விமலாதித்த மாமல்லன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
விமலாதித்த மாமல்லன்
பிறப்பு
சூன் 19, 1960(1960-06-19)

.
சென்னை

நாட்டுரிமை இந்தியா
கல்வி நிலையம் பச்சையப்பன் கல்லூரி
எழுதிய காலம் 1980-தற்காலம்
இலக்கிய வகை சிறுகதை, நெடுங்கதை, குறுநாவல்
குறிப்பிடத்தக்க
படைப்பு(கள்)
அறியாத முகங்கள், முடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள் மற்றும் பிற கதைகள் & உயிர்த்தெழுதல்
http://www.maamallan.com

விமலாதித்த மாமல்லன் (பி. ஜூன் 19, 1960) ஒரு தமிழ் எழுத்தாளர்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

சி. நரசிம்மன் என்ற இயற்பெயர் கொண்ட இவர் மாத்வ குடும்பத்தைச் சார்ந்த கன்னட – மராட்டியத் தாய் தந்தையருக்கு, சென்னையில் உள்ள திருவல்லிக்கேணியில் பிறந்தார். பள்ளிப்பருவம் பாண்டிச்சேரியில். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்றவர், எனினும் பட்டதாரி அல்லர். கல்லூரி இறுதி ஆண்டுகளில் நவீன நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். இந்தக் காலகட்டத்தில் நவீனத் தமிழ் இலக்கியச் சூழல் பரிச்சயப்பட, சிறுகதைகள் எழுதத் தொடங்கினார். 1982-83ல் பரந்த அனுபவம் தேடிக் காவியுடுத்தித் தேசாந்திரம் புறப்பட்டவர், இரண்டு முறையும் பாதியிலேயே திரும்ப நேர்ந்தது. 1983 டிசம்பரில் 10 சிறுகதைகளும் குறுநாவலும் கொண்ட ”அறியாத முகங்கள்” வெளியானது. மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த சமூக சேவகரான பாபா ஆம்தே தலைமையில், நிட் இந்தியா இயக்கத்தில் (KNIT-INDIA MOVEMENT) பங்கேற்றார். 1985 டிசம்பர் முதல் 1986 ஏப்ரல் வரை கன்யாகுமரியிலிருந்து காஷ்மீருக்கு, ஏறக்குறைய 5100 கிமீ சைக்கிளில் பயணம் செய்து, தேசிய ஒருமைப்பாட்டுப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தற்போது சென்னையில் மத்திய கலால் துறையில் பணிபுரிகிறார் மாமல்லன்.

எழுத்து வாழ்க்கை[தொகு]

மாமல்லனின் எழுத்துலக அறிமுகம் 1981ல் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியில் ‘வலி’ கதை மூலம் ஆனது. அதே ஆண்டில் கணையாழியில் வெளியான ’இலை’ மற்றும் ’பெரியவர்கள்’ குறுநாவல் வழியே தமிழ் இலக்கியச் சூழலின் பரவலான கவனத்திற்கு வந்தார். முதல் தொகுதியான 'அறியாத முகங்கள்' வெளிவந்த பின்னால் 1986 டிசம்பரில் ”முடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள் மற்றும் பிற கதைகள்” என்கிற இரண்டாம் புத்தகத் தொகுதி வெளியானது. இதில் ஏழு சிறுகதைகளும், ”முடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள்” என்னும் குறுநாவலும், ”புறப்பாடு” நெடுங்கதையும் அடங்கியிருந்தன. இவருக்குக் கல்லூரிப் பருவத்திலிருந்தே திரைப்படச் சங்கங்கள் வழி உலக சினிமா மீது மோகம் இருந்தது. 1987ல் தொலைக்காட்சித் தொடர் ஒன்றில் தற்செயலாய் நடிக்கப் போய், நேரடி அனுபவம் பெறுவதற்கான வாய்ப்பெனக் கருதி, வசனம், திரைக்கதை, உதவி மற்றும் இணை இயக்குநராய்ச் சில வணிகத் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் பங்கேற்றார். 1989ல் எழுதிய நிழல் நெடுங்கதை காலச்சுவடு மலரில் 1991ல் வெளியாயிற்று. 1994 மே முதல் 1994 அக்டோபருக்கு இடையில் ’சோழிகள்’ குறுநாவல் மற்றும் ’பந்தாட்டம்’ நெடுங்கதை உட்பட எட்டுக் கதைகள் எழுதினார். அவற்றுள் (’சோழிகள்’ ’பந்தாட்டம்’ அல்லாத) ஏழு கதைகளைக் கொண்டு ”உயிர்த்தெழுதல்” என்கிற மூன்றாம் தொகுதி 1994 டிசம்பரில் வெளியாயிற்று.

