விக்கிப்பீடியா பேச்சு:நடைக் கையேடு (எழுத்துப்பெயர்ப்பு)/தொகுப்பு 01

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஒலிபெயர்ப்பு, எழுத்துப்பெயர்ப்பு[தொகு]

ஒலிபெயர்ப்பு, எழுத்துப்பெயர்ப்பு பற்றிய சற்று நீளமான கட்டுரை போன்ற முன் வைப்புதான்.

எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பது அறிவு என்று திருவள்ளுவப் பெருந்தையார் கூறியிருப்பதை நினைவிற் கொண்டு என் கருத்தை அருள் கூர்ந்து சீர் தூக்கிப் பார்க்க வேண்டுகிறேன்.

தமிழ் மொழியை வளர்ப்பது விக்கியின் குறிக்கோளாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் பரவலாக பயன் தரும் வழியில் விக்கி பயன் படவேண்டும் என்பது ஒரு குறிக்கோளாக இருக்கும் என நம்புகிறேன். தமிழின் நல் இயல்புகளை குலைக்கவும் விக்கி இடம் தரலாகாது என்பது ஒரு சொல்லப்படாத எதிர்பார்ர்பு என்று நம்புகிறேன்.

தொழில் நுட்பப் புரட்சியால் (ஊர்தி, தொலை தொடர்பு, கணிணி முதலான நுட்பங்களிலே கடந்த 30-40 ஆண்டுகளிலே ஏற்பட்ட மிகப்பெரும் வளர்ச்சிகளினால்) இன்று என்றும் இல்லாத அளவுக்கு மக்கள் உறவாட்டதிலே உலகம் மிகச் சுருங்கி வருவதைப் பலரும் நன்கு உணர்வர். இதனால் வேற்று மொழி ஒலியன்களைத் தமிழில் எடுத்தாள வேண்டியத் தேவை இன்னும் வலுவாக ஏற்படுகின்றது. ஆனால் வேற்று மொழி ஒலியன்களைத் தமிழில் எடுத்தாள வேண்டியத் தேவை இல்லை என்றால் எனக்கு அதுவும் ஏற்பே.

தமிழின் இனிய ஒழுங்குப்பாடான ஒலிப்பு முறை மிகவும் குலைக்கப்பட்டு வருகின்றது, இதனால் பல குழப்பங்களும் இடர்ப்படுகளும் நேர்கின்றன. அகராதி, கலைக்களஞ்சியம் போன்ற உசாத்துணையான (reference) நூல்கள் தரத்தைக் காக்க வேண்டும், செம்மைப்படுத்த வேண்டும் என்பது ஒரு இயல்பான கொள்கை எதிர்பார்ப்பு.

ஒலிபெயர்ப்பு, எழுத்துப்பெயர்ப்பு ஆகிய இவற்றில் என்ன இடர்ப்பாடு என்று காட்ட முதலில் தமிழ் முறையை சற்று விளக்குகிறேன். அருள் கூர்ந்து பொறுமையாக படித்துப் பாருங்கள்.

1. தமிழில் 18 மெய் எழுத்துக்களே உள்ளன. அவற்றில் 6 எழுத்துக்கள் மட்டுமே வல்லின எழுத்துக்கள். அவையாவன க், ச், ட், த், ப், ற் என்பனவே. இந்த 6 எழுத்துக்களில் நான்கு எழுத்துக்கள் மட்டுமே, ட், ற் நீங்கலாக உயிரோடு சேர்ந்து ஒரு தமிழ்ச் சொல்லின் முதல் எழுத்தாக வரக்கூடியவை.

எனவே க், ச், த், ப் என்னும் நான்கு வல்லின எழுத்துக்கள் மட்டுமே உயிர் எழுத்தோடு கூடி தமிழ்ச் சொல்லின் முதல் எழுத்தாக வரும்.

தமிழ் மொழியிலே வல்லின எழுத்துக்கள் வலித்து ஒலித்தல் இரண்டே இடங்களில்தான்.

முதலாவது ஒரு சொல்லின் முதல் எழுத்தாக வந்தால் வலித்து ஒலிக்கும். இரண்டாவது, புள்ளி வைத்த (தமிழில் இதற்கு ஒற்று என்று பெயர்) ஒரு வல்லின எழுத்துக்குப் பின் வரும் மொழுது வல்லின எழுத்து வலித்து ஒலிக்கும். மற்ற இடங்களில் எல்லாம் வல்லின எழுத்து மெலிந்தே ஒலிக்கும்.

சில எடுத்துக் காட்டுகளைப் பார்த்தால் சட்டென்று விளங்கும்:

கடல் என்னும் சொல்லைப் பாருங்கள். முதல் எழுத்தாகிய க என்னும் வல்லின எழுத்து, சொல்லின் முதல் எழுத்தாக வருவதால் வலித்து ஒலிக்கின்றது. கடல் என்னும் சொல்லின் இரண்டாவது எழுத்தாகிய டகரமும் வல்லின எழுத்துதான், என்றாலும் மெலிந்தே ஒலிக்கின்றது. ஏன்? அந்த டகரத்திற்கு முன் புள்ளி வைத்த எழுத்து வரவில்லை.

இப்பொழுது வேறு ஒர் எழுத்தாகிய கட்டம் என்னும் சொல்லை எடுத்துக்கொண்டால், அதில் வரும் மூன்றாவது எழுத்தாகிய டகரம் வலித்து ஒலிக்கின்றது. ஏனென்றால், புள்ளி வைத்த ட் என்னும் வல்லின எழுத்து இரண்டாவது எழுத்தாக வந்து டகரத்திற்கு முன்னால் இருப்பதால் கட்டம் என்னும் சொல்லில் உள்ள டகரம் வலித்து ஒலிக்கின்றது. முன்னே வரும் புள்ளி வைத்த எழுத்து வல்லின எழுத்தாக இல்லாமல், மெல்லின எழுத்தாக இருந்தால் மெலிந்தே ஒலிக்கும், வலிந்து ஒலிக்காது. இப்பொழுது கீழ்க்காணும் சொற்களை எழுத்தொலி விளங்க ஒலித்துப் பாருங்கள், வாய் விட்டு உறக்கச் சொல்லிப் பாருங்கள் (பலுக்கிப் பாருங்கள்).

வாடு வாட்டு வாண்டு ( டு என்னும் எழுத்தை எப்படி ஒலிக்கின்றோம் (பலுக்குகின்றோம்)? )

அக்கம் பக்கம் அகம் அங்கம் தங்கம் ( என்னும் எழுத்தை எப்படி ஒலிக்கின்றோம் (பலுக்குகின்றோம்)? )

பத்து பந்து பதுங்கு (து என்னும் எழுத்தை எப்படி ஒலிக்கின்றோம்?)

பச்சை பஞ்சு பஞ்சை குடிசை ( சகரத்தை எப்படி ஒலிக்கின்றோம் ?) மெலிந்து ஒலிக்கும் சகரம் இரு வேறு விதமாக ஒலிக்கும். சொல்லின் முதல் ஒலியாக வரும் சகரமும் மெலிந்து ஒலித்தல் தமிழில் விதி விலக்கு (பிற்கால வழுவான வழக்காக இருக்கலாம்)).

காம்பு - காப்பு - கபுக்கென்று (பு என்னும் எழுத்தை எப்படி பலுக்குகின்றோம்?)

எனவே வல்லின எழுத்துக்கள் தமிழில் இரண்டே இரண்டு இடங்களில் தான் வலித்து ஒலிக்கும் மற்றா எல்லா இடங்களிலும் மெலிந்தே ஒலிக்கும். வலித்து ஒலிக்கும் இடங்கள்: (1) சொல்லின் முதலெழுத்து, (2) புள்ளி வைத்த வல்லின எழுத்துக்குப் பின் வரும் வல்லினம். இந்த அருமையான முறையால் தமிழில் திறம்பட (efficiently) ஒழுக்கமான முறைபட (systematic and logically) எழுத்தொலிகளை ஒலிக்கின்றோம். இவை அனைத்தும் தமிழ் மொழிச் சொற்களுக்கு முற்றுமாய்ப் பொருந்தும். ஆனால் Gandhi, Gate போன்ற பிற மொழிச் சொற்களைத் தமிழில் காந்தி, கேட் என்று எழுதினால் தவறொன்றும் இல்லை. ஆனால் தமிழர்கள் kaanthi, kate என்றுதான் சொல்ல வேண்டும். மாறாக காந்தி, கேட ்என்று எழுதிவிட்டு Gandhi, Gate என்று சொன்னால், தமிழ் ஒலிப்பியல் முறைகள் குலைக்கப்படுகின்றன (phonetic laws of tamil get seriously clobbered ). மேலும் Kate, Gate ஆகிய இரண்டு சொற்களையும் வேறுபடுத்திக் காட்ட இயலாமல் இருக்கின்றது (இது எல்லா மொழிகளுக்கும் வெவேறு அளவு உள்ளது தான், புலி, புளி, புழி என்பது போல). பிற மொழிகளிலே பரவலாக வழங்கப்படும் F என்னும் எழுத்து நிறைவான முறையிலே தமிழிலே பயன்பாட்டில் இல்லை. இப்பொழுது வழங்கும் ஃப என்பது யாரோ ஒருவர் முதன் முதலாக நுழைத்ததுதான் (அதனை எதிர்த்திருந்தால் அதுவும் வழக்குகு வந்திராது). புதிதாக படைத்தவர், நுழைத்தவர் சரியாக செய்திருக்கலாம்! இதற்காக ஜ போன்ற புது எழுத்துக்கள் உருவாக்கினால், பின்னர் அதற்க்காக ஜூ, ஜூ, முதலிய உயிர் ஏற்றக் குறிகள் படைக்க வேண்டும். எனவே ஏற்கனவே எழுத்து விசைப்பலகையில் உள்ள apostrophe குறியை பயன்படுத்தி, ஒலித்திரிபுகளைக் காட்டலாம். இந்த apostrophe குறியை விட்டுவிட்டுப் படித்தாலும் சரியாகவே இருக்கும் (தமிழ் முறைப்படி).. இராமானுசன் என்பது தமிழ் முறை இராமானு'சன் (= இராமானுஜன்), Enrico Fermi (Nobel Prize winner), என்பதை தமிழில் என்றிகோ (அல் என்ரிக்கொ) வெர்மி (அல்லது பெர்மி) என எழுதலாம். அஹ்டற்கு பதிலாக 'வெர்மி என எழுதலாம். Paul, Ball என்பதை பால், 'பால் என எழுதலாம். apostrophe குறியை விட்டுப் படிதாலும் பிழையேதும் இல்லை (தமிழ் முறைப்படி எழுதுவதால்). Hitler , Hindi என்பதை தமிழர்கள் இட்லர் இந்தி என்துதான் எழுதிவார்கள், இதனை ஃஇட்லர், ஃஇந்தி என்று எழுதுவதால், புதிய எழுத்தொன்றும் இல்லாமல் ஒலிப்பும் அதிக திரியாமல் தமிழில் ஒலிக்க வாய்ப்புண்டு. மிக விரித்து பல அடிப்படையான கருத்துக்களை இணைத்து எழுத வேண்டும். இப்போதைக்கு சுருக்கமாக, ஒரே ஒரு குறியைக் கொண்டு G, J, D, Dh, B, F ஆகிய ஆறு எழுத்துக்களை தமிழ் மரபு மீறி வருமிடங்களில் மட்டும் பயனபடுத்தி பயன் பெற முடியும். ஏற்கனவே உள்ள ஆய்த எழுத்தைப் பயன்படுத்தி H ஒலியைப் பெறலாம். (இன்னும் எழுத வேண்டும்).

