உள்ளடக்கத்துக்குச் செல்

விறலியாற்றுப்படை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விறலியாற்றுப்படை என்பது ஆற்றுப்படைப் பாடல்களில் ஒருவகை. இப்பாடல்களில் வழிப்படுத்திப் பாடப்படுபவர் விறலியர் ஆவர். விறலி என்பவள் ‘பாண்மகள்’ என்பதனை ஒரு பாடல் தெளிவுபடுத்துகிறது. அவர்கள்,

  • யாழ்
  • ஆகுளி
  • பதலை

ஆகிய இசைக் கருவிகளைப் பையில் போட்டுச் சுருக்கி எடுத்துக்கொண்டு செல்வார்கள். விறலியாற்றுப்படை என்னும் துறையைச் சேர்ந்த பாடல்கள் புறநானூற்றுத் தொகுப்பில் நான்கு உள்ளன. [1] இந்தத் துறை புறநானூற்றில் பாடாண் திணையில் வருகிறது.

புறநானூறு, பதிற்றுப்பத்து ஆகிய நூல்களில் 19 ஆற்றுப்படைப் பாடல்கள் உள்ளன. அவற்றில் விறலியாற்றுப்படைப் பாடல்கள் ஒன்பது. அவற்றில் நான்கு பாடல்கள் ‘செல்லாமோ’ (இருவரும் செல்லலாமா) எனப் பாடுகின்றன. ஏனைய ஐந்தும் விறலியை மட்டும் ஆற்றுப்படுத்துகின்றன.

விறலியுடன் தானும் (பாடுபவரும்) செல்லல்
  • யாமும் சேறுகம், நீயிரும் வம்மின், துயலும் கோதைத் துளங்கியல் விறலியர், கொளைவல் வாழ்க்கை நும் கிளை இனிது உடீஇயர் [2]
  • செல்லாமோ தில் சில்வளை விறலியர் ... புறவெதிர் கொள்வனைக் கண்டனம் வரற்கே [3]
  • செல்லாமோ தில் பாண்மகள் [4]
  • நல்யாழ் ஆகுளி பதலையொடு சுருக்கிச், செல்லாமோ தில் சில்வளை விறலி [5]
விறலியை மட்டும் ஆற்றுப்படுத்துதல்
  • சில்வளை விறலி செல்குவை ஆயின், யானை (பெறலாம்) [6]
  • சென்மோ பாடினி நன்கலம் பெறுகுவை [7]
  • அதியமான் நெடுமான் அஞ்சியிடம் ஔவையார் ஆற்றுப்படுத்துகிறார். [8]
  • வேள் பாரியிடம் கபிலர் ஆற்றுப்படுத்துகிறார். [9]
  • வேள் ஆய் அண்டிரனிடம் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் ஆற்றுப்படுத்துகிறார் [10]

இலக்கணம்

[தொகு]

வள்ளலிடம் வளம் பெற்றுவந்த ஒருவன் விறலியை அந்த வள்ளலிடம் செல்வதற்கு வழி கூறி ஆற்றுப்படுத்துவது விறலியாற்றுப்படை என்று தொல்காப்பியம் கூறுகிறது.[11]

புறப்பொருள் வெண்பாமாலை விறலி வேந்தன் புகழ் பாடுபவள் எனக் குறிப்பிட்டு இதே செய்தியைச் சொல்கிறது.[12]

இலக்கியம்

[தொகு]

புறநானூற்றுப் பாடலில் புலவர்கள் குறிப்பிட்ட வள்ளலிடம் ஆற்றுப்படுத்துகின்றனர்.

அடிக்குறிப்பு

[தொகு]
  1. புறநானூறு 64, 103, 105, 133
  2. கடல் பிறக்கு ஓட்டிய செங்குட்டுவனிடம் பரணர் ஆற்றுப்படுத்துகிறார் - பதிற்றுப்பத்து 49,
  3. ஆடுகோட்பாட்டுச் சேரலாதனிடம், காக்கை பாடினியார் நச்செள்ளையார் ஆற்றுப்படுத்துகிறார் - பதிற்றுப்பத்து 57,
  4. ஆடுகோட்பாட்டுச் சேரலாதனிடம், காக்கை பாடினியார் நச்செள்ளையார் ஆற்றுப்படுத்துகிறார் – பதிற்றுப்பத்து 60,
  5. பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியிடம் நெடும்பல்லியத்தனார் ஆற்றுப்படுத்தும் பாடல் - புறநானூறு 64,
  6. தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையிடம் அரிசில் கிழார் ஆற்றுப்படுத்துகிறார். – பதிற்றுப்பத்து 78,
  7. இளஞ்சேரல் இரும்பொறையிடம் பெருங்குன்றூர் கிழார் ஆற்றுப்படுத்துகிறார் - பதிற்றுப்பத்து 87,
  8. புறநானூறு 103
  9. புறநானூறு 105
  10. புறநானூறு 133
  11. கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
    ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றி
    பெற்ற பெரு வளம் பெறாஅர்க்கு அறிவுறீஇ
    சென்று பயன் எதிரச் சொன்ன பக்கமும் (தொல்காப்பியம் புறத்திணையியல் 30, பாடாண் திணை)
  12. திறல் வேந்தன் புகழ் பாடும்,
    விறலியை ஆற்றுப் படுத்தன்று. புறப்பொருள் வெண்பாமாலை 219, பாடாண் படலம்
  13. புறநானூறு 64,
  14. புறநானூறு 103,
  15. புறநானூறு 105,
  16. புறநானூறு 133
"https://ta.wikipedia.org/w/index.php?title=விறலியாற்றுப்படை&oldid=3317138" இலிருந்து மீள்விக்கப்பட்டது