உள்ளடக்கத்துக்குச் செல்

வி. கோவிந்தராஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வி. கோவிந்தராஜ்
V. Govindaraj
கிள்ளான் துறைமுக மக்களவைத் தொகுதி (1979 இடைத்தேர்தல்)
பதவியில்
1979–1982
முன்னையவர் வி. மாணிக்கவாசகம்
பின்னவர்தொகுதி நீக்கம்
பெரும்பான்மை9,442 (1979)[1]
கிள்ளான் துறைமுக மக்களவைத் தொகுதி
பதவியில்
1982–1986
முன்னையவர் வி. மாணிக்கவாசகம்
பின்னவர்தொகுதி நீக்கம்
பெரும்பான்மை11,884 (1982)[2]
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
Govindaraj a/l Varadarajulu

14 ஏப்ரல் 1933
இறப்பு23 மே 2018 (வயது 85)[3]
பத்துமலை, சிலாங்கூர்
குடியுரிமைமலேசியர்
தேசியம் மலேசியா
அரசியல் கட்சிDMIP மலேசிய இந்தியர்
பிற அரசியல்
தொடர்புகள்
மலேசிய இந்தியர் காங்கிரசு
துணைவர்ராதாபாய் சீவரத்தினம்
பிள்ளைகள்3 மகன்கள்; 3 மகள்கள்[4]
பெற்றோர்
  • வரதராஜுலு (தந்தை)
பணிஅரசியல்வாதி
தொழில்கலைஞர்
DATUK V.GOVINDARAJ

டத்தோ வி. கோவிந்தராஜ் எனும் கோவிந்தராஜ் வரதராஜுலு (ஆங்கிலம்; மலாய்: V. Govindaraj அல்லது Govindaraj a/l Varadarajulu) (1933-2018) என்பவர் மலேசிய அரசியல்வாதி, நாடகக் கலைஞர், மலேசியத் தகவல்துறை பணியாளர்; 1979 முதல் 1986 வரை இரு தவணைகளுக்கு, கிள்ளான் துறைமுக மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வகித்தவர் ஆவார். மலேசியாவில் புகழ்பெற்ற மேடை நாடகக் கலைஞராகவும் அறியப்படுகிறார்.

இவருடைய இளமைக் காலம் சிலாங்கூர் மாநிலத்தின் பத்துமலை, ரவாங், கிள்ளான், காப்பார் மற்றும் கோலாலம்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளுடன் நெருங்கிய தொடர்புடையது. சிறுவயதிலேயே இவர் கலைத்துறையில் ஈடுபட்டவர். மலேசியாவிற்குப் புலம்பெயர்ந்த தொடக்ககால மலேசிய இந்திய மரபுவழி குடும்பத்தைச் சேர்ந்தவர்.

இவர் வளர்ந்த காலகட்டத்தில் மலாயாவில் இந்தியர்கள் பெரும்பாலும் ரப்பர் தோட்டப் புறங்களிலும், சிறு வணிகங்களிலும், துறைமுகம் சார்ந்த பணிகளிலும் ஈடுபட்டு வந்தனர். அந்தச் சமுதாயச் சூழல், வி. கோவிந்தராஜ் அவர்களைச் சிறுவயதிலேயே மக்கள் நலப் பணிகளில் ஈர்க்க வைத்தது.

இடைத்தேர்தல்

[தொகு]

கிள்ளான் துறைமுக மக்களவைத் தொகுதி 1986-ஆம் ஆண்டில் மறுசீரமைக்கப்பட்டு சா ஆலாம் மக்களவைத் தொகுதி; காப்பார் மக்களவைத் தொகுதி; கிள்ளான் மக்களவைத் தொகுதி எனும் மூன்று மக்களவைத் தொகுதிகளுக்குள் இணைக்கப்பட்டது.