தேடுபொறிகளில் Ohm's law தேட இயன்றால், எக்குழப்பமும் இன்றி முன் கொட்டு இட்ட எழுத்துக்கள் கொண்ட சொற்களைத் தேட முடியும் (இப்பொழுது முடியவில்லை என்றால் வேறு ஏதோ இடர் இருக்க வேண்டும்). மேலும், இந்த முன்கொட்டுக் குறியை விட்டுவிட்டாவது தேட வசதி இருக்க வேண்டும். இல்லாவிடில் பிறைக்குறிகளில், ரோமானிய எழுத்துகளில் எழுதிவந்தால், தேடு பொறிகளில் கிடைக்கலாம்). (பின்னர் தொடருகின்றேன்). --72.140.138.83 19:05, 16 ஜூன் 2006 (UTC)செல்வா

இதுபற்றி விரிவாக பதிலளிக்க வேண்டியுள்ளது. பின்னர் செய்கிறேன். -- Sundar \பேச்சு 06:34, 17 ஜூன் 2006 (UTC)
எனது கருத்துக்கள்:
 • தொலைத்தொடர்பு ஊடகங்களின் வளர்ச்சியால் உலகம் சுருங்குகிறது என்றும் வேற்றுமொழி ஒலியன்களை இங்கு ஆள வேண்டியது உள்ளது என்பதும் ஏற்கப்படக் கூடியதே.
 • ஆனால் அவற்றிற்கிணையான ஒலியன்கள் தமிழில் இல்லாதபோது அதை நாம் ஆதரிக்க வேண்டுமா? ஏனெனில், தமிழில் பதிவதற்கே பல சிக்கல்கள் இங்கு உள்ளபோது இது தேவைதானா என்ற கேள்வி எழுகிறது.
  • இக்குறியீடு வெகுவாக பலரையும் சேரும்வரை வளர்ந்துவரும் தளமான விக்கிபீடியாவில் இதைப் புகுத்த வேண்டுமா?
  • ஆங்கிலச் சொற்றொடர்களில் இருந்து ' குறியீட்டை விட்டுவிட்டுத் தேடும் தேடுபொறிகள் இன்ன மொழியென்று அறிந்து செயல்படுபவை. இதனால் அவை "stemming" போன்ற மொழியறி மாற்றங்களைச் செய்து விடைகாண முடிகிறது. ஆனால், கவலைக்குறிய வகையில் தமிழுக்கென தனித் தேடுபொறி இல்லை. (யாழ் போன்றவை தமிழ்மொழியறிந்து தேடுபவை அல்ல.) இந்த சூழ்நிலையில் இக்குறியீடு இடையூறு தருமா தராதா என்பது பற்றி நான் என் நிறுவனத்தில் (யாஹூ) கேட்டுப் பார்க்கிறேன். இவற்றில் எப்படியோ, ஆனால் விக்கிபீடியா தேடல் பெட்டியில் இந்தத் தேடல் விடை தருவதில்லை.
  • பயனர்கள் படிப்பதற்கு இது இடையூறாக இருக்குமெனத் தோன்றுகிறது. வேண்டுமானால் அடைப்புக்குறிக்குள் இவற்றைத் தரலாமே.
  • தலைப்புகளைப் பொருத்தவரை நீங்கள் மிகவும் குறிப்பாக இருந்தால் வழிமாற்றுப் பக்கங்கள் அமைக்கலாம்.
 • பிறமொழி ஒலியன்கள் சிக்கல் தமிழ்மொழிக்கும் தமிழ் விக்கிபீடியாவிற்கும் மட்டுமானதல்ல. ஆங்கில விக்கியில் இது விடையத்தில் அடைப்புக்குறிக்குள் பன்னாட்டு ஒலிப்புமுறை நெடுங்கணக்கு (IPA) அடிப்படையில் ஒலிப்பு விளக்கம் தருகின்றனர். en:India கட்டுரையில் பாருங்கள். முடிந்தவிடங்களில் ஒலிப்படிமத்தையும் இணைத்துவிடுகின்றனர். இந்தப் பத்தியில் பாருங்கள். (இவ்விடையம் விவாதத்திலிருக்கும்போது எவரேனும் ஆத்திசூடியை மொழிந்து பதிவேற்றினால் நன்றாக இருக்கும். பலர் ஆங்கில விக்கியில் கேட்க விரும்புகிறார்கள்)
 • இனி வருங்காலத்தில் இணையத்தில் எழுத்து சார்ந்த உள்ளடக்கங்களோடு படங்கள், ஒலிகள், நகர்படங்கள் முதலியவற்றின் விகிதம் பெரிதளவு கூடும் என்பதால் இச்சிக்கல் தானாக சரியாகும்.
 • இருப்பினும் விக்கிபீடியாவை நீக்கிப் பார்த்தால் உங்கள் பரிந்துரையில் கொள்கை சார்ந்த வலு இருப்பதாகவே தோன்றுகிறது. எழுத்துச் சீர்மை தமிழுக்குப் புதிதல்ல. உங்கள் பரிந்துரைகளை இதுவரை கட்டுரையாக வெளியிடவில்லை என்றால் தமிழ் இணைய மாநாடு போன்றவற்றில் படையுங்கள். வியட்னாம் எழுத்துப்பெயர்ப்ப்பு முறைமை பள்ளி அளவிலேயே கற்பிக்கப்படும் அளவிற்கு வந்ததுபோல் வருமாயின் எந்தச் சிக்கலும் இல்லை.

ஒரு சிறு குறிப்பு. இந்த விவாதத்தை செயல்பாடு அடிப்படையில் மட்டுமே நோக்குவோம். தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்ள வேண்டாம். -- Sundar \பேச்சு 08:46, 17 ஜூன் 2006 (UTC)

செல்வா, பல்வேறு எழுத்துச்சீர்திருத்தங்களை பரிந்துரைத்துள்ளீர்கள். அவற்றுக்கு ஒவ்வொன்றாக விரிவாக மறுமொழி அளிக்க வேண்டியுள்ளது. தற்பொழுது, ' குறியீடு குறித்த என் கருத்தை மட்டும் சுருக்கமாக பதிவு செய்கிறேன். எஞ்சியவற்றை விரைவில் எழுதுகிறேன்.

முதலில், தமிழ் விக்கிபீடியாவில் பங்களிக்கும் அனைவரும் தமிழார்வத்தால் உந்தப்படுபவர்கள் தான் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இல்லாவிடில், எளிமையாக ஆங்கில விக்கிபீடியாவிலேயே பங்களித்துப் போய்விட்டுவிடலாமே? ஆதலால், இங்கு அனைவரும் திறந்த மனதோடு தான் இந்த 'குறியீடு விட்யத்தை நோக்குகிறார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.

என்னை பொருத்த அளவில், ' குறியீடு பயன்படுத்துவதற்கான எந்த அவசியமும் இருப்பதாகத் தோன்றவில்லை. ஒரு மொழியின் எழுத்துக்களைக் கொண்டு பிற மொழி ஓசைகள் அனைத்தையும் எழுதிக் கட்டுவது என்பது இயலாத ஒன்று. தேவையும் அன்று. தமிழை விட ஆங்கிலம் இன்று உலகப் பொது மொழியாக விளங்குகிறது.ஆனால் பிற மொழி ஓசைகளை சரியாக உச்சரிப்பதற்காக அவர்கள் குறியீடு எதையும் உருவாக்கி எழுதுவதில்லை. நான் அறிந்த எந்த மொழியிலும் இப்படி குறியீடுகள் இருப்பதாகத் தெரியவில்லை. தமிழில் கிரந்த எழுத்துக்கள் உண்டென்றாலும் அவற்றுக்கும் குறியீடுகளுக்கும் பயன்பாட்டு அளவில் மிகுந்த வேறுபாடுண்டு. இதற்கு IPA மட்டுமே சரியானத் தீர்வாக இருக்க முடியும். அல்லது, சரியான உச்சரிப்பை பழக விரும்புவோர் அந்தந்த மொழிகளையே கற்றூக் கொள்வது தான் தீர்வு.

