விக்கிப்பீடியா பேச்சு:நிர்வாக அணுக்கத்தைத் திரும்பப் பெறுதல்/கொள்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நிருவாக அணுக்கம் மீளப் பெறுவது தொடர்பான கொள்கை முன்மொழிவு

விக்கிப்பீடியா:கொள்கை வகுத்தல் பக்கத்தில் உள்ள வழிகாட்டலுக்கு ஏற்ப இக்கொள்கை குறித்து உரையாடி இணக்க முடிவு எடுக்க வேண்டுகிறேன். நன்றி.

முதல் வரைவு[தொகு]

1. குறிப்பிட்ட நிருவாகியின் பேச்சுப் பக்கத்திலோ தொடர்புடைய பிற பெயர்வெளிப் பேச்சுப் பக்கங்களிலோ நேரடியாக உரையாடுங்கள்.

இது பயன் அளிக்காவிட்டால்,

2. நிருவாகிகளுக்கான அறிவிப்புப் பலகையில் முறையிடுங்கள். மற்ற நிருவாகிகள் கவனித்து உரிய நடவடிக்கை எடுப்பார்கள்.

தொடர்ந்து பல்வேறு பக்கங்களில் மீண்டும் மீண்டும் சிக்கல்கள் எழுந்த வண்ணம் இருந்தாலோ குறிப்பிட்ட நிருவாகி ஒத்துழைக்க மறுத்தாலோ

3. சமுதாய முறையீட்டுக் கூடத்தில் முறையிடுங்கள்.

இதற்குப் பிறகும் குறிப்பிட்ட நிருவாகி ஒத்துழைக்க மறுத்தால், விக்கிச்சமூகம் இது தொடர்பாக நேரடியாக கலந்துரையாடி வாக்கெடுப்பின் மூலம் நிருவாக அணுக்கத்தை மீளப் பெறுவதற்கான நடைமுறையைத் தொடங்கலாம்.

4. நிருவாக அணுக்கம் மீளப் பெறுவதற்கான வாக்கெடுப்பை நடத்துவதற்கான முன்மொழிவை இங்கு பதியுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவின் எந்த ஒரு பயனரும் இம்முன்மொழிவை இடலாம். ஆனால், அவ்வாறு இடுவதற்கு முன் மேற்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி இருக்க வேண்டும். எடுத்த எடுப்பில் நிருவாக அணுக்கத்தை மீளப் பெறுவதற்கான முன்மொழிவை இடக்கூடாது.

கோரிக்கை பதிந்து,

முதல் 3 நாட்கள் - கோரிக்கை தொடர்பாக குறிப்பிட்ட நிருவாகி மறுமொழி அளிப்பதற்கான நேரம்.

அடுத்த 7 நாட்கள் - பயனர்கள் முதலில் கலந்துரையாடத் தொடங்குவார்கள். நிருவாக அணுக்கம் மீளப் பெறுவதற்கான கோரிக்கை பதிவதற்கு 6 மாதங்களுக்கு முன்பு கணக்கு தொடங்கி 250+ பங்களிப்புகள் உடைய பங்களிப்பாளர்கள் மட்டும் உரையாடலாம். எனவே, கையாட்கள் / கைப்பாவைகள் செயல்படுவதற்கான வாய்ப்பு குறைவு. வெறும் ஆம், இல்லை, வேண்டாம், விருப்பம் போடாமல் விரிவாக, தெளிவாக பயன் இடர்களை முன்வைத்து உரையாட வேண்டும்.

அடுத்த 7 நாட்கள் - மேற்கண்ட உரையாடலில் கலந்து கொண்டவர்கள் மட்டும் தங்கள் உரையாடல் போக்குக்கு ஏற்ப இங்கு வாக்கு இடலாம். உரையாடாதவர்கள் வாக்கிட முடியாது. தனித்துவமான கருத்துகளை முன்வைக்காமல் கூட்டமாக சேர்ந்து வாக்கெடுப்புகளின் திசையை மாற்றாமல் இருக்க இந்தக் காப்பு நடவடிக்கை உதவும். குறிப்பிட்ட நிருவாகியும் மீளப் பெறும் கோரிக்கையை முன்வைத்தவரும் இங்கு வாக்கிட முடியாது.

முடிவு:

வாக்கெடுப்பின் படி 70%க்கும் கூடுதலானோர் நிருவாகியை நீக்க ஆதரவு தந்தால், நிருவாகியை நீக்குவதற்கான பணியை அதிகாரி நிலை பயனர்கள் எவரும் முன்னெடுக்கலாம்.

70%க்கும் குறைவான ஆதரவு என்றால், விக்கிச்சமூகத்தின் கருத்துகளை ஆய்ந்து உரிய முடிவை அறிவிக்கும் பொறுப்பு பிணக்குத் தீர்வாயத்தின் முன் வைக்கப்படும். (பிணகுத் தீர்வாயம் உருவாக்குவது குறித்து தனி கொள்கை, நடைமுறை முன்மொழிய வேண்டியுள்ளது).

பிணக்குத் தீர்வாயத்தின் முடிவு இறுதியாக இருக்கும். மேல் முறையீடுகள் கிடையாது. பிணக்குத் தீர்வாயத்தின் முடிவுக்குக் கட்டுப்பட வேண்டியது அனைத்து விக்கிப்பீடியர் கடமை.

இந்த நடைமுறை மூலம் தனது நிருவாகப் பொறுப்பைத் தக்க வைக்கும் நிருவாகி ஒருவர் மீது அடுத்த ஒரு ஆண்டுக்கு வேறு யாரும் நிருவாக அணுக்கம் நீக்கல் கோரிக்கை கொண்டு வர முடியாது. குறிப்பிட்ட நிருவாகி தொடர்ந்து தவறாகச் செயல்படுகிறார் என்று கருத இடம் இருக்குமானால், நிருவாகிகள் அறிவிப்புப் பலகையில் முறையிடலாம். மற்ற நிருவாகிகள் கவனித்து நடவடிக்கை எடுப்பார்கள். --இரவி (பேச்சு) 06:57, 29 நவம்பர் 2013 (UTC)[பதில் அளி]

மாற்றுக் கருத்துகள், உரையாடல் இல்லா நிலையில் இன்னும் 7 நாட்களில் இது முறையான தமிழ் விக்கிப்பீடியா கொள்கையாக அறிவிக்கப்படுவதற்கான வாய்ப்பு உண்டு என்று தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 16:43, 7 திசம்பர் 2013 (UTC)[பதில் அளி]

பவுல் கருத்து[தொகு]

