உள்ளடக்கத்துக்குச் செல்

வினை இடைநிலைப்பொருள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வினை இடைநிலைப்பொருள் (Reactive intermediate) என்பது வேதியியலில் குறுகிய காலம் மட்டுமே நிலைத்திருக்கின்ற உயர் ஆற்றல் கொண்ட மிகவும் தீவிர வினைத்திறன் மிக்க மூலக்கூறு ஆகும். வேதிவினைகளின்போது வினைப்படு பொருள்களிலுள்ள பிணைப்புகள் சிதைந்து விளைபொருள்களில் புதிய பிணைப்புகள் உருவாகின்றன. பிணைப்புச் சிதைவின் போது உருவாகும் பகுதி மூலக்கூறுகள் மிகவும் வினைபுரியும் தன்மையுடையவை. இவற்றையே இடைநிலைப் பொருள்கள் என்பர். பொதுவாக இந்த இடைநிலைப் பொருள்கள் எளிமையான இயற்பியல், வேதியியல் முறைகளால் ஆராய இயலாத அளவிற்கு மிகக் குறைந்த கால நிலைத்தன்மையே பெற்றிருக்கின்றன இம்மூலக்கூறு விரைவாக அதிக நிலைப்புத்தன்மை கொண்ட மூலக்கூறாக மாறிவிடும். சாதாரண வெப்ப நிலையில் அவற்றைப் பிரித்தறிய இயலயாது. குறைவு வெப்பநிலை, அணி தனியாக்கல் போன்ற சிறப்புச் சூழல்களில் மட்டுமே இவை தனித்துப் பிரிக்கப்பட்டு சேமிக்கப்படுகின்றன. வினைகளில் இவற்றின் இருப்பு குறிப்பிடப்பட்டால் அவ்வேதிவினை எவ்வாறு நிகழ்கிறது என்பதை விளக்கமுடியும்[1][2][3][4].

பல வேதிவினைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட படிநிலைகளுக்குப் பின்னர் வினை நிறைவடைகின்றது. இடைநிலைப் பொருட்கள் வினைத்திறன் மிக்கவை என்பதால் நிலைப்புத்தன்மை உடைய பொருள் ஏதாவது ஒரு படிநிலையிலேயே தோன்றும். இப்படிநிலைகள் மூலமாக வினைவழிமுறையை அறியமுடியும்.

கரிம வேதிவினைகளின்போது பல்வேறு வகையான இடைநிலைப் பொருள்கள் உண்டாகின்றன. கரிம நேர் அயனிகள் , கரிம எதிர் அயனிகள் , இயங்கு உறுப்புகள், கார்பீன்கள் , நான்முகி இடைநிலைச் சேர்மங்கள், நைட்ரீன்கள் , பென்சீன்கள், பாசுபீனிடின்கள், கீட்டோ எதிரயனிகள், என்பன சில உதாரணங்களாகும் நிலைத்தன்மை கொண்ட சில இடைநிலை வினைப் பொருள்களும் சில வினைகளில் உருவாவதுண்டு. தற்காலத்தில் நிறலியல் நுட்பங்களின் முன்னேற்றத்தால் இவ்விடைநிலை வினைப்பொருள்களை ஆய்ந்து அறிய முடிகின்றது. இப் பொருள்களுடன் வினைபுரியக் கூடிய வேறு வேதிப் பொருள்களைப் பயன்படுத்தி இவற்றைச் சேர்க்கைப் பொருள்களாகவும் பெறலாம்.

வினை இடைநிலைகளின் பொதுவான சில அம்சங்கள்:

 • வினைபடும் தளப்பொருள் மற்றும் இறுதி விளைபொருளைப் பொறுத்து செறிவு குறையும்.
 • கரிம எதிரயனி தவிர வேறு வினை இடைநிலைகள் எதுவும் லூயிசு எண்மவிதிக்கு கீழ்படிவதில்லை. எனவே உயர் வினைதிறம் கொண்டுள்ளன.
 • பெரும்பாலும் வேதிச்சேர்மங்கள் வேதிச்சிதைவுக்காக இவை உருவாக்கப்படுகின்றன.
 • நிறமாலையியல் ஆய்வுகள் மூலமே இந்த இனங்கள் இருப்பதை நிரூபிக்க முடியும்
 • கூண்டு விளைவுகளை கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும்
 • பெரும்பாலும் இணைதல் அல்லது ஒத்திசைவு மூலம் நிலைத்தன்மை உறுதிப்படும்
 • பெரும்பாலும் இடைநிலை மாற்றத்தை வேறுபடுத்தி அறிவது கடினமாக இருக்கும்.

மேற்கோள்கள்[தொகு]

 1. Carey, Francis A.; Sundberg, Richard J.; (1984). Advanced Organic Chemistry Part A Structure and Mechanisms (2nd ed.). New York N.Y.: Plenum Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-306-41198-9.
 2. March Jerry; (1885). Advanced Organic Chemistry reactions, mechanisms and structure (3rd ed.). New York: John Wiley & Sons, inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-85472-7
 3. Gilchrist T.C.;Rees C.W.; (1969) carbenes, nitrenes and arynes. Nelson. London.
 4. Reactive intermediate chemistry , Robert A. Moss,Matthew Platz,Maitland Jones
"https://ta.wikipedia.org/w/index.php?title=வினை_இடைநிலைப்பொருள்&oldid=3384383" இலிருந்து மீள்விக்கப்பட்டது