வி. கே. கானமூர்த்தி
வி. கே. கானமூர்த்தி (1948 - செப்டம்பர் 10, 2008) ஈழத்தின் புகழ் பெற்ற நாதசுவரக் கலைஞர் ஆவார். வி. கே. பஞ்சமூர்த்தியின் சகோதரர்.
வாழ்க்கைச் சுருக்கம்
[தொகு]யாழ்ப்பாணம், கோண்டாவில் மேற்கு காளி கோவிலடியைச் சேர்ந்த இவர் பிரபல நாதஸ்வர மேதை வி. கோதண்டபாணிக்கும், இராஜேஸ்வரிக்கும் மகனாகப் பிறந்தார். தனது 14 ஆவது வயதில் நாராயணசாமி என்பவரிடம் அதன்பின்னர் மாவிட்டபுரத்தைச் சேர்ந்த இராசா என்பவரிடமும் நாதசுவரக் கலையைக் கற்றார். தனது இளைய சகோதரனான பஞ்சமூர்த்தியுடன் இணைந்து பல்லாண்டுகளாக இலங்கையில் பல பாகங்களிலும், தமிழ்நாடு, மலேசியா, சிங்கப்பூர் உட்பட உலகின் பல பாகங்களுக்கும் நாதசுவரக் கச்சேரிகளை நடத்தினார்.
மார்ச் 23, 1989 இவர்கள் இருவரும் நாதஸ்வர இசைத்துறையில் பிரவேசித்த வெள்ளிவிழாவை கம்பன் கழகம், யாழ் பல்கலைக்கழகம் கைலாசபதி அரங்கில் வரலாறு காணாத விழாவாக நடத்தியது.
இவர்கள் பல்லாண்டுகளாக பல சைவ ஆலயங்கள், திருமணச் சடங்குகள் என இலங்கையின் பல பாகங்களுக்கும் சென்று நாதஸ்வரம் வாசித்து பெரும் விருதுகள், பாராட்டுகள், கௌரவங்கள் என அளப்பரியன பெற்றார்கள்.
2005 இல் இலங்கை அரசின் கலாபூசண விருதைப் பெற்றார்.
மறைவு
[தொகு]சிறிது காலம் நோய் வாய்ப்பட்டிருந்த இவர், யாழ்ப்பாண மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு செப்டம்பர் 10, 2008 இல் புதன்கிழமை இரவு 11 மணியளவில் காலமானார். இவருக்கு மூன்று ஆண் பிள்ளைகளும் இரு பெண் பிள்ளைகளும் உள்ளனர்.