இரவி, மேலே நீங்கள் தருகின்ற முன் வரைவு இன்னும் 7 நாள்களில் கொள்கையாக மாறலாம் என்பதைப் பார்க்கும்போது சில கேள்விகள் எழுகின்றன. இவ்வாறு வகுக்கப்படும் கொள்கை எதிர்காலம் நோக்கியதா அல்லது கடந்த காலத்திற்கும் பொருந்துமா என்பது விளக்கப்பட வேண்டும். நாம் ஏற்கெனவே உரையாடிக்கொண்டிருந்த நிருவாக அணுக்க நீக்க நபர்கள் இங்கு உள்ளடங்குவரா? அப்படியென்றால், இக்கொள்கை அவர்களைப் பொறுத்தமட்டில் எண் ஒன்றிலிருந்தே தொடங்குமா? அவ்வாறில்லை எனில், எங்கிருந்து தொடங்குவது? இது பற்றிய தெளிவு இருந்தால் நீங்கள் தந்துள்ள முன் வரைவை ஏற்பது எளிதாகும். கொள்கை வரைவு முயற்சிக்குப் பாராட்டுகள்!--பவுல்-Paul (பேச்சு) 20:30, 7 திசம்பர் 2013 (UTC)[பதில் அளி]

பவுல், முயற்சியை ஊக்குவித்ததற்கு நன்றி. நிருவாக அணுக்கம் தொடர்பான கொள்கையை உருவாக்க வேண்டும் என்ற ஐவர் குழு பரிந்துரையைச் செயற்படுத்தும் நோக்கிலேயே இக்கொள்கை முன்மொழிவை இட்டுள்ளேன். விக்கிப்பீடியாவில் நாம் உருவாக்கும் எந்த ஒரு கொள்கையும் குறிப்பிட்ட வழக்கு / நபர் சாராது பொதுவாக உருவாக்கப்படுவனவே. ஒரு பிரச்சினை வருவதற்கு முன் தேவைப்படும் அனைத்து கொள்கைகளையும் உருவாக்கி விட முடியாது. அதே வேளை, ஒரு கொள்கை விக்கிச் சமூகத்தின் முறையான ஏற்பு பெற்ற பிறகு, உரிய இடங்களில் பயன்படுத்துவது பொருத்தமாக இருக்கும். கட்டுரைகள் தொடர்பான சிக்கல்களுக்கு நாம் இவ்வாறே செயல்பட்டுள்ளோம். குறிப்பாக, தேனி சுப்பிரமணியின் மீதான முறையீட்டைப் பொருத்தவரை, அவர் மீது நடவடிக்கை எடுப்பதற்கான முறையான கொள்கை / வழிமுறை இல்லை என்பதே ஒரு குறையாக சுட்டிக் காட்டப்பட்டு வருகிறது. ஐவர் குழுவின் நான்காவது பரிந்துரைக்குச் செல்லும் நிலை ஏற்பட்டாலும், அன்டன் முன்வைத்துள்ள முறையீட்டை விசாரிக்கும் போதும், இது தொடர்பான ஒரு கொள்கை / வழிமுறைக்கான வெற்றிடம் / தேவை இருக்கவே செய்யும். எனவே, இது தொடர்பாக, இந்தச் சிக்கலைக் கையாண்டு வரும் சுந்தர், நற்கீரன் கருத்தை வரவேற்கிறேன். ஒரு வகையில் இது ஒரு கோழி - முட்டை பிரச்சினை என்பதால் இவ்விசயத்தை எப்படிக் கையாள்வது அறமாக இருக்கும் என்பது பற்றிய உங்கள் மெய்யியல் நோக்கையும் வரவேற்கிறேன். மேலே கூறியுள்ளது என்னுடைய தனிப்பட்ட கருத்தே. விக்கிச்சமூகத்தின் ஒட்டு மொத்த கருத்துக்கு ஏற்பவே இறுதியான கொள்கையின் வடிவம் இருக்கும். நன்றி.--இரவி (பேச்சு) 19:20, 13 திசம்பர் 2013 (UTC)[பதில் அளி]

மயூரநாதன் கருத்து[தொகு]

//மாற்றுக் கருத்துகள், உரையாடல் இல்லா நிலையில் இன்னும் 7 நாட்களில் இது முறையான தமிழ் விக்கிப்பீடியா கொள்கையாக அறிவிக்கப்படுவதற்கான வாய்ப்பு உண்டு//

7 நாட்கள் மிகக் குறைவான நேரம். இவ்வாறான முக்கியமான விடயங்களில் அவசரமாக முடிவெடுத்தல் கூடாது. இப்போது மாற்றுக் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருப்பதால். இந்த 7 நாட்கள் கெடு இருக்காது.

//விக்கிப்பீடியாவின் எந்த ஒரு பயனரும் இம்முன்மொழிவை இடலாம்//

இவ்வாறான முன்மொழிவுகளை இடுவதற்கான தகுதி வரையறுக்கப்பட வேண்டும். முன்மொழிபவர் பதிவு செய்த பயனராக இருக்க வேண்டும். பதிவு செய்து குறிப்பிட்ட காலம் கடந்திருக்க வேண்டும். குறிப்பிட்ட அளவு தொகுப்புக்கள் செய்திருக்க வேண்டும்.

//நிருவாக அணுக்கம் மீளப் பெறுவதற்கான கோரிக்கை பதிவதற்கு 6 மாதங்களுக்கு முன்பு கணக்கு தொடங்கி 250+ பங்களிப்புகள் உடைய பங்களிப்பாளர்கள் மட்டும் உரையாடலாம்.//

உரையாடுவதற்குத் தகுதி எதுவும் விதிப்பது சரியாக இருக்காது. பதிவு செய்த பயனர் எவரும் உரையாடலாம் என்பது எனது கருத்து.

//மேற்கண்ட உரையாடலில் கலந்து கொண்டவர்கள் மட்டும் தங்கள் உரையாடல் போக்குக்கு ஏற்ப இங்கு வாக்கு இடலாம். உரையாடாதவர்கள் வாக்கிட முடியாது.//

உரையாடாதவர்கள் வாக்கிட முடியாது என்று விதிப்பது முறையாகாது. வாக்களிப்பதற்கான குறைந்த அளவு தகுதியை விதிக்க முடியும். இத்தகுதிகள் கோரிக்கைகளை முன்வைப்பவருக்கு இருக்கவேண்டிய தகுதிகளைக் காட்டிலும் குறைவாக இருக்கலாம். ஆனால் அத்தகுதிகள் கொண்ட எல்லாப் பயனரும் வாக்களிக்க அனுமதிக்கப்பட வேண்டும்.

//முதல் 3 நாட்கள் - கோரிக்கை தொடர்பாக குறிப்பிட்ட நிருவாகி மறுமொழி அளிப்பதற்கான நேரம்.//

மூன்று நாட்கள் போதாது.

