உள்ளடக்கத்துக்குச் செல்

விஸ்வநாத் அண்ட் சன்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விஸ்வநாத் அண்ட் சன்ஸ்
சுவரொட்டி
இயக்கம்வெங்கீ அட்லூரி
தயாரிப்பு
  • சூர்யதேவரா நாக வம்சி
  • சாய் சௌஜன்யா
கதைவெங்கீ அட்லூரி
உரையாடல்கே. என். விஜயகுமார்
இசைஜி. வி. பிரகாஷ் குமார்
நடிப்பு
ஒளிப்பதிவுநிமிஷ் ரவி
படத்தொகுப்புநவீன் நூலி
கலையகம்
  • ஸ்ரீகரா ஸ்டுடியோஸ்
  • சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ்
  • ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ்
விநியோகம்see below
வெளியீடு14 ஆகத்து 2026 (2026-08-14)
ஓட்டம்179 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு₹120 கோடி[1]
மொத்த வருவாய்மதிப்பீடு ₹200 கோடி[2]

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் (Vishwanath & Sons) என்பது 2026 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் காதல் நாடகத் திரைப்படமாகும். [3] வெங்கீ அட்லூரி எழுதி இயக்கிய இப்படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் தயாரித்தன. இப்படத்தில் சூர்யா , மமிதா பைஜு ஆகியோருடன் ராதிகா சரத்குமார், ரவீணா டாண்டன், நாசர், ஹர்ஷா செமுடு, பவானி ஸ்ரீ , சுனில் ரெட்டி ஆகியோர் நடித்துள்ளனர். திரைப்படத்தில், துப்பாக்கிச் சுடும் விளையாட்டு வீரரான சஞ்சய் விஸ்வநாத்தின் மகனுக்கு ஒரு தீவிரமான உடல்நலப் பிரச்சினை இருப்பது கண்டறியப்படுகிறது. அதனையடுத்து, அவர் தன் குழந்தையின் வாடகைத் தாயுடன் மீண்டும் இணைகிறார்.

இப்படம், நடிகர் சூர்யா கதாநாயகனாக நடிக்கும் 46வது படம் என்பதால், சூர்யா 46 என்ற தற்காலிகப் பெயரில் 2025 மே மாதம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு, அதே மாதத்தில் முதன்மைப் படப்பிடிப்பும் தொடங்கியது. அதிகாரப்பூர்வ தலைப்பு 2026 மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. உதகை, பெலருஸ் உள்ளிட்ட பல இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று, 2026 சூன் மாதம் நிறைவடைந்தது . இப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார், நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார், நவீன் நூலி படத்தொகுப்பு செய்துள்ளார். [4]

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் 2026 ஆகத்து 14 அன்று திரையரங்குகளில் வெளியானது. விமர்சகர்களிடமிருந்து பொதுவாக நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. அவர்கள் இதன் கதைக்களம், திரைக்கதை மற்றும் சில எக்குத்தப்பான பகுதிகளை முதிர்ச்சியுடன் கையாண்ட விதத்தைப் பாராட்டினர், அதே நேரத்தில் படத்தின் யூகிக்கக்கூடியதாக இருப்பது விமர்சனத்தைப் பெற்றது. [5]

கதை

[தொகு]

2024 பாரிஸ் ஒலிம்பிக்ஸில், இந்தியாவின் பணக்கார தொழிலதிபரும் துப்பாக்கி சுடுதல் வீரருமான சஞ்சய் விஸ்வநாத் கலந்து கொள்கிறார். இறுதிப் போட்டிக்குச் சில நிமிடங்களுக்கு முன்பு, இனவெறி கொண்ட ஒரு கும்பல் அவரது துப்பாக்கியைச் சேதப்படுத்துகிறது. புதிய துப்பாக்கி கிடைக்க இரண்டு மணி நேரம் ஆகும் என்பதால், சஞ்சய் தனது தந்தை விஜய்யிடமிருந்து கற்ற திறமையைப் பயன்படுத்தித் துப்பாக்கியைத் தானே சரிசெய்து, போட்டியில் தங்கப் பதக்கம் வெல்கிறார்.