ஒரு வாதத்திற்காக இப்படி ஒரு குறியீடு தேவை என்று வைத்துக்கொண்டாலும், இன்னும் எத்தனையோ மொழிகளில் எத்தனையோ ஓசைகள் உள்ளன. அவை எல்லாவற்றுக்கும் இன்னும் எத்தனைக் குறிகளை அறிமுகப்படுத்துவது ? பிறகு, தமிழை எழுதுவதே ஒரு குறியீட்டு மொழியை பயன்படுத்துவது போல ஆகிவிடாதா? எடுத்துக்காட்டுக்கு, வா*தா^பீ~~ (இந்த சொல்லுக்கு/பெயருக்கு பொருள் எதுவும் இல்லை) என்பது போல் வேடிக்கையான, அபாயகரமான முழுக்க குறியீடுகளாலான எழுத்துக்கூடல்கள் வராது என்பதற்கு என்ன நிச்சயம்? சரி, ' குறியீட்டுடன் நிறுத்திக்கொள்வோம் என்று கொண்டாலும், எந்தெந்த இடங்களில் அதைப் பயனபடுத்துவதில் என்பதில் தெளிவில்லை. december என்பதை எப்படி உச்சரிப்ப்து என்பது பலருக்கும் தெரியும். அதை 'டிசெம்'பர் என்று எழுதிக்காட்டுவது அவசியமா? பாபு என்று அனைவரும் அறிந்த பெயரை 'பா'பு என குறீடுகளுடன் எழுதுவது அவசியமா? எழுதினாலும் வேடிக்கையாக இருக்கும். 'பா'க்'தா'த் என்று ஊர்ப் பெயரை எழுதினால் எல்லா குறியீடுகளையும் நீக்கி விட்டுப் படிப்பதற்குள் மண்டை குழம்பி விடுகிறது. எழுத்து மூலமாக உச்சரிப்பை கற்றுத் தருவதை விட, கேட்டு அறிந்து பழகுவது தான் நிலைக்கும். இதற்கு மிக எளிமையான தீர்வு, குறைந்தபட்சம் விக்கிமீடியாவிலாவது உள்ளது. வேற்று மொழிப்பெயர்கள் வரும் இடத்து அப்பெயர்களை ஆங்கில எழுத்துக்களிலும், அந்தந்த மொழி எழுத்துக்களிலும் தரலாம் என்பது மரபு. துல்லியமான உச்சரிப்பை உணர்த்த இது தான் வழி. தமிழ் தவிர வேறு மொழி வாசிக்கத் தெரியாதவர்களுக்கு ஒலிக்கோப்புகளைத் தரலாம். ஒலிக்கோப்பு இணைப்பது உடனடிச் சாத்தியமாகத் தோன்றாவிட்டாலும், பல நூறு கோப்புக்களை இப்படி சேர்ப்பதில் சிரமம் இருந்தாலும் இது தான் சரியான வழி. ஒலிக்கோப்புகளை பெற்றுக் கொள்வதில் ஆங்கில விக்கிபீடியா தளமும் விக்கிமிடியா காமன்சும் உதவும்.

வேற்று மொழி உச்சரிப்புகளை தமிழருக்கு சரியாகப் பயிற்றுவிக்க வேண்டும் என்பது நன்னோக்கம் தான். ஆனால் அதற்கு எழுத்து வழி குறியீடுகள் ஒரு தீர்வாக என்னால் எண்ண இயலவில்லை. தற்பொழுது தமிழில் வழங்கி வரும் பல்வேறு வெளி நாட்டுப் பெயர்கள் சரியான உச்சரிப்புடையவையுடைவை அன்று (எ.கா. ஆபிரகாம் லிங்கன்). ஆனால், அதில் பாதகம் ஒன்றும் இல்லை. தமிழரின் வசதிக்கேற்ப, தமிழின் ஒலி அமைதிக்கேற்ப உச்சரிப்பதில் தவறு இல்லை. Ramanujan என்ற பெயரை இராமனுசன் என்று எழுதுவதிலோ ராமனுசன் / ராமனுஜன் என்று உச்சரிப்பதிலோ எனக்கு உடன்பாடு தான். ஆனால், இதற்காக குறியீட்டை அறிமுகப்படுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை. அதிலும் ' குறியீட்டை தெரிந்து எடுத்ததின் நியாயம் என்ன என்றும் புரியவில்லை. ' குறியீடு தமிழர் ஏற்கெனவே நன்கு அறிந்த ஒரு நிறுத்தக் குறியீடு. அதை ஓசையை உணர்த்த கொண்டு வந்தால் பெரும் குழப்பம் தான் விளையும்.

தவிர, கிரந்த எழுத்துக்களை தனித்தும் உச்சரிக்க முடியும்..இந்தக் குறியீட்டை எப்படி உச்சரிப்பது? இது மெய்யா உயிரா உயிர் மெய்யா ஒற்றா?கிரந்த எழுத்துக்களை கூட கூடுதல் மெய்களாகக் கொண்டு உயிரோடு புணரசெய்யலாம. ஆனால் இந்த குறியீடு உயிர் மெய்யெழுத்துக்களுடன் மட்டும் புணர்கிறது. இதை என்ன வகையில் சேர்ப்பது? இதற்கான இலக்கணத்தை யார் எப்படி வரையறுப்பது? சொல்லித் தருவது? தமிழுக்கு எழுத்துச் சீர்திருத்தம் புதிதல்ல என்றாலும், அவை ஏற்கெனவே உள்ள எழுத்து வடிவங்களை மாற்றியனவே தவிர, புது எழுத்துக்களையோ குறியீடுகளையோ கொண்டு வரவில்லை. பழையன கழித்து புதியன புகலாம் என்றாலும், அடிப்படை விதிகளை உடைப்பது போல் உள்ளது இந்தக் குறியீடு. வடமொழி உச்சரிப்புக்களை உணர்த்த கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்தும்போது, ஏன் இந்தக் குறியீட்டைப் பயன்படுத்தகூடாது என்ற கேள்வி எழலாம். ஆனால், கிரந்த எழுத்துக்களைக் கூட இயன்ற அளவு விக்கியிலாவது தவிர்க்க வேண்டும் என்பது தான் என் நிலைப்பாடு.

தங்களின் பன்மொழி அறிவு, ஆளுமை ஆகியவற்றுடன் ஒப்பு நோக்கும் போது என் அனுபவம் குறைவு என்பதை அறிவேன். ஆகையால், இதை என் விமர்சனமாக கொள்ளாமல், என் ஐயங்களாக கொள்ளலாம். இந்த குறியீடு குறித்து பல காலமாக நீங்கள் எழுதி வருவதாகத் தெரிவித்திருந்தீர்கள். ஒருவேளை என் பல ஐயங்களுக்கு நீங்கள் முன்னரே பதில் தந்திருக்கக் கூடும். எனினும், தற்பொழுது விக்கிபீடியாவில் உள்ள நான்கு பேர் கூடி விவாதித்து எடுக்கக்க் கூடிய முடிவாக எனக்குத் தோன்றவில்லை. உண்மையிலேயே இது போன்ற குறியீடுகளுக்கு அவசியம் இருப்பதாகத் தோன்றீனாலும், அதை விவாதித்து முடிவு செய்ய இது சரியான களம் அல்ல. இன்னும் பெரிய களத்தில், மொழியறிஞர்கள் கூடி முடிவெடுக்க வேண்டும். எந்தெந்த வழிகளில் அரசை அணுக முடியுமோ அணூகி, இம்முடிவை செயற்படுத்த வேண்டும். இம்மாதிரி முடிவுகளை செயற்படுத்தஅரசுக்கு என்ன உரிமை என்ற விவாதம் அர்த்தமற்றது. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இம்மாதிரி பெரிய அளவிலான மாற்றங்களை அரசு மட்டுமே செய்ய இயலும். உலகெங்கும் இது தான் விதி.

மொழி விவாதங்களைத் தவிர்த்துப் பார்த்தாலும், அடிப்படை தொழில்நுட்பச் சிக்கல்களும் உள்ளன. விக்கிமீடியா தேடு பொறிக்கும் சரி, வேறு இணையத் தேடு பொறிகளுக்கும் சரி, 'குறியீட்டை விட்டுவிட்டு தேடத் தெரியவில்லை. இதைக்கூட வருங்காலங்களில் சரி செய்யலாம் என்றாலும், விக்கிபீடியாவில் கட்டுரைகள் அகர வரிசைப்பட்டியலிலும் கோளாறு வரும். 'தா, 'பா, 'டா, 'கா என எல்லா எழுத்துக்களும் ' என்பதின் கீழ் தான் அட்டவணைப்படுத்தப்படுமே தவிர, அந்தந்த எழுத்துக்களின் கீழ் அட்டவணைப்படுத்தப்படாது. பகுப்புப் பக்கங்களிலும் இந்தப் பிரச்சினை வரும். விக்கிபீடியா கட்டுரைகளில் ஒழுங்கு நிலை (consistancy) கொண்டு வர முயல்கிறோம். ' குறியீடு ஏற்றுக்கொள்ளப்பட்டால், அனைத்துக் கட்டுரைகளிலும் இது செயற்படுத்தப்பட வேண்டும். பெரும்பான்மை உறுப்பினர்களின் உடன்பாடின்றி இதை செயற்படுத்துவது சாத்தியமல்ல. தாங்கள் எழுதும் கட்டுரைகளில் மட்டும் இதை அனுமதிப்பதாலும் உங்கள் நோக்கத்திற்கு முழு வெற்றி கிடைக்கப் போவதில்லை. குழப்பம் தான் மிஞ்சும். இந்தக் குறியீட்டைப் பற்றி விக்கி பயனர்களுக்கு எப்படித் தெரிவிப்பது? ஒவ்வொரு முறை இக்குறியீடு வரும் போதும் அடிக்குறிப்புத் தருவதோ விளக்க இணைப்பு தருவதோ சாத்தியமற்றது. இந்தக் குறியீட்டை விரும்பாத பயனர், ஏற்கனவே இக்குறியீடு பயன்படுத்தியிருக்கும் இடங்களில் இதை நீக்கினாலும் தடுக்க இயலாது. ஒவ்வொரு முறையும் வாதித்துக் கொண்டிருப்பது நம் ஆற்றலைத் தான் வீணாக்கும்.