1994 க்குப் பின் பதினாறு வருடங்கள் இவரது எழுத்து வாழ்க்கையில் ஒரு இடைவெளியாக அமைந்தது. மீண்டும் 2010ம் ஆண்டு இவரது படைப்புகள் வெளியாகத் தொடங்கின. சுந்தர ராமசாமியின் காலச்சுவடு சிறப்பு மலரில் இவரது ‘நிழல்' கதை வெளி வந்திருக்கிறது. புதிய பார்வை, சுபமங்களா ஆகிய இதழ்களிலும் இவரது கதைகள் வெளி வந்திருக்கின்றன. தொகுப்புகளாக மூன்று வந்திருக்கின்றன: ’’அறியாத முகங்கள்’’, ’’முடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள்’’ & ’’உயிர்த்தெழுதல்’’

இவரின் எல்லாச் சிறுகதைகள் மற்றும் குறுநாவல்களின் தொகுப்பை ”விமலாதித்த மாமல்லன் கதைகள்” என்கிற பெயரில் உயிர்மை பதிப்பகம் 2011ம் ஆண்டு வெளியிட்டுள்ளது.

குறிப்பிடத்தக்க படைப்புகள்[தொகு]

  • இலை
  • எதிர்கொள்ளல்
  • போர்வை
  • சரிவு
  • உதிரிக்கூட்டம்
  • தாசில்தாரின் நாற்காலி
  • அறியாத முகங்கள்
  • பெரியவர்கள்
  • இழப்பு
  • வயிறு

விமர்சனம்[தொகு]

மிகக் கவனமாகக் கதைகளை உருவாக்குபவர் விமலாதித்த மாமல்லன். சிறுகதைக்கே உரித்தான தனித்தன்மையின் மரபில் ஊட்டம் பெற்றவர். வாழ்க்கையை எதிர்கொள்ளத் தெரியாத ஜீவன்களின் பரிதவிப்பு இவரது கதைகளின் மையம்.

- சுந்தர ராமசாமி (கலைகள், கதைகள், சிறுகதைகள் - ஆளுமைகள் மதிப்பீடுகள்)

கவிஞரும் எழுத்தாளருமான விக்ரமாதித்யன் (தன்மை, படர்க்கை, முன்னிலை புத்தகத்தில்), மாமல்லன் பற்றி எழுதி உள்ள வரிகள்:

விமலாதித்த மாமல்லனின் தொகுப்பான அறியாத முகங்கள், இன்றைய சிறுகதைச் சூழலில் கவனம் கொள்ள வேண்டியதும் பொருட்படுத்திப் பேச வேண்டியதும் ஆகும். அடர்த்தியான வாழ்வனுபவங்களும் செறிவான தன்மையும் அமைந்த, நகர்சார்ந்த சிறுகதைகள் என்ற வகையில் இவருடைய எழுத்துக்குத் தனி ஒரு இடம் உண்டு

மாமல்லனின் சிறுகதைகள் எந்தப் பாசாங்குமற்றவை என்பதே நல்ல விஷயம். இவர் இயல்பிலேயே இந்தத் தன்மையைப் பெற்றிருக்கிறார் என்பதே பெரிய விஷயம். சமீபகாலமாக, நமது இலக்கிய உலகத்தில் அருகி வருவதும் காணக் கிடைக்காததுமான இந்த மெய்மை, ஒரு உயர்ந்த கலைஞனுக்கே உரித்தான குணவிஷேசமாகும்

மாமல்லனைப் பொருத்தவரை, மாநகர் சார்ந்த வாழ்நிலைகளைக் கண்டு சொல்கிற வெறும் தகவலாளியாக மட்டுமல்லாமல், இவையெல்லாம் எதற்காக, ஏன் இந்த மாதிரி என்று விசாரம் கொள்கிற மனிதனாக இருந்து, இவற்றின் உறுத்துதல்கள் தாளாது, எழுதிப் பதிவு பண்ணி வைப்பதோடு, ஒரு அமுங்கிய குரலில் கண்டனம் செய்கிற படைப்பாளியாகவும் இருக்கிறார் என்பது விசேஷமானது.

மத்திய தர வர்க்கத்தின் ஆண்-பெண் வகைமாதிரிகளை (types) கூடக்குறைச்சல் இல்லாமல் கொண்டு வந்திருக்கும் மாமல்லன் , இதில் வர்ணம் ஏதும் பூசுவதில்லை. அன்பு அல்லது அசட்டுணர்வு (sentiment) என்று ஒரு எழுத்துக்கலைஞன் தன்னியல்புக்குத் தெளிக்கும் வண்ணத்தைக்கூட மிகுந்த கவனத்துடன் தவிர்த்துவிடுகிறார். இதை ஒரு நவீன எழுத்தாளனின் பண்புக்கூறாகவே நாம் பார்க்க வேண்டும். இன்றைய எழுத்தில் இது அரிதாகவே காணக்கூடியது ஆகும்

அசோகமித்ரனுக்குப் பிறகு நவீன சிறுகதையில், ஆணாதிக்கத்தால் பாதிக்கப்பட்ட, பாவப்பட்ட பெண்கள் துலக்கமாகத் தோன்றுவது இவர் கதைகளில்தான் என்று கூடச் சொல்லலாம்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விமலாதித்த_மாமல்லன்&oldid=2641235" இருந்து மீள்விக்கப்பட்டது