இந்தியா திரும்பிய சஞ்சயை அவரது தாய் நிர்மலா தேவி அன்புடன் வரவேற்கிறார். ஆனால், சஞ்சய் திருமணம் செய்துகொள்ளாமல் தவிர்ப்பது, குடும்ப வம்சம் நின்றுவிடுமோ என்ற கவலையை அவருக்கு ஏற்படுத்துகிறது. சான் பிரான்சிஸ்கோவிற்கு அடிக்கடி சென்று வரும் சஞ்சய், வாடகைத் தாய் மூலம் பிறந்த ஒரு ஆண் குழந்தையுடன் திரும்புகிறார். பாரம்பரிய முறையில் பேரன் பிறப்பான் என்று எதிர்பார்த்த நிர்மலா தேவிக்கு இது ஏமாற்றத்தைத் தருகிறது.

சஞ்சய் அக்குழந்தைக்கு அபய் என்று பெயரிடுகிறார். ஆரம்பத்தில் தயங்கினாலும், நிர்மலா தேவிக்குத் தன் பேரனின் மீது பாசம் கூடுகிறது. ஆனால், அபய்க்கு 'எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை' (Bone marrow transplant) செய்ய வேண்டிய ஒரு ஆபத்தான நோய் இருப்பது தெரியவருகிறது. சஞ்சயின் எலும்பு மஜ்ஜை பொருந்தாததால், வாடகைத் தாயைத் தொடர்புகொள்ள வேண்டிய சூழல் ஏற்படுகிறது. சஞ்சய் சான் பிரான்சிஸ்கோ சென்று, அக்குழந்தையின் தாய் மேடி என்ற மதனகாமேஸ்வரி ஜோதிலிங்கம் என்பதை அறிகிறார். அவர் ஒரு அனாதை மற்றும் மருத்துவக் கல்லூரி மாணவி.

தனது மருத்துவக் கல்லூரி கடன்களையும் மற்ற கடன்களையும் அடைப்பதற்காக 75,000 டாலர் பணத்திற்கு மேடி இந்த அறுவை சிகிச்சைக்குச் ஒப்புக்கொள்கிறார். இந்தியா வரும் மேடியின் சுதந்திரமான குணத்தைப் பார்த்து ஆரம்பத்தில் நிர்மலா தேவி தயங்கினாலும், பெற்றோர் விபத்தில் இறந்த மேடியின் பின்னணியை அறிந்து அவர் மீது அன்பு செலுத்துகிறார்.

சஞ்சயின் மாற்றாந்தாய் அஞ்சலியின் மகளுக்குத் திருமணம் நடக்கிறது. சஞ்சயின் தந்தை அஞ்சலியுடன் தொடர்பு வைத்திருந்த பழைய கசப்பான நினைவுகள் சஞ்சயை வாட்டுகின்றன. எனினும், நிர்மலா தேவி அஞ்சலியைத் தன் குடும்பமாக ஏற்கிறார். அபய்க்கு வெற்றி கரமாக அறுவை சிகிச்சை முடிந்ததும், மேடி சஞ்சய் மீது காதல் வயப்படுகிறார். ஆனால், இருவருக்கும் இடையே உள்ள வயது வித்தியாசத்தைக் காரணம் காட்டி சஞ்சய் அதை மறுத்து, அவரை விமான நிலையத்திற்கு வழி அனுப்பி வைக்கிறார்.

அடுத்த நாள், மேடி தன் குழந்தையின் உரிமையைக் கேட்டு சஞ்சயின் வீட்டின் முன் போராட்டம் நடத்துகிறார். இது நீதிமன்ற வழக்கு வரை செல்கிறது. இறுதியில், குடும்பத்திற்காக மேடி தன் படிப்பை இடைநிறுத்த முடிவு செய்கிறார். இதற்கிடையில், நிர்மலா தேவி இயற்கையாகக் காலமானதால் சஞ்சய் மனமுடைந்து போகிறார்.