எனவே இனி வரும் கட்டுரைகளில், இக்குறியீட்டைப் பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். அதையே விக்கிபீடியா கொள்கையாகவும் பரிந்துரைக்கிறேன். ஏற்கனவே இக்குறியீடுகள் பயன்படுத்தியுள்ள இடங்களில் அவற்றை நீக்கி மாற்றி வழக்கம் போல் எழுதக் கோருகிறேன். இதை செல்வாவோ மற்ற பயனர்களோ நேரம் கிடைக்கும் போது செயற்படுத்தினால் நன்றாக இருக்கும். 'குறியீட்டுடன் வழி மாற்றுப் பக்கங்கள், அடைப்புக்குறிக்குள் மாற்று எழுத்துக்கூட்டல்கள் தருவதிலும் முற்றிலும் உடன்பாடில்லை. இந்த விடயத்தில் தீர்மானமான நிலைப்பாடு எடுக்க வேண்டியிருப்பதற்கு வருந்துகிறேன். எனினும் , சில வாதங்களை தெளிவாக வைக்க வேண்டியிருக்கிறது.

இப்படி ஒரு குறியீடு தமிழ அரசால் ஏற்கப்பட்டு, பள்ளிகூடங்களில் சொல்லித் தரப்பட்டு, அனைத்து தமிழரும் தானாக இக்குறியீட்டைக் கண்டுகொள்ளவும் பயன்படுத்தவும் ஏதுவான ஒரு நிலை வந்தால் ஒழிய, இக்குறியீட்டை விக்கியில் எந்த தருணத்திலும் பயன்படுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை என்பது தான் என் உறுதியான நிலைப்பாடு ஆகும்.--ரவி 08:52, 19 ஜூன் 2006 (UTC)

மறு மொழி[தொகு]

முதலில், சுந்தர் ரவி இருவருக்கும் நன்றி.

 • ஒரு பெரிய எழுத்துப்பணியை செய்பவர்கள் சில வழிமுறைகளை விளக்கிப் பயன்படுத்துவதொன்றும் புதிதல்ல. சில குறியீடுகள், மற்றும் பிற வழக்கங்களை முன் வைப்பார்கள். எந்த அகராதியைப் பார்த்தாலும், கலைக்களஞ்சியத்தைப் பார்த்தாலும், இது தெளிவாகும். எனவே இதில் தவறு ஏதும் இருப்பதாக நான் எண்ண வில்லை. இவை வேண்டாம் எனில், எல்லா இடங்களிலும் இருந்து நீக்குவதற்கு நானே பொறுப்பாளி.
 • பிற மொழியின் ஒலிப்பு துல்லியமாய் காடுவதற்கல்ல இக் குறியீடுகள். ஓரளவிற்குத் தமிழ் முறையில் இருந்து மாறுபடும் ஒலித் திர்பைக் காட்டுவதற்கே. IPA ஆகிய ஒலிப்புகளை பிறைக்குறிகளுக்குள் இட்டுக் காட்ட இயலும் (உண்மையான ஒலிப்பைக் காட்ட, ஆனால் படிக்க உதவாது). ஆனால் படிக்கும் பொழுது ஒரளவிற்கு ஒரு சிறிது (முதல்மொழி நோக்கி மாறும்) ஒலித்திரிபைக் காட்டவே என் பரிந்துரை. இம்முறையில் எந்த புதிய எழுத்துருவும் செய்ய வில்லை (ஜ, ஹ, ஷ் ஸ் போன்றவை புது எழுத்துரு கொண்டவை), ஒரு சிறு கொட்டு (diacritical mark) அவ்வளவே. இப்படி ஜ,ஷ,ஹ,ஸ என புதிய எழுத்துக்களை உருவாக்கியதால், சிறுவர்கள் கற்கும் பொழுதும் புது வரிவடிவங்கள் கற்க வேண்டியுள்ளது. யூனிக்கோடில் இன்னும் புதிய வரி வடிவங்கள் சேர்க்கப்பட்டுள்ளன (நான் இவைகளை கடுமையாக எதிர்க்கிறேன்). ஆங்கிலத்தில் மிக அடிப்படையான சொற்களாகிய the, this, that, then, there, ஆகியவற்றில் உள்ள th என்பதற்கு ஒரு எழுத்தில்லை. ஆனால் இவ்வொலியைக் குறிக்க பழைய ஆங்கிலத்தில் θ (தேட்டா) இருந்தது. கிரேக்க மொழி எழுத்தை நீக்கிவிட்டர்கள். முழுக்க முழுக்க ரோமானிய எழுத்துக்கள்தான் இப்பொழுதுள்ளன.

(ஆங்கிலத்தோடு ஒப்பிட்டுச் சொல்ல வேண்டியன நிறைய உள்ளன..)

 • பிறமொழி ஒலிப்பு தேவை இல்லை எனில் ஏன் நாம் ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ ஸ்ரீ ஆகியவற்றை பயன் படுத்துகிறோம் என்று எண்ணிப்பாருங்கள். இவ்வெழுத்துக்களை நீக்கி தமிழ் எழுத்துக்களாலேயே (ஒலி மாற்றங்களை பொருட்படுத்தாமல்) எழுதுவதென்றால், எனக்கு ஏற்புடையதுதான். ரவி சொல்வதுபோல ராமானுசன் என்று எழுதுவதில், எனக்கு ஒரு எதிர்ப்பும் இல்லை. ஆனால் ராமனுஜன் என்று எழுதுவதில் உடன்பாடு இல்லை. இன்று மிகப் பெரும்பாலரும் ராமானுஜன் என்று எழுதுவதை தவராக நினைப்பதில்லை. இதனால் குழந்தைகள் ஜ என்னும் ஒரு புது வடிவை தம் அகர வரிசைகளில் ஒன்றாக கற்கவேண்டுமே, தமிழையே மாற்றுகிறார்களே என்பதை பலரும் நினைப்பதில்லை. நான் குறிப்பிடுவதில் ஜ்= 'ச் , ஜ = 'ச , ஜி = 'சி என்று எழுதுவதால் புதிய எழுத்து வடிங்கள் (ஜூ, ஜி, ஜ், ஜ) பயிலத் தேவை இல்லை. முன்கொட்டு (') இடுவது புதியதுதான், ஆனால் திரிபைக் காட்டும் இவை பல எழுத்துக்களுக்கும் பயன்படுத்தலாம். ரவி இக்குறிக்குத் தனியாய் ஏதும் ஒலி இல்லை, இது ஒலித்திரிபு காட்டும் குறி. Like a grave, tilda, umlaut, cedilla it is a diactric. These are not pronounced separately, but used with other letters to indicate how that letter with the diactritic is to be pronounced. தமிழிலே, முற்றுப்புள்ளி, கால்புள்ளி, கேள்விக்குறி, வியப்புக்குறி, மேற்கோள் குறி போன்ற யாவுமே புதிதாக ஏற்றுக்கொண்டவைதான். உண்மையிலேயே பயனுடையதென்றால் ஏற்றுக் கொள்வதில் தவறில்லை. நான் காட்டும் ஒரு ஒரு குறி கொண்டு Ga,Ja,Da,Dha,Ba,Fa ஆகிய 6 எழுத்துக்களுக்கும்

அவை சார்ந்த 6x12 = 72 உயிர்மைகளையும் காட்ட வல்லது. வேண்டாம் எனில் வலியுறுத்தவில்லை. ஆனால் தெளிவாய் விளங்கிகொள்வது நல்லதென்று விளக்குகிறேன்.

 • த.வி யில் மீசுட்டு (hypertext) இருப்பதால், மிக எளிதாக இவைகளை விளக்கவும், வழிகாட்டவும் செய்யலாம்.
 • ரவி, பாபு என்னும் சொல்லில் தமிழ் முறைக்கு மாறுபட்டு வரும் இடம் மட்டிலுமே குறியிட்டுக் காட்ட பரிந்துரைக்கிறேன். தமிழ் முறைப்படி, இரண்டாவது எழுத்தாகிய பு அதற்கு முன் புள்ளி வைத்த வல்லினம் வாராததால் bu என்று மெலிந்தே ஒலிக்கும். எனவே தேவை என்றால் முதல் எழுத்தாகிய பா என்பதற்கு மட்டும் 'பாபு என்று குறிக்க வேண்டும். வேண்டாம் எனில், தமிழில் சொல்லும் பொழுது paabu என்று சொன்னால் எனக்கு ஏற்புடையதுதான். ஆனால் பாபு என்று எழுதிவிட்டு Baabu என்று பலுக்குவதில் எனக்கு உடன்பாடு இல்லை (இதனால் தமிழ் கெடுகின்றது, தமிழ் எழுத்து ஒலி முறை பழுதடைகின்றது, குலைகின்றது).
 • இம்முறை வேண்டாம் எனில், நான் தவறாக எடுத்துகொள்ளேன். பயன் பெருகும் என்று எண்ணியே முன் வைத்தேன். தமிழ் ஆசிரியர் ஜகன்னாதன் என்பதை சகன்னாதன் என்பார் நான் 'சகன்னாதன் என்கிறேன்.