---மயூரநாதன் (பேச்சு) 03:58, 10 திசம்பர் 2013 (UTC)[பதில் அளி]

மயூரநாதன், இக்கொள்கையை 29 நவம்பர், 2013 அன்றே முன்வைத்து, அதற்குப் பிறகு ஆலமரத்தடியில் தெரிவித்திருந்த போதிலும், உரையாடல்கள் ஏதும் இல்லை. அதனால் தான் 7 நாள் முன்னறிவிப்பு. இப்போது உரையாடத் துவங்கியுள்ளோம் என்பதால் தேவைப்படும் காலம் எடுத்து இணக்க முடிவு நோக்கி நகர்வோம். அவசரம் இல்லை.

முறையீட்டை முன்வைப்பவர் பதிவு செய்த பயனராக இருக்க வேண்டும் என்பதை ஏற்கிறேன். நிருவாக அணுக்கத்தை நீக்க கோரிக்கை வைப்பதற்கு குறைந்தபட்ச தகுதி வரையறுப்பது தேவையற்றது. ஏனெனில், அவரது கோரிக்கை நியாயமானது எனில், நெடுநாள் பயனர்கள் கூட அத்தகைய கோரிக்கையை முன்வைக்க நேரிடும். எடுத்த எடுப்பில் யாரும் இத்தகைய கோரிக்கையை வைத்துக் குழப்பக்கூடாது என்பதற்காகவே, வாக்கெடுப்புக்கு முன்பு பல படிகள் பரிந்துரைக்கப்படுகின்றன. இந்தக் காப்பே போதுமானது.

மிக முக்கியமான இச்சிக்கலில் உரையாடல்கள் உயர் தரமாக இருக்க வேண்டும், நம்பகமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே உரையாடலில் ஈடுபடுவதற்கும் தகுதிகளை வரையறுத்தேன். கையாட்கள், கைப்பாவைகள் குழப்பாமல் இருக்க வேறு காப்புகள் உண்டா?

விக்கிப்பீடியா ஒரு மக்களாட்சி மன்றம் இல்லை. எத்தனை வாக்குகள் என்பதை விட அதற்கு முன்வைக்கும் கருத்துகளே முக்கியத்துவம் பெறும். எனவே தான், முறையாக உரையாடாமல் கூட்டத்தோடு கோவிந்தாவாக ஆதரவு / எதிர்ப்பு வாக்குகள் இடக்கூடாது என்பதை உறுதி செய்யும் பொருட்டு, உரையாடியோர் மட்டுமே வாக்கிடலாம் என்று பரிந்துரைத்தேன்.

வாக்கெடுப்புக்கு வரும் முன்னர் உள்ள மூன்று படிகளைக் கடக்கவே பல வாரங்கள் ஆகும். இந்தக் கட்டங்களிலேயே ஒரு நிருவாகி தன் பக்க நியாயத்தை முன்வைக்க போதுமான காலம் வழங்கப்பட்டுள்ளது என்பதாலேயே, வாக்கெடுப்பு தொடங்கிய பிறகு முதல் 3 நாட்கள் நிருவாகி பதில் அளிக்க போதுமான காலம் என்று கருதினேன்.

பின்வரும் கேள்விகளுக்குத் தெளிவான பதில் தர இயலுமானால், அது குறித்த மற்ற பயனர்களின் கருத்துகளையும் அறிந்து கொள்கையில் தேவையான மாற்றம் கொண்டு வரலாம்.

 • நிருவாக அணுக்க நீக்கக் கோரிக்கையை முன்வைப்பவருக்கான தகுதிகள் என்று நீங்கள் பரிந்துரைப்பவை எவை? எவ்வளவு தொகுப்புகள்? எத்தனை மாதங்களுக்கு முன்பு கணக்கு தொடங்கியிருக்க வேண்டும்?
 • மேற்கண்டதைக் காட்டிலும் குறைவான தகுதிகள் வாக்களிப்பவர்களுக்கு இருத்தல் போதுமானது என்றிருந்தீர்கள். அத்தகுதிகள் யாவை?

(இவ்விரு கேள்விகளுக்கான விடை தரும் முன் http://stats.wikimedia.org/EN/TablesWikipediaTA.htm பாருங்கள். அதில் Distribution of article edits over registered editors, incl. bots என்ற பகுதியைக் காணுங்கள். தொகுப்புகள் எண்ணிக்கை அடிப்படையில் நம்முடைய பங்களிப்பாளர் வளம் என்ன என்பதை அறியலாம்.)

 • யார் வேண்டுமானாலும் உரையாடலாம், கருத்து தெரிவிக்காமல் வாக்களிக்கலாம் என்றால் குற்றம் சாட்டப்பட்டவர் மீதான முறையான உரையாடல் இன்றி அவர் தண்டிக்கப்படுவதற்கான வாய்ப்பும் உண்டு. விடுபடுவதற்கான வாய்ப்பும் உண்டு. இதனை எப்படி முறைப்படுத்துவீர்கள்?
 • வாக்கெடுப்பு நிலைக்கு வந்த பிறகு நிருவாகி பதில் அளிக்க எத்தனை நாட்கள் தர வேண்டும்? ஏற்கனவே உள்ள 3 நாள் காலத்துடன், தனிப்பட்ட காரணங்களை முன்னிட்டு அவர் வேண்டினால் கூடுதலாக 7 நாட்கள் தருவதில் சிக்கல் இல்லை.

நன்றி--இரவி (பேச்சு) 19:36, 13 திசம்பர் 2013 (UTC)[பதில் அளி]