கதை ஊட்டிக்கு நகர்கிறது. அஞ்சலி, விஜய்யின் இரண்டாவது மனைவி என்பதால் ஊர் மக்கள் அவர்களைத் தவறாகப் பேசுகிறார்கள். இதனால் அஞ்சலியின் மகள் மேகனா சிறுவயதிலிருந்தே பாதிக்கப்பட்டுள்ளார். சஞ்சய் தனது குடும்பத்தின் மரியாதையை மீட்டெடுத்து, மேகனாவின் திருமணத்தை நடத்தி, அவரைத் தன் தங்கையாக ஏற்க வைக்கிறார். இதன் மூலம் தன் பழைய கோபத்தையும் மன உளைச்சலையும் கடந்து சஞ்சய் ஒரு நல்ல மனிதராக மாறுகிறார்.

வயது வித்தியாசம் இல்லையென்றால் என்னை ஏற்றுக்கொள்வீர்களா என்று மேடி கேட்கும்போது சஞ்சய் அமைதியாக இருக்கிறார். மேடி தனது மருத்துவப் படிப்பை முடிக்க வேண்டும் என்று சஞ்சய் விரும்புகிறார். ஆறு ஆண்டுகள் கடக்கின்றன; மேடி தனது மருத்துவப் படிப்பை (MD) முடித்து, மகன் அபயுடன் நல்ல உறவைப் பேணுகிறார்.

படிப்பை முடித்த மேடியைச் சஞ்சய் அன்புடன் வரவேற்கிறார். தன் தாயின் நினைவாகத் தொடங்கும் மருத்துவமனையில் மேடிக்கு வேலை வழங்குகிறார். மீண்டும் மேடி வயது வித்தியாசத்தைப் பற்றிக் கேட்கும்போது, சஞ்சய் புன்னகையை மட்டுமே பதிலாக்குகிறார். இறுதியில், சஞ்சய், மேடி, அபய் மூவரும் ஒரு ஏரிக்கரையில் சூரிய அஸ்தமனத்தை ரசிப்பதுடன் கதை நிறைவடைகிறது.

நடிகர்கள்

[தொகு]
  • சஞ்சய் "சஞ்சு" விஸ்வநாத்தாக சூர்யா (நடிகர்) [6]
    • இளம் சஞ்சயாக அகிலன் எஸ். ஜே.
  • சஞ்சய் மீது காதலியாகயான மதனகமேஸ்வரி "மேடி ஜே" ஜோதிலிங்கமாக மமிதா பைஜு [7]
  • சஞ்சய்யின் தாயார் நிர்மலா தேவியாக ராதிகா சரத்குமார்
  • அபயாக (சஞ்சய் மற்றும் மேடியின் மகன்) குழந்தை சார்விக் ரெட்டி
  • விஜய் விஸ்வநாத்தின் இரண்டாவது மனைவியாகவும் சஞ்சய்யின் சித்தியான அஞ்சலி விஸ்வநாத்தாக ரவீணா டாண்டன்
  • வழக்கறிஞர் ராமலிங்கம் "ராமு", சஞ்சயின் உறவினர் மற்றும் சிரீஷாவின் கணவராக சுனில் ரெட்டி
  • ராமலிங்கத்தின் மனைவியும், சஞ்சயின் உறவினருமான சிரீஷா ராமலிங்கமாக கவும் ஹரிகா
  • பிரகாஷின் பெரியப்பா ராமநாதனாக நாசர்
  • கிஷோர், சஞ்சயின் உதவியாளராக ஹர்ஷா செமுடு
  • சஞ்சய்யின் தந்தைவழி தங்கையாகவும், அஞ்சலியின் மகளாகவும், பிரகாஷின் மனைவியான மேகனாவாக பவானி ஸ்ரீ.
  • மேகனாவின் கணவர் பிரகாஷ் வேடத்தில் விஜே பப்பு
  • விஜய் விஸ்வநாத், சஞ்சய் & மேகனாவின் அப்பாவாக ராஜிவ் மேனன் (பின்னணிக் குரல் சுப்பு பஞ்சு அருணாச்சலம்)
  • தங்கவேலாக மைம் கோபி
  • தங்கவேலின் அடியாளாகப் பிஜோர்ன் சுர்ராவ்
  • சிவாவாக காளி வெங்கட்
  • சிவனின் தாயார் ருக்மணியாக "நக்கலைட்ஸ்" தனம்
  • அசோக்காக ஜெயசீலன் சிவராம்
  • அசோக்கின் தந்தை முத்துசாமியாக ஜார்ஜ் மரியன்
  • ராமநாதனின் மனைவியாகவும் பிரகாஷின் பெரியம்மாவாகவும் சுதா
  • குழந்தை நலக் குழு உறுப்பினராக தீபா சங்கர்
  • குழந்தை நலக் குழு உறுப்பினராக சாம்ஸ்
  • பிரகாஷின் அம்மாவாக கல்யாணி நடராஜன்
  • பிரகாஷின் தந்தையாக மேத்யூ வர்கீஸ்
  • நீதிபதி ஆர். சண்முகமாக ரகுபாபு
  • வழக்கறிஞராக ஹைப்பர் ஆதி
  • அஞ்சலியின் தந்தை வி.சந்திரசேகர் வேடத்தில் சர்வதாமன் பானர்ஜி
  • அஞ்சலியின் தாயாக ஸ்ரீஜா ரவி
  • துரையாக கராத்தே கார்த்தி, சஞ்சயின் பாதுகாவலர்
  • சஞ்சயின் துப்பாக்கிச் சூடு பயிற்சியாளராக முக்தர் கான்
  • மேகனாவின் தோழியாக தீரா பிசாதி
  • மேடியின் தோழியாக ஐஸ்வர்யா தத்தா
  • வாடகைத் தாய் மருத்துவ நிபுணர் டாக்டர் மீனாவாக அனார்கலி மரிக்கார் (கௌரவத் தோற்றம்)