'பில் (Bill) பில் (pill), 'டில் (Dill) டில் (Till) , 'கில் (gill) கில் (kill) 'தீனன் (dheenan), தீனி (thiini) என்னும் வேறுபாடுகள் ஓரளவிற்கு தெளிவு படுத்தலாம். துல்லிய ஒலிப்பு குறிக்கோளில்லை, ஓரள்விற்கு தெளிவு படுத்தலாம். --C.R.Selvakumar 14:20, 20 ஜூன் 2006 (UTC)செல்வா

மேலெ எழுதியதில், பல எழுத்துப் பிழைகள் விழுந்துள்ளன, பொருத்தருளுக.--C.R.Selvakumar 14:36, 20 ஜூன் 2006 (UTC)செல்வா இதனையும் பார்க்க வேண்டுகிறேன்: http://en.wikipedia.org/wiki/Diactric --C.R.Selvakumar 14:42, 20 ஜூன் 2006 (UTC)செல்வா

செல்வா, இது குறித்து விவாதிக்கத் தொடங்கி குறிப்பிடத்த்க்க நேரம் கழிந்தும், பெரும்பான்மை பயனர்களின் மனமொத்த ஆதரவை இப்பரிந்துரை பெறாத காரணத்தால், விக்கிபீடியா முழுமைக்கும் இத நடைமுறைப்படுத்துவது கடினம். தங்கள் பரிந்துரை சரியாகவே இருப்பினும், தங்கள் கட்டுரைகளில் மட்டும் கூட இவற்றை பயன்படுத்துவது விக்கிபீடியாவின் ஒழுங்குத் தன்மை கொள்கைக்கு (consitancy) ஏற்புடையதாக இருக்காது. எனவே இக்குறியீடை மேற்கொண்டும் கட்டுரைகளில் பயன்படுத்த வேண்டாம் என பரிந்துரைக்கிறேன். ஏற்கனவே இக்குறியீடு உள்ள இடங்களில் அவற்றை நீங்களோ மற்ற பயனர்களோ நீக்குமாறு வேண்டிக் கொள்கிறேன்--ரவி 08:51, 6 ஜூலை 2006 (UTC)

-ஃ பயன்பாடு[தொகு]

செல்வா, தாங்கள் பரிந்துரைத்துள்ளபடி ஃஇந்தி, ஃஇட்லர் என்பது போன்ற எழுத்துக்கூட்டல் முறைகளைப் பயன்படுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை. பொது வழக்கில் உள்ளது போல இந்தி, இட்லர் (அல்லது ஹிட்லர்) எனப் பயன்படுத்தவே விழைகிறேன். சொல்லின் முதலில் ஃ வருவது தமிழ் இலக்கணப் படி சரியல்ல. சொல்லின் முதலில் ஓசையை கொண்டு வருவதற்காக சில இடங்களில் ஃ பயன்படுத்த வேண்டியிருக்கிறது. அதையும் விக்கியில் குறைவாகவே செய்ய முனைகிறோம். (எ.கா - ஃபிரான்சுக்குப் பதிலாக பிரான்ஸ்). ஃஇந்தி, ஃஇட்லர் போன்ற எழுத்துக்கூட்டல்கள் விக்கி பயனர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் (எ.கா - சூரசம்ஹாரத்திற்கு பதில் சூரசம்ஃஆரம்?). பொதுப் பயன்பாட்டில் உள்ள எழுத்துக்கூட்டல்களையே விக்கியில் பயன்படுத்த வேண்டும் என்று பரிந்துரைக்கிறேன்.--ரவி 08:59, 6 ஜூலை 2006 (UTC)

-ஃப் எதிர் ஃவ்?[தொகு]

செல்வா, தாங்கள் விளக்கிக் கூறியதிலிருந்து ஃப்-ஐ விட ஃவ் பயன்பாடுத்துவதற்கான மொழியியல் ரீதியான நியாயங்களை ஏற்றுக்கொள்ள முடிகிறது. அண்மையில் செர்மானிய மொழி உச்சரிப்புகளுடன் எனக்கு ஏற்பட்டு வரும் பரிச்சயமும் இதற்கு ஒரு காரம். பயனர்கள் விரும்பும் இடங்களில் ஃப் அல்லது ஃவ் பயன்படுத்தலாம் என்றும், குழப்பத்தைத் தவிர்க்க அடைப்புக்குறிகளுக்குள் மாற்று எழுத்துக் கூட்டல்களை தரலாம் என்றும் பரிந்துரைக்கிறேன். கட்டுரைத் தலைப்புகளுக்கு மாற்று எழுத்துக்கூட்டல்களிலிருந்து வழி மாற்றுப் பக்கங்களை உருவாக்கலாம். எனினும், வேற்று மொழி உச்சரிப்புகள், எழுத்துக்கூட்டல்கள் ஆகியவற்றுக்கு இது தான் சரி, பிழை என்று தீர்க்கமான நிலைப்பாடுகள் எடுக்க முடியாது, எடுக்கக் கூடாது என்பது தான் என் கருத்து--ரவி 09:07, 6 ஜூலை 2006 (UTC)

ரவி, நீங்கள் அனைவரும் எந்த முடிவு எடுத்தாலும் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், நல்ல பயனுடைய கருத்துக்களை, போதிய சித்திப்பு இல்லாமல் மறுக்கிறீர்கள் என்பது என் துணிந்த கணிப்பு. நான் முன் வைத்ததால் இப்படிக் கருதுகிறேன் என்று அருள்கூர்ந்து எண்ணாதீர்கள். பயன் - இடர் சீர் தூகிப் பாருங்கள். மயூரநாதன் The Lord of the rings என்னும் த.வி கட்டுரைக்கு த லோட் ஒவ் த ரிங்ஸ் என்று கட்டுரை எழுதியுள்ளார். அதில் of என்னும் சொல்லுக்கு வகரத்தைத்தான் ஆண்டுள்ளார். புகழ் பெற்ற மயிலை சீனி வேங்கடசாமி (1930களில் புத்தகங்கள் எழுதியவர்) அவர்கள் Jao-de Faria என்பவரை வாரீயா என்று குறிப்பிட்டுள்ளார். வாரீயா அவர்கள் 1578ல் தமிழில் அச்சு எழுத்துக்களைக் கோர்தவர் என்று தம் புத்தகங்களில் குறிக்கிறார். Fa என்பதற்கு ஃவ என்பது பொருத்தமான மாற்றம். 'வ என்பது இன்னும் பொருத்தமான மாற்றம் என்பது என் துணிபு. விக்கியில் உள்ள பல மொழிகளைப் பாருங்கள். அவர்கள் எப்படி diacritic குறியீடுகளை அவர்கள் மொழியில் ஆளுகின்றார்கள் என்று. Diacritic என்னும் ஆங்கில விக்கி கட்டுரையைப் பார்த்தீர்களா? தமிழ் எழுத்துரு வரலாற்றை அறிந்தீர்களானால், எப்படி குறிலைக் குறிக்க மேற்புள்ளி ஒருகாலத்தில் இருந்தது என்றும் நெடிலைக் குறிக்க அதை நீக்கி எழுதினர்கள் என்றும் அறியலாம். வீரமாமுனிவர் பயனுடன் ஆக்கிய இரட்டைச்சுழிக் கொம்பு இப்பொழுது நெடில் ஏகார ஓகார உயிர்மெய் எழுத்துக்களை குறிக்கின்றது. நான் கூறும் முறையைக் கையாண்டால் ஏறத்தாழ ஆங்கிலம் போலவே எல்லாச் சொற்களையும், தமிழில் ஒலித்திரிபு குறைவாக வருமாறு எழுத முடியும். புது தமிழ் எழுத்துருக்கள் ஏதும் தேவை இல்லை. Whole passages of English can be rendered in Tamil letters with minimal variations. ஒரு பெரிய அகராதி, கலைக்களஞ்சியம் போன்ற பணிகளில், தேவைக்கேற்ப சில குறியீடுகளை ஆளுவது ஏதும் புதிதல்ல. எந்த பெரிய நூலை வேண்டுமானாலும் எடுத்துப் பார்க்கவும். அவர்கள் தம் நூலுக்கென தனி முறைகளும் குறியீடுகளும் கொடுத்திருப்பர். தமிழ் ஒலியொழுங்குடன் எழுதப்படும் மொழியாகையால், எழுத்து ஒருவகையாகவும், ஒலிப்பு வேறுவகையாகவும் இருக்கலாது. இங்கே இலக்கணம் பற்றி பேசுவது பொருந்தாது. நான் சொல்லுவதெல்லாம், பிறமொழிச் சொற்களுக்கு. இலக்கணம் பார்த்தால், ஜ, ஷ முதலிய எழுத்துக்கள் வரலாகாது. ரகரம் றகரம் போன்ற எழுத்துக்களில் சொற்கள் தொடங்கலாகாது. Goodall என்பதை குட்டால் (kuttaal) என்று எழுதுவது தேவையா? 'கு'ட்டால் என்று எழுதினால் ஓரளவிற்கேனும் ஒலித்திரிபுகளைக் காட்டலாமே? ஏன் வேண்டாம் என கூறுகிறீர்கள் என்பது விளங்க வில்லை. தேடு பொறிகளில் இடையூறாக இருக்கும் என்பதை ஏற்கிறேன். அப்படியாயின், பிறமொழிகள் பல்வேறு குறியீடுகளைப் பயன்படுத்தும்போது, அவர்கள் என்ன முறையை ஆளுகிறார்களோ அதனையே ஏன் நாமும் ஆளலாகாது. முற்காலத்திற்கும் இக்காலத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. விரைந்து நல்லவற்றை ஏற்கவேண்டும். பிறமொழிச்சொற்களை பரவலாக ஆளவேண்டிய கட்டாயம் இப்பொழுது அதிகம். எனவே அதிக ஒலித்திரிபு இல்லாமல் ஒலிக்க ஒரு வகை வேண்டும். இதற்காக புதிய எழுத்துகளை உருவாக்குவது, பல வழிகளிலும் கேடு தரும். தமிழ் எழுத்துக்களை 12+18+1 என்பதோடு உயிர்மெய் எழுத்துக்களோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். தமிழ் ஒலிகளை நம் முன்னோர்கள் எவ்வாறு தேர்ந்து எழுத்து அமைத்தார்கள் என்பது ஒரு செப்பம்மிகு புகழ்வரலாறு ஆகும். இது பற்றி தனியாக எழுதவேண்டும். இதே போல தமிழில் இசைச் சுரங்கள் அமைத்ததும் ஒரு பெரும் சாதனை. Fa என்னும் ஒலிப்பு வட இந்திய மொழிகளிலும் கிடையாது, ஆனால் ப என்னும் தேவநாகரி எழுத்துக்குக் கீழே ஒரு புள்ளி இட்டு குறிக்கிறார்கள். மிக எளிய முறைகளிலே ஏறத்தாழ எல்லா ஒலிப்புகளையும் 2-3 குறியீடுகளை மட்டும் காட்ட முடியும். இது ஒரு அரும் வாய்ப்பு. வேண்டாம் எனில் கூட்டு முடிவை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் நான் எழுதும் புத்தகங்களில் இம்முறையைத்தான் கையாள எண்ணியுள்ளேன்.--C.R.Selvakumar 15:29, 6 ஜூலை 2006 (UTC)செல்வா