மஇகாவின் 6-ஆவது தேசியத் தலைவராகவும், மலேசியப் போக்குவரத்து அமைச்சராகவும் பதவியில் இருந்த டான் செரி வி. மாணிக்கவாசகம், 12 அக்டோபர் 1979 அன்று தமது 53-ஆவது வயதில் திடீர் மாரடைப்பால் காலமானார்.[5] இதனால் கிள்ளான் துறைமுக மக்களவைத் தொகுதி காலியானது. இத்தொகுதிக்கான இடைத்தேர்தல் 1 திசம்பர் 1979 அன்று நடைபெற்றது.[5]

காலியான இத்தொகுதியைத் தக்கவைக்க, ஆளும் தேசிய முன்னணி கூட்டணியின் உறுப்புக் கட்சியான மஇகா, தனது சிலாங்கூர் மாநிலச் செயலாளரான வி. கோவிந்தராஜு அவர்களைக் களம் இறக்கியது. இந்த இடைத்தேர்தலில் ஆளும் தேசிய முன்னணி (BN), ஜசெக (DAP), பாஸ் (PAS) மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 7 முனைப் போட்டி நிலவியது.

கடுமையான போட்டிக்கு இடையில், 32,783 வாக்காளர்களைக் கொண்ட அந்தத் தொகுதியில், மஇகா வேட்பாளர் வி. கோவிந்தராஜ் 9,442 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்று, கிள்ளான் துறைமுகத் தொகுதியின் புதிய நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு 17,219 வாக்குகள் கிடைத்தன.[1]

வாழ்க்கை

[தொகு]

டத்தோ வி. கோவிந்தராஜ் 14 ஏப்ரல் 1933-இல் பிரித்தானிய மலாயா காலத்தில் பிறந்தார். மலேசியாவிற்குப் புலம்பெயர்ந்த தொடக்ககால மலேசிய இந்திய மரபுவழி குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் வளர்ந்த காலக்கட்டத்தில் மலாயாவில் இந்தியர்கள் பெரும்பாலும் ரப்பர் தோட்டப்புறங்களிலும், சிறு வணிகங்களிலும், துறைமுகம் சார்ந்த பணிகளிலும் ஈடுபட்டு வந்தனர். அத்தகைய சமுதாயச் சூழல், வி. கோவிந்தராஜ் அவர்களைச் சிறுவயதிலேயே மக்கள் நலப் பணிகளில் ஈர்க்க வைத்தது.

அவர் தன்னுடைய பதின்ம வயதை எட்டியபோது, சப்பானியர்களின் ஆதிக்கத்தின்[6] கீழ் மலாயா வந்தது. இக்காலகட்டத்தில் உணவுத் தட்டுப்பாடு, கட்டாய உழைப்பு, சயாம் மரண இரயில் பாதை கட்டுமானம்[7] போன்ற காரணங்களால் மலாயா இந்தியர்கள் பெரும் இன்னல்களுக்கு உள்ளாயினர்.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்[8] அவர்களின் இந்திய தேசிய ராணுவம் (INA) மலாயாவில் காட்டிய தீவிரச் செயல்பாடுகள்; மலாயா வாழ் இந்தியர் இளைஞர்களிடையே, குறிப்பாக கோவிந்தராஜ் போன்றோரிடம் அடிமைத்தனத்திற்கு எதிரான விழிப்புணர்வையும் சமுதாயப் பற்றையும் விதைத்தன. சப்பானியர் ஆட்சி முடிவுக்கு வந்து 1946-இல் பிரித்தானியர் மீண்டும் மலாயாவைக் கைப்பற்றியபோது, இந்தியர்களின் குடியுரிமை மற்றும் தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாக்க ஓர் அரசியல் இயக்கம் தேவைப்பட்டது.

இந்தச் சூழலின் தாக்கத்தால், 1946-ஆம் ஆண்டு மலேசிய இந்தியர் காங்கிரசு தொடங்கப்பட்ட அதே ஆண்டிலேயே, தன்னுடைய இளம் வயதில் கோவிந்தராஜ் கட்சியில் ஓர் சாதாரணத் தொண்டனாகத் தன்னை இணைத்துக் கொண்டார். அதில் இருந்து அவரின் அரசியல் வாழ்க்கையும் தொடங்கியது.