ஒரு நிருவாகிமீது குற்றச்சாட்டு வைத்து நிர்வாக அணுக்கம் நீக்கக் கோரிக்கை விடுப்பது என்பது மிகம் தீவிரத்தன்மை கொண்ட ஒரு விடயம். குறித்த நிர்வாகியைப் பொறுத்தவரை இது மிகவும் கடுமையானது. என்னைப் பொறுத்தவரை. இவ்வாறான குற்றச்சாட்டு ஒன்றை வைப்பது மட்டுமே குறித்த நிர்வாகியை விக்கிப்பீடியாவை விட்டு விலகச் செய்யப் போதுமானது. தமிழ் விக்கிப்பீடியாவுக்கு நல்லமுறையில் பணியாற்றுபவர்களைத் தான் நிர்வாகிகளாக இதுவரை தெரிவுசெய்து வந்திருக்கிறோம். எவரும் குற்றச்சாட்டை முன்வைக்கலாம் என்று இருந்தால் ஒரு நிர்வாகிமீது தனிப்பட்ட பகைமை கொண்டவர் எவரும் பயனராகப் பதிவு செய்துகொண்டு குற்றச் சாட்டுக்களை முன்வைப்பதற்கு வாய்ப்பு உண்டு. இதனால்தான் குற்றச்சாட்டை முன்வைப்பவர் பிற பயனர்களுக்கு ஓரளவு தெரிந்தவராக இருக்கவேண்டும். அப்படியானால்தான் கோரிக்கை நியாயமாக இருப்பதை உறுதிசெய்ய முடியும். கைப்பாவைகளும், கையாட்களும் உரையாடலைக் குழப்பக்கூடும் என்று பயந்தால், அதே கைப்பாவைகளும் கையாட்களும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து விக்கி நடவடிக்கைகளைக் குழப்பமாட்டார்கள் என்று எப்படி நம்பமுடியும்? அடிக்கடி குற்றச்சாட்டுகள் வந்துகொண்டே இருந்தால் அவற்றைக் கையாள்வதற்குப் போதிய வளம் தமிழ் விக்கியில் கிடையாது. எனவே குற்றச்சாட்டு முன்வைப்பவருக்குத் தகுதி வரையறுக்க வேண்டியது மிகவும் முக்கியம்.
எனவே குறைந்தது ஆறு மாதங்களுக்கு முன்னராவது பதிவு செய்திருக்க வேண்டும். இக்காலப்பகுதியில் குறைந்தது மூன்று மாதங்களாவது குறிப்பிடத்தக்க தொகுப்புக்கள் செய்திருக்க வேண்டும். மொத்தம் 500 தொகுப்புக்களாவது செய்திருக்க வேண்டும். இதற்குக் குறைவான தகுதி கொண்ட ஆனால் பதிவு செய்த பயனர் யாராவது குற்றச்சாட்டு வைத்தால் அவ்வாறு குற்றச் சாட்டு வைத்து 7 நாட்களுக்குள் முன் குறிப்பிட்ட தகுதிகளைக் கொண்ட இன்னொரு பயனர் அதை வழிமொழிந்தால் அதை ஏற்றுக்கொள்ளலாம். அல்லது 7 நாட்களுக்குப்பின் குற்றச்சாட்டுத் தானகவே காலாவதி ஆகிவிடும் என வைத்துக்கொள்ளலாம்.
உரையாடல்களைக் கைப்பாவைகளும், கையாட்களும் குழப்புவார்கள் என்று எண்ணினால், உரையாடலில் ஈடுபடுபவர்கள் குற்றச்சாட்டுகள் வைக்கப்படுமுன்னர் பதிவு செய்தவர்களாக இருக்க வேண்டும் என்று விதிக்கலாம். ஆனால் விக்கிப் பயனர்கள் கருத்துச் சொல்வதற்கு இருக்கும் உரிமையை மறுக்க முடியாது. இது எந்தவகையிலும் நியாயம் ஆகாது.
இப்போது தமிழ் விக்கியில் பல மாதங்களுக்கு முன்பே பதிவு செய்து 250க்கு மேல் தொகுப்புக்கள் செய்த பயனர்கள் நூற்றுக்கணக்கில் உள்ளனர். இவர்கள் எல்லாரும் உரையாடலில் கலந்துகொள்ள வேண்டும் என எதிர்பார்த்தால் இவற்றை வாசிப்பதற்கே ஒவ்வொருவருக்கும் பல வாரங்கள் ஆகும். எனவே இது நடைமுறைச் சாத்தியம் இல்லாத ஒரு விடயம். எனவே உரையாடியிருக்க வேண்டும் என்பதை முன் நிபந்தனையாக விதிப்பது பொருத்தமாக இருக்காது. ஒரு பயனர் மற்றவர்களுடைய கருத்துக்களைக் கவனித்துத் தனக்கென ஒரு கருத்தை ஏற்படுத்திக்கொண்டு அதற்கு அமைவாக வாக்களிக்கலாம். உரையாடினால்தான் வாக்களிக்கலாம் என்று எவரையும் கட்டாயப்படுத்த முடியாது. உரையாடாதவர்கள் "கூட்டத்தோடு கோவிந்தாவாக வாக்களிக்கிறார்கள்" என்று எண்ணுவது அவ்வாறான பயனர்களை அவமதிப்பதாக முடியும்.
வாக்களிப்பதற்கான தகுதியாகக் குற்றச்சாட்டு வைப்பதற்கு 3 மாதங்களுக்கு முன் பதிவு செய்திருக்க வேண்டும், குறைந்தது 150 தொகுப்புக்கள் செய்திருக்க வேண்டும் என்று விதிக்கலாம்.
தமிழ் விக்கியில் பங்களிப்பவர்களில் நிர்வாகிகள் உட்பட மிகப் பெரும்பாலானவர்கள் வேறு தொழில்களில் ஈடுபட்டிருப்பவர்கள். ஓய்வு கிடைக்கும்போதுதான் விக்கிவேலைகளில் ஈடுபடுகிறார்கள். குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட உடனேயே ஒருவர் அதற்குப் பதிலைத் தயார் செய்ய முடியாது தொடர்ந்து வரக்கூடிய போக்குகள் நிலைவரங்களைப் பார்த்துத்தான் பதில் எழுத முடியும். பலருக்கு வேலை நாட்களில் நேரமே கிடைக்காது.
எனவே கொடுக்கப்படும் காலம் ஒரு வார இறுதியையாவது உட்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும். எனவே குறைந்தது 7 நாட்களாவது வழங்கப்படவேண்டும்.

---மயூரநாதன் (பேச்சு) 07:03, 14 திசம்பர் 2013 (UTC)[பதில் அளி]

மயூரநாதன், தனிப்பட்ட முறையில் உங்களின் பின்வரும் பரிந்துரைகளை ஏற்கிறேன்.

 • நிருவாக அணுக்கம் தொடர்பான முறையீட்டை முன்வைப்பவர் குறைந்தது ஆறு மாதங்களுக்கு முன்னராவது பதிவு செய்திருக்க வேண்டும். இக்காலப்பகுதியில் குறைந்தது மூன்று மாதங்களாவது குறிப்பிடத்தக்க தொகுப்புக்கள் செய்திருக்க வேண்டும். மொத்தம் 500 தொகுப்புக்களாவது செய்திருக்க வேண்டும். இதற்குக் குறைவான தகுதி கொண்ட ஆனால் பதிவு செய்த பயனர் யாராவது குற்றச்சாட்டு வைத்தால் அவ்வாறு குற்றச் சாட்டு வைத்து 7 நாட்களுக்குள் முன் குறிப்பிட்ட தகுதிகளைக் கொண்ட இன்னொரு பயனர் அதை வழிமொழிந்தால் அதை ஏற்றுக்கொள்ளலாம். அல்லது 7 நாட்களுக்குப்பின் குற்றச்சாட்டுத் தானகவே காலாவதி ஆகிவிடும்.
 • குறிப்பிட்ட நிருவாகி மறுமொழி அளிக்க கொடுக்கப்படும் காலம் ஒரு வார இறுதியையாவது உட்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும். எனவே குறைந்தது 7 நாட்களாவது வழங்கப்படவேண்டும்.
 • வாக்களிப்பதற்கான தகுதியாகக் குற்றச்சாட்டு வைப்பதற்கு 3 மாதங்களுக்கு முன் பதிவு செய்திருக்க வேண்டும், குறைந்தது 150 தொகுப்புக்கள் செய்திருக்க வேண்டும் என்று விதிக்கலாம்.

