விக்கிப்பீடியா பேச்சு:த.வி.திட்டங்கள் குறித்த கேள்விகள் ரவியின் பதில்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ் மீடியாவிக்கி திட்டங்கள் குறித்த கேள்விகள்- ரவியின் பதில்கள்[தொகு]

1. தமிழ் விக்கிபீடியாவை நீங்கள்தான் ஆரம்பத்தில் ஆர்வத்துடன் அத்திவாரம் இட்டீர்கள், இன்று பலர் ஆர்வத்துடன் பங்களிகான்றார்கள், முன்னெடுக்கின்றார்கள். யாரும் இலகுவில் பங்களிக்கலாம் என்பதுதான் விக்கிபீடியாவின் சிறப்பு, இவ் வகையில் இன்று தன்லாவர்களின் பங்களிப்பு எந்த வகையில் அமைந்துள்ளது?

2. தமிழ் விக்கிபீடியாவின் இன்றைய நிலை என்ன?

3. ஆரம்பத்தில் மந்தமான பங்களிப்புக்கள் குறித்து நீங்கள் சற்று வேதனையடைந்திருந்தீர்கள், இன்று தமிழ் விக்கிபீடியாவின் வளர்ச்சி வேகம் உங்கள் எதிர்பார்புக்களை நிவர்த்தி செய்கின்றதா?

4. தமிழில் தரமான தகவல்களை அனைத்து துறைகளிலும் இருந்து தொகுத்து வகுத்து தருவதற்க்கு விக்கிபீடியாதான் மையமாக விளங்கும் என்று நான் நம்புகின்றேன், உங்களின் கருத்து?

5. தமிழின் மிகப்பெரிய சொத்தான இலக்கியங்களை மதுரை திட்டம் தொகுத்து. தமிழ்மணம் உடனடியாக பல தகவல்களை பகிரவும், பலவித விதயங்களை பகிரவும் உந்தியது. அறிவியல் தகவல்களை ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட, தேட வசிதியான வகையில் ஒருங்கிணைக்க தமிழ் விக்கிபீடியாதான் சிறந்தது. ஒரு நிலையில் மனிதனால் பெறப்பட்ட அனைத்து அறிவையும் இயன்ற வரை ஒருங்கே தமிழில் குவிக்க விக்கிபீடியா உதவும் என கருதலாமா?


6. என்ன என்ன துறைகள் இருக்கின்றன என்ற தெளிவான ஒரு பரந்த கட்டமைப்பு தமிழ் விக்கிபீடியாவில் இன்னும் இல்லை என்றே தோன்றுகின்றது. எல்லா துறைகளையும் ஒரே தருணத்தில் விபரிக்கவோ தொகுக்கவோ முடியாது என்பது நான் அறிவேன். ஆயினும், ஒரு வித அடிப்படை Map of the Knowledge Domains தேவை என்றே கருதுகின்றேன். அவ் நீதியில்தான் விக்சனரி பின்னிணைப்பு:கல்வித் துறைகள் நான் தொகுக்க முயல்கின்றேன். இவ் விதயம் நோக்கி உங்களின் கருத்து ஏதும் உண்டா?

7. விக்கிபீடியாவில் தன் நிலை கருத்துக்களை அல்லது அபிப்பிராயங்களை தவிர்த்து, தகவல்களை முன்வைப்பதே வழமை. பொதுவாக, விக்கிபீடியாவில் தகவல்கள் கட்டுரை அமைப்பிலேயே உள்ளன. இவற்றை கருத்தில் கொண்டு, விக்கிபீடியாவில் கட்டுரை அல்லது தகவல்களை பகிர்வதற்க்கும் வலைப்பதிவுகளில் பதிவதற்க்கும் இருக்கும் வித்தியாசங்களை சுட்டுவீர்களா?

8. இலங்கையில், இந்தியாவில் பல கல்லூரிகளில் நூலக வசதி குறைவு. இணைய தொடர்பு ஏற்படுப்படும் நிலையில் சற்று விரிவடைந்த விக்கிபீடியா ஒரு அரும் கல்வி ஆயுதமாக திகழும். உங்களின் கருத்து?

