உள்ளடக்கத்துக்குச் செல்

விழும் பூனையின் தற்காப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விழும் பூனை - எட்டியென்-ஜூல்ஸ் மேரியின் காலவரிசை ஒளிப்படத்தில் பிடிக்கப்பட்ட படங்கள் ( நேச்சர் இதழில் காட்டப்பட்டுள்ளது, 1894)

பூனையின் நேர்நிமித்துத் தெறிவினை (Cat righting reflex) என்பது, தவறி விழும் பூனை தன் கால்களை கீழ்நோக்கித் திருப்ப மேற்கொள்ளும் ஒரு செயல் திறனாகும். இந்த அனிச்சைத் திறன் பூனைகளுக்கு 3–4 வார வயதில் தோன்றத் தொடங்கி, 6–9 வாரங்களில் முழுமையடைகிறது. [1] பூனைகளுக்கு வழக்கத்திற்கு மாறாக நெகிழ்வான முள்ளந்தண்டு நிரல் உள்ளதும், செயல்பாடு காறை எலும்பு இல்லாததால் இதைச் செய்ய முடிகிறது. இதற்கு வால் உதவுவதாகத் தெரிகிறது, ஆனால் வால் இல்லாத பூனைகளும் இந்தத் திறனைக் கொண்டுள்ளன. ஏனெனில் பூனை பெரும்பாலும் அதன் கால்களை நகர்த்துவதன் மூலமும், அதன் முள்ளந்தண்டு நிரலை ஒரு குறிப்பிட்ட வகையில் திருப்புவதன் மூலமும் தன்னை தற்காத்துக் கொள்கிறது. [2]

இந்த அனிச்சை செயலுக்கு பூனைகள் மிகவும் பிரபலமான எடுத்துக்காட்டாக இருந்தாலும், கீழே விழுகையில் இவை மட்டுமே திரும்பும் திறனைக் கொண்டவை என்று எண்ண முடியாது. இதே திறனை முயல்கள், [3] எலிகள், [4] பல்லிகள் மற்றும் கணுக்காலிகள் (எ.கா. குச்சி பூச்சிகள் ) போன்ற சில சிறிய முதுகெலும்பற்ற உயிரினங்களிடமும் காணப்படுகின்றன.[5]

நுட்பம்

[தொகு]
சம்பந்தப்பட்ட இயக்கத்தின் திட்ட இயங்குபடம்
சாதாரண ஈர்ப்பு விசையிலும் ஈர்ப்பு விசை இல்லாமலும் விழும் பூனைகள்

பார்வையிலோ அல்லது அவற்றின் அங்கண மண்டலத்தைப் பயன்படுத்தியோ ( உள் காதில் ) மேலிருந்து கீழாகக் தான் விழுவதை உணர்ந்த பிறகு, பூனைகள் கீழ்நோக்கி முகத்தைத் திருப்புகின்றன. கோண உந்த மாறாவிதி என்னும் இயற்பியல் விதியின் கீழ் இந்த முக்கிய படிகளைப் பயன்படுத்தி லாவகமாக இதைச் சாதிக்கின்றன:

  1. உடலில் இடுப்புக்கு மேல் உள்ள பாதியை ஒரு திசையிலும், கீழ்பாதி உடலை அதற்கு எதிர் திசையிலும் சுழற்றி நடுவில் வளைக்கிறது.
  2. உடலின் முன் பாதியின் நிலைமத் திருப்புத்திறனைக் குறைக்க அவற்றின் முன் கால்களை உடலை ஒட்டி வைத்துக் கொள்வதால், அதன் திருப்புத் திறன் குறைகிறது எனவே உடலின் மேல்பாகம் அதிக கோணத்தில், அதாவது அவற்றின் முன்பாகத்தை 90° வரை சுழற்ற இயலும். அதேசமயம் அது தன் பின்புற கால்களையும், வாலையும் நீட்டி வைத்துக் கொள்கின்றன. இதனால் பின்பாகத்தின் திருப்புத் திறன் கூடுதலாக இருக்கும், அதாவது பின்புறப் பாதி எதிர் திசையில் 10° வரை சுழலும். இதன்மூலம் கோண உந்தம் மாறாமல் இருக்கும்.
  3. அதேபோல இரண்டாவது நிலையில் சுழலும்போது முன்புறக் கால்களை நன்கு நீட்டியும், பின்புறக் கால்களை உடலை நோக்கி நன்கு மடித்தும் கொள்கின்றன. இவ்வாறான நிலையில் முதலில் முன்னங்கால்கள் தரையைத் தொட்டபிறகே பின்னங்கல்கள் தரையைத் தொடும். கால்கள் முதலில் தரையைத் தொட்டு, கால்கள் மடங்கிச் சில மில்லி நொடிகள் கழித்து, உடல் தரையில் படுவதால் உந்து விசை குறைவாகவே இருக்கும். மாறாக தரையில் உடல் முதலில் பட்டால் அதன் உந்துவிசை மிக்க் கூடுதலாகி உடலின் உள்ளுருப்புகளுக்கு சேதம் ஏற்படும்.