அரசியல் வாழ்க்கை

[தொகு]

டத்தோ வி. கோவிந்தராஜ் 1946-இல் மஇகாவில் சேர்ந்தார். 1978-இல் மஇகாவின் மத்திய செயற்குழு (CWC) உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1979-இல் கிள்ளான் துறைமுக மக்களவைத் தொகுதியின் (Pelabuhan Kelang Federal Constituency) உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1981-இல் சிலாங்கூர் மஇகா தலைவர்; மற்றும் மத்திய மஇகா துணைத் தலைவர் பதவிகளுக்குத் தேர்வு செய்யப்பட்டார். 1983-இல் இவருக்கும் துன் சாமிவேலு அவர்களுக்கும் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளினால், மஇகா உறுப்பினர் தகுதியில் இருந்து வி. கோவிந்தராஜ் இடைநீக்கம் செய்யப்பட்டார். பின்னர் 1984-இல் அவரின் உறுப்பினர் தகுதி முற்றாக நீக்கம் செய்யப்பட்டது. இதுவே அவரை மலேசிய இந்தியர் மக்களாட்சி கட்சியை உருவாக்கத் தூண்டியது.

பாரிசான் நேசனல் கூட்டணியில் சேர்வதற்கு பத்து ஆண்டுகளுக்கும் மேலாக வி. கோவிந்தராஜ் முயற்சிகள் செய்தார். இருப்பினும் அனைத்து முயற்சிளும் தோல்வியில் முடிந்தன. அவர் உருவாக்கிய மலேசிய இந்தியர் மக்களாட்சி கட்சி மலேசியாவின் அரசியல் கட்சிகளின் பட்டியலில் ஒரு "செயலிழந்த அல்லது கலைக்கப்பட்ட கட்சி" (Defunct Party) என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.[9]

குடும்பம்

[தொகு]

இவருடைய மனைவியின் பெயர் ராதாபாய் சீவரத்தினம். இவருக்கு டாக்டர் இளங்கோவன்; டாக்டர் வரதராஜு; திலகராஜ் என 3 மகன்கள்; மாதவி தேவி; கலாவதி; குந்தவி என 3 மகள்கள் உள்ளனர். [4]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 "By-Election·01 Dec 1979; P.079 Pelabohan Kelang, Selangor". ElectionData.MY. Retrieved 29 May 2026.
  2. ↑ "GE-06·22 Apr 1982; P.079 Pelabohan Kelang, Selangor". ElectionData.MY. Retrieved 29 May 2026.
  3. ↑ "DATUK V.GOVINDARAJ; Passed away peacefully on 23rd May 2018 at 1.20 AM". Star Media Group Berhad. Retrieved 29 May 2026.
  4. 1 2 "DATUK V.GOVINDARAJ; Relatives and Friends". Star Media Group Berhad. Retrieved 29 May 2026.
  5. 1 2 "Manickavasagam Died of heart attack on 12 October1979" (PDF). Prdana Leadership. Retrieved 29 May 2026.
  6. ↑ New Perspectives on the Japanese Occupation in Malaya and Singapore 1941–1945, Yōji Akashi and Mako Yoshimura, NUS Press, 2008, p. 30, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9971692996, 9789971692995
  7. ↑ The notorious Burma-Siam railway, built by Commonwealth, Dutch and American prisoners of war.
  8. ↑ Sugata Bose (2011). His Majesty's Opponent: Subhas Chandra Bose and India's Struggle Against Empire. Harvard University Press. p. 18. ISBN 978-0-674-04754-9. Retrieved 22 June 2012.
  9. ↑ "Jabatan Pendaftaran Pertubuhan Malaysia". www.ros.gov.my. Retrieved 14 February 2022.

நூல்கள்

[தொகு]
  • Abdullah, Z. G., Adnan, H. N., & Lee, K. H. (1997). Malaysia, tokoh dulu dan kini = Malaysian personalities, past and present. Kuala Lumpur, Malaysia: Penerbit Universiti Malaya.
  • Anzagain Sdn. Bhd. (2004). Almanak keputusan pilihan raya umum: Parlimen & Dewan Undangan Negeri, 1959-1999. Shah Alam, Selangor: Anzagain.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._கோவிந்தராஜ்&oldid=4552244" இலிருந்து மீள்விக்கப்பட்டது