9. இன்று பலர் பல விதயங்களை பற்றி எழுதுகின்றார்கள், ஆனால் அவற்றை விக்கிபீடியாவில் பதிப்பது கிடையாது. அவரவர் விக்கிபீடியாவில் பதிவதே விக்கி நடைமுறைக்கு ஏற்பு. இப்படி பதிவதன் மூலம் ஒரு திறந்த தொடுக்கப்பட்ட பொது கட்டமைப்பின் கீழே தமிழில் அனைத்து தகவல்களையும் தொகுக்கலாம். எவ்வாறு மற்றவர்களை விக்கியில் பதிய ஊக்கப்படுத்தலாம் என்று கருதுகின்றீர்கள்?

10. தமிழ் விக்கியின் எதிகால திட்டங்கள் எவை?

11. தமிழ் விக்கிபீடியா எப்படி பரிமானிக்கவேண்டும் என்று நினைக்கின்றீர்கள்?


User:ravidreams-இன் பதில்கள்[தொகு]

நக்கீரன், இந்தக் கேள்விகளை நீங்கள் மயூரநாதனிடம் தான் கேட்டீர்கள் என்றாலும் தமிழ் மீடியாவிக்கி திட்டங்களில் ஆர்வமுடையவன் என்ற முறையில் நானும் என் கருத்துகளை பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்.

1. மார்ச் 2005 முதல் விக்கிபீடியாவில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறேன். அது வரை மயூரநாதன் மட்டுமே கிட்டத்தட்ட தனியாளாக முனைந்து விக்கிபீடியாவிற்கு வடிவம் தந்திருந்தார். சுந்தரும், சந்தோஷ் குருவும் குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்திருந்தனர். தற்பொழுது ஆர்வமுடைய தரமான பங்களிப்பாளர்களின் வருகை அதிகமாயிருப்பது மகிழ்ச்சி தருகிறது. ஏற்கனவே உள்ள பயனர்கள் தனிப்பட்ட முறையில் தங்கள் நண்பர்களிடம் விக்கிபீடியா குறித்து சொல்லியே பல புதிய பயனர்களை வருகை தர செய்து வருகிறார்கள். Googleல் தமிழிலேயே தேடும் வழக்கம் அதிகரிக்கும் போது அதன் மூலம் பல பயனர்கள் வருவார்கள் என்று நம்புகிறேன். விக்கிபீடியாவின் சாத்தியங்கள் பற்றி அறிந்த அனைவரும் ஆர்வத்துடன் பங்களிக்கின்றனர். அதனால், முதலில் விக்கி திட்டங்களைப்பற்றி பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வழிவகை செய்ய வேண்டும். அப்படி நடக்கும் பட்சத்தில் Chain reaction போல புதுப்பயனர்கள் பெருகுவார்கள் என நம்புகிறேன்.

2. தமிழில் ஒரு முழுமையான இலவச கலைக்களஞ்சியமாவதற்கான சாத்தியம் விக்கிபீடியாவிற்கு மட்டுமே உண்டு. www.kalanjiam.com என்று ஒரு தளம் பற்றிக் கேள்விப்பட்டேன். ஆனால், எழுத்துரு பிரச்சினைகளால் இன்று வரை என்னால் அதை படிக்க இயலவில்லை. தற்பொழுது பல்வேறு தலைப்புகளில் 800க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய கட்டுரைகள் விக்கிபீடியாவில் உள்ளன. பல புதிய பயனர்களின் வரவால் புதிய கட்டுரைகள் உருவாகும் வேகம் அதிகரித்து வருகிறது. அனுபவம் வாய்ந்த பயனர்கள் அவற்றை படித்து, திருத்தி இயன்ற அளவு தரப்படுத்த முயல்கிறோம். விக்கிபீடியா தளமும் முன்பை விட ஒரளவுக்கு தற்பொழுது ஒழுங்கு படுத்தப்பட்டு வருகிறது.

3. 2003ல் ஆரம்பித்த தமிழ் விக்கிபீடியா திட்டம் பற்றிய விழிப்புணர்வு முதலில் குறைவாக இருந்தது உண்மை தான். இப்பொழுது பல தளங்களிலிருந்தும் விக்கிபீடியாவுக்கு இணைப்புகளை காண முடிகிறது. பல புதிய பயனர்களின் வரவு நம்பிக்கை அளிக்கிறது.

