உள்ளடக்கத்துக்குச் செல்

விடுதலை வேள்வியில் தமிழகம் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விடுதலை வேள்வியில் தமிழகம் நூல் அட்டை

விடுதலை வேள்வியில் தமிழகம் என்பது ஈரோட்டைச் சேர்ந்த த. ஸ்டாலின் குணசேகரன் என்பவர், தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் விடுதலைப் போராட்டம் குறித்து தொகுத்து எழுதியுள்ள வரலாற்று நூல் ஆகும். இந்த நூலுக்கு சர்வதேசத் தரம் வாய்ந்த நூலுக்கான அங்கீகாரம் கிடைத்துள்ளது.[1] தமிழ்நாட்டில் இருந்து இந்திய சுதந்திரப் போரில் பங்கு கொண்ட மக்களின் வாழ்க்கை வரலாற்றைச் சேகரித்து தொகுக்கப்பட்ட நூலாகும். தமிழகம் முழுவதும் உள்ள வரலாற்று ஆய்வாளர்கள், அறிஞர்கள், பேராசிரியர்கள், எழுத்தாளர்கள், விடுதலைப் போராட்ட வீரர்கள் எனப் பலரை அணுகி அவர்களால் எழுதப்பட்ட நூல் ஆகும்.வெளியிடுவதற்கு முன்பே, இதற்கு சர்வதேச அளவிலான தரம் வாய்ந்த நூல் என்ற அங்கீகாரத்தை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை வழங்கியுள்ளது. தமிழக முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி இந்நூலுக்கு அணிந்துரை எழுதியுள்ளார். 'பாரத ரத்னா' சி. சுப்பிரமணியம் முன்னுரை எழுதியுள்ளார். வரலாற்றியல் அறிஞர் டாக்டர் கே. ராஜய்யன் இந்நூலுக்கு ஆய்வுரை வழங்கியுள்ளார்.

இந்நூலில், புலித்தேவன் ஆட்சி காலத்திலிருந்து நாடு விடுதலை அடையும் நாள் வரையிலான போராட்ட காலங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளது. புலித்தேவன், அமரசிம்மன், முத்துராமலிங்க சேதுபதி, வாஞ்சிநாதன், வ.உ.சிதம்பரனார், பாரதியார் உட்படபல்வேறு முக்கியத் தலைவர்களின் போராட்ட கால வரலாறு இதில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த விடுதலை வீரர்களைப் பற்றி இது போன்று நூல்கள் மிகக் குறைவே. நூறுக்கும் மேற்பட்டோரின் போராட்ட வரலாறு குறித்து இந்த நூலில் இடம் பெற்றுள்ளது. நாட்டுப்பற்றில் தமிழக வீரர்கள் இந்திய துணைக்கண்டத்தில் உள்ள எவருக்கும் சளைத்தவர்கள் அல்லர் என்பதை உணர்த்தும் நூல். இரண்டு பாகங்களாக வெளிவந்துள்ள இந்நூலில் "தென்னிந்தியப் புரட்சி" முதல் "சிறைச்சாலைக் கொடுமைகள்" வரை அமைந்துள்ள 100 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இரு பாகங்களிலும் மொத்தம் 1,156 பக்கங்கள் உள்ளன.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்கை பறைசாற்றும் வகையில் எழுதப்பட்ட காலப்பெட்டகம் போன்ற நூல் இது. இதன் முதல் பதிப்பு 2001-ம் ஆண்டில் வெளிவந்தது. இந்நூலின் 3-வது பாகம் தயாராகிவருகிறது. இந்நூலின் மூன்று பதிப்புகளும் சேர்ந்து விரைவில் ஆங்கிலம், ஹிந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்படவுள்ளன. மனிதம் பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]