சிலசமயங்களில் பூனை அந்தரத்தில் முழுமையான 180° சுழற்சியை முடிக்க இரண்டு மற்றும் மூன்று படிகளை மீண்டும் மீண்டும் செய்ய வேண்டியிருக்கும். [6] [7] [8]

முனைய வேகம்

[தொகு]

பூனைகள் விழுவதால் அதன் உடல் பாதிக்கப்படாமல் இருக்க மேலும் சில அம்சங்களை அவற்றின் உடல் கொண்டுள்ளன. அதாவது அவற்றின் சிறிய உடல் அளவு, லேசான எலும்பு அமைப்பு, அடர்த்தியான முடி ஆகியவை அதன் திசை வேகத்தைக் குறைக்கின்றன. விழும்போது, பூனை அதன் தடைவிசையை அதிகரிக்க தன் உடலை விரிக்கிறது.[9] சராசரி அளவுள்ள பூனை, அதன் முன், பின் கால்கள் நீட்டிய நிலையில், மணிக்கு சுமார் 60 மைல் (97 கிமீ/மணிக்கு) என்ற இறுதி வேகத்தை அடைகிறது. இது சராசரி அளவுள்ள மனிதனின் விழும்போது வரும் திசை வேகத்தில் பாதியளவு ஆகும். மனிதன் மணிக்கு 120 மைல் (190 கிமீ/மணிக்கு) என்ற இறுதி வேகத்தை அடைகிறான்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Sechzera, Jeri A.; Folsteina, Susan E.; Geigera, Eric H.; Mervisa, Ronald F.; Meehana, Suzanne M. (December 1984). "Development and maturation of postural reflexes in normal kittens". Experimental Neurology 86 (3): 493–505. doi:10.1016/0014-4886(84)90084-0. பப்மெட்:6499990. 
  2. Nguyen, Huy D. "How does a Cat always land on its feet?". Georgia Institute of Technology, School of Medical Engineering. Archived from the original on 2001-04-10. Retrieved 2007-05-15.
  3. Schönfelder, J. (March 1984). "The development of air-righting reflex in postnatal growing rabbits". Behavioural Brain Research 11 (3): 213–221. doi:10.1016/0166-4328(84)90213-4. பன்னாட்டுத் தர தொடர் எண்:0166-4328. பப்மெட்:6721914. 
  4. Yan, Xinping; Okito, Kazuyoshi; Yamaguchi, Takashi (March 2010). "Effects of superior colliculus ablation on the air-righting reflex in the rat". The Journal of Physiological Sciences 60 (2): 129–136. doi:10.1007/s12576-009-0076-0. பன்னாட்டுத் தர தொடர் எண்:1880-6562. பப்மெட்:20047100. 
  5. Jusufi, Ardian; Zeng, Yu; Full, Robert; Dudley, Robert (19 September 2011). "Aerial Righting Reflexes in Flightless Animals". Integrative and Comparative Biology 51 (6): 937–943. doi:10.1093/icb/icr114. பப்மெட்:21930662. https://academic.oup.com/icb/article/51/6/937/617190. 
  6. Fink, Hardy (February 1997). "An insight into the Biomechanics of Twisting". Technique (USA Gymnastics) 17. http://www.usa-gymnastics.org/publications/technique/1997/2/twisting.html. பார்த்த நாள்: 2007-12-26. 
  7. Calle, Carlos I. (2001-10-10). Superstrings and Other Things: A Guide to Physics. CRC Press. pp. 106, 107. ISBN 9780750307079. Retrieved 2008-06-04.
  8. Kane, Thomas; Scher, M. P. (1969). "A dynamical explanation of the falling cat phenomenon". International Journal of Solids and Structures 5 (7): 663–670. doi:10.1016/0020-7683(69)90086-9. 
  9. Hutchinson, J.R. (11 January 1996). "Vertebrate Flight: Gliding and Parachuting". University of California Museum of Paleontology. Retrieved 22 December 2016.