நீலகண்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(விசாபகரண மூர்த்தி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சிவ வடிவங்களில் ஒன்றான
கறைக்கண்டன், விசாபகரண மூர்த்தி
சுருட்டப்பள்ளி கறைக்கண்டன்
சுருட்டப்பள்ளி கறைக்கண்டன்
மூர்த்த வகை: மகேசுவர மூர்த்தம்,
உருவத்திருமேனி
விளக்கம்: ஆலால நஞ்சை உண்டபின்
கருங்கழுத்துடன் ஈசன் காட்சிதரும்
வேடுவக் கோலம்
அடையாளம்: கரிய கழுத்து
இடம்: பாற்கடல் கைலாயம்
ஆயுதம்: மான், மழு
வாகனம்: நந்தி தேவர்

கறைக்கண்டன் அல்லது நீலகண்டன் என்பது, சிவபிரானின் திருப்பெயர்களுள் ஒன்றும், அறுபத்து நான்கு மற்றும் இருபத்து ஐந்து சிவத் திருமேனிகளுள் ஒன்றும் ஆகும். பாற்கடலை கடையும் பொழுது அதிலிருந்து வந்த ஆலகால விஷத்தினை உண்ட சிவபெருமானின் திருவுருவம் நீலகண்டன் என்று அழைக்கப்படுகிறது. இத்திருவுருவம் சிவனது அறுபத்து நான்கு திருக்கோலங்களில் ஒன்றாகும். நஞ்சு தங்கியதால், இக்கோலத்தில், கரிய கழுத்துடையவனாகக் காட்சி தரும் ஈசன், உயிர்கள் மீது தான் கொண்ட பெரும் கருணைக்கு அடையாளமாகத் திகழ்கின்றான். காலகண்டன், சிறீகண்டன், நஞ்சுண்டான் (விசாபகரணன்) என்பன் இக்கோலத்தின் வேறு பெயர்கள்.[1]

தோற்றம்[தொகு]

அஞ்சல், அபயம் ஆகிய இரண்டையும் முன்னிரு கரங்கள் தாங்கி நிற்க, பின்னிரு கரங்களில் மானும் மழுவும் திகழும். திருமுடியில் நிலவும், கரிய கழுத்தும், அருகிருக்கும் உமையவளும் இத்திருக்கோலத்தின் சிறப்பம்சம்.[2] அன்னையவள், ஈசனின் கழுத்தில் தன் திருக்கரங்களை அழுத்திய கோலத்தில் காட்சியருள்வாள். விசாபகரண மூர்த்தத்தில், நஞ்சின் வேகத்தில் சற்றே இளைத்தவர் போல், ஈசன் பள்ளி கொண்ட திருக்கோலத்தில் காட்சியருள்வான்.[3]

தொன்மம்[தொகு]

தேவர்களும், அசுரர்களும் அமிர்தத்திற்காக மேரு மலையை மத்தாகவும், வாசுகி பாம்பினைக் கயிறாகவும் கொண்டு தேவர்கள் ஒருபுறமும், அசுரர்கள் மறுபுறமும் இருந்து பாற்கடலைக் கடைந்த போது, நீண்ட நேரம் கடைந்ததன் காரணமாக வாசுகி பாம்பு வலிதாங்காமல் விசத்தினை கக்கியது. அந்நஞ்சு உலகிலுள்ள உயிர்களை கொல்லும் தன்மையுடையதாகையால், அதிலிருந்து தங்களைக் காக்கும்படி தேவர்களும், அசுரர்களும் சிவனை வேண்டிக் கொண்டார்கள். அவர்கள் மீது பெருங்கருணை கொண்ட சிவன், ஆலால சுந்தரரை அனுப்பி, ஆலகால நஞ்சினை அள்ளிவரச் செய்து, உண்டார். உலகெலாம் நிறைந்துள்ள ஈசன் திருமேனியில் நஞ்சு பரவினால், அது உலகையே பாதிக்குமென்பதால், உமையவள், அஞ்சியவள் போல், ஈசன் திருக்கழுத்தைப் பற்றிக் கொண்டாள். நஞ்சு கீழிறங்காமல் கழுத்திலேயே தங்கிக் கொண்டது. சிவன் ஆலகால விசத்தினை இவ்விதம் நஞ்சு அருந்தி உலகை காப்பாற்றினார்[4][5].

கோயில்கள்[தொகு]

சுருட்டப்பள்ளி பள்ளி கொண்டீசுவரர் கோயில், சிவனாரின் நஞ்சுண்ட கோலத்தை மூலவராகக் கொண்டதாகும்[6].

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Tattvāloka Volume 30 (2007) pp.28,29
  2. சைவம் வலைத்தளம்
  3. விஷாபஹரண மூர்த்தி திருவுருவம்
  4. Gupta, Yoginder, Balagokulam Guide, Lulu.com, ISBN 1105434346
  5. http://temple.dinamalar.com/news_detail.php?id=1870 விசாபகரண மூர்த்தி - தினமலர் கோயில்கள்
  6. Tattvāloka Volume 30 (2007) pp.28
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீலகண்டர்&oldid=1967079" இலிருந்து மீள்விக்கப்பட்டது