உரையாடலைக் கட்டாயப்படுத்தக்கூடாது, அனைவரும் உரையாடலாம், உரையாடாமல் வாக்கிடலாம் என்பது தொடர்பான உங்கள் கருத்துகளில் மட்டும் மாறுபடுகிறேன். மற்றவர்கள் செய்யும் உரையாடல்களைப் பார்த்து ஒருவர் வாக்கிடும் முடிவை எடுக்கலாம் என்னும் வாதத்தின் நியாத்தை ஏற்கிறேன். எனினும், அனைவரும் தத்தம் கருத்துகளை வெளிப்படையாகத் தெரிவிப்பதே முறையீடு பிணக்குத் தீர்வாயத்துக்குச் செல்லும் போது, அவர்கள் சமூகத்தின் மனநிலையை அறிந்து முடிவெடுக்க உதவும். தவிர, தற்போது "மூத்த பயனர்கள் பார்த்துக் கொள்வார்கள்" என்று மற்றவர்கள் தயங்கியும் ஒதுங்கியும் நிற்கும் போக்கே தென்படுகிறது. துணிந்து தத்தம் கருத்துகளைச் சொல்லாமல் பொத்தாம் பொதுவாக விருப்பம் இடும் போக்கும் நேரடியாக விக்கியில் உரையாடாமல் மின்மடல்களிலும் தொலைப்பேசியிலும் உரையாடும் போக்கும் தென்படுகிறது. இப்போக்குகள் விக்கிச் சமூகத்தின் வெளிப்படைத்தன்மைக்கு உகந்தவையல்ல. மேலும், ஒருவரின் நிருவாகப் பொறுப்பை விட குறிப்பிட்ட முறையீடுகள் மீதான நிலைப்பாடுகள் முக்கியமானவை. இதன் மூலமே தேவையான இடங்களில் உரியவர்களைத் தங்கள் செய்கைக்குப் பொறுப்பேற்கச் செய்ய முடியும். இவற்றை அறிய உரையாடல்கள் மிகவும் அவசியம்.

இக்கொள்கை தொடர்பான இரண்டாம் வரைவை திசம்பர் 25, 2013 அன்று முன்வைக்க உள்ளேன். அதற்கு முன்பு அனைவரும் கருத்துகளைத் தெரிவிக்குமாறு வேண்டுகிறேன். இரண்டாம் வரைவு முன்வைக்கப்பட்ட பிறகு, அதிலுள்ள புதிய மாற்றங்களைப் பற்றி மட்டும் உரையாடுவது முறையாக இருக்கும். --இரவி (பேச்சு) 07:14, 19 திசம்பர் 2013 (UTC)[பதில் அளி]

சுந்தர் கருத்துகள்[தொகு]

 • முதல் மூன்று படிநிலைகளுக்கு மிகவும் முக்கியத்துவம் தர வேண்டும். அரிதினும் அரிதான நிலையில்தான் இந்த நிலைக்கு வர வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும். இப்போதும்கூட பிணக்குத் தீர்வுமுறையை வரையறுப்பதில்தான் நாம் முனைப்பு காட்ட வேண்டும். ஏனெனில் அடுத்து இவ்வாறான குற்றச்சாட்டு வரும் வாய்ப்பு உடனடியாகத் தெரியவில்லை. அப்படியே வந்தாலும் மற்ற நிலைகளைக் கடந்துதானே வர வேண்டும்? அந்தக் கொள்கைகளை வரையறை செய்யாத நிலையில் இது மட்டும் இருந்தால் பயன் இருக்காதே?
 • முதல் நிலைக்கு எவ்வித தகுதியும் தேவையில்லை (பயனர் கணக்கு வேண்டும்).
 • முந்தைய நிலைகளில் வழமையான பங்களிப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டிருப்பார்கள். ஒரு சிலர் கலந்து கொள்ளாமல் இருந்தாலும் நிகழ்வைப் பார்த்திருக்கக் கூடும். அதனால், அதற்குப் பிறகும் பழைய பயனர் எவருமே முன்மொழியவோ வழிமொழியவோ இல்லையெனில் குற்றச்சாட்டின் அழுத்தத்தை வழமையான பயனர்களில் ஒருவர்கூட ஏற்கவில்லை எனப் பொருள் கொள்ளலாம். அந்தச்சூழலில் ஒரு கருத்தெடுப்பு நடத்துவது தேவையற்றதே. அதனால் முன்மொழிவதற்கான குறைந்த அளவு தகுதி இந்தக் கடைசி நிலைக்கு அவசியமே. நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரும்போது குறிப்பிட்ட எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் சேர்ந்து முன்மொழியவோ வழிமொழியவோ செய்தால்தான் கருத்தெடுப்புக்கு எடுத்துக் கொள்கிறார்கள். அதே போல நாமும் வரையறுக்கலாம்.
 • பரிந்துரைத்த 3 நாட்கள், 7 நாட்கள் கெடு மிகவும் குறுகியது. போதிய இடைவெளி இல்லாவிட்டால் ஒருவர் தமது தரப்பு வாதத்தைக் கோர்வையாகச் சேர்த்து சான்றுடன் முன்வைக்க முடியாது. அரைகுறை வாதங்கள்தான் வாய்க்கும். தவிர நம்மில் பலரும் வாழ்க்கைச் சூழலால் பல நாட்கள் விடுப்பில் இருக்க நேர்கிறது. அவ்வாறிருக்கும்போது ஒருவர் வாழ்வில் பெரும் இடையூறு உண்டாகலாம். இதுபோன்ற எந்தவொரு நடவடிக்கையும் விக்கியைப் பொருத்தவரை தண்டனைக்காக வழங்கப்படுவதல்ல, மேலும் தவறு நிகழாமல் இருப்பதற்காக எடுக்கப்படுவது. அந்நிலையில் விடுப்பில் இருக்கும் நிருவாகி ஒருவர் பெரிய தீங்கு எதையும் இடைப்பட்ட நேரத்தில் விளைவிக்க வாய்ப்பில்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். அப்படி அவசரமாகத் தேவைப்பட்டால் அவர் மீறும் விதியை முன்னிட்டு அவரது கணக்கை இடைமுடக்கும் வசதியும் ஏற்கனவே உள்ளது.
 • கருத்தின் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டும் என்ற நோக்கம் நல்லது. ஆனால், வேறு ஒரு நபர் நல்ல கருத்து ஒன்றை இட்டிருக்கும்போது அதை வழிமொழிவதாகத் தெரிவித்து ஒருவர் வாக்கிடுவதில் பிழை இல்லை. நபர்களையும் கருத்துக்களையும் பிரித்து, காரணங்களை வரிசையில் இட்டுவிட்டால், வாக்கெடுப்பில் கலந்து கொள்பவர்கள், தமது நிலைப்பாடு எந்தக் காரணத்தின் அடிப்படையில் அமைந்தது எனச் சுட்டி வாக்கெடுக்கும்படி வகுக்கலாமா?
 • ஏற்கனவே இருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு இது பொருந்துமா பொருந்தாதா என்பது குறித்து என்னால் உறுதியாக எதுவும் சொல்லவியலவில்லை. ஆனால், இருக்கும் ஒரே குற்றச்சாட்டைப் பொருத்தவரை குறிப்பிடும் நபர் விக்கியில் தொகுப்பதை நிறுத்தி விட்டதால் அவசரப்படுவதற்கொன்றுமில்லை. ஆனால், தீர்வை எட்ட வேண்டும்.

