விட்டல் பாய் பட்டேல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வீர கேசரி விட்டல் பாய் பட்டேல் (Vithalbhai Patel, 27 செப்டம்பர் 1873 – 22 அக்டோபர் 1933)[1] இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் அரசியல்வாதியும், சுயாட்சிக் கட்சியின் நிறுவனர்களில் ஒருவரும் ஆவார். இவர் இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான வல்லபாய் பட்டேலின் அண்ணனாவார்.

தொடக்ககால வாழ்வு[தொகு]

பட்டிதர் சமூக விவசாய குடும்பத்தை சேர்ந்த ஜாவர்பாய் - லாட்பாய் தம்பதியரின் ஐந்து குழந்தைகளில் மூன்றாவது குழந்தையாக குஜராத்தில் உள்ள நதியாத்தில் பிறந்தார். சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு இரண்டு ஆண்டுகள் மூத்தவர் இவர். நதியாதிலும் பம்பாயிலும் கல்வி கற்று கோத்ராவிலும் போர்சத்திலும் இருந்த நீதிமன்றங்களில் இளம் வழக்குரைஞராகப் பணியாற்றினார். இளம் வயதிலேயே திவாலிபாய் என்பவரை மணந்தார்.[2]

அரசியல் பணிகள்[தொகு]

இவர் 1913ல் பம்பாய் (மும்பை) சட்டசபை உறுப்பினராகி சட்டசபையில் சர் பெரோஷா மேத்தாவின் தலைமையில் கட்டாய இலவசத் தொடக்கக் கல்வி சட்டத்தை பம்பாய் நகரத்துக்கு மட்டுமல்லாது மற்ற மாவட்டங்களுக்கும் விரிவாக்கும் சட்டத்தை 1917 ஆம் ஆண்டு முன்மொழிந்தார்.

இவர் மண உறுதி எனப்படும் இந்துத் திருமணங்கள் ஏற்புடைமை மசோதா (Hindu Marriages validity bill) என்ற மசோதாவைக் கொண்டு வந்தார்.

புகழ் பெற்ற சேத் கோவர்தன்தாஸ் சுந்தர்தாஸ் மருத்துவக் கல்லூரியை உருவாக்கியது, ஏழாம் எட்வர்டு நினைவு இல்லத்தை உண்டாக்கியது போன்றவை இவர் ஆற்றிய பணிகளில் சில.

இந்திய அரசியல் சட்ட ஆய்வு கூட்டுக் குழுவிற்கு இரண்டு முறை இங்கிலாந்து சென்றார்.

இறப்பு[தொகு]

22 அக்டோபர் 1933ல் ஜெனீவாவில் உடல் நலக் குறைவால் அவர் இறந்தார். பதப்படுத்தப்பட்ட அவரது உடல் ஜெனிவாவிலிருந்து பம்பாய்க்கு எஸ் எஸ் நார்குண்டா என்ற கப்பல் மூலம் கொண்டுவரப்பட்டது. முன்னூறாயிரத்துக்கும் அதிகமானோர் முன்னிலையில் அவருடைய உடல் பம்பாயில் தகனம் செய்யப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விட்டல்_பாய்_பட்டேல்&oldid=3460942" இருந்து மீள்விக்கப்பட்டது