தயாரிப்பு

[தொகு]

வளர்ச்சி

[தொகு]

திரைக்கதையை வெங்கீ அட்லூரி எழுதியுள்ளார். நடுத்தர வயதுள்ள ஒரு ஆண் ஒரு இளம்பெண்ணைக் காதலிக்கும் கதையை அவர் உருவாக்கினார், ஆனால் அதன் கருப்பொருள் மிகவும் சிக்கலானதாக இருந்ததால், அதில் நடிக்க எந்த நட்சத்திர நடிகரும் ஒப்புக்கொள்ள மாட்டார்களோ என்று அவர் கவலைப்பட்டார். அட்லூரி இந்தக் கதையை 2டி எண்டர்டெயின்மெண்ட் தலைவர் ராஜசேகர் பாண்டியனிடம் கூறினார், அவருக்கு அது பிடித்திருந்தது. [8] சில நாட்கள் கழித்து, அட்லூரிக்கு அந்தக் கதையை சூர்யாவிடம் சொல்ல வாய்ப்பு கிடைத்தது. அதற்குள், அந்தக் கதை ஒரு முழுமையான திரைக்கதையாக உருவாக்கப்பட்டிருந்தது. சூர்யாவுக்கு அந்த யோசனை உடனடியாகப் பிடித்து, அதை ஒரு திரைப்படமாக உருவாக்க ஒப்புக்கொண்டார். [8] திரைக்கதை இறுதி செய்யப்படுவதற்கு முன்பு சில காட்சிகளுக்கு எண்ணற்ற வரைவுகளை (சில காட்சிகளுக்கு பத்துக்கும் மேற்பட்ட வரைவுகள் கூட) எழுதியதாக அட்லூரி கூறினார். [8]

தற்காலிகமாக சூர்யா 46 என்று பெயரிடப்பட்டு, சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸின் தயாரிப்பு எண் 33 என்றும் குறிப்பிடப்பட்ட இந்தத் திடைப்படம், 2025 மே 19 அன்று ஐதராபாத்தில் உள்ள ராமநாயுடு படப்பிடிப்பு தளத்தில் பூசையுடன் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது. இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் முதல் காட்சிப் படப்பிடிப்பைத் தொடங்கிவைத்தார். [9] [10] [11] வாத்தி (2023), லக்கி பாஸ்கர் (2024) ஆகிய படங்களின் மூலம் தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற்றிருந்த அட்லூரியுடன் சூர்யாவின் இணையும் முதல் கூட்டணியாக இது உருவானது. [12]

வார்ப்பு

[தொகு]