4. உங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன். இலக்கியம், சமயம் போன்ற எந்த வட்டத்திலும் அடங்காமல் அனைத்து துறை அறிவையும் தமிழ் மக்கள் பெற விக்கிபீடியாவும் இன்ன பிற விக்கி திட்டங்களும் முக்கிய ஆதாரமாக திகழும் என்பது என் நம்பிக்கையும் கனவுமாகும்.

5. அறிவியல் மட்டுமல்லாமல் மனிதனால் பெறப்பட்ட அனைத்து அறிவையும் இயன்ற வரை ஒருங்கே தமிழில் குவிக்க விக்கிபீடியா உதவும் என நம்புகிறேன்.

6. Map of the Knowledge Domains அவசியம் தான். இது குறித்த உங்கள் பணி பாராட்டத்தக்கது. குறைந்த அளவு பயனர்கள் மட்டுமே நேர நெருக்கடிக்கு இடையிலும் விக்கிபீடியாவை ஒழுங்குபடுத்துவதில் ஈடுபட்டு வருகின்றனர். தற்பொழுது கட்டுரைகள் பக்க வகைப்படுத்தப்பட்டு வருகின்றன. விரைவில் உங்கள் Map-ஐ பின்பற்றி இன்னும் செழுமையாக ஒழுங்குபடுத்த விழைகிறேன்.

7. வலைப்பதிவுக்கும் விக்கிபீடியாவுக்கும் உள்ள அடிப்படை முக்கிய வேறுபாட்டை நீங்களே சுட்டிக்காட்டி விட்டீர்கள். விக்கிபீடியாவில் Creativity கிடையாது. உண்மை தகவல்களை மட்டும் பதிவு செய்யும் தார்மீக பொறுப்பு கட்டுரை ஆசிரியருக்கு உண்டு. பிற பயனர்களின் நியாயமான கருத்து முரண்பாடுகளுக்கு பதில் தர வேண்டிய பொறுப்பு உண்டு. பிறகு, விக்கிபீடியா ஒரு குழுவாக சேர்ந்து செய்யும் வருங்கால நோக்குடைய திட்டமாகும். வலைபதிவுகளுக்கு மேற்கண்ட எதுவும் பொருந்தாது. விதிமுறையற்று இருப்பதாலேயே வலைப்பதிவு கலாசாரம் பலரையும் ஈர்த்துள்ளதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

8. கல்லூரி மாணவர்களுக்கும் அரிய பயன் தரும் அளவுக்கு விக்கிபீடியா வளர இன்னும் நீண்ட நாட்களாகும் என நினைக்கிறேன். தமிழ் இணையம் பரவலாகும் போது விக்கிபீடியாவின் வளர்ச்சியும் அதற்கேற்ப அமையும். ஆனால், பள்ளி மாணவர்களுக்கும், தமிழில் அடிப்படை கல்வி கற்றோருக்கும் பயன் தரும் வகையில் இன்னும் 2 ஆண்டுகளுக்குள் விக்கிபீடியாவை வளர்க்க முடியும் என்பது என் நம்பிக்கையும் நோக்கமும் ஆகும்.

9. பலருக்கும் தமிழ் தொண்டாற்றும் ஆர்வமும் தமிழில் அறிவு பரப்ப வேண்டிய அவசியத்தின் புரிந்துணர்வும் உண்டு. அதில் சந்தேகமில்லை. ஆனால், அப்படி ஆர்வமுடைய அனைவருக்கும் தமிழ் விக்கி திட்டங்கள் பற்றி தெரியவில்லை என்பது தான் பிரச்சினை. 1999 முதல் இணையத்தை பயன்படுத்தும் நானே 2005ல் யதேச்சையாக தமிழ் இணையத்தின் சாத்தியங்கள் பற்றியும் விக்கிபீடியா பற்றியும் அறிந்து கொண்டேன். விக்கி திட்டங்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த முயலும் முன் தமிழ் இணையம், கணனியில் தமிழ் தட்டச்சு, யுனிக்கோடு எழுத்துரு, Googleல் தமிழ் தேடல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம். பிரபல எழுத்தாளர்கள் (சுஜாதா போன்றோர்) இது குறித்து வெகு மக்கள் இதழ்களில் எழுதினால் நல்ல விளைவ்களுக்கு வாய்ப்புண்டு. தமிழ் கம்ப்யூட்டர் போன்ற துறை சார் இதழ்களும் தமிழ் இணையத்தை பிரபலப்படுத்த வேண்டும். தமிழ்நாட்டு, இலங்கை அறிவியல் தமிழ் பாடத்திடங்களில் தமிழ் இணையத்தின் சாத்தியக்கூறுகள் பற்றிய பாடம் இடம்பெறுதல் மிக அவசியம். தன்னார்வமுடையவர்கள் தமக்குத் தெரிந்த Browsing Center நிர்வாகிகளிடம் இது குறித்து விழிப்புணர்வு உண்டாக்கலாம்.