செல்வா, சில விதயங்களை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

தாங்கள் பரிந்துரைக்கும் சீர்திருத்தங்கள் மிக அடிப்படையானவை. இது தற்போது விக்கிபீடியாவில் உள்ள நான்கு பேர் கூடி பேசி முடிவெடுத்து காலத்துக்கும் செயற்படுத்தும் விஷயம் இல்லை. குறைந்தபட்சம், இது சரியா தவறா என சீர்தூக்கி பார்க்கும் மொழியியல் அறிவு எனக்கு கிடையாது. ஆனால், நடைமுறை காரணங்களுக்காக இதை ஏற்றுக் கொள்ள இயலாது என்பதை வலியுறுத்தும் உரிமை உண்டு. தற்பொழுது உங்கள் சீர்திருத்தங்களை எற்றுக்கொண்டாலும், நாளை வரும் ஒவ்வொரு பயனருக்கும் இம்முறையை விளக்குவதோ, அனைத்துக் கட்டுரைகளையும் இம்முறைக்கு மாற்றுவதோ, இம்முறையை பின்பற்றாதோரை விலக்குவதோ நடைமுறைச்சாத்தியமற்றது. இம்முறையை விளங்கிக் கொள்வது ஒரு சவால் என்றால் இம்முறையில் பங்களிப்பாளர்களை எழுதத் தூண்டுவது இன்னொரு சவால். தமிழ் விக்கிபீடியா ஒரு தமிழ்ப் பள்ளிக்கூடம் அல்லவே? இம்முறை சரியெனத் தாங்கள் கருதும் பட்சத்தில் தாராளமாக உங்கள் புத்தகங்களில் பயன்படுத்தலாம். அவற்றை படிக்கும் போது நானும் விளங்கிக் கொள்ள முயல்வேன். விலங்கிக் கொள்ள இயலாவிட்டால், புத்தகத்தை மூடி வைத்து விட்டுப் போய் விடுவேன். நம் தளம் போன்ற இலவசக் கூட்டு முயற்சிகளில், இவ்வாறு நாம் சொல்ல வருவதை விளங்கிக் கொள்ள இயலாமல் ஒரு பயனர் விலகிச் சென்றாலும், நம் உழைப்பு நட்டமே.

எல்லாரும் இம்முறையில் விளங்கிக் கொள்ள வேண்டும், இம்முறையில் எழுத வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அதைச் செயற்படுத்தவோ தொடங்கவோ விக்கிபீடியா ஒரு சரியான களம் அல்ல என்பது தான் என் கருத்து. சுந்தர் பரிந்துரைத்த படி, மொழிச்சீர்திருத்த மாநாடுகளில் நீங்கள் இவற்றை முன் வைக்கலாம். அரசு ஆணை பிறப்பித்து இக்குறியீட்டு முறை பொதுப் பயன்பாட்டுக்கு வந்தால் ஒழிய, என் தமிழ் ஆசிரியர் எனக்கு எவ்வாறு எழுதச் சொல்லித் தந்தாரோ அப்படித் தான் நான் எழுத உத்தேசம். அம்முறையை பின்பற்றாத கட்டுரைகளை திருத்தி எழுதவும் விக்கி சுதந்திரம் உண்டு.

இதற்கு மேல் இவ்விதயத்தில் நான் தெளிவுபடுத்த ஒன்றும் இல்லை. அதற்கு விருப்பமும் இல்லை.--ரவி 08:56, 7 ஜூலை 2006 (UTC)

செல்வா, தங்கள் எழுத்துச் சீர்திருத்த முயற்சி மிகவும் பயனுள்ளது என்பதை ஒத்துக்கொள்கிறேன். ஆனால் அதனை அறிமுகப்படுத்துவதற்கு விக்கிப்பீடியாவை ஏன் பயன்படுத்துகிறீர்கள்? வி்க்கிப்பீடியா ஒரு தகவற் களஞ்சியம் மட்டுமே. ஏற்கனவே நடைமுறையில் இருப்பதைத்தான் இங்கு தரலாம் என்று தான் நான் விக்கிப்பீடியாவைப் புரிந்து வைத்துள்ளேன். (தவறானால் திருத்தவும்). தங்களின் முடிவுகளை ஏதாவது ஆராய்ச்சி மன்றுகளில் சமர்ப்பித்தீர்களா? எப்படி வரவேற்பு இருந்தது அறிய ஆவலாயுள்ளேன். இன்றுள்ள மின்னஞ்சல் குழுமங்களில் தமிழ் ஆராய்ச்சி (http://groups.yahoo.com/group/tamil_araichchi/) என்னும் யாஹூ குழுமத்தில் தமிழ் எழுத்துச் சீர்மை குறித்து பல தமிழாராய்ச்சி நிபுணர்கள் எழுதியுள்ளனர். இன்னமும் விவாதித்துக் கொண்டிருக்கின்றனர். இவை போன்றவற்றில் உங்கள் கருத்துக்களைத் தெரிவித்தீர்களா? பரவலாக உலகளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்திய பின்னர் விக்கிப்பீடியாவில் அறிமுகப்படுத்துவது நல்லது என்பதே எனது தாழ்மையான கருத்து. அப்போதுதான் விக்கிப்பீடியா கட்டுரைகள் பலருக்கும் பயனளிக்கும்.--Kanags 09:03, 7 ஜூலை 2006 (UTC)
ரவி, கனகு:
 • முதலில் ரவிக்கு மறு மொழி. நான் இத்தலைப்பில் சொல்வதை ரவி அவர்கள் ஏற்றுக்கொள்ளபோவதில்லை என்றுதான் நினைக்கிறேன். எனினும் முன்வைப்பது என் கடமை என்பதால் எழுதுகிறேன். முதலாவது இது மொழி சீர்திருத்தம் இல்லை. சொல்லப்போனால் மொழியின் தூய்மையை காக்கவே என் முன்வைப்பு. பாபு என்று தமிழில் எழுதினால் தமிழ் முறைப்படி paabu என்று ஒலிப்பதற்கு பதிலாக baabu என்று ஒலிப்பதால் தமிழ் கெடுகின்றது. இதனை நன்கு உணர வேண்டும். எழுத்தொலிப்பாங்குடைய (phonetic) தமிழ், ஆங்கிலம் போன்று ஒழுங்கு குன்றிவிடக்கூடும். 'பாபு என்று எழுதுவதோ அல்லது அதனைப் புரிந்துகொள்வதோ அவ்வளவு கடினமானதா?! காந்தி என்பதை 'காந்தி என்று எழுதினால் புரிந்துகொள்வது அவ்வளவு கடினமானதா?! தமிழ் விக்கி பள்ளிக்கூடம் அல்ல என்று நீங்கள் சுட்டிக்காட்டினமைக்கு நன்றி, ரவி, ஆனால் இதனை ஒரு பள்ளிக்கூடம் என்று நான் ஏதும் எண்ணி மயங்க வில்லை.
 • கனகு, பயனுடையது என்று நீங்கள் நினைப்பது கண்டு மகிழ்ச்சி. இதனை ஒரு பெரும் படைப்பாகவோ, ஆய்வு மன்றங்களிலே ஆய்வுரையாய் தரும் அளவுக்கு இதில் ஏதும் பெரிதாக இருப்பதாக நான் எண்ணவில்லை. எண்ணியிருந்தால் INFITT நடத்திய கருத்தரங்குகளிலாவது படித்திருப்பேன். அத்தகு நிறுவனங்களில் உள்ளவர்கள் பலரை எனக்கு நன்றாகத்தெரியும். யாஹூ (யாஃகூ), அகத்தியர் போன்ற குழுக்களிலே இது பற்றி எழுதியுள்ளேன். கணேசன், மணிவண்ணன் போன்ற பலரும் பாராட்டி எழுதியுள்ளார்கள். நீங்கள் குறிப்பிட்ட யாஹூ (யாஃகூ) தமிழ்-ஆராய்ச்சி குழுவிலும் என் கட்டுரைகள் 33 உள்ளன (எல்லாம் இது பற்றி இல்லை). வ.செ. குழைந்தைச்சாமி அவர்களையும், அவர்போன்று சீர்த்திருத்தக்காரர்கள் பலரையும் நான் நேரடியாக அறிவேன் அவர்களுக்கும் என்னைப் பற்றி தெரியும். TVU ல் காணும் கலைச்சொற்கள் மிகப்பலவும், 35-37 ஆண்டுகளுக்கு முன்னர் நானும், முனைவர் பொன்னவைக்கோ, முனைவர் செந்தமிழ்க்கோதை, முனைவர் வேந்தன், முனைவர் ரா'சாராம், முனைவர் நக்கீரன் ஆகியோர் ஆக்கித்தொகுத்து என் தலைமையில் வெளியிட்டதே. முதன் முதல் 5000 பொறியியற் சொற்களை ஆக்கி வெளியிட்டோம். எடுத்து்க்காட்டாக transistor என்பதற்கு திரிதடையம் என்னும் சொல் 37 ஆண்டுகளுக்கு முன்னர் நான் ஆக்கிய சொல், அது இன்று த.வியிலும் ஆளப்படுகின்றது. தமிழறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் பலருடன் 40 ஆண்டுகளுக்கு மேலாக பழகி வந்துள்ளேன். உலகளாவிய ரீதியில் பரவிய பின் இச்சிறு மாற்றத்தை ஏற்பீர்கள் என்று கூறுகிறீகள், ஏறத்தாழ எல்லாமே ஓரிடத்தில் ஆளப்பட்டு பரவுவதே. இங்கு தேவை அதிக இருப்பதால், அதற்கான சூழல் (context) இருப்பதால், இங்கே ஆளுவது சிறப்புடையது. ஏதோ கருத்தியலாக வெற்றுக் கொள்கைகளாக எங்கும் முன்வைப்பதால் பயன் ஏதும் இல்லை. செயல்படுத்திக் காட்டுவது சிறந்தது. இரண்டொருவரைத் தவிர பிறர் ஏதும் சொல்லவும் இல்லை. --72.140.138.83 13:32, 7 ஜூலை 2006 (UTC)செல்வா

