வில்லிவாக்கம் ஏரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வில்லிவாக்கம் ஏரி
அமைவிடம்வில்லிவாக்கம், சென்னை, இந்தியா
வகைகுளம்
முதன்மை வெளியேற்றம்ஓட்டேரி நீரோடை
வடிநில நாடுகள்இந்தியா
மேற்பரப்பளவு36.34 ஏக்கர்கள் (14.71 ha)
குடியேற்றங்கள்சென்னை

வில்லிவாக்கம் ஏரி (Villivakkam lake) என்பது இந்தியாவில், தமிழ்நாட்டில் சென்னையில் வில்லிவாக்கம் பகுதியில் 36.34 ஏக்கர் பரப்பளவிற்குப் பரந்து விரிந்து பரவியுள்ள ஏரியாகும். இந்த ஏரியானது வில்லிவாக்கத்திற்கு தெற்குப் பகுதியிலும், அதிக மக்களடர்த்தியைக் கொண்ட சிட்கோ நகருக்கு அருகாமையிலும் அமைந்துள்ளது. இந்த ஏரியானது ஓட்டேரி நீரோடையுடன் கலக்கிறது. இந்த ஏரியானது சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்திற்கு சொந்தமானது.[1]

பரப்பெல்லை மற்றும் வடிகால்[தொகு]

சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை பயன்பாட்டில் இருந்த இந்த ஏரியானது இன்னும் பெரியதாக இருந்திருக்கும். 1972 ஆம் ஆண்டில் உள்ள ஒரு மதிப்பீடானது இந்த ஏரியானது, சற்றேறக்குறைய 214 ஏக்கர்கள் பரப்பு கொண்டதாக இருந்திருக்கும் எனத் தெரிவிக்கிறது. இருப்பினும், இந்த ஏரியின் தற்போதைய நீர்ப்பரப்பானது 20 ஏக்கர்கள் அளவிற்கு சுருங்கியுள்ளது.[2] இந்த ஏரியின் எல்லைகளாக சவகர்லால் நேரு சாலை (உள் வட்டச் சாலை), மேற்கில் பாடி தொடருந்து நிலையம், தெற்கில் சென்னை–திருவள்ளூர் நெடுஞ்சாலை, கிழக்கில் சிட்கோ நகர் தொழிற்பேட்டை மற்றும் வடக்கில் குடியிருப்புப் பகுதிகளும் சூழ்ந்துள்ளன. ஏரியின் மிகை நீரானது தற்போது ஓட்டேரி நீரோடையின் தென்பகுதியில் திறந்து விடப்படுகிறது.[3]

ஆக்கிரமிப்புகள்[தொகு]

1972 ஆம் ஆண்டில் 214 ஏக்கர் பரப்பைக் கொண்டிருந்த ஏரி தற்போது கட்டிடங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளால் 83 விழுக்காட்டிற்கு சுருங்கி 2017 ஆம் ஆண்டில் 36.34 ஏக்கர்கள் என்ற அளவிற்கு வந்துள்ளது. ஆக்கிரமிப்புகளுக்கும் மேலாக, இந்த ஏரியானது கட்டிட இடிபாடுகளாலும், சட்டபூர்வமற்ற குடியேற்றங்களாலும், தொடருந்துப் பாதை மறறும் உயர் மின்னழுத்த கம்பிகளாலும் சுருங்கிப் போயுள்ளது. மேற்கு மற்றும் தெற்குப் பகுதிகள் மிக அதிகமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதிகளாக உள்ளன.[3]

வளர்ச்சி[தொகு]

2017 ஆம் ஆண்டில், சென்னை மாநகராட்சி சுற்றுச்சூழலைத் தக்க வைத்துக் கொள்ள திட்டம் ஒன்றைத் தீட்டியது. இத்திட்டத்தின்படி, இந்த ஏரியில் மிதக்கும் தோட்டங்கள் ஏற்படுத்தப்பட்டன. இதன்படி மிதவைகளில் மருந்தூட்டத் தாவரங்கள் உருவாக்கப்பட்டு, அவற்றின் மூலம் ஏரியின் மாசுபாடுகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. எஞ்சியிருந்த 36.34 ஏக்கர் பரப்பில் சென்னைப் பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்றல் வாரியமானது, 11.5 ஏக்கர் நிலப்பரப்பை, கழிவுநீர் சுத்திகரிக்கும் செயல்முறைக்காக எடுத்துக் கொண்டது. ஆகையால், ஏரியின் 24.84 ஏக்கர் நிலப்பரப்பு மட்டுமே சுற்றுச்சூழலைத் தக்க வைப்பதற்கு ஏதுவாக உள்ளது.[3] இத்திட்டத்தின் பணிகள் 2018 ஆம் ஆண்டில் 16 கோடி செலவில் தொடங்கப்பட்டது.[1] [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Srikanth, R. (9 May 2018). "Villivakkam lake all set for a facelift". The Hindu (Chennai: Kasturi & Sons). https://www.thehindu.com/news/cities/chennai/villivakkam-lake-all-set-for-a-facelift/article23817439.ece. பார்த்த நாள்: 20 October 2018. 
  2. "Time to restore vanishing water bodies". Madras Musings XXVIII (2). May 1–15, 2018. http://www.madrasmusings.com/vol-28-no-2/time-to-restore-vanishing-water-bodies/. பார்த்த நாள்: 21 October 2018. 
  3. 3.0 3.1 3.2 Lopez, Aloysius Xavier (15 November 2017). "Villivakkam lake loses 177 acres to encroachments". The Hindu (Chennai: The Hindu). http://www.thehindu.com/news/cities/chennai/villivakkam-lake-loses-177-acres-to-encroachments/article20446713.ece. பார்த்த நாள்: 18 Nov 2017. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வில்லிவாக்கம்_ஏரி&oldid=3613173" இலிருந்து மீள்விக்கப்பட்டது