10. தற்பொழுது பல பயனர்களும் விக்கிபீடியா பங்களிப்பில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். அதற்மு இணையாக விக்சனரியிலும் ஆர்வத்தை பகிர வேண்டிய அவசியம். ஏனெனில் அனைத்து மொழி அறிவு பெற தமிழ் அறிவு மட்டுமே போதுமானதாக இருக்க விக்சனரி முக்கிய பங்காற்றும். அதற்கடுத்த முக்கிய திட்டமாக விக்கி நூல்களை கருதுகிறேன். ஆனால், இதே பணியை மதுரைத்திட்டம் போன்ற பல்வேறு பெயர்களில் பலர் ஏற்கனவே செய்து வருகின்றனர்.

11. தமிழ் அறிந்தால் உலகு அறியலாம் என்ற சொல்லத்தக்க நிலையை விக்கிபீடியா அடைய வேண்டும். இத்தத் தலைமுறை அடுத்து வரும் தமிழ் தலைமுறைகளுக்கு தரும் அரிய சொத்தாக விக்கிபீடியாவை வளர்த்தெடுக்க வேண்டும் என விழைகிறேன்

  • ரவியின் ஆர்வத்தைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், விக்கிபீடியாவில் தெளிவான சிந்தனையுடன் அவர் பணியாற்றிவருவதில் வியப்பேதும் இல்லை. அண்மைக்காலத்தில் விக்கிபீடியாவில் ஏற்பட்டுவரும் கட்டுப்பாட்டுக்கும், ஒழுங்கமைவுக்கும் ரவியின் பங்களிப்பே முக்கிய காரணமாக உள்ளது. விக்சனரி பற்றிய ரவியின் கருத்துக்களுடன் எனக்கும் உடன்பாடே. தமிழில் முழுமையானதும், இயக்க நிலையில் அமையக்கூடியதுமான கலைச்சொல் அகராதியொன்றைத் தொகுப்பதற்கான அவசியம் குறித்தும், அம்முயற்சியில் விக்சனரியைப் பயன்படுத்தலாம் என்பதுபற்றியும் சில மடற்குழுக்களில் நான் எழுதினேன், அதிகம் பயன் கிடைக்கவில்லை. எனினும் இது தொடர்பில் ஓரளவு ஆரம்ப வேலைகளை நான் செய்திருந்தேன். தொடர்ந்து தீவிரமாக ஈடுபடக் கால அவகாசம் கிடைக்கவில்லை. மதுரைத் திட்டத்தில் தமிழில் எழுதப்பட்ட ஆக்கங்களை ஆவணப்படுத்தி வருகிறார்கள். மிகப் பயனுள்ள முயற்சி. விக்கிநூல்களிலும் இயலுமானால் இதேபோல் செய்யலாம். எத்தனை திட்டங்கள் தொடங்கினாலும் தொடர்ந்து வேலை இருக்கக்கூடிய அளவு ஆக்கங்கள் தமிழில் உள்ளன. தவிரவும் Public Domain இலுள்ள நல்ல பிறமொழி நூல்களைத் தமிழாக்கம் செய்து ஆவணப்படுத்துவதிலும் கவனம் செலுத்தமுடியும்.
  • நக்கீரன் நீங்கள் அனுப்பிய மின்னஞ்சலில் குறிப்பிட்டிருந்த யோசனைகள் அருமையானவை. செயற்படுத்தக் கூடியவையும்தான். உங்கள் ஆலோசனைகளை விக்கிபீடியாவில் ஆலமரத்தடி பகுதியில் போட்டுவிடுங்கள், விக்கிபீடியா ஆர்வலர்கள் எல்லோரும் பார்ப்பார்கள். அங்கே ஒரு கலந்துரையாடலை நடத்தலாம். Mayooranathan 18:20, 1 ஆகஸ்ட் 2005 (UTC)