நான் புகுபதிகை செய்திருந்தும் இடைவிட்டு எழுதியதால் வெளிவந்துவிட்டது. மேலே எழுதியது நான் தான்.--C.R.Selvakumar 13:39, 7 ஜூலை 2006 (UTC)செல்வா

ரவியோ செல்வாவோ இச்சிக்கலைத் தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்ள வேண்டாம். இருவரும் நல்லெண்ணத்துடன் தான் கருத்து வெளியிட்டுள்ளீர்கள். இருப்பினும், முகம் பார்க்காத ஊடகம் என்பதால் கருத்துவேறுபாடுகள் சில நேரங்களில் தவறாகக் கொள்ளப்பட்டுவிடுகின்றன. இந்த பயன்பாட்டின் நன்று-தீது என்ற அளவில் அல்லாமல் இதன் நடைமுறைச் சிக்கலையே அனைவரும் அஞ்சுகிறோம். மேலும், இத்தகைய பரிந்துரைகளுக்கு சரியான இடம் தமிழ் இணைய மாநாடு போன்றவை அல்ல என்று நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள். அப்படி இல்லை - அது சரியான களமே. மணிவண்ணன் போன்றோர்கூட வருகின்றனரே?
மற்றபடி இது உங்களுடைய பரிந்துரை என்பதால் உள்ளத்தில் காயம் கொள்ளாதீர்கள். உங்கள் தமிழறிவும் நுட்ப அறிவும் இங்கு நாங்கள் அறிந்துள்ளோம். அதனால்தான் உங்களிடம் பல அறிவுரைகள் கேட்கப் படுகின்றன. இந்த விடயத்தில் உங்கள் கருத்துக்கு மாற்றுக் கருத்தை நடுநிலையோடு பாருங்கள். -- Sundar \பேச்சு 13:56, 7 ஜூலை 2006 (UTC)
சுந்தர் பயன்-இடர் பற்றி பேசுவதை நான் முழுவதும் வரவேற்கிறேன். இது பள்ளிக்கூடம் அல்லவே என்பது போல சொல்வது முறையாகுமா? சுட்டிக்காட்டிய இடர்களுக்கு, என் மறு மொழிகளைத்தந்துள்ளேன். சரி புரிந்துகொள்வதற்காக கேட்கிறேன் - ஒரு கருத்தரங்கிலே ஒரு கருத்து பதிவாகிவிட்டால், அதனை இங்கே த.வி யில் எடுத்து ஆளுவோமா? நான் கூறிய இச்சிறு மாற்றத்தை ஒரு கருத்தரங்கிலே பதிவாகிய பின் இதனை இங்கே எடுத்தாளுவோமா? இது என்னுடைய பரிந்துரை என்பதால், எதிர்ப்பதை நான் தவறாக எடுத்துக்கொள்ளவில்லை, முறையல்லாத கருத்துக்களை இங்கு வைப்பதை நான் சுட்டிக் காட்டுகிறேன். ஒரு கருத்துக்கு எதிர் கருத்து கூறுவதிலும் முறை இருக்க வேண்டும், கருத்தில் மறுப்புக்கான காரணம், செய்தி இருக்க வேண்டும். எது நடு நிலை என்று எண்ணிப்பாருங்கள். நான் நடுநிலை தவறி இருந்தால், இப்பொழுதே அதற்கு மன்னிப்பு கேட்கிறேன். நானறிய என் முன்வைப்புகளுக்குத் தகுந்த ஆதாரங்கள், கருத்துக்களை முன் வைத்திருக்கிறேன். மறுப்புக் கருத்துக்களுக்கும், கருத்தியலாக என் மறுமொழிகளைத் தந்திருக்கிறேன். நானறிய தேடு பொறிகளில் சிக்கவில்லை என்பது ஒன்றுதான் சத்துள்ள எதிர்க் கருத்து, ஆனால் அதற்கான மறுமொழி நான் தந்துள்ளேன் (பிற மொழிகள் பயன் படுத்துகின்றனவே). பின்னர் தொடருகின்றேன்..--C.R.Selvakumar 14:35, 7 ஜூலை 2006 (UTC)செல்வா

சுந்தர், நிச்சயம் இதைத் தனிப்பட்ட முறையில் நானோ வேறு எவருமோ எடுத்துக் கொள்ளப் போவதில்லை. செல்வாவும் மேலை நாட்டில் பணி புரியும், மாற்றுக் கருத்துக்களை விருப்பு வெறுப்பின்றி எதிர்கொள்பவர் என்ற நம்பிக்கையில் தான் என் கருத்துக்களை மென்று முழுங்காமல் நேரடியாக கூறுகிறேன். என் வயதை விட செல்வாவின் அனுபவம் அதிகம்.

மொழியியல் ரீதியாக இதை அணுகுவதை விட விக்கி நடைமுறைச் சாத்தியங்களை முன்னிறுத்தி தான் இதை எதிர்க்கிறேன். இங்கு எழுதப்படும் கட்டுரைகளில் ஒழுங்குத்தன்மை அவசியம். இம்முறையைப் பின்பற்றினால் எல்லா கட்டுரைகளிலும் இதை பின் பற்ற வேண்டும். அல்லது ஒரு கட்டுரையிலும் பின்பற்றக் கூடாது. இம்முறை மிகச் சரி என்றே வைத்துக் கொள்வோம். கட்டுரைகளில் இதை வாசிக்கும் போது என்னால் புரிந்து கொள்ள இயலும். ஆனால், நான் கட்டுரைகளை எழுதும் போது எந்தெந்த இடங்களில் இதைப் பயன்படுத்துவது எனக்குத் தெளிவில்லை. (சொற்களை உச்சரிப்பது குறித்த என் அறியாமை, பிழையான புரிந்துணர்வு ஒரு காரணம் - பாபு குறித்த உச்சரிப்பு பிழை என்று செல்வா சொல்லித் தான் தெரியும்.). ஒவ்வொரு கட்டுரைக்கும் செல்வாவுடன் ஆலோசனை கேட்பதோ, எல்லா கட்டுரைகளையும் செல்வா படித்து திருத்துவதோ நடைமுறைச் சாத்தியம் அற்றது. இம்முறை குறித்து பிற பயனர்கள் அறியாத போது, அறிந்தாலும் அதை சரியாகப் பயன்படுத்துவதில் தேர்ச்சி இல்லாத போது, தற்பொழுது உள்ள ஆயிரக்கணக்கான கட்டுரைகளை, நாளை வரக் கூடிய இலட்சக்கணக்கான கட்டுரைகளை, யார் இம்முறைக்கு மாற்றுவது? தவிர, தற்பொழுது நாம் இப்பொழுது உடன்பட்டாலும், நாளை புதிதாக வரும் பயனர்கள் இக்கொள்கயை மாற்றக் கோரலாம். பிறகு, திரும்ப பழைய முறைக்கு மாற்றுவது கூடுதல் வேலை. நாளை வரும் பயனர்கள் இதை ஆட்சேபிக்க மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்திரவாதம்? அவர்கள் ஆட்சேபிக்காமல் இருக்க ஒரே வழி இது அரசால் அதிகாரப்பூர்வமாகபட வேண்டியது தான். அப்பொழுது தான் அனைவ்ரும் தன் விருப்பத்தின் பேரில் இதை முறையாகக் கற்கவும், எழுதவும் செய்வர். அதனால் தான் இது போன்ற அடிப்படை மாற்றங்கள் பள்ளி அளவில் வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். மாற்றம் சிறிதா பெரிதா என்பது கேள்வியில்லை. இது அடிப்படையையே மாற்றுவதாக உள்ளது. செல்வா இம்முறையைப் பயன்படுத்த தொடங்கியப் பின், ஒருவர் விடாமல் அனைத்துப் பயனர்களும் குழம்பினர். இது போல் எத்தனை பயனர்களுக்கு செல்வா விளக்கம் தந்து வாதித்துக் கொண்டிருக்க முடியும்? அதனால் தான் விக்கிபீடியா ஒரு பள்ளிக்கூடம் இல்லை என சொல்ல நேர்ந்தது. தனி நபர்கள், ஒரு சிலர் எழுதும் புத்தகங்களில் இம்மாதிரி குறிகளை பயன்படுத்துவதை அறிவேன். ஆக்கங்கள் அளவு குறைவாகவும் அவற்றின் மீது கட்டுப்பாடு உள்ள போதும் இம்மாதிரி குறிகளை பயன்படுத்துவதில் சிரமம் ஏதும் இல்லை. ஆனால் எண்ணற்ற பக்களிப்பாளர்களைக் கொண்டுள்ள கட்டற்ற கலைக்களஞ்சியத்தில் இம்முறையைப் புகுத்துவது சரியா? நடைமுறைக்கு ஒத்து வருமா? இக்குறியை முழுக்க எதிர்க்கும் ஒரு பங்களிப்பாளரை எப்படி எதிர்நோக்குவது? விடாப்பிடியாக அவருடைய கட்டுரையில் இம்மாற்றங்களை செயற்படுத்தினால் அவரின் விக்கி சுதந்திரத்தை பறிப்பது போல ஆகாதா? ஒரு விளக்கமும் சொல்லாமல் இக்குறிகளை மாற்றி விட்டுப் போகக் கூடிய அனாமதேயப் பயனர்களை எப்படி எதிர்கொள்வது? அனைத்துப் பயனர்களும் விக்கி நடைமுறை அறிந்தவர் இல்லை. ஒரே ஒரு கட்டுரை மட்டும் படித்து போக வரும், தேடி வரும் பயனர்கள் இம்முறையால் குழம்ப மாட்டர்களா? ஒவ்வொரு முறை இக்குறியை பயன்படுத்தும் போதும் மீயிணைப்பு தந்து விளக்குவது சாத்தியமா? தேவையா? கட்டுரை வாசிப்புப் போக்கை தடை செய்யாதா?

