வில்மா எஸ்பின்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. (மே 2019) |
வில்மா எஸ்பின் Vilma Espín Guillois | |
---|---|
பிறப்பு | 7 ஏப்பிரல் 1930 சாண்டியாகோ டே குபா |
இறப்பு | 18 சூன் 2007 (அகவை 77) அவானா |
கல்லறை | கியூபா |
வாழ்க்கைத் துணை/கள் | ராவுல் காஸ்ட்ரோ |
விருதுகள் | லெனின் அமைதிப் பரிசு, Hero of the Republic of Cuba, Order of Playa Girón |
வில்மா எஸ்பின் கியூபாவில் நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்தவர். அமெரிக்காவில் உள்ள மசாசுசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் என்ஜினியரிங் பட்டப்படிப்பு படித்தவர். பட்டப்படிப்பு முடித்து சொந்த மண்ணுக்குத் திரும்பிய பின் அவர் கண்ட காட்சி நெஞ்சைப் பிளந்தது.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கைக்கூலியாக ஆட்சி புரிந்து வந்த கொடுங்கோலன் பாடிஸ்டா மக்களை வாட்டி வதைத்து வந்தான். கியூபாவை பணத்திமிர் பிடித்த அமெரிக்கர்களின் கேளிக்கை பூமியாக மாற்றும் போக்கில் கியூப பெண்கள் விலங்குகளை விட கேவலமாக நடத்தப்பட்டனர். 1956ம் வருடம் இளம் வில்மா தனது 26வது வயதில் அவரது சொந்த ஊரான சான்டியாகோவில் பாடிஸ்டாவிற்கு எதிராக ஆயுதமேந்திய போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.
ப்ராங்க் பயஸ் என்ற போராளியால் புரட்சிப்பாதைக்கு ஈர்க்கப்பட்டு அவரோடு இணைந்து ஓராண்டு காலம் புரட்சிப் பணியாற்றினார். கிழக்கு கியூபாவில் நகர்ப்புற புரட்சி இயக்கத்திற்குத் தலைமை தாங்கினார் வில்மா.
1957ல் ப்ராங்க் அமெரிக்க ஆதரவு கூலிப் படையால் படுகொலை செய்யப்பட்டார். சியர்ரா மாஸ்ட்ரா மலைகளில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்த வில்மா சக போராளியான ரா(வு)ல் காஸ்ட்ரோவைக் காதலித்தார். ராவுல் கேஸ்ட்ரோ, பிடல் காஸ்ட்ரோவின் இளைய சகோதரரும், தற்போதைய கியூப ஜனாதிபதியுமாவார்.
1959 ஏப்ரல் மாதம், கியூப புரட்சி வெற்றி பெற்று, பாடிஸ்டா நாட்டை விட்டு துரத்தப்பட்டு மூன்று மாதங்கள் கழித்து வில்மா-ரா(வு)ல் திருமணம் நடைபெற்றது. விடுதலை பெற்ற கியூபாவில் பெண்களை அணி திரட்டும் பணி அவருக்கு அளிக்கப்பட்டது. அந்தப் பெண்கள் அமைப்பு ஆல் போல் தழைத்து அருகுபோல் வேரோடி இன்று 36 லட்சம் பெண்களை உறுப்பினர்களாகக் கொண்ட பெரும் அமைப்பாக உருவெடுத்துள்ளது. கியூப பெண்கள் தொகையில் 85% பேர் அதன் உறுப்பினர்கள்,
1965ல் துவக்கப்பட்ட கியூப கம்யூனிஸ்ட கட்சியின் ஸ்தாபக உறுப்பினராக இருந்த வில்மா அதன் உயர்மட்ட அமைப்பான பொலிட் பீரோ உறுப்பினராக உயர்ந்தார். கியூபாவின் முதல் பெண்மணியாக 45 வருடங்களுக்கும் மேலாக போற்றப்பட்டவர் வில்மா.
சமீப காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த தோழர் வில்மா எஸ்பின் 2007 ஜூன் 18ம் தேதி மரணம் அடைந்தார். அரசு சார்பாக ஒருநாள் துக்கம் அனுஷ்டிக்கப்பட்டது. வில்மா மறைவினை அடுத்து பிடல் காஸ்ட்ரோ வெளியிட்ட இரங்கல் செய்தி உருக்கமானது.