உள்ளடக்கத்துக்குச் செல்

வெண்ணிப் போர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வெண்ணிப் போர் தஞ்சாவூருக்கு 24 கி.மீ. தொலைவில் நீடாமங்கலம் அருகில் உள்ள வெண்ணிப் பறந்தலை (கோவில்வெண்ணி) என்னும் இடத்தில் நிகழ்ந்த போராகும். இப்போர் வெண்ணி ஊரின் வாயிலை அடுத்திருந்த வெளியில் நடைபெற்றது[1]. இவ்வூர் தற்பொழுது கோயிலுண்ணி (கோயில் வெண்ணி) என வழங்கப்படுகிறது. இப்போர் ஏறத்தாழ கி.மு.1ஆம் நூற்றாண்டின் இறுதியிலோ அல்லது கி.மு.2ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலோ நடந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். கரிகால் சோழன் தன்னை எதிர்த்து வந்த சேர மன்னன் சேரமான் பெருஞ் சேரலாதனையும், பாண்டிய மன்னன் ஒருவனையும், பதினொரு குறுநில மன்னர்களான வேளிரையும் ஒருங்கே தோல்வியுறச் செய்தான். இப்போர் தமிழகத்து மன்னர்களின் மேலாண்மையைக் கரிகாலனுக்கு வழங்கியது. வெண்ணிப் போரில் தோல்வியுற்ற வேளிர் பதினொருவரில் உயிர் பிழைத்துத் தப்பிய ஒன்பதின்மர் வாகை என்னும் இடத்தில் கரிகால சோழனை மீண்டும் போரில் எதிர் கொண்டனர். இதுவே வாகைப்பறந்தலைப் போராகும். இப்போரிலும் கரிகால் சோழன் வெற்றி வாகை சூடினான்[2]. வெண்ணிப் போரில் கரிகாலனின் வேல் மார்பை துளைத்து சென்றதால் முதுகில் புண்பட்ட சேரமன்னன் பெருஞ்சேரலாதன், தனக்கு பெரும் அவமானம் ஏற்பட்டதாகக் கருதி வடக்கிருந்து உயிர் நீத்தான் என்பதை புலவர்கள், மாமூலனார்[3], கழாத்தலையார்[4], வெண்ணிக் குயத்தியார்[5] பாடல்களாகப் பாடியுள்ளனர். வெண்ணிக்களத்திற்குரிய வெண்ணி ஊரிலேயே பிறந்த சங்க காலத்து பெண்பாற் புலவரான வெண்ணிக்குயத்தியார் வெண்ணியில் பொருத அரசர்களைப் பற்றி

"நனி இரு முந்நீர் நாவாய் ஒட்டி

வளிதொழில் ஆண்ட உரவோன்

மருக!

களிஇயல் யானைக் கரிகால் வளவ!

சென்று அமர்க்கடந்த நின் ஆற்றல்

தோன்ற

வென்றோய்! நின்னினும் நல்லன்

அன்றே,

கலிகொள் யாணர் வெண்ணிப்

பறந்தலை

மிகப் புகழ் உலக மெய்திப்

புறப்புண் நாணி வடக்கு

இருந்தோனே!"

என கரிகாலனின் வெற்றியையும் சேரனின் வடக்கிருந்து உயிர் துறந்த செயலையும் தனது பாடலில் ஒருங்கே பாடியுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர் (தமிழ் இணையக் கல்விக்கழகம்)". பார்க்கப்பட்ட நாள் 16 சூலை 2015.
  2. "5.4 சோழ மன்னர்கள் (தமிழ் இணையக் கல்விக்கழகம்)". பார்க்கப்பட்ட நாள் 16 சூலை 2015.
  3. "சங்கப்பலகை: அகப்பாட்டில் இளம் வீரர்!". தினமணி. பிப்ரவரி 9, 2014. பார்க்கப்பட்ட நாள் 16 சூலை 2015. {{cite web}}: Check date values in: |date= (help)
  4. "65. சேரமான் பெருஞ் சேரலாதன் (தமிழ் இணையக் கல்விக்கழகம்)". பார்க்கப்பட்ட நாள் 16 சூலை 2015.
  5. கி.ஆ.பெ.விசுவநாதம் மேல்நிலைப்பள்ளியைச் சார்ந்தவர்கள், Dr. K. Kalyanasundaram. "புறநானூறு". மதுரைத் திட்டம் 2000. பார்க்கப்பட்ட நாள் 16 சூலை 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெண்ணிப்_போர்&oldid=4043043" இலிருந்து மீள்விக்கப்பட்டது