மமிதா பைஜு கதாநாயகியாக நடித்தார். ரவீணா டாண்டன் , ராதிகா சரத்குமார் ஆகியோரும் இப்படத்தில் நடித்தனர். [12] கஜினி (2005) பார்த்ததிலிருந்து சூர்யாவை ரசித்து வருவதாக மமிதா கூறினார், மேலும் அவருடன் பணிபுரியும் வாய்ப்பை முன்பு தவறவிட்டதாகவும் கூறினார். [13] 2001 ஆம் ஆண்டு வெளியான ஆளவந்தான் திரைப்படத்தில் நடித்ததைத் தொடர்ந்து, 24 ஆண்டுகளுக்குப் பிறகு டாண்டன் இப்படத்தின் வழியாக மீண்டும் தமிழ்த் திரைப்படத்தில் நடித்தார்.

படப்பிடிப்பு

[தொகு]

படத்தின் துவக்க விழாவைத் தொடர்ந்து, 2025 ஜூன் 9 அன்று முதன்மைப் படப்பிடிப்பு தொடங்கியது, அந்த நேரத்தில் தயாரிப்பாளர்கள் படத்தின் அதிகாரப்பூர்வ முதல் தோற்ற சுவரொட்டியை வெளியிட்டனர். [14] இந்தியாவில், ஊட்டி [15] , ஐதராபாத் [16] [17] போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. இந்தப் படம் ஐரோப்பா முழுவதும் விரிவாகப் படமாக்கப்பட்டது, இதில் ஒரு முக்கிய படப்பிடிப்பு பெலருசில் நடைபெற்றது. [18] லக்கி பாஸ்கர் படத்தில் அட்லூரியுடன் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் பலரும் இப்படத்தில் இணைந்தனர். இவர்களில் ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவி, தயாரிப்பு வடிவமைப்பாளர் பங்ளான் மற்றும் படத்தொகுப்பாளர் நவீன் நூலி ஆகியோர் அடங்குவர். [4] [10] 2026 சூனில் படப்பிடிப்பு நிறைவடைந்தது. [19]

இசை

[தொகு]

இப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையை ஜி. வி. பிரகாஷ் குமார் அமைத்துள்ளார். வாத்தி , லக்கி பாஸ்கர் படங்களுக்குப் பிறகு இயக்குநர் அட்லூரியுடன் மீண்டும் இணைந்தார். மேலும் சூரரைப் போற்று (2020) படத்திலிருந்து சூர்யாவுடன் இவர் கொண்டுள்ள இசைப் பயணத்தையும் இது தொடர்கிறது. [4] படத்தின் இசை சார்ந்த விளம்பர நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, தமிழில் 'பட்டம்பூச்சி' என்றும் தெலுங்கில் 'நேனோ பட்டர்ஃபிளை' என்றும் பெயரிடப்பட்ட முதல் தனிப்பாடல் வெளியிடப்பட்டது. இரு பதிப்புகளிலும் சுப்லஷினி இப்பாடலைப் பாடினார். தமிழப் பாடல் வரிகளை, அருண்ராஜா காமராஜ் எழுதினார். [20]

தமிழ்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "பட்டாம்பூச்சி"  சுப்லஷினி 3:29
2. "திருமணப் பாடல்"  சூர்யா 3:16
3. "தி ஒன் ரூல்"  கானா காதர் 2:49
4. "பால்மழை"  வித்யா கல்யாணராமன் 3:44
5. "உயிரே உயிரே"  அதிதி பவராஜு 3:26
மொத்த நீளம்:
16:44

சந்தைப்படுத்தல்

[தொகு]

2026 மார்ச்சில் படத்தின் தலைப்பு வெளியிடப்பட்டது, தயாரிப்பாளர்கள் 2026 மார்ச் 16 அன்று படத்தின் டீசர் வெளியாகும் என்று அறிவித்தனர். அந்த தேதியில் வெளியான டீசர், சூர்யாவை சஞ்சய் விஸ்வநாத்தாக அறிமுகப்படுத்தியதுடன், நடிகரின் தோற்றத்தையும் படத்தின் தொனியையும் பார்வையாளர்கள் பாராட்டியதால் இணையத்தில் பலாராலும் பார்க்கபட்டது. [21] இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா 2026 ஆகத்து 2 அன்று கோயம்புத்தூரில் உள்ள இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. [22]

