விசயநகரப் பேரரசின்கீழ் தமிழ்நாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்நாட்டில் விசயநகரப் பேரரசின் விரிவாக்கமானது, 1356 மற்றும் 1378 க்கு இடைப்பட்டக் காலத்தில் சங்கம மரபினரின் காலத்தில் தெற்கில் நடத்தப்பட்ட படையெடுப்பால் நடந்தது. 1377-78 ல் மதுரை சுல்தானகத்தின் அழிவின் இறுதியில், இன்றைய தமிழ்நாட்டின் பெரும்பகுதி விஜயநகரப் பேரரசின் ஆட்சியின் கீழ் வந்தது. மதுரை சுல்தான்கள் காலத்தில் ஆதரிப்பாரின்றி நலிவடைந்த இசை, கலை, கைவினைக் கலைகள் மற்றும் பெரும்பான்மை இந்துக்களின் சமயச் சுதந்திரம் போன்றவை விசயநகர மன்னர்களின் ஆட்சியால் மீட்கப்பட்டு, புத்துயிர்பெற்றன. ஆனால் அதேசமயம் இந்த புதிய ஆட்சியாளர்களின் ஆட்சியானது,  கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளை ஆதரித்ததால் தமிழ் மொழியானது புறக்கணிப்புக்கு ஆளாகி நிரந்தரமாக வீழ்ச்சியுற்றது. தமிழ் நாட்டில் விசயநகரப் பேரரிசின் பிடியானது 16 ஆம் நூற்றாண்டின் மத்தியில் சரிந்தது. இதையடுத்து இராச்சியமானது பல சிறிய பகுதிகளாக சிதைந்தது.

வரலாறு[தொகு]

தில்லி பேரரசர் முகம்மது பின் துக்ளக்கால் கைதுசெய்யப்பட்ட சகோதரர்களான அரிகரர் மற்றும் புக்கர் ஆகியோரால் விசயநகரப் பேரரசு நிறுவப்பட்டது. கைதுசெய்யப்பட்ட இவர்கள்  இஸ்லாத்திற்கு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டனர், பின்னர் அவர்கள் தப்பித்து, புதிய சமயத்தைத் துறந்து முஸ்லிம் படையெடுப்பாளர்களுக்கு எதிரான போரைத் தொடங்கினர். 1336 இல், அவர்கள் துங்கபத்திரை ஆற்றங்கரையில் தங்கள் தலைநகரான விசய நகரத்தை நிறுவினர். பின்னர் வடக்கு ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக பல தொடர் தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தொடர் போர்களின் இறுதியில் தில்லி சுல்தானின் படைகள் பெரும் தோல்வியுற்று, தென் இந்தியாவில் இந்து ஆட்சி மீண்டும் தொடங்கியது.

விசயநகரப் பேரரசுக்கு முன்பு தமிழ்நாட்டை கடைசியாக ஆண்ட தமிழ் ஆட்சியாளர்களான மதுரை பாண்டியர்கள் அலாவுதீன் கில்சியின் தளபதியான மாலிக் காபூரால் தோற்கடிக்கப்பட்டு,  பாண்டிய நாடானது 1310 ஆம் ஆண்டு தில்லி சுல்தானகத்துடன் இணைக்கப்பட்டது. ஆயினும், 1335 ஆம் ஆண்டில், தில்லி சுல்தானகத்தின் பிரதிநிதியாக ஆண்டுவந்த  ஜலலுதின் அஸ்ஸான் கான் தனது சுயாட்சியை அறிவித்தார். பின் தன்னை மதுரையின் சுல்தானாக பிரகடனப்படுத்திக் கொண்டு மதுரை சுல்தானகத்தை உருவாக்கி தமிழ்நாட்டின் பெரும்பகுதியை சுயமாக ஆண்டனர்.  1335 முதல் ஆட்சி செய்த மதுரை சுல்தான்கள் 1378 ஆம் ஆண்டில் விசயநகர பேரரசால் ஒழிக்கப்பட்டனர்.

விஜயநகரத்தின் சங்கம மரபு அரசர்கள், போசளருடன் சேர்ந்து மதுரை சுல்தானகத்தின் ஆட்சியை எதிர்த்து, அவர்களை வெளியேற்ற முயற்சி செய்தனர். போசளப் பேரரசரான மூன்றாம் வீர வல்லாளன் 1342 ஆம் ஆண்டு திருச்சிராப்பள்ளியில் கொல்லப்படுவதற்கு முன்னர் வரை மதுரை சுல்தானுடன் நீண்ட காலமாக போர் தொடுத்துவந்தார். விசயநகரப் பேரரசின் குமாரகம்பணன் தமிழ்நாட்டில் வடாற்காடு பகுதியை ஆண்டுவந்த சம்பூர்வராயர்களை 1356 இல் போரில் வென்று தமிழ்நாட்டில் தனது வெற்றிக் கணக்கைத் துவக்கினார். அதன்பிறகு குமர கம்பன் மேலும் தெற்கு நோக்கி சென்று நசீர்-உத்-தின் மீது கடுமையான தாக்குதலை நடத்தி நசுக்கி, மதுரை சுல்தானகத்தின் ஆட்சியை மதுரை மற்றும் அதைச் சுற்றியுள்ள சில பகுதிகளைக் கொண்டுள்ளதாக மட்டுமாக குறுக்கிவிட்டார். பின்னர் மதுரை சுல்தானை 1378 ஆம் ஆண்டு அரிகரர் முழுமையாக வெற்றிகொண்டு தன்னை "தெற்கின் பேரரசர்" என்று அறிவித்துக்கொண்டார்.

இலக்கியம்[தொகு]

மதுரை சுல்தானகத்தை குமார கம்பணன் வெற்றிகொண்டதைப் பற்றி அவரது மனைவி கங்கதேவி மதுரா விஜயம் என்ற இலக்கியத்தைப் படைத்தார். அந்த மதுரா விஜயத்தில் சுல்தான்களின் ஆட்சியின் அவலமாக “குளிக்கும் பெண்களின் மார்பில் பூசிய சந்தனம் கலந்து வெளிர் நிறமாக ஓடிய தாமிரபரணி, சுல்தான்களின் ஆட்சியில் பலியிடப்பட்ட பசுக்களின் குருதி கலந்து சிவந்து ஓடியது” எனக் குறிப்பிட்டுகிறது.[1][2][3]

இதனையும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. Aiyangar, P.236-40
  2. A Portion from Madhura Vijaya
  3. Chattopadhyaya, p.141-2