கடத்தப்படுவது குறைகிறது. வெப்பம் கடத்துதிறனை மேலும் குறைப்பதற்காக கண்ணாடிகளுக்கு நிறமூட்டுவது, கண்ணாடியின் மேற்பரப்பில் சிறப்புப் பூச்சுகளைப் பூசுவது போன்ற நுட்பங்களும் உள்ளன.

உசாத்துணை[தொகு]

  1. US patent 49167, "Improvement in Window Glass", issued 1865-08-12 
  2. Jester, Thomas C., ed. (2014). Twentieth-Century Building Materials: History and Conservation. Getty Publications. p. 273. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781606063255.
  3. Wilson, Alex (March 22, 2012). "The Revolution in Window Performance — Part 1". Green Building Advisor. http://www.greenbuildingadvisor.com/blogs/dept/energy-solutions/revolution-window-performance-part-1.