வெளியீடு

[தொகு]

திரையரங்கில்

[தொகு]

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம், விடுதலை நாள் வார இறுதியை முன்னிட்டு, 2026 ஆகத்து 14 அன்று திரையரங்குகளில் வெளியானது. தயாரிப்பாளர் நாக வம்சி 28 மே 2026 அன்று தேதியை உறுதிப்படுத்தினார், இது முதலில் அறிவிக்கப்பட்ட 2026 சூலை கால அட்டவணையிலிருந்து ஒரு மாற்றமாகும். [4] அசல் தமிழ் மொழிப் பதிப்புடன், இது தெலுங்கு மொழிமாற்றுப் பதிப்பிலும் வெளியிடப்பட்டது. [23] படம் வெளியாவதற்கு முன்பு, இதன் வெளியீட்டிற்கு முந்தைய வியாபாரம் ₹300 கோடி (ஐஅ$35 மில்லியன்) தாண்டியதாகத் தெரிவிக்கப்பட்டது. [24] இந்த திரைப்படம் 2026 ஆகத்து 13 அன்று அமெரிக்காவில் திரையிடப்பட்டது.

வீட்டு ஊடகம்

[தொகு]

திரையரங்குகளுக்குப் பிந்தைய எண்ணியல் வெளியீட்டு உரிமைகளை நெற்ஃபிளிக்சு வாங்கியுள்ளது, மேலும் இப்படம் திரையரங்குகளில் வெளியான பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் ஒளிபரப்பப்படும் என்று கூறப்படுகிறது. [25]

வரவேற்பு

[தொகு]

