வில்லியம் டி. ஜி. மோர்ட்டோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வில்லியம் மார்ட்டன்
பிறப்பு(1819-08-09)9 ஆகத்து 1819
சார்ல்டன், மசாசுசேட்ஸ்
இறப்பு15 சூலை 1868(1868-07-15) (அகவை 48)
நியூயார்க் நகரம்
தேசியம்ஐக்கிய அமெரிக்கா
துறைபல் மருத்துவம்
அறியப்படுவதுஅறுவை சிகிச்சையில் ஈதர் பயன்பாடு
தாக்கம் 
செலுத்தியோர்
சார்லஸ் டி. ஜேக்சன்
ஹொரேஸ் வெல்ஸ்
துணைவர்எலிசபெத் வைட்மேன்

வில்லியம் தாமஸ் கிரீன் மார்ட்டன் (William Thomas Green Morton, ஆகஸ்ட் 9, 1819ஜூலை 15, 1868) அமெரிக்கப் பல் மருத்துவர்; அறுவை சிகிச்சை வல்லுநர். மனிதனின் உணர்ச்சி நிலையில் ஆழ்ந்த மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய கண்டுபிடிப்பான நோவை உணராவண்ணம் உணர்ச்சி மயக்கமூட்டும் முறையை (Anaesthesia) பயன் படுத்துவதைப் புகுத்துவதற்கு மூல காரணமாக விளங்கியவர். நோயாளி விழித்திருக்கும்போதே, அறுவை சிகிச்சை மருத்துவர் அவரது எலும்புகளில் அரத்தைப் பாய்ச்சி அறுப்பது என்ற கொடிய வேதனை மிக்க முறைக்கு முற்றுப் புள்ளி வைக்க உதவியவர். ஈதரை மயக்க மருந்தாகப் பயன்படுத்தி அறுவை சிகிச்சையில் நோய் உணராவண்ணம் செய்தவர்.

இளமை[தொகு]

அமெரிக்காவில் மாசாசூசெட்ஸ் மாநிலத்தில் சார்ல்ட்டன் நகரில் 1819 ஆம் ஆண்டில் மோர்ட்டோன் பிறந்தார்.. இளமைப் பருவத்தில் பால்டிமோர் பல் மருத்துவக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றார். 1842 -ல் இவர் ஹோரெல் வேல்ஸ் என்ற பல் மருத்துவருடன் கூட்டு சேர்ந்து பல் மருத்துவத் தொழில் நடத்தினார். வேல்ஸ் உம் உணர்ச்சி மயக்க முறையில் ஆர்வம் கொண்டிருந்தார். ஆனால் 1843 -ல் இந்த கூட்டுத் தொழில் முடிவுற்றது.

பணிகள்[தொகு]

மோர்ட்டோன் தமது மருத்துவத் தொழிலில் செயற்கைப் பற்களைப் பொருத்துவதில் தனித் திறமை பெற்றவராக விளங்கினார். செயற்கைப் பற்களைப் பொருத்துவதற்கு முதலில் பழைய பல்லின் வேரை அப்புறப்படுத்த வேண்டியிருந்தது. பல்லின் வேர்களைப் பிடுங்குவது மிகவும் வேதனையைத் தந்தது. இதற்கு எதேனும் ஒருவகை மயக்க மருந்தைக் கண்டுபிடிப்பது இன்றியமையாததாயிற்று.

1844 -ல் இவரின் பழைய கூட்டாளியான வேல்ஸ் ' சிரிப்பூட்டும் வாயு' எனப்பட்ட நைட்ரஸ் ஆக்சைடை வலி நீக்கும் மயக்க மருந்தாகப் பயன்படுத்தி பரிசோதனைகள் நடத்தலானார். கனக்டிக்கட் மாநிலத்தில் ஹார்ட்ஃபோர்டில் மருத்துவத் தொழிலாற்றும் போது நைட்ரஸ் ஆக்சைடைப் பல் நோய் சிகிச்சையில் வேல்ஸ் பயன் படுத்தினார். ஆனால், பாஸ்டனில் இந்த முறையைப் பொதுமக்களுக்குச் செயல் விளக்கம் செய்து காட்ட இவர் முயன்றபோது தோல்வியுற்றார்.
மோர்ட்டோன் தமது நோக்கங்களுக்கு நைட்ரஸ் ஆக்ஸைடு போதிய அளவுக்குப் பயனுடையதாக இராது என்பதை உணர்ந்தார். அதை விட ஆற்றல் வாய்ந்த ஒரு மருந்தைக் கண்டுபிடிப்பதில் தீவிரமாக ஈடுபட்டார். சார்லஸ் டி. ஜேக்சன் என்பவர் ஒரு மருத்துவ வல்லுநராகவும், விஞ்ஞானியாகவும் விளங்கியவர், அவர் மோர்ட்டோனிடம் ஈதரை(Ether) மயக்க மருந்தாகப் பயன்படுத்திப் பார்க்கும்படி ஆலோசனை கூறினார். ஈதருக்கு உணர்ச்சி மயக்கமூட்டுகிற பண்பு உண்டு என்பதை 300 ஆண்டுகளுக்கு முன்னரே பாராசெல்சஸ் (Paracelsus) என்ற புகழ் பெற்ற சுவிஸ் மருத்துவர் கண்டுபிடித்திருந்தார். 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் இது பற்றிய ஓரிரு அறிக்கைகள் வெளியாகி இருந்தன. ஆனால் ஈதர் பற்றி எழுதிய ஜாக்சனோ வேறு எவருமோ இந்த வேதிப் பொருளை அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தியதில்லை.

உசாத்துணை[தொகு]

  • மைக்கேல் ஹெச்.ஹார்ட், 100 பேர் (புதிய வரலாறு படைத்தோரின் வரிசை முறை), மீரா பதிப்பகம்-2008