வெண்கலச் சிலை வார்ப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வெண்கலத்தை உபயோகித்து சிலைகள் செய்வது பழங்காலந்தொட்டே இருந்து வருகிறது. வியக்க வைக்கும் நுட்ப வேலைப்பாடுகளும், உருவ வளைவுகளும் மிகப் பழங்காலச் சிலைகளிலேயே காணப்படுகின்றன.

சிலை வார்ப்பு[தொகு]

வெண்கலச் சிலை வார்ப்பு

வெண்கலச் சிலைகள் பெரும்பாலும் 'செர்-பெர்டியூ' (Cire-Perdue) எனும் முறையில் தான் வார்க்கப்படுகின்றன. 'செர்-பர்டியூ' என்பது பிரெஞ்சு வார்த்தை, செர் என்றால் மெழுகு, பெர்டியூ என்றால் தொலைந்த (lost) என்று அர்த்தம் கொள்ளலாம். சமஸ்கிருதத்தில் 'மதுசிஷ்டவிதானா' என்று பெயர்.

செய்யப் போகும் சிலையின் வடிவத்தை முதலில் மெழுகில் தயாரித்து பின் அதைச் சுற்றி கவனமாக மோல்டு தயாரிக்கப்படுகிறது. மோல்டு காய்ந்த பின் உள்ளே இருக்கும் மெழுகை உருக்கி வெளியேற்றி விட்டு வெண்கலத்தை உருக்கி உள்ளே ஊற்றி சிலை தயாராகிறது.

மெழுகுச் சிலை[தொகு]

குங்கிலியம் எனும் தேன் மெழுகை எண்ணெய் கலந்து பிசைந்து சிலையாக வடிக்கிறார்கள். சிலை செய்யும் 'ஸ்தபதிகள்' உருவத்தின் நீளம், பருமன் ஆகியவை சரியாக இருக்குமாறும், வளைவுகள், ஆடை மடிப்புக்கள் தத்ரூபமாக தோன்றுமாறும் கலைநயத்துடன் வடிக்கப்படுகிறது.

ஒரு வகையில் பார்த்தால் இந்த மெழுகு பொம்மை தான் அசல், வெண்கலச் சிலைகள் நகல்கள் தான்.

சிலையின் சிறிய பகுதிகளுக்கு பலத்திற்காகவும், பின்னர் மோல்டு தயார் செய்த பின் வெண்கலக் கலவை இந்தப் பகுதிகளுக்கு எளிதாக ஓடிச் சேரவும் கீழிருந்து இணைப்புக்கள் கொடுக்கப்படுகிறது.

மோல்டு தயாரிப்பு[தொகு]

மிக நுண்ணிய களிமண் (எறும்புப் புற்றிலிருந்து எடுப்பது), பசுஞ்சாணம், தவிடு ஆகியவற்றைக் கொண்டு மோல்டு தயாரிக்கப்படுகிறது. மோல்டுக் கலவையை முதலில் குழம்பாக்கப்பட்டு மெழுகுச் சிலையின் மேல் பூசப்படுகிறது. நுணுக்கமான பகுதிகளும் விடுபட்டுப் போகாமல், காற்றுக் குமிழ்கள் உருவாகாமல் கவனத்துடன் மேலும் மேலும் பூசப்பட்டு தடிமனான மோல்டு தயாராகிறது.

மோல்டு நிழலில், வெடிப்புகள் ஏற்படாவண்ணம் உலர வைக்கப்படுகிறது.

உலோகச் சிலை[தொகு]

மோல்டு நன்றாகக் காய்ந்த பிறகு, நெருப்பில் பக்குவமாக சூடாக்கி, உள்ளிருக்கும் மெழுகு முழுவதும் உருகி வெளியேறிய பின், மோல்டை மேலும் சிறிது சூடாக்கி, தயாராக இருக்கும் உருக்கிய வெண்கலக் கலவையை மெலிதாகவும் ஒரே சீராகவும் மோல்டினுள் ஊற்றப்படுகிறது. மோல்டு முழுவதும் நிரம்பிய பின்னர் மெதுவாக குளிர்விக்கப்படுகிறது.

முழுவதும் குளிர்ந்த பின்னர் மோல்டை உடைத்து, சிலையைச் சுத்தம் செய்து, பிசிறுகளை நீக்கிய பின்னர், வெண்கலக் கலவை மோல்டினுள் எளிதாக செல்வதற்காக கொடுக்கப்பட்ட இணைப்புகளை நீக்கி, நகாசு வேலைகள் முடிந்த பின் சிலை முழுவதுமாக தயாராகிறது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெண்கலச்_சிலை_வார்ப்பு&oldid=3859476" இலிருந்து மீள்விக்கப்பட்டது