வின்ஸ்டன் டபிள்யூ. ராய்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வின்ஸ்டன் டபிள்யூ. ராய்ஸ் (Winston W. Royce, 1929-1995) ஒரு அமெரிக்க கணினி விஞ்ஞானி. லாக்ஹீட் (Lockheed) நிறுவனத்தின் மென்பொருள் தொழில்நுட்ப மையத்தின் இயக்குனராகவும் பணிபுரிந்தவர். 20 ஆம் நூற்றாண்டின் மென்பொருள் உருவாக்கத் துறையில் ஒரு குறிப்பிடத்தக்க தலைவரும் ஆவார்.

அருவி மாதிரி[தொகு]

அருவி மாதிரியை ஒரு 'மென்பொருள் மேம்பாட்டு முறையியலாக' முதன் முதலில் விவரித்தவர் இவரே ஆயினும், அவர் தனது கட்டுரையில் 'அருவி' என்னும் சொல்லை கையாளவோ அல்லது இந்த 'மாதிரி' நிச்சயமாக செயல்படும் என்று வாதிடவோ இல்லை.

கல்வி மற்றும் வேலை[தொகு]

கலிபோர்னியா தொழில்நுட்பக் கல்லூரியில் தனது கல்லூரி வாழ்க்கையை தொடங்கிய அவர், அங்கு இயற்பியலில் இளநிலைப் பட்டத்தையும், வானூர்தி பொறியியலில் முதுகலை பட்டத்தையும் பெற்றார். இறுதியாக ஜூலியன் டேவிட் கோலின் கீழ் வானூர்தி பொறியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார்.

35 ஆண்டுகளுக்கும் மேலாக பொறியியல், ஆராய்ச்சி, கற்பித்தல், மற்றும் மேலாண்மை துறைகளில் பணியாற்றினார். 1970ல் இருந்து டெக்சாஸ் மாநிலம், ஆஸ்டின் நகரிலுள்ள லாக்ஹீட் மென்பொருள் தொழில்நுட்ப மையத்தின் இயக்குனராகப் பணியாற்றிய அவர் 1975ல் AIAA தகவல் அமைப்புகள் விருது பெற்றார்.

ஜூன் 7, 1995ல், வெர்ஜினியா மாநிலம் கிளிஃப்டன் நகரிலுள்ள தனது வீட்டில் மரணமடைந்தார்.

வாக்கர் ராய்ஸ்[தொகு]

இவரது மகன் வாக்கர் ராய்ஸ், ஐபிஎம் (IBM) நிறுவனத்தின் ரேஷனல் (Rational) பிரிவின் 'தலைமை மென்பொருள் பொருளாதார வல்லுநர்'. ஐபிஎம் நிறுவனத்தின் ரேஷனல் ஒருங்கிணைந்த செயல்முறையில் (Rational Unified Process) உள்ளார்ந்த மேலாண்மை தத்துவத்தின் முக்கிய பங்களிப்பாளர். "மென்பொருள் திட்ட மேலாண்மை, ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட கட்டமைப்பு" என்ற பிரபலமான புத்தகத்தின் ஆசிரியர்.