விண்மீன்களைக்கொண்டு இரவில் நேரமறிதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விண்மீன்களைக் கொண்டு இரவில் மணி அறியும் கலை பழங்கால்ம் முதல் இந்தியா வழக்கத்தில் இருந்துள்ளது. இதற்கு சான்றாக தமிழில் 27 சிறிய ஓரிரண்டுவரிப் பாடல்களும் வடமொழியில் 27 ஒருவரி வாய்பாடுகளும் உள்ளன. வடமொழி வாய்பாடுகளுக்கு தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் உள்ள ஒரு கையெழுத்துப் பிரதியை (சுமார் 1728இல் துலஜராஜர் என்ற அரசரால் எழுதப்பட்டது) ஒரு சான்றாகக் கொள்ளலாம். இதைத்தவிர வெகு எளிதில் தோராயமாகச் சொல்லக்கூடிய அளவில் தமிழில் ஒரு ஒற்றைப்பாடலும் உள்ளது.

விவரம்[தொகு]

இவ்வாய்பாடுகளைக் கொண்டு தோராயமாக இரவில் நேரத்தைச் சொல்ல இயலும். நேரத்தைச் சொல்ல தேவையான அறிவு:

  • 1. இவ்வாய்பாடுகள் (தமிழிலோ வடமொழியிலோ).
  • 2. 27 நட்சத்திரங்களை வானில் அடையாளம் காட்டக்கூடிய திறமை.
  • 3. அன்றைய திகதியைக்கொண்டு சூரியன் அன்று எந்த ராசியில் தோராயமாக எவ்வளவு முன்னேறியிருக்கும் என்ற மனக்கணக்கு.

ஒவ்வொரு வாய்பாடும் இன்ன விண்மீன் வானில் உச்சிவட்டத்தில் காணப்படுமானால் ராசிச் சக்கரத்தில்(Zodiac) உள்ள 12 ராசிகளில் இன்ன ராசி கீழ்வானில் "உதயமாகிக் கொண்டிருக்கும்" என்பதைச் சொல்கிறது. சூரியன் அப்பொழுது (இரவு நேரமானதால்) தொடுவானத்திற்கு அடியில் இருக்கும். சூரியன் இருக்கும் ராசிக்கும், "உதயமாகிக்கொண்டிருக்கும்" இந்த ராசிக்கும் உள்ள தூரத்தை எளிதில் மனதில் கணித்து விடலாம். இதிலிருந்து மாலை ஆறு மணிக்குப் பிறகு ஆன நேரத்தையோ அல்லது காலை ஆறு மணிக்கு இன்னும் இருக்கும் நேரத்தையோ கணக்கிட்டு விடலாம்.

உச்சிவட்டத்தில் காணப்படும் விண்மீன் ராசிச்சக்கரத்தில் உள்ள இடத்திலிருந்து 90 பாகை பின்னால் உள்ள விண்மீனின் இடத்தைச் சுட்டிக்காட்டி அது "உதயமாவதாக" வாய்ப்பாடு சொல்கிறது. அதனால் கணக்கிடுபவர் பூமியில் எந்த இடத்திலிருந்து பார்க்கிறார் என்பது முக்கியமில்லை. அவர் எந்த இடத்திலிருந்து பார்த்தாலும் வாய்பாடு மாறாது. வானில் உள்ள இரு இடங்களை இவ்வாய்பாடுகள் இணைத்துப் பேசுகின்றன.

இன்ன விண்மீன் உச்சிவட்டத்தைக் கடக்கும் போது இன்ன ராசி உதயமாகிறது என்று வாய்பாடு சொல்கிறது. ஆனால் 27 விண்மீன்களில் எல்லா விண்மீன்களும் வானத்தில் ரோகிணி, சித்திரை, மகம், சுவாதி, கேட்டை போன்று புள்ளி விண்மீன்களல்ல. விசாகம், அத்தம், ஆயிலியம், புனர்பூசம் போன்று சில வானத்தில் கையகல இடத்தையோ இன்ன்னும் அதிக இடத்தையோ அளாவுகின்றன. அதனால் இன்ன நட்சத்திரம் 'உச்சியில் காணப்பட்டால்' என்று வாய்பாடு சொல்லும்போது அதை வெறும் கண்ணால் பார்ப்பவர் தோராயமாகத்தான் தீர்வு செய்யமுடியும் என்பதால் கணிப்பு முறை துல்லியமாக இல்லாமல் தோராயமாகவே உள்ளது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]