 • இம்முறையை எப்படி அனைத்து பக்கங்களிலும் செயற்படுத்துவது?
 • யார் பொறுப்பு? இன்று பொறுப்பேற்பவர் விக்கியில் இருந்து காணாமல் போனால் பிறகு யார் இதை செயற்படுத்துவது?
 • பின் பற்ற மாட்டேன் என்று சொல்பவர்களை என்ன செய்வது? விக்கியை விட்டு விலக்கி வைக்க முடியுமா என்ன?
 • இக்குறிகளை நீக்குபவர்களை என்ன செய்வது?
 • இம்முறையை அனைத்துப் பயனர்களும் எளிதில் உடனே புரிந்து கொள்ள என்ன செய்வது? ஒரு கட்டுரை படிக்க வருபவர்களுக்கு இம்முறையை புரிந்து கொள்ள பொறுமை இருக்குமா?
 • யார் சொல்லித் தருவது?

இந்த நடைமுறைக் கேள்விகளுக்கு செல்வா பதில் அளிகலாம். காலத்தாலோ பங்களிப்பலோ விக்கிபீடியா கட்டுக்குள் வைக்கப்படக் கூடியது இல்லை. அனைத்து விதயங்களிலும் நாம் இணக்க முடிவு எடுப்பது தேவை இல்லை. ஆனால், இம்மாதிரி விதய்ங்களில் குறைந்தபட்ச ஆதரவாவது இருந்தால் தான் செயற்படுத்த முடியும். --ரவி 14:44, 7 ஜூலை 2006 (UTC)

தமிழ் விக்கிபீடியா பள்ளிக்கூடம் இல்லை என்ற சொற்றொடர் செல்வாவுக்கு வருத்தம் உண்டாக்கி இருந்தால் மன்னிப்பு கோருகிறேன். கண்மூடித் தனமாக இம்முறையை எதிர்க்கவில்லை என்றே நம்புகிறேன். என் அறிவுக்கும் திறனுக்கும் எட்டிய வரையில் மொழியியல் ரீதியான என் சந்தேகங்களை இப்பக்கத்தின் தொடக்கத்தில் தெரிவித்து விட்டேன். என் மனதில் நிற்கும் ஒரே கேள்வி இது தான் - இம்முறை சரி என்று நான் ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில், இதை தேர்ச்சியுடன் பயன்படுத்த யார் சொல்லித் தருவார்? இல்லை, இது போல் எத்தனை பயனர்களுக்கு செல்வா சொல்லித் தந்து கொண்டே இருக்க முடியும்? அதனால் தான், இம்முறை சரியென செல்வா கருதும் பட்சத்தில் அதை பரந்த அளவில் சொல்லித் தர அவர் முயல வேண்டும். அதற்கு ஒரே வழி அரசு வழி தான். சரியோ பிழையோ எல்லாரும் இம்முறையை பின்பற்றத் தொடங்கி விட்டால், பிறகு இதை விக்கியில் எப்படி நடைமுறைப்படுத்துவது என்ற கேள்விக்கே இடம் இல்லை.--ரவி 14:53, 7 ஜூலை 2006 (UTC)

தமிழ் விக்கிபீடியா பள்ளிக்கூடம் இல்லை என்ற சொற்றொடர் எனக்கும் சிறிது உறுத்தியது. எனினும், ரவியுடன் பழகியதை வைத்து அதன் சூழல் பொருளை நான் அறிந்திருந்ததால் எதிர்க்கவில்லை. இருப்பினும் தனிநபர் விமர்சனங்களைத் தவிர்த்தல் மற்றும் நல்லெண்ண நம்பிக்கை கொள்ளுதல் எனும் கொள்கைகளை வலியுறுத்துவதன் தேவையை உணர்த்துகிறது. மற்றபடி, இதன் நடைமுறைச் சிக்கல்களைப் பற்றி நாளை பதிகிறேன். -- Sundar \பேச்சு 15:16, 7 ஜூலை 2006 (UTC)
ரவி, மன்னிப்புக் கேட்க வேண்டிய தேவை இல்லை. நீங்கள் கூறியது இளக்காரமாகவும் கருத்தாடலுக்குப் பொருந்தாதவாறும் தான் என் காதுகளுக்கு கேட்டது. இதனை நீங்கள் உணர்ந்தாலே போதுமானது. எனக்கேதும் மனவருத்தம் இல்லை. என் கருத்துக்களுக்கு எதிர்ப்பு கூறுவது எனக்கு ஒரு சிறிதும் வருத்தம் இல்லை, அப்படி எதிர்ப்பு எழுப்புவதுதான் கருத்துக்களையும், செயல்களையும் செழுமைப் படுத்தும் என்று நான் உறுதியாக நம்புபவன். பெரும்பாலான புதுமைகள் வரவேற்கபடுவதில்லை என்பதை நான் நன்கு அறிவேன். கூடிய விரைவில் நான் ஆக்கிய கட்டுரைகளில் உள்ள குறியீடுகளை நீக்குகிறேன். --C.R.Selvakumar 00:20, 8 ஜூலை 2006 (UTC)செல்வா

சில கருத்துக்கள்[தொகு]

மேலே நடக்கும் கருத்து பரிமாற்றத்தில் ஈடுபடுவதற்குரிய பின்புலம் எனக்கு போதாது. ஆனால், எல்லா மொழிகளிலும் எல்லா ஒலிபெயர்ப்பும் இல்லை என்பதன் அடிப்படையை நாம் நோக்குவோமானால், எந்த விதமான ஒலிபெயர்ப்புக்களை தமிழில் சரியாக உச்சரிக்கவேண்டும் என்ற கேள்வி எழுகின்றது. பலர் ஆங்கில ஒலிகளை தமிழில் உள்வாங்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளார்கள். அதின் ஒரு நீட்சியாகத்தான் செல்வாவின் முயற்சிகளையும் நான் நோக்குகின்றேன். (இது ஒரு தவறான புரிதலாக கூட இருக்கலாம்.)


தமிழுக்கு புதிய குறியீடுகளை அறிமுகம் செய்ய தமிழ் விக்கிபீடியா ஒரு தளமா? இது தமிழ் விக்கிபீடியாவின் பயன்பாட்டை, பரவலாக்கலை எப்படி பாதிக்கும்? போன்ற கேள்விகள் முக்கியமானவை. மிகவும் அவதானமாக, அவசரப்படாமல், நிதானமாக ஒவ்வொரு விடயமாக ஆயப்படவேண்டும். ஆங்கில விக்கிபீடியாவில் இருந்து தமிழ் விக்கிபீடியா பல நிலைகளில் வேறு பட்டிருக்கின்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.


சமீபத்தில் நீண்ட தமிழ் கணிமை மற்றும் இலக்கிய பின்புலம் கொண்ட சிலருடன் உரையாடியதில், அவர்களுக்கே தமிழ் விக்கிபீடியா மிகவும் சவாலான ஒரு தளமாக இருக்கின்றது. நாம் நினைப்பதைப் போல தமிழ் விக்கிபீடியா பயனர்கள் பங்களிப்பதற்கு இலகுவாக இல்லை என்பதையும் கவனத்தைல் கொள்தல் நன்று. --Natkeeran 16:21, 7 ஜூலை 2006 (UTC)

மொழித்தூய்மை தொடர்பில் செல்வாவின் ஆதங்கத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் மொழி எழுதப்படும் விதத்தைத் தீர்மானிக்கும் இடமாக விக்கிப்பீடியா அமைவது பொருத்தமற்றது. ' போன்ற குறியீடுகளை விக்கியில் அறிமுகப்படுத்துவது பொருத்தமானதல்ல. ஏனெனில் இத்தகைய குறியீடுகளை பலர் முன்மொழிந்துள்ளனர். முன்மொழியப்படும் குறியீடுகள் யாவும் வெவ்வேறானவை. இது தொடர்பில் ஓர் அரச ஆணை வந்தால் கூட அது ' என்ற குறியீட்டைத்தான் முன்வைக்கும் என்றில்லை. அப்படி ஒரு நிலையில் மாற்றங்களை எல்லாம் யார் செய்வது? ஆதலால் அத்தகைய குறியீடுகள் பொருத்தமானதல்ல.

'ப' க்கு முன் ஆய்த எழுத்தைப் பயன்படுத்தி fa ஒலியை குறிப்பது பரவலாக காணப்படுகிறது. ஆயினும் அது தொடர்பில் அரச ஆணை எதுவும் வெளிவரவில்லை என்றே நினைக்கிறேன் :-) ஆனால் ஃப இனை விட ஃவ பொருத்தமானதெனின் அதனை பரவலாகப் பயன்படுத்துவதில் தவறில்லை. ஏனெனில் தவறுகள் ஆரம்பத்திலேயே திருத்தப்பட வேண்டும்.

மற்றும்படிக்கு, செல்வா விக்கிப்பீடியாவுக்கு பங்களித்து வருகின்றமை இணையத் தமிழுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். ஏனெனில் தமிழின் தொடர்ச்சிக்கு இணைய உள்ளடக்க உருவாக்கம் முக்கியமானது. இணைய உள்ளடக்க உருவாக்கத்தில் த. வி. குறிப்பிடத்தக்கதொன்றாக வளர்வதற்கான சாத்தியங்கள் மிக அதிகமாகும். அத்தகைய ஒரு செயற்பாட்டில் துறைசார் அறிஞர்கள் பங்களிப்பது மிகுந்த பயனுள்ளதாகவே அமையும். கோபி 18:20, 7 ஜூலை 2006 (UTC)

குறியீடு ( ' ) நீக்கப்பட்டது[தொகு]

தலைப்பிலும், கட்டுரையிலும் இருந்த முன் கொட்டுக் ( ' ) குறியீடுகள் நீக்கப்பட்டன. பேச்சுப் பக்கங்களில் இருப்பதை மாற்ற வில்லை. மிகச் சில கட்டுரைகளிலேயே இவை இருந்தன. கருத்தளித்த எல்லோருக்கும் நன்றி. --C.R.Selvakumar 00:48, 8 ஜூலை 2006 (UTC)செல்வா