விஸ்மா புத்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

விஸ்மா புத்ரா (மலாய்: Wisma Putra) என்பது, மலேசியாவின் வெளியுறவு அமைச்சைக் குறிப்பிடும் சொல் ஆகும். அதே வேளையில், புத்ராஜெயாவில், அமைக்கப்பட்டு இருக்கும் மலேசிய வெளியுறவு அமைச்சகத்தின் வளாகமும், விஸ்மா புத்ரா என்றே அழைக்கப் படுகிறது.

மலாய் மொழியில் விஸ்மா என்றால் மாளிகை அல்லது பெரும் கட்டடம். புத்ரா என்றால் மண்ணின் மைந்தர். மலேசியாவின் கூட்டாட்சி நிர்வாகத் தலைநகரமாக விளங்கும் புத்ராஜெயாவில், விஸ்மா புத்ரா வளாகம் அமைந்து உள்ளது. இந்த விஸ்மா புத்ரா வளாகம், 170 மில்லியன் ரிங்கிட் செலவில் உருவாக்கப்பட்டது. 2001 செப்டம்பர் 17-ஆம் தேதி, மலேசியாவின் முன்னாள் பிரதமர் துன் மகாதீர் பின் முகமது அவர்களால், அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.[1]

வரலாறு[தொகு]

மலேசிய வெளியுறவு அமைச்சை உருவாக்கும் திட்டம் 1956-ஆம் ஆண்டிலே தொடங்கியது. 1955-ஆம் ஆண்டு, மலாயாவின் முதல் கூட்டரசு தேர்தல் நடந்து முடிந்ததும், துங்கு அப்துல் ரஹ்மான் அவர்களின் அலுவலகத்திலேயே மலேசிய வெளியுறவு அமைச்சு அமைக்கப்பட்டது. அப்போது அந்த அமைச்சு, மலாயா கூட்டரசின் வெளிவிவகார அமைச்சு என்று அழைக்கப்பட்டது.[2]

மலேசிய வெளியுறவு அமைச்சு அமைக்கப்பட்டதும், பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு 11 பேர் முதன்முறையாக அரசத் தந்திரப் பயிற்சிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர், இவர்களில் சிலர் உலக நாடுகளுக்கு மலாயாவின் தூதர்களாக நியமிக்கப்பட்டனர்.

புத்ராஜெயாவிற்கு இடமாற்றம்[தொகு]

அதன் பின்னர், 1966-ஆம் ஆண்டு, மலாயாவின் வெளிவிவகார அமைச்சு என்பது மலேசிய வெளியுறவு அமைச்சு என்று பெயர் மாற்றம் கண்டது. கோலாலம்பூர், புக்கிட் பெட்டாலிங் எனும் இடத்திற்கு இடப்பெயர்வும் செய்யப்பட்டது. அப்போது இருந்து, மலேசிய வெளியுறவு அமைச்சு, இன்று வரையில் விஸ்மா புத்ரா என்று அழைக்கப்படுகிறது. இதற்கிடையில், 2001 செப்டம்பர் 17-ஆம் தேதி, புத்ராஜெயாவிற்கு நிரந்தரமாக இடம் மாறியது.

மலேசியாவின் முதல் தூதரகங்கள் லண்டன், வாஷிங்டன், கான்பெரா, நியூயார்க், புதுடில்லி, ஜகார்த்தா, பாங்காக் ஆகிய நகரங்களில்தான் அமைக்கப்பட்டன. 1963-ஆம் ஆண்டில் 14 நாடுகளில் தூதரகங்கள் தோற்றுவிக்கப்பட்டன. 1966-இல், அதுவே 21 நாடுகளாகின. இப்போது, 105 நாடுகளில் மலேசியாவின் தூதரகங்கள் செயல்பட்டு வருகின்றன.[3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விஸ்மா_புத்ரா&oldid=3229017" இருந்து மீள்விக்கப்பட்டது