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் 2026 ஆகத்து 14 அன்று திரையரங்குகளில் வெளியானது. விமர்சகர்களிடமிருந்து பொதுவாக நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. அவர்கள் இதன் கதைக்களம், திரைக்கதை மற்றும் சில எக்குத்தப்பான பகுதிகளை முதிர்ச்சியுடன் கையாண்ட விதத்தைப் பாராட்டினர், அதே நேரத்தில் படத்தின் யூகிக்கக்கூடியதாக இருப்பது விமர்சனத்தைப் பெற்றது. [26]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "'Vishwanath And Sons': Here's why Suriya and Mamitha Baiju's family entertainer has big expectations ahead of August 14 release". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (in ஆங்கிலம்). 12 August 2026. Retrieved 14 August 2026.
  2. ↑ ராகேஷ் (29 August 2026). "Vishwanath And Sons OTT Release Date: அதுக்குள்ள ஓடிடியில் ரிலீஸாகும் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்'.. எப்போ, எதில் பார்க்கலாம்?". Times Now. Retrieved 29 August 2026.
  3. ↑ IANS (2026-08-14). "Suriya's 'Vishwanath & Sons' director Venky Atluri pens note of gratitude as film gears up to hit screens". DT Next (in ஆங்கிலம்). Retrieved 2026-08-14.
  4. 1 2 3 4 "'Vishwanath and Sons': Suriya and Mamitha Baiju's Film Locks August Release". The Hollywood Reporter India. 28 May 2026. Archived from the original on 16 July 2026. Retrieved 24 June 2026.
  5. ↑ S, Avinash Ramachandran, Prashanth Vallavan, Akshay Kumar, Ashwin (2026-08-13). "Age is but a number..." தி நியூ இந்தியன் எக்சுபிரசு (in ஆங்கிலம்). Retrieved 2026-08-14.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link)
  6. ↑ "'Vishwanath And Sons' Teaser To Release On THIS Date! Suriya And Venky Atluri Movie Poster Out". NewsX. 14 March 2026. Archived from the original on 15 March 2026. Retrieved 24 June 2026.
  7. ↑ Chauhan, Manisha (17 March 2026). "'Vishwanath and Sons' Teaser: Suriya, Mamitha Baiju in Venky Atluri's Romantic Tamil Movie". NewsX. Archived from the original on 18 March 2026. Retrieved 24 June 2026.
  8. 1 2 3 Srinivasan, Latha (31 July 2026). "'He Never Took The Easy Route': Vishwanath And Sons Director Venky Atluri On Working With Suriya". என்டிடிவி. Archived from the original on 13 August 2026. Retrieved 7 August 2026.
  9. ↑ "Director Venky Atluri's film with Suriya goes on floors with grand pooja". Sakshi Post. 19 May 2025. Archived from the original on 13 August 2026. Retrieved 24 June 2026.
  10. 1 2 "Suriya–Venky Atluri's film gets a grand launch with pooja ceremony". The Hans India. 19 May 2025. Archived from the original on 26 August 2025. Retrieved 24 June 2026.
  11. ↑ "Suriya and Mamitha Baiju's Film With Venky Atluri Launched". The Hollywood Reporter India. 21 May 2025. Archived from the original on 8 February 2026. Retrieved 24 June 2026.
  12. 1 2 "Suriya–Venky Atluri Film: Shooting Starts May 2025, Targeting Summer 2026 Release". Sakshi Post. 19 May 2025. Archived from the original on 13 August 2026. Retrieved 24 June 2026.
  13. ↑ "Mamitha Baiju calls 'Vishwanath And Sons' co-star Suriyaan 'inspiration and a gentleman'; reveals she missed an earlier chance to work with him". The Times of India. 3 August 2026. Retrieved 13 August 2026.
  14. ↑ "'Suriya 46' with Venky Atluri Begins Filming, Makers Release First Look". The Hollywood Reporter India. 12 June 2025. Archived from the original on 13 August 2026. Retrieved 24 June 2026.
  15. ↑ "Venky Atluri on Collaborations: 'When You Come to Telugu, You Have to Work According to a Telugu Mindset'". The Hollywood Reporter India. 29 July 2026. Archived from the original on 13 August 2026. Retrieved 13 August 2026.
  16. ↑ "Suriya returns to Hyderabad to wrap 'Suriya 46' as work begins on his 'Suriya 47' movie". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 8 December 2025. Archived from the original on 31 January 2026. Retrieved 7 August 2026.
  17. ↑ "Actor Suriya in Hyderabad with daughter Diya for Venky Atluri's upcoming film shoot". இந்தியா டுடே. 9 June 2025. Archived from the original on 16 March 2026. Retrieved 7 August 2026.
  18. ↑ "Suriya 46: Venky Atluri's film shoot moves to Europe; fans demand 'Karuppu' release date". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 8 October 2025. Archived from the original on 31 July 2026. Retrieved 7 August 2026.
  19. ↑ Tanmayi, Bhawana (23 June 2026). "Suriya and Mamitha Baiju's Vishwanath and Sons release gets much-needed boost". Moneycontrol.
  20. ↑ "Vishwanath And Sons First Single 'Pattampoochi' Emerges as the Next Big Musical Sensation". Chennai City News. 22 June 2026. Archived from the original on 13 August 2026. Retrieved 24 June 2026.
  21. ↑ Gothi, Harshita (16 March 2026). "Suriya's 'Vishwanath and Sons' Teaser Dropped". NewsX. Archived from the original on 17 March 2026. Retrieved 24 June 2026.
  22. ↑ "Get Ready for the Grand Celebration 🥳" (Tweet). 31 July 2026. Retrieved 8 August 2026. Missing or empty |user= (help); Missing or empty |number= (help)
  23. ↑ "Vishwanath and Sons (2026) – Cast, Reviews & Showtimes". District. Archived from the original on 12 July 2026. Retrieved 24 June 2026.
  24. ↑ "Suriya's Viswanath and Sons OTT Rights Sold". தி டெக்கன் குரோனிக்கள். 17 July 2026. Archived from the original on 18 July 2026. Retrieved 7 August 2026.
  25. ↑ "'Vishwanath and Sons' OTT release: Suriya starrer to stream on THIS platform after theatrical run". The Times of India (in ஆங்கிலம்). 2026-03-18. Retrieved 2026-08-14.
  26. ↑ S, Avinash Ramachandran, Prashanth Vallavan, Akshay Kumar, Ashwin (2026-08-13). "Age is but a number..." தி நியூ இந்தியன் எக்சுபிரசு (in ஆங்கிலம்). Retrieved 2026-08-14.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link)

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=விஸ்வநாத்_அண்ட்_சன்ஸ்&oldid=4645576" இலிருந்து மீள்விக்கப்பட்டது