-- சுந்தர் \பேச்சு 16:09, 20 திசம்பர் 2013 (UTC) பி.கு. வழமையான பங்களிப்பாளர்கள் எனக் குறிப்பிடுவது ஏதோ சிறப்புத் தகுதியாக அல்ல, சில வேளைகளில் புதிதாக வரும் பங்களிப்பாளர் ஒருவர் நிருவாக அணுக்கத்தைப் பற்றிய தவறான புரிதலினால் தேவையில்லாமல் ஒரு பரிந்துரையை வைக்கக் கூடும் என்ற வாய்ப்பைத் தவிர்ப்பதற்காகவே.[பதில் அளி]

சுந்தர், உள்ளடக்கம் தொடர்பான பிணக்குகளுக்கோ ஓரிருவருக்கு இடையிலான பிணக்குகளுக்கோ பிணக்கு தீர்வு முறை உதவலாம். எனவே, அது குறித்த கொள்கையை இறுதி செய்ய விரைந்து முனையுமாறு வேண்டுகிறேன். எனினும், நிருவாக அணுக்கம் நீக்கம் குறித்த கொள்கை வகுப்பதற்கான தேவை குறித்து ஐவர் குழுவும் மற்ற பலரும் பல இடங்களில் கருத்து தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையிலேயே இம்முயற்சி. பிணக்குத் தீர்வு முறைக்கும் இதற்கும் முடிச்சு போடுவதற்கோ ஒன்றை முடித்து விட்டுத் தான் அடுத்ததற்கு நகர வேண்டும் என்பதற்கோ தேவையில்லை. சமுதாய முறையீட்டுக் கூடத்தில் முறையிடுவதற்காக நீங்கள் வகுத்த வழிமுறைகளைப் பின்பற்றி இரண்டு முறையீடுகளை வைத்துள்ளேன். முடிந்தால், அவை குறித்து நடவடிக்கை எடுக்கப் பாருங்கள். ஒத்திப் போடுவது, முறை வகுக்கிறேன் என்று இழுத்தடிப்பது, வகுத்த முறையைப் பின்பற்றி கோரிக்கை வைத்தால் கண்டு கொள்ளாமல் விடுவது, உள்நோக்கம் கற்பிப்பது, குழு அமைப்பது - பிறகு அதன் பரிந்துரையைச் செயற்படுத்தாமல் நழுவுவது, ஒரு கொள்கையை வகுத்தால் மற்ற பல கொள்கைகளை வகுக்குமாறு சொல்வது முதலிய அண்மைக்கால தமிழ் விக்கிப்போக்குகள் உவப்பாக இல்லை. ஒரு பயனர் மெய்யான விக்கி விடுப்பில் இருப்பதற்கான தேவை வேறு. பிரச்சினை வரும் போது அதனை எதிர்கொள்ளாமல், விக்கிச் சமூகத்தின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு நல்க மறுப்பது வேறு. இது சரி என்றால், ஒருவர் எந்தத் தவறை வேண்டுமானாலும் செய்து விட்டுப் பேசாமல் இருந்து கொண்டால் போதும்.

நீங்கள் சொன்ன பல கருத்துகளை ஏற்கனவே கருத்தில் எடுத்து, மயூரநாதனுக்குப் பதில் அளித்துள்ளேன். உரையாடலுக்கும் வாக்கெடுப்புக்கும் 7 நாள் கெடுவுக்குப் பதில் எத்தனை நாட்கள் வேண்டும் என்ற தெளிவான பரிந்துரையை எதிர்பார்க்கிறேன். --இரவி (பேச்சு) 20:02, 24 திசம்பர் 2013 (UTC)[பதில் அளி]

இரவி, நான் முதல் மூன்று படிநிலைகள் எனக்கூறியது நீங்கள் மேலே குறிப்பிட்டுள்ள படிமுறையின் நிலைகளைத்தான். மற்றபடி பிணக்குத்தீர்வுமுறையை முடித்துவிட்டுத்தான் இதை நகர்த்த வேண்டும் எனச் சொல்லவில்லை. தனியாகப் பார்த்தாலும் இந்த ஒரு கொள்கை அவசரமாக முன்னெடுக்க வேண்டியதாக எனக்குப் படவில்லை. அது ஏன் எனவும் விளக்கியிருக்கிறேன். மற்றபடி மற்ற கொள்கையை இறுதிசெய்துவிட்டுத்தான் இங்கு வர வேண்டும் என்றில்லை. உள்நோக்கம் கற்பிப்பது என நீங்கள் பதிந்துள்ள கூற்றிலேயே ஒட்டுமொத்த விக்கிப்பீடியர்களின் தனித்தனிச் செயல்பாடுகளை இழுத்தடிப்பது என நீங்கள் குறிப்பிட்டுள்ளதில் உள்ள முரண்பாட்டை ஒருமுறை பாருங்கள். 3, 7, 7 நாட்கள் கெடுவுக்குப் பதிலாக 7, 7, 7 என்றிருந்தால் சரியாக இருக்குமென நினைக்கிறேன். -- சுந்தர் \பேச்சு 10:21, 3 சனவரி 2014 (UTC)[பதில் அளி]

நற்கீரன் கருத்துக்கள்[தொகு]

 • சுந்தர் குறிப்பிடது போன்று விக்கிப்பீடியா:பிணக்குத் தீர்வுமுறை (வரைவு) இறுதி செய்த பின்னர் இந்த உரையாடலை முன்னெடுப்பதே பொருத்தம். அதில் விடுபட்டு அரிதான நிலையில் வருமாறே இந்த முறைமை அமைய வேண்டும்.
 • குற்றச்சாட்டை முன்வைப்பவர் விக்கிச் சமூகத்தில் நல்ல நிலையில் உள்ளவராக, பங்களிப்புக்கள் செய்தவராக இருக்க வேண்டும். இல்லாவிடின், அவருக்கு விக்கி முறைமைகள் விளங்கி இருக்கும் என்று உறுதி செய்ய முடியாது. எனவே "குறைந்தது ஆறு மாதங்களுக்கு முன்னராவது பதிவு செய்திருக்க வேண்டும். இக்காலப்பகுதியில் குறைந்தது மூன்று மாதங்களாவது குறிப்பிடத்தக்க தொகுப்புக்கள் செய்திருக்க வேண்டும். மொத்தம் 500 தொகுப்புக்களாவது செய்திருக்க வேண்டும்." என்றது போன்ற ஒரு விதி முக்கியம். இல்லாவிடின் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை நிர்வாகிகள் குழு ஒன்று முன்பரிசீலை செய்ய வேண்டும் போன்றதொரு படி வேண்டும்.
 • காலத்தை case by case ஆகத்தான் தீர்மானிக்க வேண்டும். விக்கியில் எல்லோரும் எல்லா நேரமும் முனைப்புடன் பங்களிப்பு செய்வது இல்லை. எனவே கால எல்லை

