வி. நடராஜ ஐயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வி. நடராஜ ஐயர் (இறப்பு: 12 சனவரி 1908)[1] தமிழ்நாட்டைச் சேர்ந்த பத்திரிகாசிரியரும் நூலாசிரியரும் ஆவார். லோகோபகாரி என்ற தேச பக்தத் தமிழிதழின் ஆசிரியராக இருந்தவர். இவர் இயற்றிய தத்துவ தரிசனி என்ற நூல் பாடசாலைகளில் புத்தகமாக வைக்கப்பட்டிருந்தது.[2] இவர் 1898 ஆம் ஆண்டில் சுவாமி விவேகானந்தரின் ஆங்கிலச் சொற்பொழிவுகளைத் தமிழில் மொழிபெயர்த்து ’ஞானத் திரட்டு’ என்ற பெயரில் இரண்டு தொகுதிகளாக வெளியிட்டவர்.[1] 1898 மே 1 அன்று ’ஞானத் திரட்டு பாகம் 1’ வெளியிடப்பட்டது. ஞானத் திரட்டு முதல் தொகுதியை நேரடியாக சுவாமி விவேகானந்தருக்கே அனுப்பி அவரது பதில் கடிதத்தில் ”மாநில மொழிகளில் தமது கருத்தை மொழிபெயர்த்தவர்களில் முன்னோடி’யாகக் குறிப்பிடப்பட்டவர்.[3][4]

வி. நடராச ஐயர் திருச்சிராப்பள்ளியில் குளித்தலைக்கு அருகிலுள்ள மருதூரில் வெங்கிடராம ஐயருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். திருச்சியில் எஸ். பி. ஜீ கலாசாலையில் கல்வி பயின்று, தமிழில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.[1] நடராஜ ஐயர் தாம் ஒரு பத்திரிகையை நடத்த விரும்பி சென்னைக்குச் சென்று லோகோபகாரி என்ற பெயரில் 1895-ஆம் ஆண்டில் பத்திரிகை ஒன்றை வெளியிட ஆரம்பித்தார். தொடக்கத்தில் மாதம் மூன்று இதழ்களாக வெளிவந்த இப்பத்திரிகை 1897 முதல் வார இதழாக வெளிவந்தது.[1]

1897 அக்டோபர் முதல் ஞானசந்திரிகா என்ற இதழையும் சிறிது காலம் வெளியிட்டு வந்தார்.[1] 1901 ஆகத்து முதல் தி இந்தியன் நியூஸ் என்ற ஆங்கில வாரப் பத்திரிகையையும் ஓராண்டு காலம் வெளியிட்டார்.[1] 1902 முதல் லோகோபகாரி பத்திரிகைக்கு பண்டிதை விசாலாட்சியம்மாள் என்பவர் உதவி ஆசிரியராக இருந்து வந்தார்.[1]

பண்டிதை விசாலாட்சியம்மாள் எழுதிய லலிதாங்கி, ஜலஜாக்‌ஷி என்ற இரு புதினங்களை நடராஜ ஐயர் தனது பெயரில் வெளியிட்டார்.[1] ஆனாலும், பின்னர் ஜோதிஷ்மதி என்ற நாவலில் மேற்குறிப்பிட்ட இரு புதினங்களையும் எழுதியவர் விசாலாட்சியம்மாள் என்றி வெளியானது.[1] 1906 இல் லோகோபகாரி பத்திரிகையின் உரிமையை பண்டிதை விசாலாட்சியம்மாளுக்கு அளித்தார்.[1]

மறைவு[தொகு]

மனப்பிணி, தேகப்பிணி போன்றவற்றால் நொந்திருந்த நடராஜ ஐயர் 1908 சனவரி 12 இல் மறைந்தார். இவரது மனைவி ஜானகி அம்மாள். இவர்களுக்குப் பிள்ளைகள் இல்லாததால் ஐயர் மறுமணம் புரிந்தார், ஆனாலும் அவருக்கும் பிள்ளைகள் பிறக்கவில்லை.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 "சென்று போன நாட்கள்: ஸ்ரீமான் வி. நடராஜ ஐயர்". ஆநந்தகுணபோதினி. மே 1926.
  2. http://books.google.co.in/books/aboutலோகோபகாரி_பத்த.html?id=xb8VSQAACAAJ&redir_esc=y
  3. ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்; ஆகத்து 2007; தமிழில் ஸ்ரீராமகிருஷ்ண விவேகானந்த இலக்கியங்கள்; பெ. சு. மணி
  4. பத்மன் (13 சனவரி 2013). "சுவாமிஜியைக் கண்டெடுத்த தமிழகம்". Archived from the original on 27 ஆகத்து 2014. பார்க்கப்பட்ட நாள் 27 திசம்பர் 2022 – via archive.today.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._நடராஜ_ஐயர்&oldid=3790043" இலிருந்து மீள்விக்கப்பட்டது