வி. கனகலிங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வீகே
பிறப்புவி. கனகலிங்கம்
(1920-09-28)செப்டம்பர் 28, 1920
ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம்
தேசியம்இலங்கைத் தமிழர்
பணிஓவியர்
அறியப்படுவதுஓவியர்
சமயம்சைவ சமயம்
பெற்றோர்விசுவலிங்கம், பொன்னம்மாள்
வாழ்க்கைத்
துணை
இரத்தினேசுவரி (1949)
பிள்ளைகள்புகழேந்தி, இரவீந்திரன், கௌரி

வி. கனகலிங்கம் (செப்டம்பர் 28, 1920 - ) வீ.கே என்ற பெயரில் இலங்கையில் புகழ் பெற்ற ஓவியர் மற்றும் எழுத்தாளர்.

வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]

கனகலிங்கம் இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில், ஆனைக்கோட்டையில் விசுவலிங்கம், பொன்னம்மாள் ஆகியோருக்குப் பிறந்தவர். இவரது பேரன் ஓர் அண்ணாவியார். மாமன் கலைப்புலவர் க. நவரத்தினம். இயல்பாகவே கலை உணர்வு கொண்ட கனகலிங்கம், திருநெல்வேலி முத்துத்தம்பி வித்தியாசாலையில் ஆரம்பக் கல்வியைப் பெற்ற பின்னர் ஓவியக் கலைக்கே தனது வாழ்க்கையை அர்ப்பணித்து விட்டார்.

1942 ஆம் ஆண்டு கொழும்பில் இருந்து வெளிவரும் வீரகேசரி நாளிதழில் அச்சு ஒப்புநோக்குநர் பதவியில் பணியாற்றத் தொடங்கிய கனகலிங்கம் ஆறு மாதங்களில் ஓவியராகப் பணி உயர்வு பெற்றார். பணியாற்றிய காலத்தில் இரண்டு ஆண்டுகள் கொழும்பு கலைக் கல்லூரியில் வாரம் இரண்டு நாட்கள் உயர்தர ஓவியப் படிப்பை முடித்தார். 19 ஆண்டுகள் வீரகேசரியில் பிரதம ஓவியராகப் பணியாற்றினார்.

வீரகேசரி ஆசிரியர் கே. வி. எஸ். வாசின் மகன் மோகன் "கதம்பம்" என்ற மாத இதழை ஆரம்பித்தார். அதனை வீ.கே பொறுப்பேற்று நடத்தினார். 1959 ஆம் ஆண்டில் வீரகேசரி தொழிற்சங்கம் வேலை நிறுத்தத்தில் இறங்கியது. அதனை அடுத்து வீ.கே வீரகேசரியை விட்டு விலகினார். அதன் பின்னர் தினபதி, சிந்தாமணி ஆகிய பத்திரிகைகளில் பணிபுரிந்தார். 1970 இல் இப்பத்திரிகைகள் மூடப்படவே சொந்தமாகத் தொழில் ஆரம்பித்து ஓவியங்கள் வரைந்தார்.

1980 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் சென்ற வீ.கே. அங்கு 1986 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட உதயன், சஞ்சீவி ஆகிய பத்திரிகைகளுக்கு ஓவியம் தீட்டினார்.

வீ. கே., கனகு, சித்தார்த்தன், நிலா போன்ற பல புனைபெயர்களில் ஓவியங்கள் வரைந்தார். லிங்கம், திருவாதிரை ஆகிய புனைபெயர்களில் பல சிறுகதைகள், கட்டுரைகள் எழுதினார். தமிழ் இதழ்கள் மட்டுமல்லாமல் சிங்கள இதழ்களுக்கும் ஓவியங்கள் வரைந்தார்.

பட்டங்கள்[தொகு]

  • ஓவியமாமணி
  • வர்ண வாரிதி
  • 1965 திசம்பர் 9 இல் கொழும்பு விவேகானந்த சபையில் புலவர் கருணாலய பாண்டியனார் தலைமையில் நடைபெற்ற அ. பொ. செல்லையா எழுதிய காலத்தின் விதி நூல் வெளியீட்டு விழாவில் ஓவியமன்னர் என்ற பட்டம் வழங்கப்பட்டது.

உசாத்துணை[தொகு]

  • "ஓவியமாமணி வீகே”, பொன்விழாச் சிறப்பு மலர், கொழும்பு, 1990
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._கனகலிங்கம்&oldid=2948529" இலிருந்து மீள்விக்கப்பட்டது