--Natkeeran (பேச்சு) 00:20, 23 திசம்பர் 2013 (UTC)[பதில் அளி]

நற்கீரன், அரிதினும் அரிது என்று பேசிக் கொண்டிருப்பதற்கு இங்கு என்ன தூக்கு தண்டனையா தந்து கொண்டிருக்கிறோம்? நிருவாகிகளைத் தேர்ந்தெடுப்பது வழமையான பணி என்றால், அவர்களைத் தகுந்த காரணங்களுக்காக பொறுப்பை விட்டு நீக்குவதும் வழமையான பணியே. சொல்லப் போனால், நிருவாக அணுக்கம் அளிப்பதற்கு உள்ள வழிமுறைகளை விட பத்து, இருபது முறை மிகக் கடுமையான வழிமுறையை ஏற்கனவே பரிந்துரைத்திருக்கிறோம்.

கோரிக்கையை முன்வைப்பவருக்குப் போதுமான தகுதி இல்லையென்றால் அத்தகைய தகுதி உடைய இன்னொருவர் பரிந்துரைக்க வேண்டும் என்ற மயூரநாதனின் பரிந்துரை ஏற்கப்பட்டுள்ளது. அது போதுமானது. இதற்கு இன்னொரு நிருவாகிகள் குழு அமைப்பது அதிகாரப் படிநிலைகளை உருவாக்குவது மட்டுமன்று, தேவையற்றதும் கூட. அது சரி, நீங்கள் உருவாக்கிய ஐவர் குழுவின் பரிந்துரையை யார் செயற்படுத்தப் போகிறார்கள்? அதற்கு இன்னொருவர் பிறந்து வரும் வரை காத்திருக்க வேண்டுமோ? :) நீங்கள் அமைத்த ஒரு குழுவின் பரிந்துரையைச் செயற்படுத்த முடியாமல், மீண்டும் மீண்டும் குழு என்று பேசிக் கொண்டிருப்பது முரண்நகையாக இல்லையா?

எவ்வளவு கால எல்லை வேண்டும் என்று தெளிவாக பரிந்துரைத்தால் கவனத்தில் கொள்ள முடியும். மெய்யான விக்கி விடுப்பு கோரிக்கைகள் கண்டிப்பாக கவனிக்கப்படும். அதே வேளை, விக்கியின் மற்ற எல்லா பணிகளைப் போலவும் தெளிவான கால வரையறை வேண்டும். --இரவி (பேச்சு) 20:09, 24 திசம்பர் 2013 (UTC)[பதில் அளி]

அன்ரன் கருத்துக்கள்[தொகு]

 • //வாக்கெடுப்பின் படி 70%க்கும் கூடுதலானோர் // 3 இல் இரண்டு பெரும்பான்மை என்றிருந்தால் என்ன? இது
 • //இந்த நடைமுறை மூலம் தனது நிருவாகப் பொறுப்பைத் தக்க வைக்கும் நிருவாகி ஒருவர் மீது அடுத்த ஒரு ஆண்டுக்கு வேறு யாரும் நிருவாக அணுக்கம் நீக்கல் கோரிக்கை கொண்டு வர முடியாது.// இந்த நடைமுறை மூலம் தனது நிருவாகப் பொறுப்பைத் தக்க வைக்கும் நிருவாகி ஒருவர் மீது அடுத்த ஒரு ஆண்டுக்கு நிருவாக அணுக்கம் நீக்கல் கோரிக்கை முன் வைத்தவரால் மீண்டும் நிருவாக அணுக்கம் நீக்கல் கோரிக்கை கொண்டு வர முடியாது. என மாற்றலாம்.

--Anton·٠•●♥Talk♥●•٠· 04:20, 28 திசம்பர் 2013 (UTC)[பதில் அளி]

அன்டன், பெரும்பான்மையை நிறுவ மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் என்பது பெரிதும் நடைமுறையில் உள்ள ஒன்று. 66.66% க்கும் 70%க்கும் பெரிய வேறுபாடில்லை என்றே முழுமையான தொகையாக இருக்கட்டும் என்று 70% பரிந்துரைத்தேன். எனினும், மிகச் சிறிய அளவில் வாக்குகள் விழும் நிலையில் இது அறுதிப் பெரும்பான்மையைக் கோரி நிற்கிறது. (ஒரு மிகையான) எடுத்துக்காட்டுக்கு, மொத்த வாக்குகள் 3 என்றால் மூன்று பேரும் ஆதரித்தால் மட்டுமே இக்கோரிக்கை நிறைவேறும். மொத்த வாக்குகள் 6 என்றால் 5 பேர் ஆதரிக்க வேண்டும். எனவே, 70% என்பதற்குப் பதில் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் என்பது ஏற்புடையது.

யார் இக்கோரிக்கையை முன்வைத்தாலும், அனைவரும் பங்கேற்று உரையாடி வாக்களித்துத் தான் முடிவு எடுக்கப்படுகிறது. எனவே, இன்னொரு முறை வேறு யாரும் உடனடியாக இக்கோரிக்கையை மீண்டும் வைத்தாலும் ஒட்டு மொத்தச் சமூகத்தின் முடிவும் குறுகிய காலத்தில் மாறி இருக்கும் என்று சொல்ல முடியாது. எனவே, உங்கள் இரண்டாவது கோரிக்கையை ஏற்பது பொருத்தமாக இருக்காது. --இரவி (பேச்சு) 05:31, 30 திசம்பர் 2013 (UTC)[பதில் அளி]

இரண்டாம் வரைவு[தொகு]

1. குறிப்பிட்ட நிருவாகியின் பேச்சுப் பக்கத்திலோ தொடர்புடைய பிற பெயர்வெளிப் பேச்சுப் பக்கங்களிலோ நேரடியாக உரையாடுங்கள்.

இது பயன் அளிக்காவிட்டால்,

2. நிருவாகிகளுக்கான அறிவிப்புப் பலகையில் முறையிடுங்கள். மற்ற நிருவாகிகள் கவனித்து உரிய நடவடிக்கை எடுப்பார்கள்.

தொடர்ந்து பல்வேறு பக்கங்களில் மீண்டும் மீண்டும் சிக்கல்கள் எழுந்த வண்ணம் இருந்தாலோ குறிப்பிட்ட நிருவாகி ஒத்துழைக்க மறுத்தாலோ

3. சமுதாய முறையீட்டுக் கூடத்தில் முறையிடுங்கள்.

இதற்குப் பிறகும் குறிப்பிட்ட நிருவாகி ஒத்துழைக்க மறுத்தால், விக்கிச்சமூகம் இது தொடர்பாக நேரடியாக கலந்துரையாடி வாக்கெடுப்பின் மூலம் நிருவாக அணுக்கத்தை மீளப் பெறுவதற்கான நடைமுறையைத் தொடங்கலாம்.

4. நிருவாக அணுக்கம் மீளப் பெறுவதற்கான வாக்கெடுப்பை நடத்துவதற்கான முன்மொழிவை இங்கு பதியுங்கள். இவ்வாறு இடுவதற்கு முன் மேற்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி இருக்க வேண்டும். எடுத்த எடுப்பில் நிருவாக அணுக்கத்தை மீளப் பெறுவதற்கான முன்மொழிவை இடக்கூடாது.

நிருவாக அணுக்கம் நீக்குவதற்கான கோரிக்கையை முன்வைப்பவருக்கான குறைந்தபட்ச தகுதி:

குறைந்தது ஆறு மாதங்களுக்கு முன்னராவது பதிவு செய்திருக்க வேண்டும். மொத்தம் 500 தொகுப்புக்களாவது செய்திருக்க வேண்டும். இதற்குக் குறைவான தகுதி கொண்ட ஆனால் பதிவு செய்த பயனர் யாராவது குற்றச்சாட்டு வைத்தால் அவ்வாறு குற்றச் சாட்டு வைத்து ஏழு நாட்களுக்குள் முன் குறிப்பிட்ட தகுதிகளைக் கொண்ட இன்னொரு பயனர் அதை வழிமொழிந்தால் அதை ஏற்றுக்கொள்ளலாம். அல்லது ஏழு நாட்களுக்குப்பின் குற்றச்சாட்டுத் தானகவே காலாவதி ஆகிவிடும்.

கோரிக்கை பதிந்து,

முதல் 14 நாட்கள் - கோரிக்கை தொடர்பாக குறிப்பிட்ட நிருவாகி மறுமொழி அளிப்பதற்கான நேரம். நியாயமான காரணத்துக்காக, முறையாக வேண்டினால் இன்னும் ஏழு நாட்கள் நீட்டிப்பு வழங்கப்படும்.

அடுத்த 14 நாட்கள் - பயனர்கள் முதலில் கலந்துரையாடத் தொடங்குவார்கள். வெறும் ஆம், இல்லை, வேண்டாம், விருப்பம் போடாமல் விரிவாக, தெளிவாக பயன் இடர்களை முன்வைத்து உரையாட வேண்டும்.

அடுத்த ஏழு நாட்கள் - மேற்கண்ட உரையாடலைத் தொகுத்து "ஏன் நிருவாக அணுக்கத்தை நீக்கக் கூடாது", "ஏன் நிருவாக அணுக்கத்தை நீக்க வேண்டும்" என்று இரு நோக்குகளிலும் கருத்துகள் தொகுத்து எழுதப்படும். இத்தொகுப்புச் சுருக்கத்தை கூட்டாக எழுதும் பொறுப்பை ஓரிருவர் முன்வந்து மேற்கொள்ளலாம். இச்சுருக்கத்தை எழுதும் காலத்தில் உரையாடல்கள் ஏதும் நிகழ்வதைத் தவிர்க்க வேண்டும்.

அடுத்த ஏழு நாட்கள் - வாக்கெடுப்பு தொடங்கும் நாளில் இருந்து மூன்று மாதங்களுக்கு முன்பு பயனர் கணக்கு பதிந்து 150+ தொகுப்புகள் கொண்டிருப்போரின் வாக்குகள் மட்டும் செல்லும். வாக்கிடும் அனைவரும் தாங்கள் ஏன் அவ்வாறு வாக்கிடுகிறோம் என்பதை விளக்கும் வகையில் குறைந்தது ஐந்து வரி அளவு கருத்திட வேண்டும். முடிவு பிணக்குத் தீர்ப்பாயத்துக்குச் செல்லும் நிலையில், வெறும் வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் இன்றி விக்கிச்சமூகத்தின் மனநிலை, கருத்து அறிந்து முடிவை அறிவிக்க இவ்வாறு கருத்திடுவது உதவும். குறிப்பிட்ட நிருவாகியும் மீளப் பெறும் கோரிக்கையை முன்வைத்தவரும் இங்கு வாக்கிட முடியாது.

முடிவு:

மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் நிருவாகியை நீக்க ஆதரவு தந்தால், நிருவாகியை நீக்குவதற்கான பணியை அதிகாரி நிலை பயனர்கள் எவரும் முன்னெடுக்கலாம்.

மூன்றில் இரண்டு பங்குக்கும் குறைவான ஆதரவு என்றால், விக்கிச்சமூகத்தின் கருத்துகளை ஆய்ந்து உரிய முடிவை அறிவிக்கும் பொறுப்பு பிணக்குத் தீர்வாயத்தின் முன் வைக்கப்படும். (பிணகுத் தீர்வாயம் உருவாக்குவது குறித்து தனி கொள்கை, நடைமுறை முன்மொழிய வேண்டியுள்ளது).

பிணக்குத் தீர்வாயத்தின் முடிவு இறுதியாக இருக்கும். மேல் முறையீடுகள் கிடையாது. பிணக்குத் தீர்வாயத்தின் முடிவுக்குக் கட்டுப்பட வேண்டியது அனைத்து விக்கிப்பீடியர் கடமை.

இந்த நடைமுறை மூலம் தனது நிருவாகப் பொறுப்பைத் தக்க வைக்கும் நிருவாகி ஒருவர் மீது அடுத்த ஒரு ஆண்டுக்கு வேறு யாரும் நிருவாக அணுக்கம் நீக்கல் கோரிக்கை கொண்டு வர முடியாது. குறிப்பிட்ட நிருவாகி தொடர்ந்து தவறாகச் செயல்படுகிறார் என்று கருத இடம் இருக்குமானால், நிருவாகிகள் அறிவிப்புப் பலகையில் முறையிடலாம். மற்ற நிருவாகிகள் கவனித்து நடவடிக்கை எடுப்பார்கள்.

முதலாம் வரைவில் இருந்து இரண்டாம் வரைவில் மாறியுள்ள விதிகள் தொடர்பான கருத்துகள் மட்டும் வரவேற்கப்படுகின்றன. இன்னும் ஒரு வார காலம் பொறுத்திருந்து தேவைப்பட்டால் அடுத்த வரைவு முன்வைக்கப்படும். அல்லது, இவ்வரைவே இறுதியான கொள்கையாக அறிவிக்கப்படும்.